உள்ளூர் செய்திகள்

பாதைகள் பயணங்கள்!

பிரபல தொலைக்காட்சியின், பிரபலமான, 'பார் புகழும் பாடகி' நிகழ்ச்சியின் அரையிறுதிச் சுற்றில், தன் மகள் பாடுவதை, பெருமையுடன் பார்த்தாள் கண்மணி. அவளுக்கு இதில் அதிக நாட்டமோ, திறமையோ கிடையாது. கல்லூரியில், தமிழ் இலக்கியம் படித்த நாட்களில், மேடையில் பேசும் திறன் இருந்தது. கண்மணியின் கணவர் அழகேசன் ரசாயனத் துறை பேராசிரியராக இருந்தபோதும், சங்கீதத்தில் ஆர்வம் உள்ளவர்; ஓரளவு பாடவும் செய்வார். அந்த மரபணு தான், மகள் பொன்மணிக்கு வந்திருக்க வேண்டும்.குழந்தை பருவத்திலிருந்தே, திரைப்பட பாடல்களை கேட்டவுடனே, கிரகித்துக் கொண்டு திரும்ப பாடும் ஆற்றல் பொன்மணிக்கு இருந்தது; வளர வளர அந்த திறமை அதிகரித்து, பள்ளியில் நடந்த பல பாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்று, பரிசுகளை அள்ளி வந்தாள். தந்தையின் சங்கீத ஆற்றல், தாயின் மேடை பேச்சு, இவற்றின் பலன் தான், இன்று பொன்மணி, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பைக் கொண்டு வந்திருந்தது.பழைய, புதிய என்று பலவித திரைப்பட பாடல்களை பாடி, தங்கள் திறமையை வெளிப்படுத்தினர், போட்டியாளர்கள்.திரைப்படங்கள் பார்ப்பதும், பாடல்கள் கேட்பதும் பல ஆண்டுகளாக நின்று போய் விட்டதால், கண்மணியால், அப்பாடல்களையோ, பாடலாசிரியரையோ, படத்தையோ, நடிகர்களையோ, இசையமைத்தவர்களையோ பிரித்து இனம் காண முடியவில்லை.கண்ணதாசன், வைரமுத்து, விஸ்வநாதன் - ராமமூர்த்தி, இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பெயர்கள் தான், அவளுக்கு தெரிந்திருந்தது.கால் இறுதி முடிந்து, இன்றைய அரையிறுதி சுற்றுக்கு, பிரபல திரைப்பட கவிஞர் வருகை தருவார். அவரது பாடலை போட்டியில் பங்கு பெறுவோர் பாட வேண்டும், என்பது போட்டி விதி.பலத்த அறிமுகத்துடன், ஒளி வெள்ளமான மேடைக்குள் நுழைந்தவனை கண்டதும், கண்மணிக்கு சட்டென்று ஏதோவொன்று நினைவில் இடறியது.''ரசிகர்களை தன் வார்த்தை ஜாலத்தால் மயக்கி, இன்று இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக திகழும் கவிஞர், கவிதை கார்முகில் தான் இன்றைய சிறப்பு விருந்தினர்,'' என்று கூச்சலிட்டாள் அந்த தொகுப்பாளினி.பின்னோக்கி வாரப்பட்டு, சுருள் சுருளாக தோள் வரை தொங்கிய கறுத்த முடி, அகன்ற நெற்றி, இடுங்கிய கண்கள், மெல்லிய உதடுகள், இரட்டை நாடி தேகம், பளபளவென்று வெள்ளை ஜிப்பா - பைஜாமா, கூப்பிய கரங்கள், முகத்தில் முறுவல் என, நுழைந்தவனைப் பார்த்ததும், 'இவனை எங்கோ பாத்திருக்கிறேன்... மிகவும் பரிச்சயமாக, ஆனால், எங்கோ கனவில் பார்த்த முகம் போல் தோன்றுகிறதே...' என யோசித்தாள் கண்மணி.கரவொலி காதைப் பிளக்க, ''இப்போது கார்முகில் இந்த நிகழ்ச்சியை பற்றி சில வார்த்தைகள் கூறுவார்,'' என்றாள் தொகுப்பாளினி.இமை கொட்டாமல், அவனையே பார்த்தாள் கண்மணி.''அன்பு நண்பர்களே... வணக்கம்; என்னை இங்கு சிறப்பு விருந்தினராக அழைத்த...'' கார்முகிலின் பேச்சும், கட்டைக் குரலும், பளிச்சென அவனை நினைவுக்கு கொண்டு வந்தது.ஓ... இவன் தமிழரசு!கல்லூரியில் அவளுக்கு ஒரு ஆண்டு சீனியர்; இருவரும் பங்கேற்ற பேச்சுப் போட்டிகளில், பலமுறை வென்று, சிலமுறை தோற்றவன். பின் நட்பு மலர்ந்து, காதல் என்று கண்மணியின் பின்னால் அலைந்தவன்.அவனா இவன்!திரைப்படத் துறையில் பிரவேசிக்க வேண்டுமென்ற கனவுகளுடன் செயல்பட்டவன். ஆனால், படிப்பு முடிந்து, கிட்டத்தட்ட நான்கு, ஐந்து ஆண்டுகள் வேலை ஏதுமின்றி, வெட்டியாக பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என்று அலைந்து திரிந்தான்.அதனால் தான், அவன் காதலை உதறி, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த, டில்லி பல்கலைக்கழகத்தில் ரசாயனத் துறை விரிவுரையாளராக பணியாற்றிய அழகேசனை, மணந்தாள் கண்மணி.தமிழரசனிடம் தான் கடைசியாக பேசியது சற்று தெளிவில்லாமல் இருந்தாலும், அதன் உள்ளடக்கம் அவளுக்கு நினைவுக்கு வந்தது...'இதோ பாருங்க தமிழ்... உங்க ஆர்வமும், கனவும் எனக்கு புரியுது. ஆனா, என் பெற்றோருக்கும், மற்றவங்களுக்கும், ஏன் எனக்கும் கூட அதில் உடன்பாடு கிடையாது. திரைப்பட உலகம், ஒரு கனவு தொழிற்சாலை. அதில வெற்றியடைய திறமை மட்டும் போதாது; கூடவே, அதிர்ஷ்டம், பின்புலம், சகிப்புத்தன்மை, பொறுமை வேணும். உங்ககிட்ட அதெல்லாம் இருக்கான்னு கேட்கல; இதெல்லாம் என்கிட்ட இல்ல. 'நீங்களும், நானும் நண்பர்களாக பழக ஆரம்பிச்சோம். கொஞ்ச நாள், காதல் போல் ஏதோவொரு கவர்ச்சி ஏற்பட்டது. அந்த கவர்ச்சி, வாழ்க்கைய நடத்திச் செல்லும் அளவுக்கு தாக்கு பிடிக்குமான்னு எனக்கு தோணல. அதனால, நாம நண்பர்களாகவே பிரிஞ்சுடுவோம். எனக்கு இதில வருத்தமோ, குற்ற உணர்வோ இல்ல. உங்களுக்கும் இருக்கக் கூடாது...' என்று கூறி, காதலை முறித்துச் சென்று விட்டாள்.கடந்த, 15 ஆண்டுகளில் டில்லி, மும்பையை தொடர்ந்து, இப்போது, சென்னை வாசம். வசதிகள் கொழிக்கவில்லை என்றாலும், அத்தியாவசிய தேவையான, வீடு, கார், இருசக்கர வாகனம்; பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மகன், மகள்கள் என மூன்று பிள்ளைகள்; குறையொன்றுமில்லை!ஆனால், தமிழரசு, காதல் தோல்வியில் தற்கொலை முயற்சி செய்தான் என்றும், சில காலம் பைத்தியமாக திரிந்தான் என்றும் காற்று வாக்கில் செய்திகள் வந்த போது, சற்று வருத்தமாக இருந்தாலும், குற்றவுணர்வு கொள்ளவில்லை கண்மணி. வாழ்க்கையை எதிர்கொள்ள மனவலிமை தேவை என, உறுதியாக நம்பினாள் அவள்!இன்று காண்பது, அவள் கேட்ட வதந்திகளை எல்லாம் பொய்யாக்கி விட்டது.அதே குரல்! முகத்திலும், தோற்றத்திலும் தான் வித்தியாசம். திடீரென்று அவள் சிந்தனைகளை, கரவொலி ஓசை சிதைத்தது.''இன்றைய சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் கவிதை கார்முகிலின் பாடல்களை யார் மிகச் சிறப்பாக பாடுகின்றனரோ, அவருக்கு கவிதை கார்முகில், பிரத்தியேகமாக ஒரு பரிசை வழங்குவார்,'' என்றாள் தொகுப்பாளினி.குடும்ப பந்தங்களில் உழன்று கொண்டிருந்த கண்மணிக்கு, இவன் எந்த படத்திற்கு, என்ன பாடலை எழுதி பிரபலமானான் என, எதுவும் தெரியவில்லை.அப்போது, அரை மணி நேரம் கழித்து, மீண்டும் நிகழ்ச்சி துவங்கும் என அறிவித்து, ஓய்வு விடப்பட்டது.கண்மணியிடம் ஓடி வந்த பொன்மணி, ''அம்மா... எனக்கு கார்முகில் சாரோட பாட்டுன்னா ரொம்ப பிடிக்கும்...'' என்றாள் மலர்ச்சியுடன்!''அப்படி என்னடி அவர் பாடிட்டார்...'' என்றாள்.''என்னம்மா இப்படிச் சொல்றே... 'வாங்க மச்சி வாங்க... வந்து வழியாம போங்க'ன்னு ஒரு பாட்டு இருக்கே, 'சூபர் சாங்'க்மா அது...'' என்று அபத்தமான அந்தப் பாட்டை அபிநயத்துடன் சின்ன குரலில் பாடி காட்டினாள்.''என்னது...'' என்றாள் கண்மணி. அவள் விழிகள், தெறித்து விழுவது போல் விரிந்தன.''அந்த பாட்டா... மகா மட்டமான, 'ரிலிக்ஸ்'னா...'' என்றாள் சகிக்க முடியாமல்!''அட போம்மா... அது சும்மா ஜாலிக்கு! அவர் சீரியஸான, 'நிழலைத் துரத்தாதே, கண்ணுக்கெட்டாத விண்மீன், பெண் என்றோர் மண், கலைந்த ஓவியங்கள்'ன்னு ஏகப்பட்ட நல்ல பாட்டெல்லாம் எழுதியிருக்காரு; உனக்கு தெரியாது,'' என்றாள் கோபத்துடன்!கண்மணிக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், தமிழரசை நேரில் பார்த்து பேச வேண்டும் என்ற அவா எழுந்தது. அதற்கேற்றாற் போல், ''பங்குபெறும் ஐந்து பெண்களை, அவர்கள் பெற்றோருடன் கவிதை கார்முகில் சந்திக்க விரும்புகிறார்,'' என்று கூறினாள் தொகுப்பாளினி.''வாம்மா...'' என்று கையைப் பிடித்து, இழுத்து சென்றாள் பொன்மணி.பரஸ்பர அறிமுகம் நிகழ்ந்தது. கண்மணியை நேருக்கு நேர் சந்தித்தபோது, தமிழரசுவின் கண்களில் வியப்பு பளிச்சிட்டது. ''என்னை தெரிகிறதா... தமிழரசு...'' என்றாள் கண்மணி.செல்வத்தின் செழிப்பு, தமிழரசின் தோற்ற பொலிவில் தெரிந்தது.''மறக்க முடியுமா... மறக்க இயலாத முகமாயிற்றே... நீங்க கண்மணி தானே...'' என்று கவிதை நடையில் புன்னகையுடன் கேட்டான்.''ஆம்...'' என்றவள், ''எப்படி இருக்கீங்க?'' என்றாள். கேள்வியின் அபத்தம் மனதில் உதைத்தது.புன்முறுவல் செய்தான் கார்முகில்.''அதுதான் நேரில் பாக்குறீங்களே... ரொம்ப நல்லா இருக்கேன். உங்க மகளா பாடுறா...'' என்றான் பொன்மணியை பார்த்து!''ஆமா சார்... நான் தான் பாடுறேன்...'' என்றவள், ''நான் என்ன பாட்டு பாடட்டும் சொல்லுங்க...'' என்றாள் உற்சாகத்துடன், பொன்மணி.சிறிது நேரம் யோசித்து, பின், ''நிழலைத் துரத்தாதே பாடல் தெரியுமா?'' என்றான், கண்மணி முகத்தை பார்த்தபடி!''ஓ... அது, எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு...'' என்றாள் பொன்மணி.''அதையே பாடு... எனக்கும் அது பிடித்த பாட்டு,'' என்றான் கார்முகில்.அதற்குள், பொன்மணியை வேறு எதற்காகவோ தயாரிப்பாளர்கள் அழைக்க, கண்மணியும், கார்முகிலும் தனித்து விடப்பட்டனர்.கண்மணிக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. திடீரென்று, ஏதோவொரு ஏமாற்றம் திரண்டு வந்து, தொண்டையை அடைப்பது போல் இருந்தது.''இப்ப எங்கே இருக்கிறீங்க கண்மணி... சென்னையிலா...'' என்றான்.''ஆமாம். நீங்க... உங்களுக்கு எத்தனை பசங்க...'' என்றாள் கண்மணி.''எனக்கு ஒரே பையன்... என் மனைவி இல்லத்தரசி; கிழக்கு கடற்கரை சாலையில் வீடு,'' என்றவன், ''உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்... உங்க கணவர் என்ன செய்றார்?'' என விசாரித்தான்.''மூன்று பிள்ளைகள்; கணவர் பேராசிரியர்; அடையாறில் தான் பிளாட்.'' என்றாள்.''ம்... அப்புறம்...'' என்றான் புன்முறுவலுடன்!''நீங்க தான் சொல்லணும்; ரொம்ப பெரிய ஆளாகி இருக்கீங்க... எனக்கு தான் தெரியல,'' என்றாள் கண்மணி. தன் குரலில் குரோதம் ஒலித்ததோ என்று அவளுக்கு தோன்றியது.கார்முகில் வாய்விட்டு சிரித்தான். செயற்கையா, இயற்கையா என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.பின், ''கண்மணி... ஒரு வகையில் எனக்கு வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தியவர் நீங்க தான். நான் இந்த உயரத்தை அடைவதற்கு முன், பல படுபாதாளங்கள பாத்தவன்...''கண்ணதாசனின் ஒரு பாடலில், 'இதுதான் பாதை... இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது'ன்னு வரிகள் வரும்; அதுதான் நிஜம். உங்கள சந்தித்ததில் மகிழ்ச்சி... நன்றி,'' என்று கை கூப்பினான். மனதிற்குள், 'நல்லவேளை... நான் இவளை கல்யாணம் செய்துக்கல; எத்தனை பருமனா பாக்கவே சகிக்காம இருக்கிறா. இவளுடன் ஒப்பிட்டால் என் மனைவி எவ்வளவு அழகு. இவள் விருப்பப்படி ஏதாவது வேலையில் சேர்ந்திருந்தால், கோடிக்கணக்கான நடுத்தர குடும்பஸ்தனில் நானும் ஒருத்தனாகி போயிருப்பேன். என்னை இவளிடமிருந்து விலக்கி விட்ட விதியே, உனக்கு நன்றி...' என்று கடவுளுக்கு நன்றி கூறி, திரும்பி நடந்தான் தமிழரசு.நடப்பவை எல்லாம் கனவா, நிஜமா என புரியாமல் இருந்தாள் கண்மணி.அன்று, எதற்கு எதிர்காலம் இல்லை என்று நினைத்தாளோ, இன்று, அது வளர்ந்து நிற்கிறது; எது நிலையானது என்று நினைத்தாளோ, அது, அந்த நிலையிலே நிற்கிறது.'நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை...' என்பது எத்தனை நிதர்சனம்!தெரியாத பாதையில், புரியாத பயணம் தான் வாழ்க்கை!அவள் கனவு கண்டு விழித்த நிலையில், தன் இருக்கையில் வந்து அமர்ந்தாள்; மேடையில், 'நிழலைத் துரத்தாதே...' என்ற பாடலை, அவள் மகள் பாடிக் கொண்டிருந்தாள்.- தேவவிரதன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !