அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவுக்கு —நான், 42 வயது பெண். எனக்கு திருமணமாகி, 19 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு மகன்கள். முதலாவதாக பிறந்த மகன், 'நார்மலாக' இருந்தான்.இரண்டாவது மகன், ஒண்ணேகால் வயதில் தான் பேச ஆரம்பித்தான். ஆனால், இரண்டு வயதிலேயே பேசுவதை நிறுத்திக் கொண்டான். அதன்பின், 10 நாட்களுக்கு ஒருமுறை சில வார்த்தைகள் மட்டும் பேசுவான். பள்ளியில் சேர்த்த பிறகும் பேசவில்லை.மருத்துவரிடம் விசாரித்ததில், 'உங்க பையனுக்கு இருப்பது, 'ஆட்டிசம்' பாதிப்பு. அதற்குரிய சிகிச்சை எடுக்கணும்...' என்று, அறிவுறுத்தினார்.அதற்கான, 'ஸ்பீச் தெரபி' சென்டர்களை அணுகினேன். இதற்கிடையில், 'ஆறு வயதுக்குள் பேசினால் தான் உண்டு. இல்லையெனில் அப்புறம் பேச்சே வராது...' என்று, பயமுறுத்தினார், கணவரின் சகோதரி.மகனுக்கு ஐந்து வயதாகும் போது, பேச்சு தெரபி கொடுக்கும் சென்டரில் சேர்த்தோம்.திருமணமான புதிதில், அரசு வேலையில், சாதாரண பதவியில் இருந்தார், கணவர். அதன்பின், தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று, அதிகாரியாக உயர்வு பெற்றார். சொந்தமாக வீடு வாங்கினோம். வாடகை வீட்டில் இருந்தவரை, கணவர் உடன் பிறந்தவர்களோ, மாமியார் கூட வந்ததில்லை. சொந்தமாக வீடு வாங்கிய பின், அடிக்கடி கணவரிடம் பேச ஆரம்பித்தனர்.மகனுக்கு, 'ஆட்டிசம்' பிரச்னை இருப்பதை அறிந்த பின், யார் அது பற்றி எழுதினாலும், பேசினாலும் உடனே அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார், கணவர்.இதுபற்றி, சமூக வலைதளத்தில், யாரோ எழுதியதை படித்ததும், பழங்கள் வாங்கினார். பாதாம் பருப்பு, பூசணி விதையும் சாப்பிட்டால் பேச்சு வரும் என்றிருந்ததை பார்த்து, மகனுக்கு வாங்கி கொடுக்க ஆரம்பித்தார்.காலையில் பழம், மாலையில் சுண்டல், நடுவில் கொஞ்சம் பாதாம், பிஸ்தா என்று அளவுக்கு அதிகமாக கொடுத்ததில், இரண்டு மகன்களுக்குமே, உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தோம்.கணவர் சும்மா இருந்தாலும், உடன் பிறந்தவர்கள் சும்மா இருக்க விடுவதில்லை.மறுபடியும் பழங்கள், பருப்பு வகைகள் என, திணிக்க ஆரம்பித்தார், கணவர்.ஒருநாள், பழங்களையும், ஒரு பாக்கெட் பாதாம் பருப்பையும் வெளியில் விட்டெறிந்தேன். நான் எறிவதை பார்த்ததும், அவைகளை வாங்குவதை நிறுத்தினார். சின்ன பையனுக்கு, நிலக்கடலை, பொட்டுக்கடலை, இட்லி, பொங்கல், நன்கு குழைய வைத்த சாதம் என்று பார்த்து பார்த்து கொடுத்தேன். கடந்த எட்டு மாதங்களாக, இரண்டு மகன்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை.பெரிய மகனுக்கு, 18 வயதாகிறது. பி.காம்., படிக்கிறான். காலையில், கல்லுாரி; மாலையில், சி.ஏ., அல்லது ஐ.சி.டபிள்யூ.ஏ., ஒரே நேரத்தில், இரண்டு டிகிரி படிக்க வேண்டும் என்று கூறுகிறார், கணவர். மகனுக்கு அதில் விருப்பமில்லை.'ஒரே நேரத்தில் இரண்டையும் என்னால் படிக்க இயலாது...' என்று, கூறி விட்டான்.'நான் சொல்வதை கேட்பதாக இருந்தால் கேளுங்கள்; இல்லையெனில், மூன்று பேரும் வீட்டை விட்டு வெளியே போங்க...' என்று, கூறி விட்டார், கணவர்.என் அண்ணன் வீட்டுக்கு போனோம். அண்ணனுக்கு போன் செய்து, 'அவன் உங்க வீட்ல உட்கார்ந்து என்ன செய்யுறான்...' என, 'டார்ச்சர்' செய்தார், கணவர்.இதையடுத்து, 'வீட்டை விட்டு வெளியே போங்க...' எனக் கூறி விட்டான், அண்ணன்.நாங்கள் மறுபடி வீட்டுக்கு வந்தோம். இரண்டு நாட்கள் அமைதியாக இருந்த கணவர், மூன்றாவது நாள், 'நான் சொல்லும் அனைத்தையும் கேட்பதாக இருந்தால் இருங்கள். இல்லையெனில், வீட்டை விட்டு வெளியே போங்கள்...' என்று, மீண்டும் கூறினார்.நாங்கள் மூவரும் தனியே வேறு வீடு பார்த்து வந்து விட்டோம்.அதன்பின், கணவர், கல்லுாரிக்கு போன் செய்து, 'மகனுடைய போக்கு சரியில்லை...' என்று கூற, என் மகனை கூப்பிட்டு விசாரித்துள்ளார், கல்லுாரி முதல்வர்.இதனால், மிகவும் வருத்தப்பட்டான், மகன்.பெரிய மகன் கதை இப்படியிருக்க, சின்ன மகனுக்கு, சிறு வயதில் புரிந்துகொள்ளும் ஆற்றல் மிகவும் குறைவாகவே இருந்தது. ஆரம்பத்தில் எல்லாவற்றையும் சுருக்கி, எளிமையாக்கி சொன்னால் மட்டுமே புரியும்.ஆனால், 11 வயதில் சாதாரணமாக பேசினாலே புரிந்து கொள்கிறான். ஆறு ஆண்டு பயிற்சிக்கு பின், இப்போது கேட்கும் கேள்விகளுக்கு, ஒரு வரியில் பதில் சொல்வான்.ஒரு பாடமோ, கதையோ சொல்லிக் கொடுத்து, அதிலிருந்து ஒரு வரி கேள்விகள் எவ்வளவு கேட்டாலும் பதில் சொல்வான். இரண்டு வரி, மூன்று வரி கேள்விகளுக்கு பதில் சொல்ல திணறுவான்.'ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தை பிறந்ததுக்கு நீதான் காரணம்; நஷ்ட ஈடாக, இரண்டு லட்சம் பணம், உன் பிறந்த வீட்டிலிருந்து வாங்கி வா...' என்கிறார், கணவர்.'பத்து பைசா கூட தர முடியாது...' என்று கூறி விட்டான், அண்ணன்.இந்த பிரச்னைகளிலிருந்து நான் எப்படி மீண்டு வருவது. என் குழந்தைகளை நல்லபடியாக வளர்க்க விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை தாருங்கள், அம்மா.— இப்படிக்கு,உங்கள் மகள்.அன்பு மகளுக்கு,ஆட்டிசம் என்பது நோயல்ல, அது ஒரு குறைபாடு. தந்தையின் குறைபாடான மரபணுவால் தான் ஆட்டிசக் குழந்தைகள் உருவாகின்றன. நீதான் கணவரிடம், 10 லட்சம் ரூபாய் நஷ்டஈடு கேட்க வேண்டும்.இப்போது உன் விஷயத்துக்கு வருகிறேன். நீ ஒரு, 'ஈகோ' ராணி. கணவர் ஒரு, 'ஈகோ' ராஜா. உன் மகன் ஒரு, 'ஈகோ' இளவரசன். நீங்கள் மூவருமே குடும்ப அமைதியின்மைக்கு பிரதான காரணங்கள்.இரட்டை பட்டப்படிப்பு படிப்பதில், மகனுக்கு நன்மைதான். பக்குவமாக எடுத்துக் கூறு. கணவர் வாங்கி வந்தததை, நீ விட்டெறிந்தது அவருக்கு எரிச்சலுாட்டியுள்ளது.நீ அன்பாக, அமைதியாக, கணவருக்கு அதை உணர்த்த வேண்டும். நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இருக்கும் மருத்துவ அறியாமை, உங்கள் மகனுக்கு கேடு விளைவிக்கும் என, கணவரிடம் கூறு.குழந்தை நல மருத்துவர், ஊட்டசத்து நிபுணர், நடத்தை பயிற்சியாளர், தொழில் சிகிச்சையாளர் அறிவுரையை, கணவர் பின்பற்றுதல் நல்லது. 'நல்லவேலையில் இருந்து சிறப்பாக சம்பாதிக்கும் நீங்கள், என் அண்ணணிடம் இரண்டு லட்சம் கேட்கலாமா? இரண்டு லட்சம் வந்தால், நம் மகனின் ஆட்டிசம் குணமாகி விடுமா? யாரிடமும் எதையும் கேட்காமல் சுயமரியாதையை காப்பாற்றுங்கள்...' என, கூறு. குரலில் மரியாதையும், கரிசனமும் இருக்கட்டும். நீ, கணவர் மற்றும் மூத்த மகன் கைகோர்த்து, ஆட்டிசத்துக்கு எதிராக தொடர்ந்து போராடுங்கள். ஜெர்மன் நாட்டை சேர்ந்த இயற்பியல் அறிஞர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூட, ஆட்டிச குறைபாடு உள்ளவர் தான். இன்னொரு ஐன்ஸ்டீன் உன் வீட்டில் ஏன் உருவாகக் கூடாது?— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.