சாவித்திரி (4)
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.பிரபல இந்தி திரையுலகின், சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனிடம், 'இந்தியாவின் அழகான பெண்மணியாக, தாங்கள் கருதும் பத்து பேரின் பட்டியலைக் கூறுங்க...' என, ஆங்கில ஏடு ஒன்று கேட்ட போது, அந்த பத்துப் பேரில் மூன்றாவது நபராக, தென் மாநிலங்களில் சாவித்திரியை மட்டும் குறிப்பிட்டு இருந்தார்.பிரம்மன் ஆயிரம் கண்ணி வைத்து வார்த்து எடுத்த சிற்பம் போன்றவர் சாவித்திரி என்றால், இங்கே மறுப்பதற்கு யாருமில்லை.ஆந்திர மாநிலத்தில், சாவித்திரியும், பிரபல தெலுங்கு நடிகர் ஜக்கையாவும், நாடக கம்பெனியில் சில காலம் நடித்தனர்.ஒருமுறை, நாடகத்திற்கு தலைமை ஏற்க, பிருதிவி ராஜ்கபூர் வந்திருந்தார்; அந்நாடகத்தில், சாவித்திரி பரதநாட்டியம் ஆட வேண்டும்.மேடையில் திரை விலகுகிறது; சாவித்திரியின் நடன அசைவுகள், அபிநயம் காண்கிறது. கருமேகத்தை கண்டு, கான மயில், தன் தோகையை விரித்தாடுவது போல, சாவித்திரியின் நடனம், அவர் விழி கூறிய அபிநயம் கண்டு, பிருதிவி ராஜ்கபூரின் கண்களில், 'ஆயிரம் வோல்ட் பல்பு' எரிந்த பிரகாசம்!சாவித்திரியின் ஆட்டம் கண்டு, பிருதிவி எழுப்பிய கரவொலி, மக்கள் கரவொலிகளாக மாறியது.தலைமையுரையில் வாழ்த்தி பேச வந்த பிருதிவி ராஜ்கபூர், 'இங்கு நடனம் ஆடிய இளம் பெண்ணிடம், திரைத் துறைக்கு வேண்டிய அத்தனை அபிநயங்களையும் பார்க்கிறேன்; விரைவில், அந்த நல்ல நிகழ்வு நடைபெறும் என நம்புகிறேன்...' என்று வாழ்த்தினார்.சாவித்திரியின் தந்தை, சிறு வயதிலேயே இறந்து விட்டதால், அவரது குடும்பத்தை அவரின் பெரியப்பா சவுத்ரி தான், கவனித்து வந்தார். சினிமா தொடர்பான ஒரு நிறுவனத்தில், மேலாளராக இருந்தார் சவுத்ரி. அவருக்கு பிருதிவி கூறியது, தீப்பொறியை கிளப்பியது. அதனால், சினிமா வாய்ப்புக்காக, சாவித்திரியை சென்னைக்கு அழைத்து வந்தார்.சாவித்திரியின் முதல் படம், சம்சாரம்; தெலுங்குப் படமான இப்படத்தில், சாவித்திரிக்கு முதன்மை வேடம் தருவதாக ஆசைக் காட்டி, அவரை ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடிக்க வைத்தார் இயக்குனர், எல்.வி.பிரசாத்!தன் முதல் படத்தில், தான் ஏமாற்றப்பட்டதில் சாவித்திரிக்கு ஏக வருத்தம். இச்சூழலில், விஜயா புரொடக் ஷன் சார்பில், பாதாள பைரவி என்ற படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாரிக்கப்பட்டது. இப்படத்தில், ஓர் அருமையான பாடலுக்கு நடனம் ஆடும் வாய்ப்பு சாவித்திரிக்கு கிடைத்தது.அந்த நடனம் பரபரப்பாக பேசப்பட, எல்லாராலும் உற்று நோக்கப்படும் நடிகையானார் சாவித்திரி.தொடர்ந்து, தெலுங்கில் சில படங்களில் நடித்து முடித்த நிலையில், வினோதா பட நிறுவனம் சார்பாக, தேவதாஸ் என்ற படம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் தயாரிக்கப்பட்டது. இப்படத்தில், பார்வதி வேடத்தில் நடித்தார் சாவித்திரி. இப்படத்தின் மூலக்கதை, வங்க மொழியில் இருந்து எடுக்கப்பட்டது. இப்படம், வேதாந்தம் ராகவைய்யா இயக்கத்தில் வெளிவந்து, மாபெரும் வெற்றி கண்டது.தேவதாசாக நாகேஸ்வரராவும், பார்வதியாக, சாவித்திரியும் அப்படத்தில் வாழ்ந்தனர் என்று சொல்லும் அளவில் இருந்தது அவர்களது நடிப்பு!அம்மா என்று அழைத்தால் அன்பு என்பது போல, கண்ணா என்றால், சாவித்திரியின் வாழ்க்கையில், காதல் என்று மட்டுமே அர்த்தம்!காதல் கொஞ்சும் மொழியில், ஜெமினியை, 'கண்ணா...' என்று தான் அழைப்பார் சாவித்திரி. அவர், 'கண்ணா...' என்றழைக்க, ஜெமினி, நெளிந்து, குழைந்து, 'அம்மாடி...' என அழைப்பது தனி அழகு.காதல் என்று வந்து விட்டால், தடைகள் இருப்பது போல் தூதுக்களும் இருக்கும். கடவுளாக கருதப்படும் ராமனுக்கே, அனுமான் தூது சென்ற கதை, புராணத்தில் உண்டு. அவ்வகையில், சாவித்திரிக்கு, தாட்சாயினி என்ற இளம்பெண் தூது சென்றாள். சாவித்திரியின் உதவிப் பெண்ணான தாட்சாயினி நல்ல அழகு, மூக்கும் முழியுமாக இருப்பாள்.தன் காதலுக்கு உதவி செய்தாள் என்பதற்காக, தன் தங்கைக்கு செய்வதைப் போன்று, அத்தனை செலவுகளையும் தானே ஏற்று, திருப்பதியில், தாட்சாயினிக்கு திருமணம் நடத்தி வைத்தார் சாவித்திரி.நடிகை என்பதைத் தாண்டி, காதலியாக வெற்றி பெற்றார் சாவித்திரி. ஆனால், வாழ்க்கையில்?சாவித்திரியின் காதல் பற்றிய செய்திகள், அன்றைய மஞ்சள் பத்திரிகைகளில் அடிக்கடி வர ஆரம்பித்தன. சராசரி நாளிதழ்களில், இன்று இருப்பது போல, கிசுகிசு பகுதிகள் எதுவும், அப்போது கிடையாது.எப்போதுமே காதலில் எந்தப் பெண் விழுந்தாலும், அவள் தன்னை நிமிடத்திற்கு ஒருமுறை அழகுபடுத்துவாள்.சாவித்திரி காதலிக்கத் துவங்கிய பின், தலையில், மல்லிகைப் பூச்சரம் இன்றி வெளியே வருவது அரிது.ஜெமினியை எவ்வளவு பிடிக்குமோ அதுபோல, மல்லிகைப் பூக்களை விரும்பினார் சாவித்திரி.ஜாதிமல்லி, குண்டு மல்லி, ராமர் மல்லி, சிட்டு மல்லி, இதழ் மல்லி மற்றும் இனிப்பு மல்லி என, மல்லிகைப் பூவின் வகைகள் சாவித்திரிக்கு அத்துப்படி; அவைகளை தன் வீட்டிலும் வளர்த்தார்.பல நேரங்களில் சாவித்திரி கண்ணாடி முன் நின்று, நெற்றியில் குங்குமம் இட்டு, தனக்குள்ளே, தன்னை ஜெமினியின் மனைவியாக ரசித்தார். ஜெமினி தான், தன் கணவர் என்ற முடிவை, மனதளவில் எடுத்து விட்டார் சாவித்திரி.பெண்ணிடம் ஏற்படும் மாற்றங்கள், பெற்ற தாய்க்கு கண்டிப்பாக தெரிந்து விடும். சாவித்திரியின் மாற்றங்கள், தாய் சுபத்ரம்மாவுக்கு, அவரின் காதலை ஓரளவு கோடிட்டுக் காட்டியது. அரசல் புரசலாக சாவித்திரியின் வளர்ப்பு தந்தை சவுத்ரிக்கும் தெரிய ஆரம்பித்தது. மனிதன் துடித்துப் போய் விட்டார். தான் அனுபவிக்கும் இந்த ஆடம்பர வாழ்க்கை, ஜெமினியால் பறிக்கப்பட்டு விடுமோ என்ற பதைபதைப்பு அவருக்கு!சாவித்திரியைச் சுற்றி உறவுக்காரர்களை வைத்து ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினார். எதிர்ப்பு இருந்தால் தான், காதல் வலுவாகும். சவுத்ரியின் எதிர்ப்பு, சாவித்திரியின் காதலை இன்னும் அதிகமாக்கி, ஜெமினியிடம் நெருங்க வைத்தது.மனம் போல் மாங்கல்யம் படத்தை இயக்கிய இயக்குனர் புல்லையா, சவுத்ரியை தன் வீட்டிற்கு அழைத்து, சாவித்திரியின் மனநிலையை தெளிவாக எடுத்துரைத்தார்; ஆனால், சவுத்ரி அதை ஏற்பதாக இல்லை; எதிர்ப்பையும் கைவிடுவதாக இல்லை.தனக்கு எதிர்ப்பு பலமாவதைக் கண்டு, சாவித்திரி ஒரு தெளிவான முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். சாவித்திரியின் அம்மாவும், சாவித்திரியின் காதலை ஏற்க மறுத்து விட்டார்.'நாம் முறைத்துப் பார்த்தாலே போதும்... சாவித்திரி தன் காதலை விட்டு விடுவாள்...' என்று நம்பிய சவுத்ரிக்கு, எதிர்வினை பதில் கூறியது.ஜெமினிக்கு காலில் போடும் செருப்பு முதல், அவர் தலைவாரும், 'ஸ்டைல்' வரை, சாவித்திரியால் உருவாக்கப்பட்டது.சாவித்திரியை கடலளவு ஜெமினி நேசித்தார் என்பதின் பின்னணியில், ஜெமினிக்காக மட்டுமே, சாவித்திரி வாழ்ந்தார் என்று அர்த்தம்.'ஜெமினி இன்றி எனக்கு வேறு எதுவும் வேண்டாம்...' என, கடவுளிடம் கேட்டார் சாவித்திரி.அன்பு என்னும் தேன் கலந்து, சாவித்திரி வழங்கிய காதல் விருந்து, கசப்பாக மாறியது நட்பினாலா?காலையிலே குளித்து, தன் விருப்ப தெய்வமான பிள்ளையாரை வேண்டி கொண்டாள் சாவித்திரி. இன்று, ஜெமினியிடம் முடிவாக பேசிவிட வேண்டும். எத்தனை நாள் தான் இப்படி மனதிற்குள் மூடி வைத்து கொண்டிருப்பது? ஆற்றில் நீந்திக்களிக்கும் மீன் தூண்டிலில் சிக்கித் தவிப்பது போல, ஒரு பெரிய போராட்டம் மனதிற்குள் ஏற்பட்டது.சாவித்திரி, முதன்முதலாக கேமரா முன் நின்ற போது கூட, இந்தத் துடிப்பு இருந்ததில்லை.— தொடரும்.ஞா.செ.இன்பா