உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு —நான், 48 வயது ஆண். என் உயிர் மற்றும் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பு வேண்டி, இக்கடிதம் எழுதுகிறேன்.நான், போலியோவால் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. இதே காரணத்தால் என் பெற்றோரும், நான் பிறந்தது முதலே என்னை ஒதுக்கி விட்டனர்.என் பாட்டி, மாமன்கள், சித்தி மற்றும் நண்பர்களின் உதவியால், அரசு கல்லுாரியில் படித்து, பட்டம் வாங்கினேன். இன்று, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து, யாரையும் எதிர்பார்க்காமல் வாழ்ந்து வருகிறேன்.எனக்கும் ஒரு துணை இருந்தால் நன்றாக இருக்கும் என்று, என் உடல் மற்றும் குடும்பத் தகுதி காரணத்தால், அனாதை ஆசிரமம், விதவை அல்லது விவாகரத்தான ஒரு துணை தேடினேன். விவாகரத்தான ஒரு பெண், என்னை மணக்க சம்மதித்தார். ஆனால், சில நாட்களிலேயே, 'வேற வழியில்லாமல் தான், உன்னைப் போன்ற ஊனமுற்ற நபரை கல்யாணம் செய்து கொண்டேன்...' என்று, இன்று வரை வார்த்தைகளாலும், செயல்களாலும் என்னை காயப்படுத்தி வருகிறாள். என் நிம்மதி, சந்தோஷம், ஆரோக்கியம் அனைத்தையும் அழித்து விட்டாள்.எனக்கு ஒரு மகன் இருக்கிறான். பள்ளி இறுதியாண்டு படிக்கிறான்.ஆரம்பத்திலேயே சட்ட ரீதியாக பிரிய விரும்பி, அவள் பெற்றோரிடமும், சில பெரியவர்களிடமும் சொன்னேன்.'நீ, நன்றாக பார்த்துக் கொள். எல்லாம் சரியாகி விடும்...' என்றனர். ஆனால், 15 ஆண்டுகளாக, என்னால் முடிந்தவரை நன்றாக வைத்திருந்தேன். ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து, வீட்டிற்கு பயந்து கொண்டே செல்வேன். விடுமுறை நாளென்றால் இன்னும் கொடுமை. என்னை முழுமையாக வெறுத்தாலும், இந்த சமுதாயத்திற்காகவும், பணத்திற்காகவும் என்னுடன் வாழ்ந்து வருகிறாள்.என் வேலை, கணிப்பொறி சம்பந்தப்பட்டது. நாள் முழுவதும் உட்கார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை. அதனால், எனக்கு ஆஸ்துமா, முதுகுவலி, தோள்பட்டை வலி, தலைவலி, கால் மூட்டு வலி எல்லாம் இருக்கிறது.வயதாகி விட்டதால், என் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொண்டால் தான், யாரையும் எந்த விதத்திலும் கஷ்டப்படுத்தாமலும், எதிர் பார்க்காமலும் வாழ முடியும். அதற்காக, தினமும் காலை, 4:00 மணிக்கு எழுந்து, யோகாசனம் செய்வேன். அதையும் செய்ய விடுவதில்லை.எனக்கு ஆதரவாக பெற்றோர் மற்றும் கூட பிறந்தவர்கள் இல்லாத தைரியத்தில், அவள் குடும்பத்துடன் சேர்ந்து என்னை, 'டார்ச்சர்' செய்கிறாள்.பையனின் மேல் படிப்பிற்காக வாங்கியிருந்த நிலத்தை, அவளின் அப்பா மற்றும் அக்காவை வைத்து மிரட்டி, அவள் பெயருக்கு மாற்றிக் கொண்டாள்.இப்போது, நான், 'லோன்' மூலம் கட்டிய வீடு மற்றும் ஊனமுற்றவருக்காக மாற்றம் செய்யப்பட்ட காரை, அவள் பெயருக்கு மாற்றக் கோரி தினமும், 'டார்ச்சர்' செய்கிறாள். சண்டை போட்டு, மாதம் தோறும் என் சம்பளத்தை பிடுங்கிக் கொள்வாள். இதற்கு மேல் இவளுடன் வாழ்ந்தால், என்னை கொல்லவும் தயங்க மாட்டாள். இதுபற்றி அவள் பெற்றோரிடமும், சில உறவினர்களிடமும் பேசினேன். 'உன்னைப் போன்ற உடல் ஊனமுற்றவனுக்கு கல்யாணம் ஆனதே பெரிய விஷயம். இதையெல்லாம் தாங்கி கொள்ளத்தான் வேண்டும்...' என்றனர்.என்னை அவளிடமிருந்து மீட்க, உதவுங்கள் அம்மா. — இப்படிக்கு,உங்கள் மகன்.அன்பு மகனுக்கு —மாற்றுத்திறனாளி என்ற தாழ்வு மனப்பான்மையே, உன் பிரச்னைகளுக்கான அடிப்படை காரணம்.அனாதை இல்ல பெண், விதவை பெண்கள், விவாகரத்தான பெண்கள், உனக்கு அடங்கி நடப்பர் என, தப்புக்கணக்கு போட்டு விட்டாய். சுயநலமில்லாத சாதுப் பெண்கள், சொற்ப சதவீதத்தில் எங்கு வேண்டுமானாலும் இருப்பர். உன் மனைவி விவாகரத்தானவள். தன் முதல் கணவரை என்னென்ன வகையாய் சித்திரவதை செய்து விவாகரத்து பெற்றாரோ?அடுத்தடுத்து நீ எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பார்ப்போம்...* குடும்ப வன்முறை சட்டம் - 2005, முழுக்க முழுக்க பெண்களுக்கு சார்பானது. கொடுமைக்கார மனைவிகளை தண்டிக்கும் ஷரத்து, அந்த சட்டத்தில் இல்லை.* மனைவியின் துர் நடவடிக்கைகள் அனைத்தையும் விலாவாரியாக குறிப்பிட்டு, அவளிடமிருந்து உயிர் உடமை பாதுகாப்பு வேண்டி, மாவட்ட ஆட்சி தலைவரிடம் புகார் கடிதம் கொடு. அவரின் சிபாரிசுடன் புகார் கடிதம், உள்ளூர் காவல் நிலையத்துக்கு போய் விடும்.புகாரின் நகல் ஒன்றை, முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பு. துரிதமான நடவடிக்கை இருக்கும். தவிர, மூன்றாவது புகார் நகல் ஒன்றை, உள்ளூர் காவல் நிலையத்தில் கொடு. அவர்கள் உடனே, உன் மனைவியைக் கூப்பிட்டு விசாரிப்பர். மும்முனை தாக்குதல் வீரியமானது, உடனடி பலன் கொடுக்கும்.மகன் படிப்புக்கான நிலத்தை, மனைவிக்கு நீ தானமாக எழுதி வைத்திருந்தால், அதை மாவட்ட ஆட்சி தலைவர் ரத்து செய்யலாம். கிரய பத்திரம் எழுதிக் கொடுத்திருந்தால், அதை உரிமையியல் நீதிமன்றம் மட்டுமே ரத்து செய்ய முடியும்.மகன், உன் சார்பாக நிற்கிறானா அல்லது மனைவி சார்பாக நிற்கிறானா? இரண்டும் கெட்டானாக இருந்தால், அவனுடன் பேசி, உன் பக்கம் திருப்பு. பேராசைக்கார அம்மா பக்கம் உறுதியாக நின்றான் என்றால், உன்னுடைய போராட்டத்துக்கு எவ்வித அர்த்தமும் இல்லாமல் போய் விடும்.காவல்நிலையத்தில் புகார் கொடுத்த கையோடு, குடும்ப நல நீதிமன்றத்தில் மனைவியிடமிருந்து விவாகரத்து வேண்டி, முறைப்படி விண்ணப்பி. புகார் மனு நகல் ஒன்றை மனித உரிமை கமிஷனுக்கு அனுப்பு.உன்னை இழிவாக பேசி, தன்னம்பிக்கையை குலைக்கும் இருபக்க உறவுகளை மற்றும் நட்புகளை முழுக்க புறக்கணி. மாற்றுத்திறனாளிக்கு, உடல் பலமும், மன பலமும் அதிகம் என்பதை, உன் அதிரடி நடவடிக்கைகளால் நிரூபி.காவல்துறை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முன்னதாகவே, மனைவியை உன் வீட்டை விட்டு வெளியேற்று. உன் பாதுகாப்புக்கு உடல் பலமிக்க யாரையாவது பணியமர்த்திக் கொள்.மனைவியிடமிருந்து விவாகரத்து கிடைத்து விட்டால், இன்னொரு திருமணம் செய்ய ஆசைப்படாதே. மகனுக்காக மீதி வாழ்க்கையை அர்த்தப்பூர்வமாக வாழலாம்.உன் பெற்றோருடன் ராசியாக போ. உடல் ஆரோக்கியத்தை தொடர்ந்து பேணு.— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !