உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள சகோதரி —அரசுப் பணியிலிருந்து ஓய்வுப்பெற்றவன்; வயது: 61. மனைவி வயது: 57; இல்லத்தரசி. எங்களுக்கு ஒரு மகள், ஒரு மகன். மகளுக்கு திருமணமாகி, கணவர், இரு குழந்தைகளுடன் ஐதராபாத்தில் வசிக்கிறாள். மகன், சாப்ட்வேர் இன்ஜினியர். மருமகளும், சாப்ட்வேர் இன்ஜினியர். சென்னையில் வசிக்கின்றனர்.நான் பணியில் இருந்தபோது, அலுவலகத்திலிருந்து நான்கைந்து பணியாளர்கள், வீட்டு வேலை செய்ய வருவர். வீட்டில் நான் வைத்தது தான் சட்டம். மனைவியோ, மகன் - மகளோ, என் பேச்சை மீற மாட்டார்கள். பைக் சாவி, சாப்பாட்டு பையை மனைவி தான் ஓடி வந்து எடுத்து தருவாள். வெயிலோ, மழையோ, சுடுதண்ணீர் போட்டு தந்தால் தான் குளிப்பேன்.மாலை வீடு திரும்பியவுடன், 'டிவி' முன் உட்கார்ந்து விடுவேன். நான் விரும்பிய சேனல் தான் ஓடும். மனைவியை, 'சீரியல்' பார்க்க விட மாட்டேன்.வாரம் முழுக்க எனக்கு, மட்டனோ, சிக்கனோ, மீனோ, கருவாடோ, உப்புக்கண்டமோ தேவை. இல்லையென்றால், சாப்பாட்டை விசிறியடித்து விடுவேன்.சம்பளப் பணம், என், 'கஸ்டடி'யில். தேவைக்கேற்ப சிறிது சிறிதாக குடும்ப செலவுகளை செய்வேன். உறவினர்களை வரவேற்பதும், உறவினர் வீடுகளுக்கு போவதும், என் விருப்பத்தை பொறுத்து தான்.ஓய்வு பெற்ற பின், வீட்டில் என் நிலைமை தலைகீழானது. திருமணமாகி, 35 ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்த மனைவி, எஜமானி ஸ்தானத்தை கைப்பற்றினாள். ஏ.டி.எம்., கார்டை பிடுங்கி, 'பென்ஷனை' எடுத்து செலவு செய்கிறாள். 'சாப்பிட்ட தட்டை கழுவி வையுங்க; படுத்த பெட்டை மடித்து வைங்க; டாய்லட்டை சுத்தம் செய்யுங்க; காலை, 6:00 மணிக்கு எந்திரிச்சு, ஒரு மணி நேரம், 'வாக்கிங்' போங்க; மாசத்துக்கு இரண்டு நாள் தான் கறி, மீன்...' என, மனைவியின் அதிகாரம், என்னை சுற்றி வந்து தாக்குகின்றன.ஓய்வுப்பெற்ற மூன்றாவது மாதமே, 'மகன் - மகள் கல்யாணத்துக்கும், மகன் படிப்புக்கும் வாங்கின கடன் அப்படியே நிக்குது. வீட்ல உக்காந்து தரையை தேய்க்காம ஏதாவது வேலைக்கு போங்க...' என, விரட்டினாள். 'உங்க அப்பன், புத்தி கெட்டதனமா, ஒரு வயசை கூட்டி, பள்ளிக் கூடத்துல உன்னை சேத்திருக்கான். அந்த ஒரு வருஷம் சர்வீஸ்ல இருந்திருந்தா, சம்பள பணம் முழுசா கிடைச்சிருக்கும்.'மேலதிகாரியோட கைய கால பிடிச்சிருந்தாலும், ஒரு வருஷம், பணி நீட்டிப்பு கிடைச்சிருக்கும். அதையும் பண்ண துப்பில்ல. பொசகெட்ட மனுஷன் எல்லாத்தையும் விட்டுட்டு வெள்ளாந்தை மாதிரி நிக்குது...' என, வசை மாறி பொழிகிறாள்.மகன் - மகளிடம் என்னைப் பற்றி, குறைகளை அள்ளி தெளிக்கிறாள். பத்திய சாப்பாடு, ஒரு நாளைக்கு ஒரு வேளை டீ. போனில் இருந்த இரு சிம்களில் ஒன்று, 'கட்!' புதுத்துணி உடுத்துவதில் கட்டுப்பாடு. அவள் வீட்டு உறவினர்களின் தங்கு தடையற்ற வருகை. 'டிவி' ரிமோட் பறிமுதல் மற்றும் உற்சாக பானம் அடியோடு நிறுத்தம் முதலிய நடவடிக்கைகள், என்னை நிலைகுலைய செய்தன.தற்கொலை செய்து கொள்ளலாமா; மனைவியை விவாகரத்து செய்து, ஓய்வூதிய பணத்தில் இன்னொரு திருமணம் பண்ணலாமா; எந்த பிக்கலும் பிடுங்கலும் வேண்டாமென்று, காசி பக்கம் சந்நியாசியாய் ஓடி விடலாமா... வீட்டுக்குள்ளேயே இருந்து, மனைவி - மகள் - மகனுக்கு எதிராக, உள்நாட்டு கலகம் செய்யலாமா... நீங்கள் தான் தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும், சகோதரி!— இப்படிக்கு,அன்பு சகோதரர்.அன்பு சகோதரருக்கு —அரசு பணியிலோ, தனியார் பணியிலோ இருக்கும் ஒவ்வொருவருக்கும், பணி ஓய்வு என்பது, கட்டாய அவசியம். முதல் பந்தியில் சாப்பிட்டு முடித்தோர், அடுத்த பந்தியில் சாப்பிடுபவருக்கு இடம் விட வேண்டும். அதுபோல், உரிய வயதில் ஓய்வு பெற்று, இளைய தலைமுறைக்கு வழி விடுதல் சிறப்பு.ஓய்வூதியம் இல்லாது, பணி ஓய்வு பெறவில்லை நீங்கள். கடைசியாக பெற்ற சம்பளத்தில் பாதியை ஓய்வூதியமாக பெறுகிறீர்கள். புலம்பல் தேவையில்லை. அதே நேரம், மனைவி எடுக்கும் சிக்கன நடவடிக்கைகளை வரவேற்கிறேன்.பணியில் இருந்தபோது, வீட்டுக்குள் முழு சோம்பேறியாக இருந்திருக்கிறீர். பணி ஓய்வு பெற்ற பிறகாவது, உங்கள் வேலைகளை நீங்கள் தானே செய்ய வேண்டும்?பணி ஓய்வு பெற்றபின், பெரும்பாலானோருக்கு வரும் தாழ்வுமனப்பான்மை, உங்களுக்கும் வந்துள்ளது. ரயில் இன்ஜினிலும், விமானத்தின் காக்பிட்டிலும், இரு டிரைவர்கள், இரு பைலட்கள் இருப்பர். ஒருவர் ஓய்வெடுத்தால் இன்னொருவர் ரயிலையும், விமானத்தையும் செலுத்துவர்.குடும்ப வாகனத்தை நீங்கள் ஓட்டி கொண்டிருந்தீர்கள். தற்போது, நீங்கள் ஓய்வில் இருக்கிறீர். குடும்பத்தை இயக்கும் பொறுப்பை, மனைவி ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதிலென்ன தவறு?பணியில் இருக்கும் வரை, உங்களது குற்றம், குறைகளை அவரால் தைரியமாய் சொல்ல முடியவில்லை; இப்போது, வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் கூறும் குற்றம், குறைகளை திருத்திக் கொள்ளுங்களேன்.பணி ஓய்வுக்கு பிறகும், உங்கள் குடும்ப பொருளாதார தேவைகள் தலைவிரித்து ஆடுகின்றன. நீங்கள், முதல், 'இன்னிங்ஸ்' ஆடி, மகன் - மகளை படிக்க வைத்து, திருமணமும் செய்து வைத்து விட்டீர். இரண்டாவது, 'இன்னிங்ஸ்' ஆடி, குடும்பத்தின் கடன்களை அடையுங்கள்.இரண்டாவது, 'இன்னிங்ஸ்' ஆடுவது தேவையையும், தனி மனித ஆரோக்கியத்தையும் பொறுத்தது. உணவு கட்டுபாடு, நடை பயிற்சி மூலம், உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இரண்டாவது, 'இன்னிங்ஸ்' ஆட சொல்கிறார், மனைவி.ஓய்வூதியத்துக்கும் நீங்கள் கடைசியாக வாங்கின சம்பளத்துக்கும் உள்ள தொகை வித்தியாசத்தை, உங்களது பகுதி நேர பணி மூலம், இட்டு நிரப்ப முடியுமா என, பாருங்கள். மனைவியுடன் மனம் விட்டு பேசி, அவரது புதிய எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்ற முயற்சியுங்கள்.தற்கொலை செய்து கொள்வதோ, சன்னியாசி ஆவதோ, உள்நாட்டு கலகம் செய்வதோ, கடைந்தெடுத்த முட்டாள்தனம். இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளும் நினைப்பை அடியோடு மறந்து விடுங்கள்.— என்றென்றும் பாசத்துடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !