உள்ளூர் செய்திகள்

சகலகலாவல்லி பானுமதி! - 8

உள்ளம் கவர் கள்வன்!ஒரு நட்சத்திர நடிகை, உதவி இயக்குனரை காதலித்து, திருமணம் செய்து கொள்ளும், புது, 'டிரெண்ட்' சினிமா உலகில் உதயமாக காரணம், அநேகமாக, பானுமதியாக தான் இருக்கும். அதன் தொடர்ச்சியாக, நடிகை தேவிகா, உதவி இயக்குனர் தேவதாசை மணந்தார். குஷ்பு, சுந்தர்.சி.யை; தேவயானி, ராஜகுமாரனை மணந்தார். இப்போது, நயன்தாரா - விக்னேஷ்சிவன் ஜோடி, காதல் வானில் பறக்கிறது. கிருஷ்ண பிரேமா படப்பிடிப்பில், உதவி இயக்குனர் ராமகிருஷ்ணா பற்றி, யாரும் தவறாக ஒரு வார்த்தை பேசியதில்லை. ஒரு இளைஞன், எல்லாருக்கும் நல்லவனாக இருப்பது வெகு அபூர்வம். அந்த இளைஞனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் துாண்டின.படப்பிடிப்பு தளத்தில் இருந்த துணை நடிகையர், சக நடிகையரிடம், அவன் வழியவோ, கடலை போடவோ இல்லை. எட்டி நின்றே பேசினான். தேவையின்றி ஒரு வார்த்தை உதிர்க்கவில்லை. தான் உண்டு, தன் வேலையுண்டு என்றிருந்தான்.எந்த வேலையையும் ஆர்வமுடன் செய்தான். ஒல்லியாக, 'துறுதுறு'வென்று இருந்த அந்த இளைஞனை ஆச்சரியமாக பார்த்தார், பானுமதி.தன்னிடம் பேசும்போது, தலை தாழ்த்தியும், இடைவெளி விட்டும் பேசிய ராமகிருஷ்ணாவின் பண்பும், பணிவும், வசீகர முகமும், அடிக்கடி பார்க்கவும், நினைக்கவும் வைத்தன. பானுமதிக்குள் அந்த உருவம், மெல்ல மெல்ல நிரம்பிக் கொண்டிருந்தது. பூஜைக்கு, செடியில் இருந்து ரோஜா பூக்களை கிள்ளி பறிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. ரோஜாவை பறிக்கும்போது முள் குத்தி, பூவினும் மென்மையான விரல்களிலிருந்து ரத்தம் வந்தது.எல்லாரும் என்ன செய்வது என்று புரியாமல் பார்த்து கொண்டிருக்க, பானுமதியின் உதவியாளர், 'டிஞ்சர்' எடுக்க ஓடினார்.இளைஞன் ராமகிருஷ்ணா பதற்றமுடன் ஓடி வந்து, தயங்கியபடியே, தன் கர்சீப்பை எடுத்து, ரத்தம் வழிந்த விரலில் சுற்றி கட்டி விட்டான். கரிசனமும், கடமையுணர்வும் கொண்ட அந்த செயல், பானுமதியின் மனதைத் தொட்டது. இளைஞன் மீதான கவன ஈர்ப்பு, காதலாக ரசாயன மாற்றம் கொண்டன.பானுமதி மீது அவருக்கும் பிரேமம் இருந்தது. தான் பெரிய இயக்குனர் அல்ல, சாதாரண பயிற்சி இயக்குனர் என்பதும், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் என்ற தெளிவு, அவரை விலகி நிற்க செய்தது. தன் எதிர்காலத்துக்கான நல்ல துணையை, கையில் கிடைத்த நன்முத்தை தவற விட விரும்பவில்லை, பானுமதி. அதை பற்றுவதில் உறுதியாக இருந்தார்.தங்கையின் மூலம், தன் காதலை, அப்பாவுக்கு தெரிவித்தார். வீட்டில் பூகம்பம் வெடித்தது.'அவன் யாரென்றே தெரியவில்லை, சினிமாக்காரன்; சாதாரண உதவி இயக்குனர். அவன் குலம் என்ன, கோத்திரம் என்ன, படிச்சிருக்கானா... வசதியானவனா தெரியல; அவன நம்பி எப்படி பெண் தர முடியும்...' என்று, கோபமாக பேசினார், அப்பா வெங்கட சுப்பையா. இன்னொருபுறம், 'இதெல்லாம் நடக்காது. வீணாக மனசை போட்டு குழப்பிக்காதீங்க... உங்க அப்பா ரொம்ப கோபக்காரர்...' என்றார், ராமகிருஷ்ணா. அழுத்தம் திருத்தமாக, 'நான், உங்களோடு வாழ ஆசைப்படுகிறேன். இதில் எந்த மாற்றமும் இல்லை...' என்றார், பானுமதி. 'அப்போ நீங்க, எனக்காக மாற வேண்டி இருக்கும்...''என்ன செய்யணும் சொல்லுங்க?''இந்த படத்தோடு சரி... இனிமே நீங்க நடிக்க கூடாது. மேடையில், சினிமாவில், இனிமேல் பாடக் கூடாது. திருமணத்திற்கு பிறகு, என் சம்பாத்தியத்தில் தான் வாழ்க்கை நடத்தணும். இதற்கெல்லாம் சம்மதம் என்றால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம். நன்றாக யோசித்து பதில் சொல்லுங்கள்...' என்றார்.சற்றும் தயங்காமல், 'நான் உங்கள் கூட வர சம்மதம்...' என்றார், பானுமதி.இனி பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என்பதால், மவுனமாக, 'தேவதையே சரணம்...' என்றிருந்தார், ராமகிருஷ்ணா ராவ்.ஆரம்பத்திலிருந்தே நடிப்பின் மீது பெரிய ஈடுபாடு இல்லை, பானுமதிக்கு. ஆனாலும், பாடுவதில் பெரும் விருப்பம். காதலுக்காக அதையும் விட்டு விட முடிவு செய்தார். அதே நேரத்தில், தன் மகளுக்கு வரன் தேட துவங்கினார், வெங்கட சுப்பையா.இப்படியும் ஒரு பெண் படத்தை, திரைக்கதை, இசையமைத்து, தயாரித்து, ஜனரஞ்சகமான முறையில் இயக்கியதோடு, சாவித்திரி என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியிருந்தார், பானுமதி. சிறந்த இசை படமாக, உலகப் பெண்கள் ஆண்டான, 1975ல் தேர்ந்தெடுக்கப்பட்டது.— தொடரும்சபீதா ஜோசப்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !