உள்ளூர் செய்திகள்

சாண்டோ சின்னப்பா தேவர்! (29)

தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —'அம்மு இந்தப் படத்துல, நீச்சல் உடை போட்டுட்டு வருதுண்ணே... நீங்க அவங்க அம்மாகிட்டே பேசணும்ன்னு ஞாபகப்படுத்த சொன்னீங்க....' என்று நினைவூட்டுவார் உதவியாளர் விஜயசிங்கம்.'ஏம்பா... அம்முவ சும்மிங் சூட்ல போஸ்டர் போட்டா, எதாவது பிரச்னை வருமா... நீ எதுக்கும் நாகராஜாவை கூப்பிடு. நல்லதா நாலு ஸ்டில் எடுத்து, பேசும் படத்துக்கு அனுப்பலாம். பெருசா பப்ளிசிட்டி கிடைக்கும். மறக்காம, பொம்மைக்கும் ஸ்டில் கொடுங்க...' என்பார்.திரைக்கதையே தயாராகி இருக்காது; வசனம் எழுதுவது யார் என்றும் தெரியாது. பட விளம்பரம் வரை போய் விடுவார்.தேவர் பிலிம்ஸ் கதை இலாகாவின் பிதாமகர் மாரா. ஆனால், மாராவை வசனம் எழுத, அதிகம் அனுமதிக்க மாட்டார் தேவர்.'ஏம்பா... நிறைய பேர் இருக்காங்களே... தாசு, மதுரை திருமாறன், ஆர்.கே.சண்முகம், தூயவன்னு யாராவது எழுதட்டும். நீ பைனல் பார்த்துடு; அதுபோதும்...' என்பார்.'மாரா வசனம் எழுதுகிற, ஸ்டுடியோவுக்குச் சென்று, கதாநாயகனுக்கு டயலாக் சொல்லித் தருகிற நேரத்தில், அவர் புதிதாக, ஒரு சினிமா கதையை உருவாக்கலாம்...' என்று திட்டமிடுவார் தேவர்.தேவரின் கூட்டாஞ்சோற்றில், கதை என்று யாருடைய பெயரைப் போடுவது! நீண்டகாலம் வரை கதை - வசனம், ஆரூர்தாஸ், ஆர்.கே.சண்முகம், அய்யாப்பிள்ளை, மூலக்கதை மதுரை திருமாறன், டி.என்.பாலு என்றெல்லாம் டைட்டிலில் காண்பித்தார் தேவர். பின், அவருக்குப் பிரச்னை வந்து விட்டது. படங்களின் வெற்றி விடாமல் துரத்தி வர, அவை மற்ற மொழிகளிலும் ரீ - மேக் செய்யப்பட்டன. ஹாத்தி மேரா சாத்தி படத்தின் இமாலய வசூலுக்குப் பின், புதிய முடிவெடுத்தார் தேவர்.'கதைக்காரங்களா... இனி கதைன்னு டைட்டில்ல எம் பேருதான் போடுவேன். அதுக்கும் சேர்த்து, 10 ஆயிரம் ரூபான்னா, 20 ஆயிரமாக கதைக்கான தொகைய ரெட்டிப்பா கொடுத்துடறேன். சம்மதமா?' என்றார்.கதாசிரியர்கள் எல்லாரும், இப்படியொரு அறிவிப்புக்கு என்ன காரணம் என்பது போல் அவரை நோக்கினர்.'இதோ பாருங்கப்பா... துணைவன் படம் நமக்கு சூப்பர் ஹிட். அந்தப் படத்தை தெலுங்கு, இந்தியில கேக்குறாங்க. அதை எழுதின பாலமுருகன் சொந்தப்படம் அது, இதுன்னு ஏக பிசி. வசந்த மாளிகை படத்துக்கு வசனம் எழுதினதுக்கப்பறம் அவரைப் பிடிக்க முடியல. அதனாலதான் சொல்றேன். கதை எம் பேருலயே இருந்தா, உங்கள நான் தேடி அலைய வேணாம்லே புரிஞ்சுதா...' என்றார்.அனைவரும் தலையாட்டினர்.தேவர் ஒரு கதையை ஏற்று, ஓ.கே., செய்வதே, திருவிழாக் கொண்டாட்டமாக இருக்கும். காரணம், டிஸ்கஷனில் கிளைமாக்ஸ் பேசி முடித்ததும், ஆளுக்குத் தக்கவாறு, பணம் பட்டுவாடா ஆகிவிடும். அதற்கு முன், வெகு உற்சாகமாக, தன் சகாக்களை வாகினிக்கு அழைத்துச் செல்வார் தேவர். அவரது கறுப்பு நிற கார் நிரம்பி வழிந்தபடியே புறப்படும். அவர்களுக்கு காரில் ஒரு கண்டம் காத்திருக்கும். புதிய படைப்பை தேவர் ஒப்புக் கொண்டால் மட்டும் போதாது. தேவர் பிலிம்ஸ் உதவி இயக்குனர் சிவாவுக்கும் கதை பிடிக்க வேண்டும். அதைவிட முக்கியம், தேவரின் கார் டிரைவர் விஸ்வநாதனின் பாராட்டும், மகிழ்ச்சியும்! விஸ்வநாதன் காரை ஸ்டார்ட் செய்கிற போதே தேவர் ஆரம்பிப்பார்...'விஸ்வநாதா... ஒரு கதை முடிச்சிட்டேம்பா... நல்லாருக்கான்னு கேட்டு சொல்லு...' என்பார் தேவர்.அவர், 'சரிண்ணே...' என்றதும், கார் லிபர்டி தியேட்டர் செல்வதற்குள் கதையை சொல்லி முடித்து விடுவார் தேவர். 'எப்படி இருக்கு விஸ்வநாதா... நமக்கு அம்பது நாள் ஓடினா கூட போதும்...' என்பார்.விஸ்வநாதனுக்கு கதை பிடித்திருந்தால், காரிலேயே ஜாலிலோ ஜிம்கானா. இல்லையென்றால், 'காரைத் திருப்பு; நேரே கம்பெனிக்கு ஓட்டு. ஷூட்டிங்கும் வேணாம்; மண்ணாங்கட்டியும் வேணாம்...' என்பார்.கார், திரும்பவும், தேவர் பிலிம்ஸ் போர்டிகோவுக்குள் நுழையும்.'இதோ பாருங்கப்பா... விஸ்வநாதனை மேலே கூட்டிட்டுப் போங்க. அவனுக்கு எது புடிக்கல, ஏன் புடிக்கல, எந்த சீனை மாத்தணும், இன்னும் என்னென்ன சேர்க்கணும்ன்னு கேளுங்க. யாராவது அவங்கிட்ட காசைக் கொடுத்து ஏமாத்தி, 'கதை நல்லாருக்கு; நான் ஏதோ டென்ஷன்ல கேட்டுட்டேண்ணே'ன்னு அவன சொல்ல வெச்சீங்க, அப்பறம் நடக்கறதே வேறே.'விஸ்வநாதா... நீ மேலே போயி, உன் சந்தேகத்தைச் சீக்கிரம் சொல்லிட்டு வந்துடு. கதை தயார் ஆகற வரை, இந்தப் பக்கம் தலையே காட்டாத. என்ன புரியுதா... இது சினிமாடா; பெரிய வியாபாரம். என்னை நம்பி எத்தனையோ குடும்பத்துல உலை கொதிக்குது. கவுத்துடாதீங்கடா...' என்பார்.விஸ்வநாதனை மனதுக்குள் சபித்தபடி, மீண்டும் டிஸ்கஷன் ஆரம்பமாகும். அப்போதும் கதை நன்றாக இல்லாவிட்டால், 'என்னப்பா கதை எழுதறீங்க... விஸ்வநாதன் காசு கொடுத்துப் படம் பாக்குறவன். உங்கள மாதிரி ஓசி பாசுலயோ, உல்டா பண்றதுக்காகவோ, சீன் திருடவோ அவன் தியேட்டருக்குப் போறதில்ல. என் படத்தைப் பாக்கறதுக்கு ஏழை பாழைங்க தான் அதிகம் வருவாங்க. அவங்களுக்குக் கதை புரியணும். ஒவ்வொரு காட்சியும் விளங்கணும். சரியா...' என்பார்.அந்த இடத்தில், விஸ்வநாதன், 'மிஸ்டர் பொது ஜனமாகி' விடுவார். அவரை எப்படி ஜெயிப்பது என்று நிஜமாகவே மண்டையைப் பிய்த்துக் கொள்வர் கதாசிரியர்கள். விஸ்வநாதன் தலை அசைத்தவுடன், வசனம் எழுதும் வேலை ஆரம்பமாகும். கதையைப் பொறுத்து, வசனகர்த்தாவைத் தீர்மானிப்பார் தேவர். 'என்ன தாசு..... இன்டர்வெல் வரை எழுதிட்டியா...' என்று மூன்றாம் நாளே நச்சரிப்பார்.யார் எழுதினாலும், ஒரு வாரத்துக்குள் மொத்தக் கதை வசனமும், தேவரின் மேஜைக்கு வந்தாக வேண்டும். உதவி டைரக்டர் வேம்பத்தூர் கிருஷ்ணனை அழைத்து, 'டேய் கிட்டா... வசனத்தைப் படிடா...' என்பார்.காட்சி வாரியாக, 17 ரீல்களுக்கும், 85 சீன்களுக்கும், டயலாக் வரிசையாகப் படிக்கப்படும், 'டேய்... எத்தனை தரம் சொல்றது... ஜனங்களுக்குப் புரியற மாதிரி வசனத்த எழுதங்கடான்னு! என் படத்துல எவன்டா வசனத்தப் பாக்குறான்; எம்.ஜி.ஆரைத் தான்டா பாக்குறான். வாத்தியார் வந்தாலே விசிலடிப்பான். அவருக்கு ஏன்டா செந்தமிழ்ல இலக்கண, இலக்கியத்தோட வசனம் எழுதி வெச்சிருக்கீங்க. அந்த டயலாக்கை அடிடா. நான் சொல்றத எழுதிக்க...' என்பார்.ஆரூர்தாசோ, சண்முகமோ, தூயவனோ, பாலுவோ யார் எழுதி இருந்தாலும், அவர்கள் கண்கள் கலங்கும். தேவரின் திருத்தங்களை சகித்துக் கொள்வதைத் தவிர, வேறு வழியில்லை. மொத்த வசனமும் வாசித்து முடிக்க, ஏறக்குறைய நாலு நாட்களாவது ஆகிவிடும். அதற்குப் பின், அமாவாசையில், புதுப் படத்திற்கு பூஜை!'நம்ம தமிழ் சினிமாவுல பூஜை தேதி, ரிலீஸ் தேதி இரண்டையும் ஒரே நேரத்துல சொல்ற ஒரே ஆள் நீ தான் சின்னப்பா...' என்றபடி தேவரிடமிருந்து புதுப்பட அட்வான்சை சந்தோஷமாகப் பெற்றுக் கொள்வார் எம்.ஆர்.ராதா.— தொடரும். நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,சென்னை.பா. தீனதயாளன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !