உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு —நான், 30 வயது பெண்; கால் சற்று ஊனமானவள். என்னுடன் பிறந்தோர், இரு தங்கைகள். என் தந்தை, தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்; தாய், இல்லத்தரசி.என் உடல் குறைபாட்டால், வந்த வரன்கள் எல்லாம் தட்டிப்போயின. எனவே, தங்கைகளுக்கு முதலில் திருமணம் முடிக்க கூறினேன். இதற்கிடையில், என் கல்வி தகுதியை வளர்த்து கொண்டேன். புகழ்பெற்ற தனியார் பள்ளியில், நல்ல சம்பளத்துடன் ஆசிரியர் பணி கிடைத்தது.தங்கைகளுக்கு திருமணம் முடிந்தது; எனக்கு வரன் பார்க்க ஆரம்பித்தனர். இந்நிலையில், என்னுடன் பணிபுரிந்த, ஆசிரியர் ஒருவர், திருமணம் செய்து கொள்ள முன் வந்தார். தந்தையிடம் கூற, அவரை பற்றி விசாரித்தார்.என்னை விட, குறைந்த படிப்பு, சம்பளமும் குறைவு. அப்பா இறந்து விட்டார். ஒரே மகனான இவரும், அம்மாவும் தனி வீட்டில் வசிக்கின்றனர்.என் பிடிவாதத்தால், அரை மனதுடன் எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தார், அப்பா. கனவுகளோடும், கற்பனைகளோடும் வாழ்க்கையை எதிர்நோக்கி இருந்த எனக்கு, அதிர்ச்சி காத்திருந்தது. எனக்கு போட்ட நகைகளை எல்லாம் வாங்கி வைத்துக் கொண்டார், மாமியார்.'இனி, மாதா மாதம், உன் சம்பளத்தை எங்கம்மாகிட்ட கொடுத்துடு...' என்றார், கணவர். நாட்கள் செல்ல செல்ல, என்னை பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக கருத ஆரம்பித்தனர்.ஒரு கட்டத்தில், எனக்கும், கணவருக்கும் வாக்குவாதம் முற்றியது. 'கால் ஊனமான பெண்ணை, யாரும் திருமணம் செய்து கொள்ள முன்வர மாட்டார்கள். படித்து, நல்ல வேலையில், நிறைய சம்பளமும் கிடைப்பதால், உன்னை, மனைவியாக ஏற்றுக் கொண்டேன்...' என்று கூற, மனம் நொந்து போனேன்.தற்சமயம், கணவரை பிரிந்து, தாய் வீட்டில் இருக்கிறேன். எங்களை சேர்த்து வைக்க பெற்றோரும், உறவினர்களும் முயற்சிக்கின்றனர்.மீண்டும் சேர்ந்து வாழ்வதை நினைத்தாலே, அருவருப்பாக இருக்கிறது. அந்த அளவுக்கு, கணவரும், மாமியாரும், பாடாய் படுத்தி விட்டனர்.இனி, நான் என்ன செய்யட்டும் அம்மா.— இப்படிக்கு,உங்கள் மகள்.அன்பு மகளுக்கு—மாற்றுத்திறனாளி பெண்களை மணந்த எத்தனையோ ஆண்கள், மனைவியரை கண்ணியமும், அன்பும் குறையாமல் ஒற்றுமையாய் தாம்பத்யம் நடத்தி வருகின்றனர். ஆண்களில் பேராசை பேய்களும் இருக்கின்றனர்; பெண்மையை மதித்து போற்றும் கனவான்களும் இருக்கின்றனர். உன் கணவர், முதல் வகை.உன்னையும், பேராசை கணவரையும் சேர்த்து வைக்க முயற்சிக்கும் பெற்றோரிடமும், உறவினரிடமும், ஒரு செய்தியை தீர்க்கமாக சொல்லி அனுப்பு.'என்னிடம் வலுக்கட்டாயமாக வாங்கிய நகைகளை, உங்கள் அம்மா கொடுக்க வேண்டும். இனி, மாத சம்பளத்தை உங்களிடம் கொடுக்க முடியாது. என் சம்பளம், என் வங்கிக் கணக்கில்; உங்கள் சம்பளம், உங்கள் வங்கி கணக்கில்.'குடும்ப செலவை இருவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். என் உடல் ஊனத்தை இழிவுபடுத்தி பேசக் கூடாது. இவைகளை செய்ய மறுத்தால், உங்கள் மீதும், உங்கள் அம்மா மீதும், புகார் செய்வேன். உங்களை வேலையை விட்டு நீக்க சொல்வேன். குட்ட குட்ட குனிய மாட்டேன், திரும்பி அடிப்பேன்.'மாற்றுத்திறனாளிகளுக்கு, உடலில் தான் சிறு ஊனம்; மனதில் அல்ல. பெரும்பாலான மனிதர்கள், உடலில் குறை இல்லாவிட்டாலும், மன ஊனம் கொண்டவர்களாக இருக்கின்றனர். நீங்கள் மன ரீதியாக மாற்றுத்திறனாளி. கால் ஊனத்தை காரணம் காட்டி, வேலைக்கு போகாமல் இருக்கிறேனா, தாம்பத்யத்தில் குறை வைத்திருக்கிறேனா...'மாற்றுத்திறனாளி என்பதை மறைத்து, உங்களுக்கு கட்டி வைத்தனரா... தெரிந்து, விரும்பிதானே மணம் செய்து கொண்டீர்கள். திருமணத்திற்கு பின், விபத்தில், உங்கள் உடல் உறுப்பு ஊனமுற்று இருந்தால், நான், உங்களை வெறுத்திருப்பேனா...'நீங்கள் திருந்தி வர, ஒரு வாய்ப்பு தருகிறேன். உங்களின் துர் நடத்தைகளை கைவிட்டு, என்னுடன் குடும்பம் நடத்த வந்தால் மகிழ்ச்சி. இல்லையென்றால், சட்டப்படி விவாகரத்து செய்வேன்...' எனக் கூறு.உனக்கும், கொடுமைக்கார கணவருக்கும், மணமாகி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை பிறந்திருக்கிறதா என்ற தகவல், உன் கடிதத்தில் குறிப்பிடவில்லை. 'பணத்தாசை பிடித்த, கொடுமைக்கார கணவருடன் சேர்த்து வைக்கும் முயற்சி தோற்று விட்டால், என்னை, ஆயுளுக்கும் வைத்து பராமரிப்பீர்களா...' என, பெற்றோரை கேள். பெற்றோர் ஆதரவு உண்டு என்றால், அவர்களுடன் இரு. இல்லையென்றால், வேலை பார்க்கும் பெண்கள் விடுதியில் தங்கு.நல்ல உடைகளை உடுத்து, விரும்பிய உணவுகளை உண். நகரில் உள்ள மாற்றுத்திறனாளி சகோதரிகளுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்திக் கொள். மாதம் ஒருமுறை, தங்கைகளின் வீடுகளுக்கு போய் வா. மறுமணம் செய்ய அவசரப்படாதே. அலசி ஆராய்ந்து, ஒரு மாற்றுத்திறனாளியையோ, பணத்தாசை இல்லாத ஆணையோ, மணந்து கொள்.உலகின், 700 கோடி மக்களில், யாரும் உயர்ந்தவர்கள் அல்ல, தாழ்ந்தவர்கள் அல்ல. இனத்தாலும், மதத்தாலும், நிறத்தாலும், மொழியாலும், பணத்தாலும், உணவாலும், உடல் ஊனத்தாலும், பால் பிறழ்வாலும் நடக்கும் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிப்போம்.— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !