உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு —நான், 32 வயது பெண். திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. ஒரு பெண் குழந்தை, ஆறு மாதம் ஆகிறது. கணவர் வயது: 35. ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்கிறார். நான் ஆறு ஆண்டுகள், ஐ.டி., கம்பெனியில் வேலை பார்த்து, தற்போது இல்லத்தரசியாக இருக்கிறேன். உண்மையில், மன அழுத்தத்தின் காரணமாகவே வேலையை விட்டேன்.திருமணம் ஆனதையடுத்து, என் உறவுகள் மற்றும் நண்பர்களுடன் பழக்கத்தை தொடர விடவில்லை, கணவர். கணவரது வீட்டு உறவுகளுடன் மட்டும் நான் பேசி, பழக வேண்டும் என்பார். மாமியார், மாமனாரும் இதை கண்டுகொள்வதில்லை.இதற்காக பலமுறை சண்டை போட்டு, பின், நானாகவே கணவர் முன்னிலையில் என் வழி உறவுகளுடன் பேசுவதை தவிர்த்தேன். 'கொரோனா' ஊரடங்கின்போது, என் பெரியம்மா மகன் - என்னை விட ஆறு வயது சிறியவனான தம்பி, என் மீது உயிராக இருந்தான். எப்போது நான் சோர்வாக இருந்தாலும், என்னுடன் அன்பாக பேசுவான். ஊரடங்கின்போது, சென்னையில் தனியாக தங்கியிருந்த அவன், மன அழுத்தத்தில் இருந்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன், அவன், தன் மன அழுத்தத்தை பற்றியும், அதற்காக மன நல நிபுணரிடம் சிகிச்சை எடுப்பது பற்றியும் என்னிடம் கூறினான். அவன் கூறியது முதல், தொடர்ந்து ஒரு வாரம் அவனுடன் தினமும் மொபைல் போனில் பேசி, அவன் மன அழுத்தத்தை குறைக்க முயற்சித்தேன். ஆனாலும், அவன் தற்கொலை செய்து கொண்டான். நான், அவனை நேரில் சந்தித்திருந்தால், நிச்சயமாக தற்கொலையில் இருந்து தடுத்திருக்கலாம்.என் தம்பி கடைசியாக, 'அக்கா, உன்னை தான் நான் நம்புகிறேன்...' என்று கூறியது, இப்பொழுதும் எனக்கு கேட்டுக் கொண்டே இருக்கிறது. இரவில் எழுந்தால் என்னால் மீண்டும் உறங்க முடியவில்லை.ஒருமுறை, கணவரிடம், 'இனி, தாம்பத்திய உறவில் விருப்பம் இல்லை...' என்று கூறினேன். 'சரி...' என்று ஒதுங்கிக் கொண்டார். குழந்தையிடமும் பெரிதாக ஒட்டுதலுடன் இருப்பதில்லை. சமூகத்தில், நான் ஒரு குடும்பத் தலைவன் என காட்டிக்கொள்ள மட்டுமே மனைவி, குழந்தை வேண்டும் என நினைக்கிறார், கணவர்.'யாருக்காக இந்த வாழ்க்கை. நான் ஏன் விவாகரத்து வாங்கக் கூடாது என, மனது சிந்திக்கிறது. என் மகள் மட்டுமே இப்போது என் வாழ்க்கையாக இருக்கிறாள். என்னால் வேலை செய்து, எப்படியும் மகளை படிக்க வைத்து, நல்லபடியாக வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.ஆனால், அவளுக்கு நான் மட்டும் போதுமா, மகிழ்ச்சியான உலகத்தை நான் தர முடியமா? மகளுக்காக நான் இந்த வாழ்க்கையை தொடர்வது சரியா... தம்பி இறப்பால் எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்ச்சியிலிருந்து நான் விடுபட முடியுமா?மகப்பேறுக்காக அம்மா வீட்டிலிருக்கும் நான், இன்னும் இரண்டு மாதத்தில் கணவர் வீட்டிற்கு செல்ல வேண்டும். கணவரை பிரிந்தால் என் வீட்டு ஆதரவு கிடைக்காது. நான் என்ன செய்வது, ஆலோசனை கூறுங்கள் அம்மா.— இப்படிக்கு,உங்கள் மகள்.அன்பு மகளுக்கு —இந்தியாவில், 24 சதவீதம் பேர், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஆய்வு கூறுகிறது. உனக்கு மன அழுத்தம் இருக்கிறது. தற்கொலை செய்து கொண்ட, பெரியம்மா மகனுக்கு மன அழுத்தம் இருந்திருக்கிறது. அப்படி என்றால், கணவருக்கும், மன அழுத்தம் கட்டாயம் இருக்கும்.வீடு திரும்பிய உடன், நீயும், கணவரும், மெழுகுவர்த்தி வெளிச்ச விருந்து ஏற்பாடு செய்து, உங்களிருவரின் ஆவலாதிகளை பேசி தீருங்கள்.* தாம்பத்ய உறவு, ஒரு சிறப்பான மன அழுத்த போக்கி. வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை தாம்பத்யத்தில் ஈடுபடுங்கள்* உன் உறவுகாரர்களிடமும், நண்பர்களிடமும், தொடர்ந்து அன்பு பாராட்டுவாய் என்ற செய்தியை, கணவருக்கு ஒரு தகவலாய் சொல்; அனுமதி கேட்காதே* மீண்டும் வேலைக்கு போ. குழந்தை வளர்ப்புக்கு துணையாக, உன் அம்மாவை அல்லது யாராவது ஒரு உறவுக்கார முதிய பெண்ணை வைத்துக் கொள்* கணவருடனான மோதல் போக்கை கை விடு. சுயபச்சாதாபம் உன்னை முடமாக்கி விடும். கணவனை குற்றம் சாட்டாதே இதம்பதமாய் பேசு * பெரியம்மா மகனின் தற்கொலைக்கு, துளியும் நீ காரணமில்லை. அவனை நீ நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லி இருந்தாலும், தற்கொலை முடிவை கை விட்டிருக்க மாட்டான்; குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபடு* நீயும், கணவரும் யோகா, தியானம் செய்து வாருங்கள்* கணவரிடம், 10 தவறுகள் இருந்தால், பெரிய குழி தோண்டி தவறுகளை கொட்டி, காதலால் மூடு* உன் மகளுக்கு நீ மட்டும் போதாது, தகப்பனும் வேண்டும்.ஆண்டுக்கு ஒரு முறை, 15 நாட்கள், இருபக்க உறவு வீடுகளுக்கும் சென்று, உறவு பாராட்டுங்கள். இரு பக்க உறவுகளை உங்கள் வீட்டுக்கும் வரவழைத்து, விருந்து உபசரியுங்கள்.— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !