உள்ளூர் செய்திகள்

ஸத்யகன் கோவில்!

விநாயகர், முருகன், சிவன், பெருமாள், சாஸ்தா, அம்மன் என, எத்தனையோ தெய்வங்களின் கோவில்களைப் பார்த்திருப்பீர்கள். ஸத்யகன் என்ற தெய்வத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த ஸத்யகன் யார் தெரியுமா? சிவனுக்கும், பெருமாளுக்கும் பேரன். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?சிவனுக்கும், மோகினி அவதாரம் எடுத்த திருமாலுக்கும் பிறந்த பிள்ளை, சாஸ்தா. இவரே அய்யப்பனாக மானிட அவதாரமெடுத்து, சபரிமலையில் அருள்பாலிக்கிறார். இங்கு மட்டும் தான் அவருக்கு பிரம்மச்சரிய நிலை. மற்ற கோவில்களில், குடும்பஸ்தராக பூர்ணா, புஷ்கலா என்ற தேவியருடன் இணைந்துள்ளார். கேரள மாநிலம், திருக்குன்னம்புழா என்ற ஊரிலுள்ள தர்மசாஸ்தா கோவிலில், இவர் பிரப (பிரபா) என்ற தேவியுடன் இணைந்துள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஸத்யகன் என பெயர். இந்தக் குழந்தையுடன் உள்ள தம்பதியரை தரிசிக்க இங்கு வரலாம்.ஸத்யகன் என்றால், நிலையானவன் என பொருள். ஸத்யகன் என்ற சொல்லுக்குள் அடங்கிய சத்தியம் மட்டுமே உலகில் நிலைத்திருக்கும். சத்தியம் எனப்படும் உண்மை என்றாவது ஒருநாள் வெளிப்பட்டே தீரும். எனவே, இதை நிலையானது என்பர்.தர்மத்தை தன் பெயரில் கொண்ட சாஸ்தா, தன் குழந்தைக்கு சத்தியம் என்னும் தர்மத்தின் பெயரைச் சூட்டியதில் ஆச்சரியம் ஏதுமில்லை. திருக்குன்னம்புழா கிராமம், இயற்கை எழில் சூழ்ந்தது. இங்குள்ள பாரதப்புழா என்ற முக்கிய நதியின் கிளைநதியான திருக்குன்னம்புழாவின் பெயரை, இந்த கிராமத்துக்கு சூட்டியுள்ளனர். எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென கண்ணுக்கு குளுமையாய் இருக்கும். கேரளத்திலுள்ள அநேக கோவில்களை எழுப்பியவர், பரசுராமர் தான். திருமாலின் அவதாரமான இவர், அசுரர்களை கொன்று குவித்தார். இதனால் ஏற்பட்ட மனச்சஞ்சலம் நீங்க, பல தலங்களுக்கும் சென்றார்.திருக்குன்னம்புழாவின் சுற்றுச்சூழல் அவரைக் கவர்ந்தது. அங்குள்ள சிலர், அவரிடம், 108 அங்குல உயரமுள்ள சாஸ்தா சிலை குப்பைக்குள் கிடந்து கண்டுபிடிக்கப் பட்டதாக கூறினர். தன் மனக்கஷ்டத்தை நீக்கிய சாஸ்தாவை அவரது துணைவி மற்றும் மகனுடன் பிரதிஷ்டை செய்ய அவர் விரும்பினார். அதன்படியே கோவில் அமைந்தது.ஸத்யகனுக்கு இன்னொரு சிறப்பம்சம் உள்ளதாக, தல வரலாறு சொல்கிறது. நரசிம்ம அவதாரம் எடுத்த போது, ஆக்ரோஷமாக இருந்தார், திருமால். இது, பல யுகங்களாக நீடிக்க பரசுராம அவதாரம் நிகழ்ந்தது. நரசிம்மரின் உக்கிரத்தை ஸத்யகனுக்கு மாற்றினார், பரசுராமர். இதனால், ஸத்யகனை நரசிம்மரின் மற்றொரு வடிவம் என்றும் சொல்லலாம். நமக்கு ஏதேனும் அநியாயம் இழைக்கப்பட்டால், ஸத்யகனிடம் முறையிடலாம். அவர், பிரச்னையை நொடியில் தீர்த்து விடுவார். காலப்போக்கில் கோவில் அழிய, புதிய கோவில் எழுப்பப்பட்டது. ஆலப்புழையில் இருந்து திருக்குன்னம்புழா, 26 கி.மீ., துாரத்தில் உள்ளது. வழியிலுள்ள ஹரிப்பாடு என்ற ஊரில், கேரளாவின் மிகப்பெரிய முருகன் கோவில் உள்ளது. தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !