அன்புடன் அந்தரங்கம்
அன்புள்ள அம்மா —என் வயது: 30, படிப்பு: எம்.எஸ்சி., கணவர் வயது: 35. வங்கியில் பணி புரிகிறார். இரண்டு ஆண்டுக்கு முன் திருமணமானது. மாமியார் கொடுமை கொடிக்கட்டி பறக்கிறது. வீட்டிற்கு யார் வந்தாலும், அவர்களுடன் பேச அனுமதியில்லை. சதா சர்வ காலமும் சமையலறையே கதி என்று இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், நல்ல நாள், கரி நாள், விரத நாள் என்று எங்களை பிரித்தே வைத்திருப்பார். தாம்பத்தியத்தில் இணைய வேண்டிய நாள் எது என்று சொல்கிறாரோ, அன்று தான் படுக்கை அறைக்கு செல்ல வேண்டும். என் கணவரோ, அம்மா கோண்டு.இதற்கிடையில் எப்படியோ கர்ப்பமானேன். அதற்காக, கணவர், மாமியார் யாருமே சந்தோஷப்படவில்லை. எனக்கு இது, வித்தியாசமாக பட்டது. என் பெற்றோருடன் பேச வேண்டுமென்றால், அவர்கள் அனுமதியுடன், அவர்கள் எதிரிலேயே பேச வேண்டும்.ஒருமுறை, என் கணவர் மற்றும் மாமனார் - மாமியார், அவர்கள் உறவினர் வீட்டு விசேஷத்துக்காக வெளியூர் சென்றனர். வாசல் பக்கம் நிக்காதே, போன் பேசாதே, அக்கம் பக்கத்தினருடன் பேசாதே என்று ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்ட பின்னரே கிளம்பி சென்றார். என்னையும் பஸ்சில் அழைத்துச் செல்ல, கட்டாயப்படுத்தினர். பிடிவாதமாக, வரமுடியாது என்று கூறி விட்டேன்.அவர்கள் ஊருக்கு போனதும், பக்கத்து வீட்டு பெண், ஜன்னல் வழியாக, என்னை கூப்பிட்டு, விஷயத்தை போட்டு உடைத்து விட்டாள்...என் கணவருக்கு, தார தோஷம் இருப்பதால், பேருக்கு திருமணம் செய்து, உடனடியாக விவாகரத்து பெற்று, உறவுக்கார பெண்ணை திருமணம் செய்வது தான் அவர்கள் நோக்கம். இதற்கு யாரும் முன் வராததால், ஏமாளியான என் தந்தையை, மூளை சலவை செய்து, என்னை திருமணம் செய்துள்ளார்.விஷயம் தெரிந்த பின், பக்கத்து வீட்டு பெண் மூலமாகவே என் தந்தைக்கு தகவல் தெரிவித்து, என்னை பிறந்த வீட்டுக்கு அழைத்துச் செல்ல சொல்லி, வந்து விட்டேன். அவர்களது எண்ணப்படியே நடக்கட்டும் என்று, மனதை தேற்றி, விவாகரத்து கேட்க முடிவு செய்தேன். என் பெற்றோரோ, 'சற்று பொறுத்து பார்க்கலாம்... அவர்கள் திரும்பி வந்தால் நல்லது. இல்லாவிட்டால், விதி விட்ட வழி...' என்கின்றனர்.இப்போதே, என் கர்ப்பத்தை கலைத்து விட்டு, வேலை தேடிக் கொள்ளலாம் முடிவு செய்துள்ளேன்.ஒரே குழப்பமாக இருக்கிறது; என்ன செய்வது என்று ஆலோசனை கூறுங்கள் அம்மா.— இப்படிக்கு, அன்பு மகள்.அன்பு மகளுக்கு —தார தோஷம் உள்ள ஆண்கள், திருமணத்திற்கு முன், கும்பகோணத்துக்கு அருகிலுள்ள திருப்பைஞ்ஞீலி கோவிலுக்கோ, நல்லுார் முருகன் கோவிலுக்கோ சென்று பரிகாரம் பெறலாம். வாழை மரத்துக்கு தாலி கட்டச் சொல்லி, வாழை மரத்தை வெட்டி, அதன்பின் முறையான திருமணம் செய்து கொள்ளலாம். தார தோஷத்துக்கு, பரிகாரம் பண்ணாமல், மணம் செய்து கொள்ளும் ஆண், தன் மனைவிக்கு, ஜோதிடர் கணித்து கொடுத்த நேரத்தில், இரண்டாம் தாலி கட்டி பரிகாரம் பெறலாம். இதையெல்லாம் விட்டு விட்டு, உன் வாழ்க்கையை சீர்குலைக்க புகுந்த வீட்டார் திட்டமிடுவது தகாத செயல்.கர்ப்பத்தை கலைக்கும் முன், விவாகரத்து கோரும் முன், கணவரிடம் ஒருமுறை மனம் விட்டு பேசி பாரேன்.'அன்பு கணவரே... நீங்கள் படித்தவர், வங்கி பணியில் உள்ளீர். தார தோஷம் போன்ற மூட நம்பிக்கைகளை நம்பலாமா... எல்லாவற்றுக்கும் பரிகாரம் செய்யலாமே... உங்களுக்கு இன்னொரு திருமணம் தேவையா... உங்கள் தாயார் - என் மாமியார் என்னை கொடுமைப் படுத்தும் போதெல்லாம், குறுக்கே புகுந்து எனக்கு ஆதரவாக ஒரு வார்த்தை பேசி தடுத்திருக்கலாமே... தேவைப்பட்டால், நாம் இருவரும் தனிக்குடித்தனம் போயிருக்கலாமே... 'ஒரு ஆணாகவும், கணவனாகவும் நீங்கள் நடந்து கொள்ளவில்லையே... இது சரியா... இப்போது, நான் கருவுற்றிருக்கிறேன். சேர்ந்து வாழ அனுமதிக்கா விட்டால், குழந்தையை கருக்கலைப்பு செய்யவும், உங்களை விவாகரத்து செய்யவும் தயாராக இருக்கிறேன். உங்கள் குழந்தை, கருவிலேயே இறக்க வேண்டுமா... ஆணுக்கோ, பெண்ணுக்கோ முதல் திருமணம் தான் சிறப்பானது.தீர யோசித்து, ஒரு முடிவுக்கு வாருங்கள். நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்...' எனக் கூறு.கணவர், எதிர்மறையான முடிவெடுத்தால், கருக்கலைப்பை பற்றி நீ பரிசீலிக்கலாம்.மகளே... கருக்கலைப்பு செய்யும் முன், பல தடவை பலமுறை யோசி. பொம்மை கணவனும் வேண்டாம். அவன் வழி வரும் குழந்தையும் வேண்டாம் என, நீ தீர்மானமான முடிவெடுத்தால், கருக்கலைப்பு செய். நீதிமன்றம் மூலம் சட்டப்படி கணவரிடமிருந்து விவாகரத்து பெறு. பெற்றோர் வீட்டில் அடைக்கலமாகு. வேலைக்கு போ. பகுதி நேர இளம் முனைவர் ஆய்வு படிப்பை படி. யோகா வகுப்புகளுக்கு செல். விவாகரத்து கிடைத்த ஒரு ஆண்டிற்குள், மூடநம்பிக்கை இல்லாத, சுயமாய் செயல்படக்கூடிய வரனை தேடி பார்த்து மறுமணம் செய்து கொள்.குழப்பம் எதற்கு மகளே... ஒளிமயமான எதிர்காலம் உனதே!— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.