அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள சகோதரிக்கு —ஒரு தாய்க்கு வரக்கூடாத துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும், 55 வயது பெண்மணி நான். குடிக்கு அடிமையானவர், என் கணவர். எனக்கு, அவர் செய்த கொடுமைகள் சொல்லி மாளாது. என் வேதனைகளை எல்லாம், மகன் மற்றும் மகளை வளர்ப்பதில் மறந்தேன்.தாய் வீட்டாரின் அன்பும், ஆதரவும், என்னை வாழ வைத்தன. என்றாவது ஒரு நாள், கணவர் திருந்துவார் என்ற நம்பிக்கை, இப்போது நிறைவேறியுள்ளது.குடி பழக்கத்தை விட்டு, என்னிடமும், பிள்ளைகளிடமும் அன்பாக நடந்து கொள்கிறார், கணவர். ஆனால், இந்த சந்தோஷத்தையும், நிம்மதியையும் அனுபவிக்க, எனக்கு கொடுத்து வைக்கவில்லை. உடல் நலம் சரியில்லாமல், மருத்துவமனைக்கு சென்றபோது, ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். அதாவது, எனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக கூறினர்.மருந்துகளும், கணவரின் அன்பும், இந்த நோயிலிருந்து, என்னை மீட்டெடுக்கும் என்று நம்பினேன். ஆனால், மகளின் மன மாற்றம், என்னை மிகவும் பாதித்தது. என் நோய் பற்றி அறிந்த மகள், என்னுடன் பேசுவதையும், நெருங்கி பழகுவதையும் தவிர்த்தாள். ஒரு கட்டத்தில், என்னை ஒதுக்கி, உறவினர் வீட்டில் தங்கி இருக்கிறாள்.கணவரும், மகனும் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பியுள்ளனர்.நோயின் கடுமையை விட, மகளின் பாராமுகம், என்னை சிறிது சிறிதாக சாகடிக்கிறது. என் மகளை எப்படி சமாதானப்படுத்துவது, ஆலோசனை தாருங்கள்.— இப்படிக்கு,உங்கள் சகோதரி.அன்பு சகோதரிக்கு —உனக்கு என்ன வகை புற்றுநோய் வந்திருக்கிறது என்பதை, உன் கடிதத்தில் குறிப்பிடவில்லை. மார்பகப் புற்றுநோய் அல்லது கர்ப்பப்பை புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருப்பாய் என, யூகிக்கிறேன்.* உன் கணவர் திருந்தாமல், தொடர்ந்து குடிநோயாளியாக இருந்தால், என்ன பண்ணுவாய்* பெற்றோர், உன் மீது அன்பும், ஆதரவும் அளிக்காது பாராமுகமாய் இருந்திருந்தால், என்ன பண்ணுவாய்* மகன், உன் மகளை போல் உன்னை கவனிக்காது ஒதுங்கிக் கொண்டால், என்ன பண்ணுவாய்.தன்னை அரவணைக்க யாரும் இல்லை, தன்னந்தனியாளாய் நிற்கிறோம் என்ற நிலையில், மனதில் ஒரு வைராக்கியம் பூக்கும். மனிதர்கள் துணை இல்லாவிட்டால் பரவாயில்லை. நம்முடன் இறைவன் இருக்கிறான் என்ற தன்னம்பிக்கை ததும்பும்.பிறக்கும் போதே உன்னுடன், மகளை கூட்டி வந்தாயா... நீ இறக்கும்போது உன்னுடன், மகளை கூட்டி போக முடியுமா... தொற்றுநோய் அல்ல, புற்றுநோய். ஆனால், அது ஒரு தொற்றுநோய் என, மகள் நினைத்திருக்கிறாளோ என்னவோ...மகளுக்கு திருமணமாகவில்லை என, யூகிக்கிறேன். திருமணமாகாத மகள், தாயின் மருத்துவ செலவுக்கு எந்த விதத்தில் உதவிட முடியும்... எதாவது ஒரு வேலையில் மகள் இருந்தால், சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை உனக்கு செலவிட வேண்டி வருமே என பயப்படுகிறாளோ என்னவோ...சிலர், உயிர்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க அசூயைப்படுவர். அப்படி, மகள் அசூயைப் படுகிறாளோ என்னவோ...உன்னிடம், தமிழ்நாடு அரசு மருத்துவ காப்பீடு அட்டை உள்ளதா? அந்த அட்டை இருந்தால், மருத்துவம் இலவசமாய் பார்ப்பர். சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சில புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைகள், புற்றுநோயாளிகளின் செலவை, 'ஸ்பான்சர்' செய்கின்றன.நீ எதற்கு மகளை சமாதானப்படுத்த வேண்டும்... சமாதானப்படுத்தும் நேரத்தில், உன் புற்றுநோயை குணமாக்கும் வழியைப் பார்.கணவர், மகன், பெற்றோர், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அன்பும், அரவணைப்பும் போதும்; நீ புற்றுநோயிலிருந்து பூரணமாய் மீளலாம்.உறவுகளின் ஆதரவுக்கரத்தை நம்பாது, ஏழை மக்கள், கீழ்கண்டபடி, தமிழ்நாடு அரசு மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பெறலாம். உன்னிடம் அட்டை இல்லாவிட்டால் நீயும் பெறு.காப்பீடு அட்டை பெறுவோரின் ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாயை தாண்டக் கூடாது. கிராம நிர்வாக அலுவலரிடம் வருமான சான்றிதழ் பெற வேண்டும். குடும்ப அட்டை மற்றும் அடையாள அட்டையை காட்டி, ஆட்சியர் அலுவலகம் சென்று, காப்பீடு அட்டை பெறலாம்.தமிழ்நாடு காப்பீடு அட்டை வைத்திருப்போர், தானாகவே மத்திய அரசு காப்பீட்டு திட்டத்தோடு இணைக்கப்படுகின்றனர். மாநில அரசு, இரண்டு லட்சம், மத்திய அரசு, ஐந்து லட்சம் ரூபாய் வரை, மருத்துவ காப்பீடு உண்டு.இத்திட்டத்தின் மூலம், தமிழகத்தில், 158 லட்சம் பேர் பயனடைகின்றனர். காப்பீடு திட்டத்தில், 242 அரசு மருத்துவமனை மற்றும் 707 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். காப்பீடு பற்றிய புகாரை, 1800 -425 -3993 எண்ணுக்கு தெரிவிக்கலாம்.சகோதரி... நீ குணமான பின், மகள், உன் முன் வந்து நிற்பாள். பட்டினத்தார் வரிகளை மனதில் கொண்டு, புற்றுநோயை எதிர்கொள்.— என்றென்றும் தாய்மையுடன்சகுந்தலா கோபிநாத்.