உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மா அவர்களுக்கு —என் வயது, 68; என் மனைவி வயது, 62. தனியார் துறையில் வேலை பார்த்து, ஓய்வு பெற்றவன். எங்களுக்கு குழந்தைகள் கிடையாது. என் உடன் பிறந்தது, ஒரே ஒரு அண்ணன்; அவரும், என் பெற்றோரும் காலமாகி விட்டனர். மனைவியின் உடன் பிறந்தோர், இரண்டு அண்ணன்கள், இரண்டு தம்பிகள், ஒரு தங்கை; எல்லாரும், அவரவர் குடும்பம், குழந்தைகள் என்று இருக்கின்றனர். நாங்கள் எல்லாருமே நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள்.என் பணி ஓய்விற்கு பின், எனக்கு கிடைத்த பணப்பயன்களை, பொதுத்துறை வங்கிகளில், வைப்பு நிதியில், பாதியை முதல் நபராக, என் பெயரையும், இரண்டாவது நபராக, என் மனைவி பெயரையும் போட்டு, முதலீடு செய்துள்ளேன். மீதிப் பணத்தை, என் மனைவி பெயரை முதல் நபராகவும், என் பெயரை இரண்டாவது நபராகவும் போட்டு முதலீடு செய்து, அதில் வரும் வட்டியை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, சேமிப்பு கணக்கில் வரவு வைக்குமாறு செய்துள்ளேன். அந்த வட்டியின் மூலம் தான், எங்கள் ஜீவனம் நடக்கிறது. நகரின் மையப் பகுதியில், என் பெயரில், சொந்த வீடு உள்ளது. வாங்கி, 20 ஆண்டுகள் ஆகின்றன. எல்லாமே என் சுய சம்பாத்தியம்.எனக்கு, ரத்த புற்றுநோய் உள்ளதால், கீமோதெரபி, மருந்து மற்றும் மாத்திரைகள் மூலம், என் வாழ்நாளை நீட்டித்து வருகிறேன். எவ்வளவு நாள் நீடிக்குமோ தெரியாது.எனக்கு இருக்கும் ஒரே ஆசை... என் காலத்திற்கு பின், என் மனைவி யாரிடமும் சென்று, எதற்காகவும் கையேந்தக் கூடாது. கீழ்கண்டவைகளுக்கு உங்களது ஆலோசனைகளை வேண்டுகிறேன்.* பொதுத்துறை வங்கிகளில், முதலீடு செய்திருக்கும் வைப்பு தொகைகள் யாவும், என் மனைவிக்கு, எவ்விதமான இடையூறும் இன்றி, வந்து சேர வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?* என் பெயரில் உள்ள வீட்டின் உரிமை, என் காலத்திற்கு பின், என் மனைவி என்ற முறையில், அவளுக்கு சேர்ந்து விடுமா, இல்லையெனில், மனைவி பெயரில் புதிதாக பத்திரப்பதிவு செய்ய வேண்டுமா அல்லது உயில் எழுதி வைத்தால் போதுமா?* என் காலத்திற்கு பின், என் மனைவி, எப்படி இருந்து கொள்ள வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளையும் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.— இப்படிக்கு,அன்பு சகோதரன்.அன்புள்ள சகோதரருக்கு —குழந்தை இல்லாத வயதான தம்பதியர், ஒருவர் மீது ஒருவர், அமரத்துவமான காதலில் மூழ்கி விடுகின்றனர். மரணத்தில், ஒருவரை ஒருவர் முந்த வேண்டும் என, ஆவலாதி கொள்கின்றனர். இருவரும் ஒருவரையொருவர் குழந்தையாக பாவித்து, ஆறுதல் பெறுகின்றனர். இவை அனைத்தையும் உங்களிடம் காண்கிறேன். உங்களுக்கு பின், உங்கள் மனைவி, எவ்வித இடையூறுமின்றி வாழ வேண்டும் என அபிலாஷிக்கிறீர்கள். மனைவி மீதான உங்கள் காதலை, மகிழம் பூ தென்றலாக உணர்கிறேன்.உங்கள் சுய சம்பாத்தியத்தில் கட்டப்பட்ட வீடும், வங்கி வைப்பு நிதியும் உங்களுக்கு பின் உங்கள் மனைவிக்கு சேர, சட்ட ஆலோசனைகள் கேட்டுள்ளீர்கள். எவ்வித சட்ட ஏற்பாடுகள் செய்யா விட்டாலும், நீங்கள் சுயமாய் சம்பாதித்தவை, உங்களுக்கு பின், உங்கள் மனைவிக்கு மட்டுமே சேரும். வைப்புநிதி விண்ணப்பத்தில், வாரிசு தாரர் பெயராக, உங்கள் மனைவி பெயரை குறிப்பிட்டு இருப்பீர்கள். இருந்தாலும், உங்களுக்கு பின், உங்கள் மனைவிக்கு, உங்கள் சொத்துகளை அனுபவிப்பதில், எவ்வித பிரச்னைகளும் வராமல் இருக்க, ஒரு உயில் சாசனம் தயாரிக்கலாம்.உயில் சாசனத்தில், ஆண்டு, மாதம், தேதி மற்றும் முகவரி குறிப்பிட்டு, 'இன்னாரின் மகனாகிய நான், நல்ல ஞாபகத்துடனும், திரிகரண சுத்தியாயும், சுயநினைவுடனும் எழுதி வைக்கும் உயில் சாசனம் என்னவென்றால்...' என ஆரம்பிக்கவும்.'எனக்கும், என் மனைவிக்கும் (மனைவி பெயரை குறிப்பிட்டு) குழந்தைகள் இல்லை; எனக்கு, சில உடல் உபாதைகள் இருப்பதால், என் ஜீவதிசைக்கு பின், நடக்க வேண்டிய காரியங்களை, இந்த உயில் மூலம் எழுதி வைக்கிறேன்...' என்று எழுதி, வீட்டு முகவரி மற்றும் பட்டா எண் போன்ற விவரங்களையும் குறிப்பிடவும். மேலும், வங்கி வைப்பு நிதி விவரங்களை, வரிசை எண், ரசீது எண், நாள் மற்றும் தொகையையும் குறிப்பிட்டு, 'மேற்கூறிய அனைத்து சொத்துகளும், என் சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்டவை; இவை அனைத்தும், என் ஜீவிய காலத்துக்கு பின், என் மனைவிக்கு சேர வேண்டும் என, உயில் சாசனம் எழுதியுள்ளேன்.'இந்த உயிலை, என் ஜீவிய காலத்தில் மாற்றவோ, ரத்து செய்யவோ, வேறு விதமாக எழுதி வைக்கவோ, எனக்கு அதிகாரம் உண்டு. இந்த படிக்கு, நான், நல்ல ஞாபகத்துடன், யாருடைய வற்புறுத்தலும் இன்றி, சுயநினைவுடன், மனப்பூர்வமாக சம்மதித்து எழுதி வைக்கும் உயில் சாசனம் இதுவே ஆகும்...' என, உயிலை முடிக்கவும்.உயில் சாசனத்தை, 50 அல்லது 100 ரூபாய் பத்திரத்தில் எழுதி, சமூக அந்தஸ்துள்ள இரு சாட்சிகளின் கையெழுத்தை பெறவும். உயில் சாசனத்தை, அதிகாரப் பூர்வமாய் பதிவு செய்யவும். உயில் சாசனத்தை, உரிமையியல் வழக்கறிஞர் வைத்தும் தயாரிக்கலாம்.உங்களது மரணத்திற்கு பின், உங்கள் மனைவி, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் அறிவுறுத்த வேண்டியதில்லை. பெண்கள், ஆண்களை விட அதிபுத்திசாலிகள்.உயில் சாசனம் தேவைபடாதபடிக்கு, உங்கள் நோய் குணமாக, இறைவனை வேண்டுகிறேன்.— என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !