நிஜமான வெற்றி ! - தி.செல்லப்பா
அக்., - 17, விஜயதசமி! அம்பாளுக்குரிய வெற்றித் திருநாளாக விளங்குகிறது விஜயதசமி. அசுரர்களை வென்ற தேவிக்கு, நவராத்திரி விழா எடுத்து, அவள் வெற்றி பெற்ற நாளை விஜயதசமியாகக் கொண்டாடி மகிழ்கிறோம். புராணங்களில் அசுரர்களைத் தெய்வங்கள் வென்றது போல் பல இடங்களில் காட்டப்படுகிறது. தத்துவார்த்த ரீதியாகப் பார்த்தால், அந்த அசுரத்தன்மை என்பது, நம் மனதிலுள்ள ஆணவம், அகம்பாவம் ஆகியவையே. இந்த குணங்களை யாரொருவன் வெல்கிறானோ அவனே விஜயதசமி கொண்டாட்டத்தைக் கொண்டாட தகுதியுள்ளவன். விஜயதசமி என்றால், அம்மன் கோவிலுக்குப் போக வேண்டும். சர்க்கரைப் பொங்கல் வைக்க வேண்டும், மலர் மாலைகளைச் சூடி, அவரவர் பெயர், நட்சத்திரத்துக்கு அர்ச்சனை செய்ய வேண்டும், அதோடு கடமை முடிந்தது; உடனே அம்பாள் நாம் கேட்டதையெல்லாம் தந்து அனுக்கிரஹம் செய்து விடுவாள். நாம் வாழ்க்கையில் வெற்றி பெற்று விடலாம் என்று எண்ணக் கூடாது. சாமவேதத்தைச் சார்ந்த கேன உபநிஷதத்தில் ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது. அந்தக் கதையைப் படித்தால், உண்மை தெளிவாகப் புரியும். ஒருமுறை, தேவர்களும், அசுரர்களும் போர் செய்தனர். அசுரர்கள் தோற்றுப் போயினர். தேவர்களுக்கோ பெருமை தாங்கவில்லை. அவரவர், போரில் தாங்கள் நிகழ்த்திய, அதிசூரதீரங்களையெல்லாம் ஒருவருக்கொருவர் பெருமை பொங்க பேசிக் கொண்டனர். வெற்றி விழாவை ஆடம்பரமாகக் கொண்டாடினர். இந்த நேரத்தில் அவர்கள் முன்னால் ஒரு ஜோதிப்பிழம்பு எழுந்தது. அது, வானத்துக்கும் பூமிக்குமாக உயர்ந்து நின்றது. தேவர்கள் அது என்னவென்று அறியாமல் திகைத்தனர். நெருப்புக் கடவுளான அக்னிதேவனை அனுப்பி, அதைப் பற்றி அறிந்து வர கூறினர். அவன் மமதையுடன், ஜோதிப்பிழம்பின் முன்னால் போய் நின்றான். 'யார் நீ?' என்று கேட்டது அந்த பிழம்பில் இருந்து எழுந்த பெண் குரல்.'நான் அக்னி... நான் நினைத்தால் எதை வேண்டுமானாலும் எரித்து விடுவேன்...' என்றான் அகந்தையுடன். 'அப்படியானால், இதோ, கீழே கிடக்கும் இந்த துரும்பை எரி பார்க்கலாம்...' என, சவால் குரல் கேட்டது. அக்னி அந்தத் துரும்பைப் பார்த்தான். அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தன் பார்வையால் பெரிய, பெரிய காடுகள் கூட எரிந்து விடும் தன்மை இருக்க, ஒரு சிறு துரும்பை எரிக்க முடியாமல் போனதே என தலையைத் தொங்கவிட்டபடி வந்தான். தேவர்களுக்கு இது பெரிய அவமானமாகப் போய் விட்டது. வெற்றி விழாவின் சுருதி குறைந்தது. பின், வாயு பகவானை அனுப்பி, அவனிடம், 'இந்த துரும்பை அசைத்து விடு பார்க்கலாம்...' என்றது ஜோதிக்குரல். அவனும், அது முடியாமல் போகவே, திரும்பி வந்து விட்டான்.அவமானமடைந்த தேவர் தலைவன் இந்திரன், வெற்றிக் கொண்டாட்டத்தை நிறுத்துவதற்கு உத்தரவிட்டான். அந்தப் பிழம்பிடம் சென்று, 'எங்களை மிஞ்சிய சக்தியான நீ யார்?' என்று கேட் டான். அப்போது பிழம்பு சக்திதேவியாக மாறியது.'இந்திரனே... அசுரர்களை வென்றது தேவர்களின் சக்தியால் என எண்ணிக் கொண்டிருக்கிறாய். உண்மையில், இறைவனாகிய சக்தியாலேயே இது நிகழ்ந்தது. இது புரியாமல், அகங்காரத்தால், வெற்றிக் கொண்டாட்டம் நடத்துகிறாய்!' என்றாள். இந்திரனும், தேவர்களும் அவளிடம் மன்னிப்பு வேண்டினர். அகம்பாவத்தை நம் மனதில் இருந்து அழித்து, நம்மால் ஏதும் நடக்கவில்லை; இறைவனால் தான் எல்லாம் நடக்கிறது என்ற ஞானத்தைப் பெறுவதே விஜயதசமியின் நோக்கமாக இருக்கட்டும். ***