உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்

அன்புள்ள அம்மா —எனக்கு, 46 வயதாகிறது. திருமணம் ஆகி, 12 ஆண்டுகள் ஆகிறது. இரு மகள்கள் உள்ளனர். மனைவியிடம் மிகவும் பாசமாக நடந்து கொள்வேன். யாரையும் எளிதில் மன்னிக்கும் மனோபாவம் கொண்டவன். மனைவியிடம் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது.என் திருமண வாழ்க்கைக்கு முன் நடந்த அனைத்தையும், மனைவியிடம் ஒளிவு மறைவு இல்லாமல் கூறியிருக்கிறேன்.திருமணமாகி ஐந்து ஆண்டுகள் கழித்து, அவளின் பழைய காதல் எனக்கு தெரிய வந்தது. மனம் உடைந்து போனேன். அந்த காதல், திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்தது தான் மிகவும் மன வேதனையாக இருந்தது.மரணத்தை தேடும் முயற்சியை கைவிட்டேன்; என் இரண்டு பிஞ்சு குழந்தைகளுக்காக, அவளிடம் பேசினேன். அப்போதும், அவள் தவறை மறைத்து பேசினாள். நாட்கள் நகர்ந்தது. என் மனதை தேற்றி, மனம் பக்குவம் அடைந்து, அவளை மன்னித்து மீண்டும் எப்போதும் போல அன்பாக வாழத் துவங்கினேன்.ஒருநாள், எதேச்சையாக அவள் மொபைல் போனை பார்க்கும்போது, அவனது மெசேஜ் பார்த்து அதிர்ந்து விட்டேன். அவளிடம் கேட்டதற்கு, 'எனக்கு ஒன்றும் தெரியாது. அவன் தான் மெசேஜ் செய்கிறான்...' என்றாள்.உடனே, அவனை மொபைலில் அழைத்து, கண்டித்து, மீண்டும் வாழ்க்கையை துவங்கினேன்.இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக நிம்மதி இழந்து நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். காரணம், அவள் மீண்டும் வேறொரு பையனுடன் தொடர்பில் இருக்கிறாள்.நான் குடியிருக்கும் வீட்டின் கீழ் ஒரு பையன், 10ம் வகுப்பு படித்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன், அப்போது, 'கொரோனா' நேரம் என்பதால், அவன் வீட்டிலேயே இருந்தான். நான் மருத்துவமனையில் வேலை செய்வதால், எனக்கு வேலை இருந்தது. முதலில் சிறு சிறு உதவிகளுக்காக அவனை அழைத்தாள். பிறகு, அவனுடன் நெருங்கிப் பழகி வந்தாள். அதை யதார்த்தமாக நினைத்து, நானும் கண்டுகொள்ளவில்லை.நான் இரவு வேலைக்கு செல்லும்போது, தனியாக படுப்பதற்கு பயமாக இருக்கிறது என்று, துணைக்கு அவனை படுக்க வைத்துக் கொள்வாள்.மனக்குழப்பத்துடனே அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்தேன். நிறைய மாற்றங்களை உணர்ந்தேன். சந்தேகத்தை உறுதிபடுத்திக் கொண்டேன்.இப்போது என்ன செய்வதென்றே எனக்கு தெரியவில்லை. அவளுடன் வாழ மிகவும் அருவருப்பாக உள்ளது. பிரிந்து விடலாம் என்றால், என் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். அவளிடம் பேசினால், மீண்டும் பொய் மூட்டைகளை அவிழ்த்து சமாளித்து விடுவாள். அப்படி ஒரு சாமர்த்தியசாலி.எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் தான் நல்ல தீர்வு சொல்ல வேண்டும், அம்மா.— இப்படிக்கு,ஆர்.விவேகானந்தன்.அன்பு மகனுக்கு திருமண பந்தம் மீறிய உறவுகளில் ஈடுபடும் நபர்கள், தனித்துவமானவர்கள். ஒருவரைப் போல ஒருவர் இருப்பதில்லை.எதிர்பாலினரால் உடல்ரீதியாக இன்னுமே ஈர்க்கப்படுகிறோமா என, ஒரு சோதனை ஓட்டம் முயற்சிக்கின்றனர், சிலர்.சிலர், எவ்வித திருப்பங்களும் இல்லாத சலிப்பூட்டும் வாழ்க்கையிலிருந்து விடுபடவும், மன அழுத்தம் போக்கவும், கள்ள உறவுகளில் ஈடுபடுகின்றனர். திருமணத்துக்கு வெளியே சாகசக்காரர்களாகவும், வேட்டைக்காரர்களாகவும் காட்டிக் கொள்ள இத்தகைய உறவில் ஈடுபடுகின்றனர், சிலர்.திருமண பந்தம் மீறிய உறவுகள், ஏழு வகைப்படும்.1.ஒரே ஒரு முறை தாம்பத்யத்துடன் கள்ள உறவு முறிந்து விடும்2.ஒரு இடம் மனைவிக்கு, ஒரு இடம் கள்ளக்காதலிக்கு என, இடம் ஒதுக்கும் மோதல் தொடர்பு.3.திருமண பந்தம் மீறிய உறவை, நாணயம் மற்றும் ஸ்டாம்ப் சேமிப்பு போல பொழுது போக்காய் செய்பவர்கள்.4.கணவன் - மனைவியை விட, அழகான, பிரபலமான, வெற்றிகரமான, அதிகாரமான எதிர்பாலினரை விரும்பி அடைதல்.5.ராமனாய் வாழ்ந்து கொண்டிருந்தவன், திடீரென்று வாழ்க்கையின் பாதியில் கண்ணனாக மாறுதல். 6.கசப்பான திருமணத்திலிருந்து நிரந்தரமாய் விலக, திருமண பந்தம் மீறிய உறவில் திட்டமிட்டு ஈடுபடல்.7.நீலப்படம் பார்த்து, விலை மகளிருடன் போய் தாம்பத்ய போதையில் மிதத்தல்.உன் மனைவியை பொறுத்தவரை சம்பாதிக்கும் கணவனாக, இரு மகள்களுக்கு தகப்பனாக, தவறுகளுக்கு மறைவிடமாக நீ இருக்க வேண்டும்... அவ்வளவே! உன் மனைவி விஷயத்தில், நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...* மனைவியிடம் மனம் விட்டு பேசு. 'உன்னுடைய தவறான உறவுகளை என்னால் தொடர்ந்து சகித்துக் கொள்ள முடியாது. நிரந்தரமாய் திருந்த சம்மதித்தாய் என்றால், சில சமாதான திட்டங்கள் பற்றி பேசுவோம்.'மாறாக, உன் தவறான உறவுகளை தொடர்வாய் என்றால், நாம் விவாகரத்து செய்து கொள்வோம். மகள்களை என்னிடம் விட்டுவிடு...' எனக்கூறு. சமாதானத்துக்கு அவள் ஒப்புக்கொண்டால், அவளை, மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று ஆலோசனை பெற செய்* அவளது விருப்பத்தை நன்கு பூர்த்தி செய்யும் அளவுக்கு நெருக்கமாய் இரு* தினமும் குறைந்தது நான்கு தடவை மொபைல் போனில் பேசு. அவள் பேசினால் ஈடுபாடாய் பதில் சொல்* அலுவலகம் செல்லும் போது, திரும்பும் போது, சிறு சிறு முத்தங்கள் கொடு. தினம் ஒரு மணி நேரம் அவளுடன் அன்னியோன்யமாய் பேசு* மனைவியின் மொபைல் போன் எண்ணை மாற்று* வாரா வாரம் ஹோட்டல், பீச், கோவில் என்று, மனைவி, மகள்களுடன், 'அவுட்டிங்' போ* உன் மனைவியுடன் இரு மகள்களை துாங்கச் சொல்* மனைவியின் தோழிகளை கண்காணி. கெட்ட விஷயங்களில் கூட்டு சேரும் அல்லது கெட்ட விஷயங்களை சொல்லிக் கொடுக்கும் தோழி இருந்தால் கத்திரி* 'உன் மகன், 10ம் வகுப்பு மாணவன் போல. அவனுடன் தொடர்பு வைத்து உறவுகளை இழிவு படுத்தாதே. கெட்ட கனவுகளாக அவைகளிலிருந்து வெளியே வா...' எனக்கூறு* மனைவியின் இழிசெய்கைகள் தொடர்ந்தால், குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு விண்ணப்பி.— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !