உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு —

என் வயது: 32. தனியார் கல்லுாரியில் பேராசிரியையாக உள்ளேன். திருமணத்துக்கு முன், ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதி, கலெக்டர் ஆகணும் என்பது, லட்சியமாக இருந்தது.ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயார் செய்வதற்காக, தினமும் மாலையில், கல்லுாரி முடிந்த உடனே, நுாலகத்துக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தேன். என்னைப் போலவே ஒருவர், தேர்வுக்காக அங்கு படிக்க வருவார். அவருடன் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில், காதலாக மாறியது.பெற்றோரை எதிர்த்து, அவரையே திருமணம் செய்து கொண்டேன். திருமணமான புதிதில், 'உன்னை, ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத வைத்து, கலெக்டராக ஆக்குவது தான், என் முதல் வேலை...' என்பார். ஆனால், காலத்தை கடத்தினாரே தவிர, அதற்கான எந்த முயற்சியும் செய்யவில்லை; என்னையும் படிக்க விடவில்லை.திருமணமான ஒரே ஆண்டில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை வளர்ப்பில், ஐ.ஏ.எஸ்., கனவை தள்ளி வைத்தேன். குழந்தைக்கு, நான்கு வயதாகி விட்டது. இப்போது, தேர்வுக்கு படிக்கிறேன் என்றால், மறுக்கிறார், கணவர்.கணவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக, என் மீது அன்பு குறைவது போல் தோன்ற, அவரிடம் நேரிடையாகவே கேட்டேன். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அவருக்கு, என்னை விட சம்பளம் குறைவு என்ற காரணத்தால், தாழ்வு மனப்பான்மை கொண்டிருப்பது, தெரிய வந்தது.அதற்கேற்ப, அவரது பெற்றோரும், ஏதாவது வாக்குவாதம் ஏற்படும் போது, 'உன்னை விட, உன் பொண்டாட்டி அதிகம் படித்தவள், அதிகமாக சம்பாதிக்கிறாள்...' என்று குத்திக்காட்ட, அவரது ஆத்திரம் முழுக்க, என் மீது விழுகிறது.இப்போதெல்லாம், 'நீ வேலையை விட்டு விடு, என் சம்பாத்தியத்தில் குடும்பம் நடத்து...' என்று கூற ஆரம்பித்துள்ளார். அவரது சம்பளத்துக்குள் குழந்தையை படிக்க வைக்கவோ, குடும்பத்தை ஓரளவாவது வசதியாக வாழ வைக்கவோ முடியாது என்பது தான் உண்மை.ஆனால், அதை ஏற்க மறுக்கிறார். 'நீ வேலைக்கு சென்றால், தற்கொலை செய்து கொள்வேன்...' என்று மிரட்டுகிறார்.நான் படும் கஷ்டங்களை, என் தோழி மூலம் அறிந்தனர், என் பெற்றோர். நீண்ட நாள் என்னுடன் பேசாதிருந்தவர்கள், 'நீ குழந்தையுடன் இங்கு வந்துவிடு. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இப்பவாவது எங்க பேச்சை கேளு. இல்லாவிட்டால் ஆயுளுக்கும், தாழ்வு மனப்பான்மை கொண்டவனுடன், நீ மேலும் கஷ்டத்தை தான் அனுபவிக்கணும்...' என்கின்றனர்.நான் என்ன செய்வது அம்மா...— இப்படிக்கு, பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

அன்பு மகளுக்கு —

காதலனாய் இருக்கும்போது பெருந்தன்மையாய் தன்னை வெளிபடுத்திக் கொள்ளும் ஆண்கள், திருமணத்துக்கு பின், தாழ்வுமனப்பான்மை கொள்கின்றனர்.சில வகை ஆண்கள், மனைவி தன்னை விட அதிகம் படித்திருந்தாலும், அதிகம் சம்பாதித்தாலும் பரவாயில்லை. அவள் சம்பளம் முழுக்க தன்னிடம் வந்து சேர்ந்தால் சரிதான் என, நினைக்கும் சுயநலவாதியாக இருக்கின்றனர்.இந்திய ஆட்சி பணி தேர்வை பொதுப்பிரிவினர், 32 வயது வரை, ஆறு தடவைகள் எழுதலாம். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 35 வயது வரை, ஒன்பது தடவை எழுதலாம். அட்டவணைபடுத்தப்பட்ட பிரிவினர் மலைவாழ் மக்கள், 37 வயது வரை, எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் எழுதலாம்.மாற்றுத்திறனாளிகள், 42 வயது வரை, ஒன்பது தடவைகள் எழுதலாம். நீ எந்த பிரிவை சேர்ந்தவள் என்பதை கடிதத்தில் குறிப்பிடவில்லை. இதில் நீ எந்த பிரிவில் இருந்தாலும், இந்திய ஆட்சி பணி தேர்வை எழுதலாம்.நீ, சில தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் முன், கணவரிடம் மனம் விட்டு பேசு.'இன்னும் நம் காதல் மெய்யானது என, நம்புகிறேன். திருமணத்திற்கு முன், நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதே, ஆண்மைக்கு அழகு. 'தற்கொலை செய்து கொள்வேன்' என்ற உங்கள், 'எமோஷனல் பிளாக்மெயிலு'க்கு பயந்து, ஒருநாளும் என் வேலையை விட மாட்டேன்.'கல்வி, என் பிறப்புரிமை. வேலை, என் சுய அடையாளம். உங்கள் பெற்றோர், என் படிப்பையும், வேலையையும் சுட்டிக்காட்டி காயப்படுத்த, இனிமேலும் அனுமதிக்காதீர்.'என், ஐ.ஏ.எஸ்., கனவை கலைத்தீர்கள் என்றால், நம் திருமண பந்தத்தை துண்டித்து கொள்ளவும் தயங்க மாட்டேன். ஒருமாதம் அவகாசம் தருகிறேன். யோசித்து நல்ல முடிவெடுங்கள்...' எனக்கூறு.உன் கணவர், ஒரு மாதத்தில் உனக்கு சாதகமான முடிவெடுக்கா விட்டால், கீழ்க்கண்ட நடவடிக்கைகளில் அதிரடியாக இறங்கு...* குழந்தையுடன் உன் பெற்றோர் வீட்டிற்கு போய் விடு* எதாவது, 'கோச்சிங் சென்டரில்' சேர்ந்து படித்து, இந்திய ஆட்சிப்பணி தேர்வை எழுது* உடனடியாக, கணவரை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்து விடாதே. மனம் திருந்தி கணவர், உன்னிடம் திரும்பி வரலாம் * கணவரிடமும், மாமனார், மாமியாரிடமும் ஏச்சுபேச்சை வாங்கும் பரிதாப உடல்மொழியை கை விடு. கர்வமோ, மமதையோ இல்லாத தன்னம்பிக்கை உடல் மொழியை வெளிப்படுத்து* புகுந்த வீட்டு பிரச்னைக்கும், இந்திய ஆட்சி பணி தேர்வுக்கும் இடையே, ௪ வயது மகளை கவனியாது விட்டுவிடாதே. தாய் பாசத்தால் அவளை குளிர்வி * உன் பேராசிரியை பணியில் அலட்சியம் காட்டாதே. ஒரு நாளைய அனைத்து பணிகளையும் அட்டவணைப்படுத்தி, நேர நிர்வாகம் செய்* பிறரிடம் அறிவுரையோ, ஆலோசனையோ கேட்கும் நிலையிலிருந்து சமூகத்திற்கே அறிவுரையும், ஆலோசனையும் வழங்கும் நிலைக்கு நிரந்தரமாக தாவு.தாய்மையும், கம்பீரமும், பேரறிவும், தலைமைப் பண்பும் வழியும் பெண் சிங்கமாக மாறு. இந்திய ஆட்சிப்பணி தேர்வில், நீ வெற்றி பெற நெஞ்சார வாழ்த்துகிறேன்! — என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !