அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவுக்கு —என் வயது, 32, மனைவியின் வயது, 28. எங்கள் பெற்றோரின் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம்; ஒரு மகள் இருக்கிறாள். நான், கார் நிறுவனம் ஒன்றில், உதவி மேலாளராக உள்ளேன். என் மனைவி, தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.திருமணமான புதிதில், என்னுடன் அன்பாக தான் இருந்தாள். சில நாட்களுக்கு பின், காரணமே இல்லாமல், என்னை வெறுக்க ஆரம்பித்தாள்.என் பெற்றோர், வெளியூரில், அண்ணன் குடும்பத்துடன் தங்கி விட்டனர். இதற்கிடையில், மகள் பிறக்க, அக்குழந்தை மீதும் வெறுப்பை கொட்டுகிறாள். உள்ளூரில் வசிக்கும், என் மாமியார் தான், அவ்வப்போது சமையல் செய்தும், குழந்தையையும் கவனித்து வருகிறார். அவருக்கும் வயதாகி விட்டதால், குழந்தையை கவனிக்க இயலவில்லை. என் மனைவியும், வேலை வேலை என்று சென்று விடுகிறாள். என் மனைவியிடம், எவ்வளவோ பேசி பார்த்தும், அவள் மனதில் உள்ளதை அறிய இயலவில்லை. இந்த பிரச்னையால், முழு ஈடுபாட்டுடன் என்னால் வேலை செய்ய முடியவில்லை.இப்பிரச்னை தீர, என்ன தான் வழி... உங்களது ஆலோசனைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.— இப்படிக்கு,உங்கள் மகன்.அன்பு மகனுக்கு —திருமணமான பெண், குடும்ப வாழ்வில், உற்சாக குறைவாக இருக்க, கீழ்கண்டவை காரணங்களாக இருக்கலாம்...* குழந்தை பிறந்த பின், தாறுமாறாய் எடை அதிகரித்து, வயிற்றில் பிரசவ கோடுகள் உருவாகி, தாழ்வு மனப்பான்மை விஸ்வரூபித்து இருக்கலாம்* பணி இடத்தில், சக ஆண் ஊழியர் அல்லது மேலதிகாரியின் பாலியல் சீண்டல் இருக்கக் கூடும்* ரத்தசோகை, கால்ஷியம் குறைபாடு காரணமாக, பெண்களின் தினசரி வாழ்வில் சோர்வு ஏற்படலாம்* குழந்தை பிறந்த பின், மனைவியுடன் சீரான தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருந்திருப்பாய். அந்த கோபம் கூட அவருக்கு இருக்கக் கூடும்* நகையோ, சொந்த வீடோ, கார் வாங்கும் ஆசையோ, உன் மனைவிக்கு வந்திருக்கலாம்* குடும்பம் மற்றும் அலுவலக பணி என, இரட்டை பாரம் சுமக்கும் கழுதையாய் இருக்கிறோமே என்ற ஆற்றாமை, எரிச்சல், இனம்புரியாத கோபம், வேலைக்கு செல்லும் பெண்களிடம் எரிமலை குழம்பாய் வெளிப்படும். இவ்வகை பெண்கள், எப்போதும் சிடுசிடுப்பாய், எல்லார் மீதும் எரிந்து விழுவர். பொறுப்புகளை கழற்றி எறிந்து, எங்காவது ஆள் நடமாட்டம் இல்லாத தீவுக்கு ஓடி விடலாமா என, யோசிப்பர்* மனைவிக்கு, தவறான யோசனைகள் கூறும் தீய தோழியர், பணியிடத்தில் அமைந்திருக்கலாம்* காதலித்து மணந்துள்ளாள், பணிக்கு செல்கிறாள், குழந்தை பெற்று தந்துள்ளாள். இருந்தும், அவளிடம் யதார்த்தமில்லாத பல விஷயங்களை எதிர்பார்க்கிறாயோ என்னவோ... பணி முடித்து வரும் உன்னை, குத்தாட்டம் போட்டு வரவேற்க சொல்கிறாயா; விமான நங்கை போல, எப்போதும் ஒரு செயற்கை புன்னகையுடன் வீட்டுக்குள் வலம் வர சொல்கிறாயா அல்லது 'அத்தான், டார்லிங், பிராணநாதா...' என்று கொஞ்ச சொல்கிறாயா... 'நான் யாரையும் வெறுக்கவில்லை, சந்தோஷமாய் தான் இருக்கிறேன்...' என, அவளை உரக்க சுய அறிவிப்பு செய்ய சொல்கிறாயா* நெருப்பு என்று சொன்னால், வாய் வெந்து விடாது. உன் மனைவி, திருமணத்திற்கு முந்தைய ஆண் நண்பனை சந்தித்திருக்கலாம் அல்லது அலுவலகத்தில் திருமண பந்தம் மீறிய உறவில் ஈடுபட்டிருக்கலாம்* திருமணத்திற்கு முன், காதலனாக இருந்த நீ, திருமணத்திற்கு பின், உனக்குள் இருந்த காதலனை கொன்று, முழுநேர கணவன் ஆகி விட்டாயோ என்னவோ...பிரச்னைகளை, பேசி தீர்த்துக் கொள்வது ஒரு கலை. பேச்சில் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி கொள்ளாதீர்; மீறி, நியாயமற்ற, அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை அவள் அள்ளி வீசினால், சிக்கல்களை விடுவிக்கும் மதிநுட்பத்துடன் செயல்படு. எந்த கசப்பான உண்மையை கொட்டினாலும், அதை இனிமையாக சந்தித்து தீர்வு காண். பேச்சின்போது, காட்சியமைப்பை மேம்படுத்தும் நகைச்சுவையை அள்ளித் துாவு. கோவில்கள், சினிமா, சுற்றுலா செல்லுங்கள். விடுமுறை போட்டு, மனைவியை வீட்டில் ஓய்வெடுக்க சொல். ஒருநாள், சமையல் செய்யாமல், வெளியிலிருந்து உணவை வரவழைத்து சாப்பிடுங்கள். கனிவான, அன்பான பேச்சு, நல்ல மருந்து மகனே!— என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்