அங்கீகாரம்!
கண் விழித்த உடனே, இன்று வள்ளிம்மா வேலைக்கு வர மாட்டாள் என்றது நினைவுக்கு வந்தது. பெருமூச்சுடன் படுக்கையை விட்டு எழுந்தாள், சுமி.சுமிக்கு முன்பே எழுந்து கிளம்பிக் கொண்டிருந்த ராஜா, ''அம்மா... வேகமா ஒரு டீ போட்டுக் குடுக்கறியா? இன்னிக்கு, 6:30 - 8:30 வரை, கணக்கு கோச்சிங். ஒரு மணி நேரம் கூடுதல் வகுப்பு. அதான்,'' என்றவன், புத்தகம், நோட்டு என்று சேகரிக்கத் தொடங்கினான்.''சுமி... என்னவோ ரெண்டு நாளா ஒரு ஆசை, தவலை அடை பண்ணேன். சின்ன வயசுல கோதண்டராமர் கோயில் தெரு ராவுஜி கடைல சாப்பிட்டது,'' என்ற, கணவர், நடேஷ், நடைப்பயிற்சிக்குக் கிளம்பினார்.இன்னும் வெளிச்சம் முழுதாக வரவில்லை. அலுவலகத்தில் இன்று, 9:00 மணிக்கு, 'மீட்டிங்' என்பதும், எதிர்வீட்டு ரம்யா தன்னுடன் ஆட்டோவில் வருவதாகச் சொன்னதும், சுமிக்கு நினைவுக்கு வந்தன.அடுப்பைப் பற்ற வைத்து சமையலை தொடங்கினாள்.''சுமி...'' என்று அத்தை வந்து நின்றாள். பின்னாலேயே மாமாவும் எழுந்து குளியலறை பக்கம் போனார்.''காபி கொஞ்சம் நேரமாகும் அத்தை. இன்னிக்கு வள்ளி லீவு. ஆபீஸ்ல, 9:00 மணிக்கு, 'மீட்டிங்' வேறே. எல்லாம் ஒண்ணா வந்து சேருது,'' என்றாள், அலுப்புடன்.''அடடா, நான் உதவி பண்றேன், சுமி. காய் நறுக்கட்டுமா,'' என்று, மேசை பக்கம் போன அத்தையின் கைபற்றி நிறுத்தினாள்.''நீங்க உக்காருங்க அத்தை. நானே பாத்துக்கறேன். போன வாரம் இப்படித்தான் கீரை நறுக்கறேன்னு விரலை காயப்படுத்திகிட்டீங்க.''''சரி. பால் காய்ச்சறேன், சுமி. மூணு பாக்கெட் பால் அப்படியே இருக்கு.''''அய்யோ வேண்டாம் அத்தை. ரெண்டு நாள் முன்னாடி என்ன ஆச்சு. பால் பொங்கறதே தெரியலே உங்களுக்கு... வழிஞ்சு பர்னர் எல்லாம் ஒட்டிகிட்டு ரொம்ப பெரிய பாடா போச்சு.''''ஆமாம்மா. நெஜம் தான். கண்ணு, காது ரெண்டுமே மந்தமா போச்சு. சரி வீடு பெருக்கி துடைக்கிறேன் பொறுமையா. சரியா?''''அட விடுங்கத்தே. ஒருநாள் பண்ணலேன்னா, ஒண்ணும் ஆகிடாது. ஈரம் உடனே காயற மாதிரி பிழிஞ்சு பிழிஞ்சு துடைக்கணும். மாமா விழுந்தாரே போன தடவை, நீங்க துடைச்சப்போ. நல்லவேளையா எலும்பு முறிவு ஆகலே. உங்க பையன் தான் என்னை கோவிச்சுகிட்டார். ஏன் இந்த வேலை எல்லாம் கொடுக்கறே அம்மாவுக்குன்னு...''அத்தை முகம் கவிழ்ந்து திரும்பிப் போனாள். என்ன செய்வது? யதார்த்தத்தைத் தானே சொல்கிறேன்? இரண்டு பேரும், 80 வயதை நெருங்குகின்றனர். உடல் பலமிழந்து விட்டது. நோய்களின் கூடாரமாகிக் கொண்டிருக்கிறது. எந்த வேலை செய்தாலும் குளறுபடி ஆகிறது. விழுந்து வைத்தாலோ, கையில் சூடு பட்டுக் கொண்டாலோ பிரச்னை தானே?