சாண்டோ சின்னப்பா தேவர் (21)
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —கடந்த, 1960 வரை, மருதமலை முருகன் கோவிலுக்கு, நடந்து தான் செல்ல வேண்டும்; சரியான பாதை, மின்சாரம் மற்றும் குடிதண்ணீர் வசதி கிடையாது. சூரியன் அஸ்தமித்த பின், பக்தர்கள் கோவிலுக்கு போக முடியாத நிலை இருந்தது.மருதமலையில் இருந்து, இரண்டரை மைல் தொலைவில், வடவள்ளி என்ற சிற்றுார் உண்டு. அங்கு மின்சார வசதி இருந்தது. அங்கிருந்து மருதமலைக்கு, மின் தொடர்பை நீட்டிப்பது குறித்து மின்சார வாரியத்திடம் கலந்து ஆலோசித்தார் தேவர். ஆனால், மின்சார வாரிய அதிகாரிகளோ, 'வடவள்ளி துவங்கி, மருதமலை வரை மின் கம்பங்கள் நடுவது சாத்தியமில்லை. வேண்டுமானால், மருதமலைக்கு அடுத்து உள்ள கல்வீரன்பாளையத்துக்கு இணைப்பு தருகிறோம்; அதற்கான, டிபாசிட் தொகையை கட்டுங்கள்; அங்கிருந்து மருதமலைக்கு இணைப்பு தருகிறோம்...' என்று கூறினர்.உடனே, கல்வீரன்பாளையம் மற்றும் மருதமலை இரண்டு ஊர்களுக்குமான, 'டிபாசிட்' தொகையைக் கட்டினார் தேவர். இணைப்பும் கிடைத்தது. மின்சாரக் கட்டுப்பாடு அமலில் இருந்த காலம் என்பதால், இதற்காக, கோட்டை வரை சென்று, ஆட்சியாளர்களிடம் போராடினார் தேவர். மருதமலையில் மின் விளக்குகளுக்கு, 'ஸ்விட்ச் ஆன்' செய்வதற்காக, எம்.ஜி.ஆரை அழைத்த தேவர், 'உங்கள வெச்சு நாலு படம் எடுத்தேன்; அதுல கிடைச்ச லாபத்துல, முதன் முதலா செய்யற நல்ல காரியம் இது! நீங்களே வந்து ஆரம்பிச்சு வைங்க முருகா...' என்றார். எம்.ஜி.ஆருக்கு தர்ம சங்கடமாக இருந்தது. காரணம், தி.மு.க.,விலிருந்த கட்டுப்பாடு! 'காங்கிரஸ் அமைச்சரவையின் கூட்டுறவுத் துறை அமைச்சர், நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியாருடன் இணைந்து, மருதமலையில் மின் விளக்குகளுக்கு, 'ஸ்விட்ச் ஆன்' செய்தால் தகுமா...' என தயங்கினார் எம்.ஜி.ஆர்.,'முருகா... நீங்க மக்களுக்குத் தான் மின்சார வசதி செஞ்சு வெக்க போறீங்க; அதை யாரும் குறை சொல்ல மாட்டாங்க; தயங்காம வாங்க...' என்றார் தேவர். அதற்கு மேல், எம்.ஜி.ஆரால், மறுக்க முடியவில்லை.டிச., 7, 1962ல் மருதமலையில், சேவற்கொடியோனின் கர்ப்பகிரகத்துக்கு மின் விளக்கேற்றி, 'தேவரண்ணன் வணங்கும் தெய்வத்தின் கோவிலில் திருவிளக்கு ஏற்றும் வாய்ப்பை, பெற்றமைக்காக பெருமைப் படுகிறேன்...' என்றார் எம்.ஜி.ஆர்.,மருதமலையில், ஒளி பிறந்தது; தேவரின் கண்களில் ஆனந்த கண்ணீர்!அத்துடன், சுவாமிக்கு தேவையான, ஆபரணங்கள், வெள்ளிக் கவசம் துவங்கி, கோவிலுக்கு நிலங்களையும், நன்கொடையாக கொடுத்தார் தேவர். அரசு, வரவு - செலவு பார்க்கிற அளவு புகழ் பெற்றது மருதமலைக் கோவில்; இதுவே, தேவரின் முயற்சிக்கு கிடைத்த பரிசு!அடுத்து, அவர் கவனம், முருகனின் அறுபடை வீடுகளில் திரும்பிற்று. ஒவ்வொரு படத்தின் வசூலையும், வரிசைக் கிரமமாக பங்கு வைத்து பழனி, திருத்தணி, திருப்பரங்குன்றம், சுவாமிமலை, வடபழனி மற்றும் திருச்செந்தூர் போன்ற திருத்தலங்களில் குடில்கள், கோவில் பிரகாரங்கள், கர்ப்பக் கிரகங்கள் மற்றும் திருமண மண்டபங்களை கட்டினார். பின், ரத்னகிரி முருகன் கோவில் துவங்கி, வள்ளிமலை, வயலூர் என்று வேறு எங்கெல்லாம் முருகன் கோவில் திருப்பணிகள் நடைபெற்றதோ, அவை அத்தனையிலும், தேவரின் வியர்வை நிறைந்தது.ஓய்வு நேரங்களில், ஆங்கிலம் மற்றும் பிற மொழி படங்களை, பார்த்து ரசிப்பார் தேவர். அவை, தமிழுக்கு ஏற்றதாக இருந்தால், உடனடியாக, அதற்கு புது வடிவம் கொடுத்து விடுவார். சினிமா மட்டுமல்ல, சர்க்கசும் விரும்பி பார்ப்பார். இதனாலேயே பல சர்க்கஸ் முதலாளிகள், தேவருக்கு அறிமுகமாயினர்.'ஓங்கோல் ஓரியண்டல்' சர்க்கசில், விலங்குகள் அனைத்தும் ஒன்றாக அமர்ந்து உண்ணும், 'டின்னர் செட்' எனும் அரிய காட்சி, இறுதிக் காட்சியில் இடம் பெறும். இது, தேவரின் மனதை கவர்ந்து விட்டது. வன விலங்குகளுடன் வாழும் மனிதனின் கதையான, பிளாக் ஜூ என்ற ஆங்கில படத்தை, பார்த்தார் தேவர். அக்கதை அவருக்கு பிடித்திருந்தது. அதை, தெய்வச் செயல் என்ற பெயரில், தமிழில் தயாரிக்க எண்ணினார். இப்படத்தில், ஓரியண்டல் சர்க்கசின், 'டின்னர் செட்' காட்சியை காட்ட முடிவு செய்தார்.இதற்கு ஏராளமான விலங்குகள் தேவைப் பட்டன. இந்நிலையில், அந்த ஆண்டில், பொங்கலுக்கு, சென்னையில், 'ஜெமினி சர்க்கஸ்' நடைபெற்றது. அதன் உரிமையாளரிடம், படப் பிடிப்புக்காக விலங்குகளை கேட்டார் தேவர். ஆனால், சர்க்கஸ் முதலாளி சகாதேவனுக்கு சினிமாவில் நடிக்க ஆசை. 'யார் அண்ணே ஹீரோ... எம்.ஜி.ஆரா?' என்று கேட்டார். 'இது, சின்ன நடிகர்கள் நடிக்கிற படம்; அப்பா வேடத்துல வருவாரே... மேஜர் சுந்தர்ராஜன், அவரும் முத்துராமனும் நடிக்கிறாங்க...' என்றார் தேவர். 'அண்ணே... உங்க படப்பிடிப்புக்கு தேவையான விலங்குகளை இலவசமாகவே சப்ளை செய்றேன், நானும் மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி ஆட்டா சோட்டாவா தானே இருக்கேன்; என்னை கதாநாயகனா போடுங்க...' என்றார் சகாதேவன்.'யார் நடிச்சா என்னப்பா... எனக்கு ஒண்ணுமில்ல; ஆனா, நீ படத்தோட, 'நெகட்டிவ் ரைட்ஸ்' வாங்கிக்க. யானை, புலி, சிங்கம் மற்றும் கரடி எல்லாத்தையும் கூட்டிக்கிட்டு வாகினிக்கு வந்துடு...' என்றார்.ஆடிப்போன சகாதேவன், 'அண்ணே... நான் கதாநாயகனாகணும்ன்னா, காசு கொடுக்கணும்ன்னா சொல்றீங்க... சரி விடுங்க, ரெண்டு மாசம் இங்க எங்களோட, 'கேம்ப்' இருக்கு. அதுக்குள்ள படத்தை முடிச்சுக்கங்க...' என்று, தன் கதாநாயகன் ஆசைக்கு, முற்றுப்புள்ளி வைத்தார்.'சகாதேவா... உனக்கு சினிமாவப் பத்தி தெரியாது. மேஜரை வச்சு எடுத்தாத் தான் படம் பிசினஸ் ஆகும். அவருக்குத் தான் மார்க்கெட் இருக்கு. நீ கதாநாயகனா நடிக்கணும்ன்னு ஆசைப்பட்டா பணம் தந்தா தான் முடியும். இப்பன்னு இல்ல, நான் வாலிபனா இருந்தப்பவே, இப்படித் தான் நடந்தது. என் சம்சாரத்தோட அஞ்சு பவுன் அட்டிகையை, அடகு வெச்சு எடுத்துக்கிட்டு, படத்துல நடிக்கணும்ன்னு காரைக்குடிக்கு பஸ் ஏறினேன். அங்க, நான் நடிக்கிறதுக்கு, 100 ரூவா கேட்டானுவ. நம்ம காசை வாங்கிட்டு, செட்டியாரு என்ன படம் எடுக்கிறது, நாமளே சொந்தமாத் தயாரிப்போம்ன்னு சினிமா எடுக்க ஆரம்பிச்சேன்...' என்று கூறினார் தேவர்.தேவர், தன் படங்களின் வணிக ரீதியான வரவேற்புக்கு ஆவன செய்வாரே தவிர, அவை கலையம்சம் பொருந்தியதாக, உயர்ந்த படைப்பாக அமைய வேண்டும் என்றெல்லாம் நினைக்க மாட்டார். தெருவோரத்தில் பாட்டி, சுடச் சுட ஆப்பம் சுட்டுப் போட, அதை வாடிக்கையாளர்கள் வரிசையாக வாங்கிச் சாப்பிடுவரே... அப்படி ஒரு சினிமா நிறுவனம் தான் தேவர் பிலிம்ஸ். கையில் காசு; வாயில் தோசை. திரும்பிப் பார்ப்பதற்குள் எல்லாம் வியாபாரமாகி, கடையும் காலியாகி விடும்.தேவருக்கு நிதி உதவி செய்தவர், முகமது யாசின் என்கிற கீழக்கரை இஸ்லாமியர். இவர், பல்வேறு வியாபாரங்களை செய்து வந்தார். அத்துடன், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் மற்றும் கருணாநிதி போன்றோரின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார்.தன் படங்களின், 'நெகடிவ்' உரிமையை, யாசினிடம் விற்று விடுவார் தேவர். அதை பெற்றுக்கொள்ளும் யாசின், தேவருக்குத் தேவைப்படும் போதெல்லாம் பணம் பட்டுவாடா செய்வார்.இருவரும் சகோதரர்கள் போல் பழகினாலும், கடன் வாங்கிப் படம் எடுக்கிறோம் என்பதில் கவனமாக இருப்பார் தேவர். அதிக லாபம் இல்லாவிட்டாலும், தன்னிடம் படம் வாங்குகிற வினியோகஸ்தர்கள் நஷ்டமடையக் கூடாது என்பதற்காகவே விரைந்து பணியாற்றினார்.— தொடரும்.நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,சென்னை.பா. தீனதயாளன்