அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவுக்கு —என் வயது, 40; 16 வயதில், எனக்கு திருமணம் நடந்தது. அப்போது, என் கணவர் வயது, 31; அரசு பஸ் நடத்துனராக பணிபுரிகிறார். இரண்டாம் தாரத்தின், முதல் மகன், என் கணவர். என் மாமனாரின் கொடுமையால், தற்கொலை செய்து கொண்டார், அவரது முதல் மனைவி. அவர்களுக்கு பிறந்தது, மூன்று குழந்தைகள்; இரண்டாவதாக, மனைவியின் தங்கையை மணந்தார். அவர்களுக்கு எட்டுப் பிள்ளைகள்; என் கணவரின் சம்பாத்தியத்தில் தான் குடும்பம் நடந்தது.திருமணமான புதிதில், வீட்டில் உடன்பிறப்புகள் இருப்பதால், என்னிடம் பேசுவதோ, என் அருகில் உட்காரவோ மாட்டார், என் கணவர். எனக்கு திருமணம் பற்றிய போதிய அறிவில்லாததால், அதைப் பற்றி, பெரிதாக வருத்தப்படவில்லை. மேலும், என் பெற்றோர் எனக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்ததால், முதலிரவு நடக்க, நான் அனுமதிக்கவில்லை.பின் ஒருநாள், என்னை பலாத்காரத்தால் அடைந்தார். அதன்பின், தினமும், இதே கதை தான். ஓராண்டிற்குப் பின், எனக்கு அது பழகி விட்டது. இந்நிலையில், என் பெற்றோருக்கும், கணவருக்கும் இடையில் ஏற்பட்ட, 'ஈகோ' பிரச்னையாலும், பலாத்கார தாம்பத்யத்தில் இருந்து தப்புவதற்காகவும், அடிக்கடி கோபித்துக் கொண்டு, பிறந்த வீட்டிற்கு சென்று விடுவேன்; என் கணவரும் கூப்பிட மாட்டார். அத்துடன், சிறு விஷயத்திற்கு கூட, அனைவர் முன்னிலையிலும் அடிப்பார். இதனாலேயே இவருடன் வெளியே செல்வதை வெறுத்தேன்.இச்சமயத்தில், தன் அக்காவுடன் சேர்ந்து, ஒரு இடம் வாங்கினார், என் கணவர். அதை என்னை தவிர, அனைவரிடமும் தெரிவித்தார். என் மாமியார் கூட அதை என்னிடம் கூறவில்லை. இதேபோல், ஆயிரக்கணக்கான அவமானங்கள், ஒதுக்கீடுகள், அடி உதைகள் அனைத்தையும் தாங்கியுள்ளேன்.இந்நிலையில், எனக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன்பின், நாங்கள் தனிக்குடித்தனம் சென்றோம். இரண்டாவதாக ஆண் குழந்தைக்கு தாயானேன். அதன்பின், என் கணவரின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. என்னிடம், மிக பிரியமாக நடந்து கொள்ள ஆரம்பித்தார். அதுவரை, என்னிடம் எவ்வளவு சம்பளம் என்பதைக் கூட கூறாதவர், தன் சம்பளத்தை, அப்படியே கொடுத்தார். அதில் மயங்கி, அவரிடம் உயிரானேன். அதன்பின், என் கணவரின் சுய சம்பாத்தியத்தில், சொந்த வீடு கட்டி, அதில் குடியேறினோம்.என் மகன் பிறந்தவுடன், மாடியில் வீடு கட்ட விரும்பினேன். முதலில், என் கணவர் சம்மதிக்கவில்லை; பின், என் வற்புறுத்தலில் சம்மதித்தார். அதன்பின் தான், எனக்கு வினை ஆரம்பித்தது. வீடு கட்ட வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட, மிகவும் சிரமப்பட்டேன். அதைச் சரிக்கட்ட, 'பண்டு' பிடித்தேன். அதை திருப்பி செலுத்த, ரன் வட்டி வாங்கினேன். சீட்டுப் பணத்தை, சரியான நேரத்தில், திருப்பி தர முடியாமல் அசிங்கப்பட்டேன். இதற்கிடையில், என் மகன், வாஷிங்மிஷினில் கை விட்டு, விரல் துண்டாகி, ஆபரேஷனுக்கு, 75 ஆயிரம் ரூபாய் வரை செலவானது. என் கணவருக்கு, நடத்துனர் வேலையிலிருந்து, கேஷியராக பணிமாற்றம் செய்வதற்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்தேன்.மேலும், பணிமாற்றத்தால் ஏற்பட்ட மன அழுத்தத்தால், என் கணவருக்கு, மனநல சிகிச்சை தேவைப்பட்டது. அப்போது, அவர், மூன்று மாதங்கள் விடுப்பில் இருந்தார். தற்போது, நான்கு ஆண்டுகளாக அவருக்கு மனோதத்துவ மருத்துவரிடம் சிகிச்சையளித்து வருகிறேன்.செலவை சாமளிக்க முடியாமல், மறுபடியும், கண்டக்டர் வேலைக்கு செல்ல சொன்னேன். அவரும் மறுப்பு கூறாமல் பணம் கொடுத்து, உடனடியாக பணி மாற்றம் பெற்றார். அதன்பின், அவரது நடவடிக்கையில், பல மாற்றங்கள்... வீட்டில் தங்குவதே கிடையாது; இரவு தூங்குவதற்கு மட்டுமே வீட்டில் இருப்பார்.ஒருநாள், வீட்டில் அவரது மொபைல் போனை மறந்து வைத்து விட்டு சென்று விட்டார். அப்போனுக்கு ஒரு பெண்ணிடமிருந்து அழைப்பு வந்தது. சிறிது நேரம் கழித்து, அதே நம்பருக்கு நான் போன் செய்த போது, என் கணவர் பேசினார். கேட்டால், அப்பெண், தன் நண்பரின் மனைவி என்று கூறினார்.அவரிடம் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும், தனக்கு தவறான தொடர்பு இல்லை என மறுத்து, என்னை தான் அசிங்கமாக திட்டினார். அன்று இரவு, அவரது போனில், 'ஆட்டோ கால் ரெக்கார்டை' ஆன் செய்து வைத்தேன். மறுநாள் மாலை, அவர், பணி முடிந்து வந்ததும், அவர், அவளிடம் பேசியுள்ளதை போட்டு காட்டி, 'இதற்கென்ன சொல்றீங்க...' என கேட்டதற்கு, எதையும் கண்டு கொள்ளவில்லை.அவளை இரண்டாம் தாரமாக திருமணம் செய்துள்ளாரோ என சந்தேகிக்கிறேன்.இதனால், என் கணவருடன் சண்டையிட்டு, தற்போது, என் தாய் வீட்டில் இருக்கிறேன். அவர் என்னை கூப்பிட வரவில்லை. ஒருவாரம் சென்ற பின், நானே வலிய சென்றேன். ஆனால், அவர் என்னை அசிங்கமாக திட்டியதால், மறுபடியும் தாய் வீட்டிற்கே வந்துவிட்டேன்.இப்போதைய, என் கடன் நிலவரம், 35 லட்சம் ரூபாய்; வீட்டை விற்கலாம் என்றால், 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு, 50 லட்சத்திற்கு தான் போகும் என்கின்றனர். இப்போது, என் வாழ்க்கை பிரச்னைக்கு என்ன தீர்வு? என் கணவரின் துரோகத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.இவரது துரோகத்தை என்னால் மறக்கவோ, மன்னிக்கவோ முடியவில்லை. கடனுக்காக நான் இவருடன் சேர விரும்பவில்லை. ஆனால், கடனை அடைக்கும் வழியும் தெரியவில்லை. எனக்கு தகுந்த ஆலோசனை கூறுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.— இப்படிக்கு,நீண்ட நாள் வாசகி.அன்புள்ள வாசகிக்கு —உங்கள் கணவருக்கு, மனைவியை கொடுமைப் படுத்தும் குணமும், இரண்டாம் திருமண வேட்கையும், அவரது தந்தையிடமிருந்து, மரபியல் ரீதியாக தொற்றியிருக்கலாம். மேலும், உங்கள் கடிதத்தில், பெரும்பாலும், கணவரையே குற்றம் சாட்டியுள்ளீர்கள். 50 சதவீத தவறு, உங்கள் மீதும் உள்ளது.கடன் வாங்கினால், கடனை திருப்பி செலுத்தும் வழிமுறைகளைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். அதைவிட, கடன் வாங்குதல் தேவையா என நிதானித்திருக்க வேண்டும். கணவரின் பணி மாற்றம், பணியிட நன்கொடை, மகனின் காஸ்ட்லி மருத்துவம், கணவரின் கை செலவுகளுக்கு என, எல்லாவற்றிற்கும் கடன் வாங்கியது, மிகப் பெரிய தவறு.கடன், முதலில் கூடாரத்துக்குள் ஒட்டகம் மூக்கை நுழைப்பது போல் நீட்டும்; பின், முழு கூடாரத்தையும் ஆக்கிரமித்து, நம்மை வெளியே தூக்கி கடாசி விடும். கடன், ஒரு போதை பழக்கம்; முதலில் தயங்கித் தயங்கி ஆரம்பிக்கும். பின், அதுவே வாழ்க்கையாகி விடும்.வீடு உங்கள் பெயரில் இருக்கிறதா, உங்கள் கணவரின் பெயரில் இருக்கிறதா இல்லை இருவரின் பெயரில் கூட்டாக இருக்கிறதா என்பதை, உங்கள் கடிதத்தில் குறிப்பிடவில்லை. வீடு கணவர் பெயரில் இருந்தால், வீட்டை விற்று, கடனை அடைக்க உங்கள் கணவர் ஒப்புக் கொள்வாரா... உங்கள் கணவர் சம்மதித்தால், வீட்டை இரண்டாக பிரியுங்கள். வீட்டில் பாதியை புரோக்கரை நாடாமல், பத்திரிகையில் விளம்பரம் செய்து, விற்று, கடனை அடையுங்கள். இனி, பத்து பைசா கூட வாங்குவதில்லை என உறுதி எடுங்கள். அத்துடன், பாதியில் விட்ட படிப்பை தொடர்ந்து படித்து, ஏதேனும் ஒரு பட்டம் வாங்கி. நல்ல வேலைக்கு செல்லுங்கள்.பலவந்தப்படுத்தியே மனைவியுடன் குடும்பம் நடத்திய உங்கள் கணவர், விருப்ப தாம்பத்யம் செய்ய ஒருத்தி கிடைக்கிறாளே என்கிற உந்துதலில் தான், கள்ள உறவில் ஈடுபட்டுள்ளார். நடத்துனர், ஓட்டுனர்களுக்கு தினசரி நூறு பெண் பயணிகளின் பரிச்சயம் கிடைக்கிறது. அவர்களில் ஒருத்தியின் தூண்டிலில் சிக்கியிருக்கிறார், உன் கணவர்.உங்களிருவரின் சண்டையில், உங்கள் மகள் படிப்பில் கோட்டை விட்டு விட்டாள். முதலில், அவளை ப்ளஸ் 2 பாஸ் செய்ய வையுங்கள். பின், இளங்கலை பட்டப்படிப்பு ஏதாவது படிக்க சொல்லுங்கள். கணவருடன் இணக்கமாக இருந்து, கடனை அடையுங்கள். இடையில் வந்த கள்ளத்தொடர்பு இடையில் போய் விடலாம். பணி ஓய்வுக்கு பின், உங்கள் கணவர் ஆட்டம் முடித்து, பெவிலியன் திரும்புவார் என நம்புகிறேன். சுய இரக்கத்தை விட்டொழித்து, வாழ்க்கையை தெளிவுடன் எதிர்கொள்ளுங்கள்.வாழ்த்துகள்!— என்றென்றும் தாய்மையுடன்சகுந்தலா கோபிநாத்