இத்தனைக்கும் என் சொந்த அத்தை தான். சுறுசுறுப்பாக இருந்தவள் தான். மாமாவும் நல்ல கம்பீரமாக, சிரித்த முகமாக இருந்தவர் தான். ஆனாலும், காலம் யாரை அப்படியே விட்டு வைக்கிறது? அழகை சுரண்டுவதோடு, ஆரோக்கியத்தையும் அல்லவா சுரண்டுகிறது?''காபி ரெடி அத்தை. இந்தாங்க,'' என்று நீட்டினாள், சுமி.முகம் பார்க்காமல் வாங்கிக் கொண்டார். வருத்தமோ, கோபமோ உடல்மொழியில் தெரிந்தது.''என்ன அத்தை?''''ஒண்ணுமில்லே...''''சரி. 'ரெஸ்ட்' எடுங்க. மாமாக்கும் இருமல் இருக்கு போல. காபிய சூடா குடிக்க சொல்லுங்க...''''சரி!''வேலைகள் முடிந்தன. உள்ளே கடுப்பாக இருந்தது. 'ஏன் முகத்தை துாக்கி வைத்துக் கொண்டிருக்கிறாள், அத்தை? முதிய வயது என்றும் பாராமல், எத்தனை மருமகள்கள் வேலை வாங்குகின்றனர், மாமியாரை? 'வனஜாவின் இரண்டு குழந்தைகளின் சேட்டையைப் பொறுத்துக் கொண்டு, அவள் மாமியார் முழு வீட்டுப் பொறுப்பும் பார்க்கிறார். எஸ்தர் வீட்டில் அவள், வென்னீர் கூட வைக்க மாட்டாள். எல்லாம் மாமியார் தான். 'ஏன் வித்யாவதி? அவள் உடைகளைக் கூட மாமியார் தான் மடிக்க வேண்டும். மளிகை, காய், பால் எல்லாம் மாமனார் தான் போய் வாங்கி வர வேண்டும்.'இங்கே ஓய்வுதானே எடுக்கச் சொல்றேன்? அன்பு இல்லாமலா அப்படிச் சொல்றேன்? அதற்கு ஏன் மூஞ்சியைத் துாக்கி வைத்துக் கொள்கின்றனர்...' என, நினைத்துக் கொண்டாள்.வாசலில் ரம்யாவின் குரல் கேட்டது.எதிர் பிளாட் தான். ஒரே கல்லுாரி, ஒரே நிறுவனம். எதிரெதிர் அபார்ட்மென்ட் வாழ்க்கை என, அமைந்தது, நல்வாய்ப்புகள் தான். ரம்யா தோழிக்கு மேலாக பழகுவாள்.''சுமி. நான் ரெடி. இன்னும் அஞ்சே நிமிடம். ஓகேயா?'' என்று அவளின் இனிய சிரிப்பொலியும் கேட்டது.''யெஸ் ரம்யா. இதோ நானும் ரெடி.''தவலை அடைக்கு ஊறப் போட்டு விட்டு கிளம்பினாள், சுமி. காலணிகளை அணிந்தபோது எதிர்வீட்டினுள் ரம்யா பேசுவது கேட்டது.''அத்தை, இன்னிக்கு உங்க ராஜ்ஜியம் தான். பரங்கிக்காய் பால் கூட்டும், கத்தரிக்காய் எண்ணெய் கறியும் பண்ணிடுங்க. பிஞ்சு பிஞ்சா பாத்து பாத்து வாங்கியிருக்கேன். கவனமா பண்ணணும். ஓகேயா?''''சரிடா கண்ணு. பால் கூட்டுக்கு தேங்காய்ப்பாலா, பசும்பாலா? என்ன சேக்கட்டும்?'' என்று, அவள் மாமியாரின் உற்சாக பதில் கேட்டது.''உங்க இஷ்டம் அத்தை. இதெல்லாம் உங்க, 'சிக்னேச்சர் டிஷ்!' எனக்கு வக்கணையா சாப்பிடத்தான் தெரியும். அப்புறம் மாமா, உங்களுக்கு ஒரு வேலை. முக்கியமான வேலை.''''சொல்லும்மா...''''அத்தை செய்வதை வீடியோ எடுக்கணும். எனக்கு ஏன் அந்த மாதிரி செய்ய வரலேன்னு கண்டுபிடிக்கணும்.''''ஓகேம்மா. கண்டிப்பா எடுக்கறேன்.''''கேமராவை, 'ஆன்' பண்ணி எடுக்கணும், மாமா?''''ஆமாம்மா. நீ சொல்லிக் கொடுத்தியே போன முறை, அத்தை கோலம் போடற வீடியோ எடுத்தேனே, நீ சொல்லச் சொல்ல,'' என, ஆர்வத்துடன் சொன்னார், மாமனார்.''அதே தான் மாமா. ஓகே. புளி உப்புமாவும், வேர்க்கடலை சட்டினியும் செஞ்சிருக்கேன். பாலுவுக்கும் பிடிக்கும். நான் கிளம்பறேன். டேக் கேர். பை பை...''''ஓகேம்மா. பத்திரமா போய்ட்டு வா கண்ணு.''வெளியில் வந்தாள், ரம்யா. ''அட சுமி. நீ வந்தாச்சா? பயங்கர சுறுசுறுப்பாச்சே நீதான். வா போலாம். இன்னிக்கு கார் இல்லே, சர்வீஸ் போயிருக்கு. அதான் உன்னோட வரேன். ஓகே தானே?'' என்று சிரித்த தோழியை வியப்புடன் பார்த்தாள்.''என்னடா?''''புரியலே ரம்யா. தலை சுத்துது.''''ஏன்? என்ன ஆச்சு?''''உள்ளங்கைல வெச்சு தாங்கறேன்... என் மாமியார், மாமனாரை. 'ரெஸ்ட்' எடுங்க, துாங்குங்க, சாப்பிடுங்கன்னு அவ்வளவு கவனிக்கிறேன். ஆனாலும் எப்பவும் சோகமா இருக்காங்க, ரம்யா.''எது சொன்னாலும், 'ஆப்' ஆயிடறாங்க... நீ என்னடான்னா அவ்வளவு சொல்றே. இது பண்ணு, அது பண்ணுன்னு. ஆனாலும், அவ்வளவு உற்சாகமா. அவ்வளவு ஆர்வமா. அவ்வளவு அன்பா. எப்படி?''மெல்ல தோழியின் கைபற்றினாள், ரம்யா.''அது ஒண்ணும் பெரிய சீக்ரெட் எல்லாம் இல்லே, சுமி. மனிதனுக்கு தேவைப்படுகிற ஆதார மகிழ்ச்சி எது, சொல்லேன். நான் சொல்லட்டா... அங்கீகாரம். நாம செய்யறதை மத்தவங்க ஏத்துக் கொள்கின்றனர் என்ற மனத்திருப்தி. நாம உதவிகரமா இருக்கோம் என்ற நிறைவு. கரெக்டா? ''இதைத்தான் சுமி, நான் செய்றேன், என் மாமியார், மாமனாருக்கு. பறங்கிக்காய் பால் கூட்டோ, கத்திரிக்காய் எண்ணெய் குழம்போ உண்மையிலேயே எனக்கு நல்லா செய்யத் தெரியும்; அவங்களை விட.''ஆனால், அதை சாப்பிடறதை விட சந்தோஷம் எதுன்னா, மத்தவங்க தன் தயாரிப்பை ரசிக்கறது தான். மாமனாருக்கு பாவம், கண்பார்வை சரியா இல்லை தான். ஆனாலும், வீடியோ எடுக்கச் சொன்னேன்.''சரி, நாம அவ்வளவு மோசமில்லை, வீடியோ எடுக்கிற அளவுக்கு, 'அப்டேட்'டா இருக்கோம்ன்னு சந்தோஷப் படுவார். இந்த ரெண்டு வேலைகளும் அவங்களை நாலு நாளைக்கு சதோஷத்துலயும், உற்சாகத்துலயும் வெச்சிருக்கும்.''மனிதனை இன்னும் பள்ளத்துல தள்ளுகிற விஷயம்னா அது, அவன் உபயோகம் இல்லாதவன்னு நினைக்க வைக்கிற விஷயம் தான். பாவம், முதியவர்கள்...''இளம் வயதில் நமக்காக ஓடி களைச்ச கையும், காலும் மனசும் ஓய்வு எடுக்கட்டும். ஆனால், அது முடக்கிப் போடுகிற ஓய்வாக இருக்கக் கூடாது. தானா விரும்பி எடுக்கிற ஓய்வா இருக்கணும்.''மெல்ல, ரம்யாவை அணைத்துக் கொண்டாள், சுமி. நல்ல வெளிச்சம் வெளியில் மட்டுமல்ல, நெஞ்சின் உள்ளேயும் பரவுகிற மாதிரி இருந்தது.வி. உஷா