அன்புடன் அந்தரங்கம்
அன்புள்ள அம்மா,நான், 33 வயது, பட்டதாரி பெண்; என், 16 வயதில், சொந்த அத்தை மகனை திருமணம் செய்து வைத்தனர். தற்போது, 13வயதில் ஒரு ஆண் பிள்ளையும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். திருமணமான ஐந்து ஆண்டுகளுக்கு பின், என் கணவருக்கு தாம்பத்யத்தில் ஈடுபாடு இல்லை. நான், அவரிடம் என்னவென்று கேட்ட போது, பதில் கூற மறுத்து விட்டார். சில ஆண்டுகளுக்கு முன், அவரை மனோதத்துவ நிபுணரிடம் அழைத்துச் சென்ற போது தான், அந்த அதிர்ச்சியான உண்மை தெரிந்தது.சிறுவயதில் இருந்தே அவருக்கு ஓரினச் சேர்க்கை பழக்கம் இருந்துள்ளது என்றும், இதனாலேயே தாம்பத்யத்தில் விருப்பமில்லை என்றும், சமுதாயத்திற்காக இரு குழந்தைகளை பெற்றதாகவும், மனோதத்துவ நிபுணரிடம் கூறியுள்ளார். இதை மருத்துவர் என்னிடம் கூறிய போது அதிர்ச்சி அடைந்து, மன உளைச்சலுக்கு ஆளானேன்.என் கணவர் சிறுவயதாக இருந்த போதே, என் மாமனார் இறந்து விட்டார். அதனால், மாமியார் மற்றும் நாத்தனாரிடம், இப்பிரச்னையை கூறிய போது, யாரும் கண்டு கொள்ளவில்லை.என் கணவர் சம்பாதித்த சொத்துகள் எல்லாம், திருமணத்திற்கு முன்பே, என் மாமியார் மற்றும் நாத்தனார் எழுதி வாங்கிக் கொண்டனர். அம்மா மீது இருந்த பாசத்தால், அனைத்தையும் அவர்களுக்கே கொடுத்து விட்டார், என் கணவர். தற்போது, அதை திருப்பிக் கேட்டால், தர மறுக்கின்றனர். என் தாய் வீட்டிலும், எவ்வித ஆதரவும் பெற முடியவில்லை.பள்ளியில் படிக்கும் போது, மற்றவரால் செய்ய முடியாத காரியத்தை, சவால் விட்டு செய்து முடித்திருக்கிறேன். ஆனால், இப்போதுள்ள குடும்ப பிரச்னையை தீர்க்க முடியாமல், மன உளைச்சலில் தவிக்கிறேன்.சிறந்த ஐ.பி.எஸ்., அதிகாரியாக வர வேண்டும் என்பதே என் சிறு வயது லட்சியம். ஆனால், வீட்டில் உள்ள சூழ்நிலை மற்றும் என் கணவரின் போக்கை நினைத்து, என்னால் படிக்க முடியவில்லை; என்னை ஊக்குவிப்பதற்கும் யாரும் இல்லை. தற்கொலை செய்து கொள்ளவும் மனமில்லை. நான் சாதிக்க வேண்டும், என் லட்சியத்தை அடைய வேண்டும். அதேசமயம், என் கணவரை திருத்தி, மகிழ்ச்சியாக குடும்பம் நடத்த வேண்டும். என் மன உளைச்சலுக்கு, நீங்கள் தான் ஆலோசனை கூற வேண்டும்.— இப்படிக்கு,உங்கள் அன்பு மகள்.அன்பு மகளுக்கு,இப்பிரச்னையை நீ தான், பொறுமையாக கையாள வேண்டும். ஓரினச்சேர்க்கையில் உன் கணவரது மனம் தாவி விடாதபடி, அவர் பணி முடிந்து வரும் போது, குளித்து, தூய்மையான ஆடை அணிந்து, மலர் சூடி, அன்புடன் வரவேற்பதுடன், அரை குறை மனதுடன் இருப்பவரை, உசுப்பேத்த வேண்டும்.அத்துடன், தினமும், அரை மணி நேரமாவது, உன் கணவரிடம் மனம் விட்டு பேசு.ஓரினச் சேர்க்கை தவறு என்பதை உணர வைக்க, உன் கணவரை கோவில்களுக்கு அழைத்துச் செல்வது மற்றும் ஆன்மிக புத்தகங்ளை வாசிப்பதில் ஈடுபடுத்து.ஓரினச் சேர்க்கை வலைதளங்களை பார்ப்பதையோ, அத்தகைய பழக்கம் உள்ள நண்பர்களுடன் பேசுவதையோ தடை செய். குழந்தைகளின் எதிர்காலம் பற்றி அடிக்கடி அவரிடம் பேச்சுக் கொடு. ஓரினச் சேர்க்கை எனும் புதை சேற்றிலிருந்து வெளி வர உன் கணவர் எண்ணினால் தான், அதிலிருந்து வெளிவர முடியும். அந்த எண்ணத்தை அவருக்குள் ஏற்படுத்து. கூடவே, உன் லட்சியமான, ஐ.பி.எஸ்., கனவை உண்மையாக்க, படிப்பில் கவனத்தை திருப்பு!— என்றென்றும் தாய்மையுடன்.சகுந்தலா கோபிநாத்