உள்ளூர் செய்திகள்

சாண்டோ சின்னப்பா தேவர்! (28)

தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —ஏறக்குறைய, 80 ஆண்டுகள் வரை, தமிழ் சினிமா வரலாற்றில், இளிச்சவாயன், கதாசிரியன் மட்டுமே! லட்சங்களிலும், கோடிகளிலும் புரளும் கதாநாயகன், கதாநாயகிகளுக்கு மத்தியில், சிங்கிள் டீக்கு லாட்டரி அடிப்பவன் எழுத்தாளன். அன்றைய சினிமா எழுத்தாளனின் நிலை குறித்து, 1973ல் காரைக்குடி நாராயணன் கூறக் கேட்டது:அங்கே, இரண்டு நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. கீழே ஒரு ஜமுக்காளம்; அந்த நாற்காலிகளில் ஒன்று, பட முதலாளிக்கு; மற்றது, சினிமா கம்பெனியின் ஜெனரல் மேனஜருக்கு!எழுத்தாளன், ஜமுக்காளத்தில் உட்கார்ந்தபடியே கழுத்தை நீட்டி நீட்டி, கதை சொல்ல வேண்டும். காரைக்குடி நாராயணனும் அப்படியே கதை சொல்லியுள்ளார். மதியத்துக்குப் பின், மீதி கதையைக் கேட்பதாகக் கூறி, புறப்பட்டார் பட முதலாளி. காரைக்குடி நாராயணனை பரிதாபமாகப் பார்த்த ஜி.எம்., 'நீங்க சாப்பிடணும் இல்ல... பையனை அனுப்பறேன்; வேணும்ங்றத சொல்லுங்க...' என்றார்.பையன் வந்தான்; தடபுடலாக தன் அசைவ மெனுவை கூறினார் நாராயணன். அவரை, புழுவைப் போல் பார்த்த பையன், 'இங்க சிக்கனெல்லாம் கிடையாது சார்... காலையில டிபன் ஒரு ரூபாய்; மதியம் சாப்பாடு, ௧.௫௦ காசு, மாலை காபி, ௬௦ பைசா, இரவு சாப்பாடு ஒரு ரூபாய்...' என்றான் நிர்தாட்சண்யமாக! இத்தகைய அனுபவம் கொண்ட காரைக்குடி நாராயணன் போன்றோருக்கு, தேவர் பிலிம்ஸ் கதை இலாகா, சொர்க்கம்! திறமையானவர்களுக்கு மகுடம் சூட்டு வார் தேவர். மிகப் பெரிய கம்பெனிகளில் பணியாற்றி, கோலிவுட் மூவேந்தர்களுக்கும் கதை - வசனம் எழுதி, சொந்தமாகப் படம் தயாரித்து இயக்கி, அதல பாதாளத்தில் விழுந்த மா.ராமச்சந்திரன் போன்றோருக்கும் அடைக்கலம் கொடுத்தார் தேவர்.வாய்ப்பு கேட்டு வருகிற எழுத்தாளனுக்கு, சீன் சொல்லத் தெரிய வேண்டும் என்பது தான் தேவர் எதிர்பார்க்கிற முதல் தகுதி. இதனால், அவர் கேட்கும் முதல் கேள்வியே, 'அஞ்சு நிமிஷத்துல கதை சொல்வியா...' என்பது தான்!ஐந்து நிமிடங்களுக்கு கூடுதலாக, பத்து நொடிகள் ஆகிவிட்டாலும், 'போதும் நிறுத்து... வெளியே போ...' என்ற அர்த்தத்தில், தன் விரல்களை, கத்தரிக்கோல் மாதிரி காண்பிப்பார்.'தேவரோட பொண்ணு என்னோட கதைகளை எல்லாம் படிச்சு, என்னை பற்றி சொல்லியிருப்பாங்க போல, தேவரைப் பார்க்கப் போன போது, 'நீங்க பெரிய எழுத்தாளராம்; ஆனந்த விகடன்ல கதை எழுதுறீங்களாமே... அஞ்சு நிமிஷத்துல கதை சொல்வீங்களா...' என்றபடி தன் வாட்சை பார்த்தார் தேவர். அவரிடமிருந்து பிரியாவிடை பெற்றுத் திரும்பினேன்...' என்று தன் அனுபவத்தை கூறியுள்ளார், மறைந்த எழுத்தாளர் தாமரை மணாளன்.'ஏம்பா இப்படி எல்லாரும் பயப்படறாங்க; நான் என்ன மொத்த கதையுமா கேக்குறேன். கதைச் சுருக்கம் தானே கேட்குறேன்... அதச் சொல்ல வேண்டியது தானே...' என்பார் தேவர்.ஒருநாள், 'அண்ணே... நான் சொன்ன தம்பி இவரு தான்...' என்று, கோவை ராஜாவை, தேவரிடம் அறிமுகப் படுத்தினார் தூயவன்.நிமிர்ந்து பார்த்தார் தேவர். ஒல்லியாக, 'வெடவெட'வென்று, மாநிறமாக ஒரு வாலிபர். அவரைப் பார்த்ததும், நம்பிக்கை இல்லாமல், வெற்றுப் பார்வை பார்த்தார் தேவர். தூயவனுக்காக மட்டுமே, வந்தவரிடம் கதை கேட்கத் தயாரானார்.மிகுந்த தன்னம்பிக்கையோடு வந்திருந்த கோவை ராஜா, 'அண்ணே... எடுத்தவுடனே ஒரு குப்பைத் தொட்டியைக் காட்டறோம்...' என்று கதை சொல்ல ஆரம்பித்தார்.'ச்சீ... ச்சீ... தூ தூ...' என்று எச்சில் பாத்திரத்தில் துப்பினார் தேவர்; மனம் உடைந்து திரும்பினார் ராஜா. பின், பிரபலம் அடைந்த அவர் தான், திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்பட்ட கே.பாக்யராஜ்!கதாசிரியர்களுக்கு மற்ற சினிமா கம்பெனிகளில் வழங்கப்பட்ட தொகையை விட, அதிகமாகவே கொடுப்பார் தேவர். கலைஞானம் அவரிடம் சேர்ந்த போது, 'உங்கதைக்கு எவ்ளோ வாங்கறே?' என்று கேட்டார் தேவர்.'அண்ணே... என் கதைக்கு கே.எஸ்.கோபால கிருஷ்ணன். 7,000 ரூபாய் கொடுப்பாருண்ணே... வெறும் டிஸ்கஷன்னா, படத்துக்கு, 2,500 முதல், 3,000 ரூபா வரை தருவார்...' என்றார்.தேவர் மூக்கை மூடி, தன் சகாக்களைப் பார்த்தார்; அது அவரது மேனரிசம். 'அடப்பாவிப் பயலுவளா... ரெண்டு சீன் சொல்லிட்டு, எங்கிட்ட என்னமா பணம் புடுங்கறீங்க...' என்பது போல் இருந்தது அவர் பார்வை!சிரிப்பை வெளிக்காட்டக் கூடாது என்பதற்காக, அங்கிருந்த முருகன் படத்தைப் பார்த்தனர் கதாசிரியர்கள்.'ஏம்பா... உண்மையாவே அவ்ளோ தானா கொடுக்குறாங்க...' என்று மீண்டும் கேட்டார்.'அண்ணே... கே.எஸ்.ஜி., கிட்ட தொழில் செய்றதே பாக்கியம்...' என்றார் கலைஞானம்.வாயடைத்துப் போனார் தேவர். தன் எழுத்தாற்றலை மட்டுமே நம்பி, சினிமாவில் இமயம் போல் வளர்ந்தவர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன். எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா ஜோடி இருந்தும், தேவரின், தேர்த்திருவிழா படம் ஓடவில்லை. காரணம், அப்படத்தின் ரிலீஸ் அன்று, கே.எஸ்.ஜி.,யின், பணமா பாசமா படம் வெளியாகி, வரலாறு காணாத வசூலைக் கண்டது. இத்தனைக்கும், அப்போது மார்க்கெட் பறி போனவர்கள் நடித்த படம் அது!உடனடியாக, கலைஞானத்திடம் கதை எதுவும் கேட்கவில்லை தேவர். தன் தம்பியை அழைத்து, 'மாரியப்பா... 15 ஆயிரம் ரூபாயை எடுத்துட்டு வா...' என்றார்.கொண்டு வந்ததும், அதை கலைஞானத்திடம் நீட்டி, 'இதை எடுத்துட்டுப் போயி, உன் சொந்த ஊர்ல ஏதாவது நிலம் வாங்கிப் போட்டுட்டு வந்து பேசு...' என்றார்.வியர்த்துப் போனார் கலைஞானம். அதை, அவர் எதிர்பார்க்கவில்லை என்பதை அவரது முகமே காட்டியது.'சித்தாள் வேலை செய்து, தங்கைய வக்கீலாக்குகிறாள் அக்கா. அட்வகேட் ஆனதும், குற்றவாளியாக அக்காவின் கணவரையே கோர்ட்டில் ஏற்றுகிறாள் தங்கை...' தன் பைலில் இருந்த, அக்கா தங்கை படத்தின் கதைச் சுருக்கத்தை வாசித்துக் காண்பித்தார் தேவர்.'இவ்ளோதாம்பா நான் கேக்குற கதை... இதைக் கேட்டதும், உள்ளுக்குள் ஒரு பதற்றம் வருதா இல்லியா... கடைசியில என்னாகுமோன்னு ஒரு சஸ்பென்ஸ் இருக்கு இந்த கதையில... இதைத் தான் நான் உங்கிட்ட எதிர்பார்க்குறேன்...' என்று கூறி, தினமும் அவரை ஒரு கதை கூறும்படி கேட்டார் தேவர்.திகைத்து விட்டார் கலைஞானம். 'ஒவ்வொரு நாளும் கதைக்கு எங்கே போறது... தேவரை நம்பி ஊரில நிலத்தை வாங்கிப் போட்டு வந்துட்டோமே... இவர் முரட்டு ஆளாயிற்றே... கதை சொல்லலன்னா பெல்ட்டால் அடிப்பாரோ...' என பயந்தார்.அவரை ஆறுதல்படுத்தி, 'உங்க கதை நல்லா இல்லன்னா, புடிக்கலன்னு மூஞ்சியில அடிச்சாப்ல சொல்லிடுவேன். நீ வருத்தப்படக் கூடாது. மறுநாள், இன்னொரு நல்ல கதை சொல்லு; போதும்...' என்றார் தேவர்.தேவர் பிலிம்சின் கதை இலாகாவுக்குள் நுழைந்த பின்னரே, 'தேவருக்கு உள்ள கதை ஞானம், தனக்கு இல்லை...' என்பது கலைஞானத்துக்கு புரிந்தது. ஆரம்பத்தில் திணறி, பின் சமாளித்து, தேவரது மதிப்பைப் பெற, போராட வேண்டி இருந்தது. கலைஞானம் மட்டும் அல்ல, அங்கு இருந்த அத்தனை ஜாம்பவான்களும் தேவரைத் திருப்திப் படுத்த முடியாமல் தவித்தனர்.ஏதோ அவியலுக்கு ஐடியா சொல்வது போல், கதாசிரியர்களிடம் பட்டியல் வாசிப்பார் தேவர்.'மாரா ஆரம்பிக்கலாமா... நேத்து திருமாறன் சொன்ன காமெடி, மகேந்திரனுடைய கிளைமாக்ஸ், கலைஞானத்தோட லவ் டிராக், அது கூட ஆர்.கே.சண்முகம் சொன்னாரே... அல்வா சீன் அதையும் சேர்த்துக்குங்க. நேத்து பார்த்த இங்கிலீஷ் படத்துல ஒரு கொலை வித்யாசமா காட்டுறானே... அதை இண்டர்வல்ல வெச்சுக்க. பாலமுருகன் சொன்ன பூஜை சீனை மிஸ் பண்ணிடாதே! அப்புறம், அய்யாப் பிள்ளை, தர்மம் தலை காக்கும் படத்துல ஒரு ஓபனிங் சொன்னாரு. டேய் பாலு... நீ அதை மறக்கல இல்ல. எழுதிக் கொடுத்துடு.'என்னப்பா ஏதாவது சந்தேகமா... ஏப்., 14, மகராசி படம் ரிலீஸ். நீங்க போஸ்டர் தயார் செய்துடுங்கன்னு எலிகண்ட்ல சொல்லிட்டேன். சாயந்தரம் டிசைனோடு வருவாங்க...' என்றார் தேவர்.— தொடரும். நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,சென்னை.பா. தீனதயாளன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !