பாதுகாப்பு!
பாமாவிற்கு, வழக்கமா அஞ்சரைக்கெல்லாம் விழிப்பு வந்துடும். அலாரம் அடிக்க வேண்டிய அவசியமே இருக்காது.'இன்னைக்கு மணி ஆறாயிடிச்சி போல இருக்கே... பாதி ராத்திரி வரைக்கும், மகள் சாரதா மற்றும் மகன் சேகரோட அரட்டை அடிச்சது தப்பு . நல்ல வேளை, கதவில பையைத் தொங்க விட்டிருக்கோம். பால்காரன், பால் பாக்கெட்டுகளை வச்சிட்டுப் போயிருப்பான்...' நொந்து கொண்டே, ஆடையைத் திருத்தி, தலைமுடியை இறுகக் கட்டிக் கொண்டாள் பாமா. வாசற் கதவைத் திறக்கக் கிளம்பினாள். கூடத்தில் மாலையுடன் படத்திலிருந்து சிரித்துக் கொண்டிருந்த கணவர் சோமுவை, வழக்கம் போல ஒரு முறை பார்க்கத் தவறவில்லை.பால் பாக்கெட்டுகளுடன் பையை எடுத்துக் கொண்டாள். கதவை மறுபடியும் மூட எத்தனித்த போதுதான் கவனித்தாள். வாசலில் சின்ன கூடை வைக்கப்பட்டிருந்தது. நேர்த்தியான மூங்கில் கூடை, பட்டுத் துணியால் ஏதோ வைக்கப்பட்டு மூடியிருந்தது. அனாதை இல்லம் முன்னால் குழந்தை மாதிரியா? பக்கத்து வீட்டில் போய் கேட்கலாமா? குழம்பினாள் பாமா. வெளியில் காலடி எடுத்து வைத்தபோது தான் பின்னால் குரல் கேட்டது.''ஹாப்பி மதர்ஸ் டே அம்மா.''முதலில் பையன் சேகர். பின்னால் கூடவே பெண் சாரதாவும் சேர்ந்து, பாமாவின் கழுத்தை கட்டிக் கொண்டனர். நெகிழ்ச்சியுடன், பாமாவிற்கு ஆச்சரியமாகவும் இருந்தது. காலையில் எத்தனை கத்தினாலும் எழுந்திருக்காதவர்கள்.சேகர் லீவ் முடிந்து பன்னிரண்டாவது வகுப்பில் அடி வைக்கப் போகிறான். சாரதாவிற்கு படிப்பு முடிந்திருக்கிறது. இன்னும் ஒரு மாதத்தில், வெளியூரில், ஐ.டி., கம்பெனியில் சேர வேண்டும்.மெதுவாக அவர்கள் கையை அகற்றிய பாமா, பயத்தை மறைத்துக் கொண்டாள்.'யாரோ... கூடையில எதையோ வச்சிட்டுப்போயிருக்காங்க. பக்கத்து வீட்டுல கேட்டுட்டு வர்றேன்.''''நாங்கதாம்மா வச்சோம்,'' சாரதா சொல்லிக் கொண்டிருக்க, ஓடிப்போய் கூடையை எடுத்தான் சேகர்.''மதர்ஸ் டேக்கு எங்க ரெண்டுபேரோட கிப்ட். இந்த குழந்தையையும் வளர்த்துக்கோ,'' அம்மாவின் கையில் கொடுத்தான்.பாமாவின் ஆச்சரியம், கோபமாக மாறலாயிற்று. பட்டுத்துணிக்குள் ஒரு சின்ன நாய்க்குட்டி சுருண்டு கிடந்தது. பிறந்து, பதினைந்து நாட்கள் தான் ஆகியிருக்கும்.''என்ன சேகர் இது? உங்களோட அல்லாட முடியலைன்னுதானே நாயையும் இத்தன வருஷமா அனுமதிக்கல... இப்ப மட்டும் எப்படி?'' அழுகையே வந்தது பாமாவிற்கு. அவளுக்குத் தெரியும். சாரதா, சேகர் இருவருக்கும், நாய் வளர்க்கணும்ன்னு ஆசை. கணவர் சோமு உயிரோட இருந்தவரைக்கும், அவருக்கு நப்பாசையிருந்தாலும், பாமாவை ஆதரித்துக் கொண்டிருந்தார்.''இறங்கினப் பின், திரும்பவும் மலை ஏறுவது போல், இந்த வயசில குளிப்பாட்டி, சாப்பாடு போட்டு, அதோட கழிவுகளையெல்லாம் சுத்தம் செய்துட்டு, ஸ்கூலுக்கும் போயிட்டு... என்னால முடியாது. எங்க வாங்கினாயோ அங்கேயே கொடுத்துட்டு வந்திடு,'' தீர்மானமாகச் சொல்லி விட்டு உள்ளே நகர்ந்தாள் பாமா.''எங்களயே வளர்த்திருக்கியே அம்மா... இத வளர்க்கறது உனக்கு என்ன பெரிய வேலையா சொல்லு. அப்பா இருந்தா, இப்ப எங்க பக்கம் பேசுவார்,'' என்றனர் இருவரும்.விட்டேத்தியாகப் போவது கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் மனதைக் கல்லாக்கி, குளியல் அறைப்பக்கம் சென்றாள் பாமா. குளித்து, நெற்றியில் விபூதியுடன் வந்தபோது தான் கவனித்தாள். அரைத்தூக்கத்தில் சேகரும், சாரதாவும் சாப்பாட்டு மேஜை மேல் சாய்ந்து கொண்டிருந்தனர். பட்டுத்துணி கூடையில் அசைந்து கொண்டிருந்தது. அவ்வப்போது தந்த பாக்கெட் மணியிலிருந்துதான், சேகர் அந்தக் குட்டியை வாங்கியிருக்க வேண்டும்.''எழுந்து, பல்லைத் தேய்ச்சுட்டு வாங்களேன். பால் தர்றேன். உங்க ரெண்டு பேருக்கும் இட்லி வச்சுட்டு, ஸ்கூல் போறேன். சாப்பிட்டுக்குங்க. அப்பறம் சேகர், அதை குடுத்திட்டு வந்திடு.''பாலைக் காய்ச்சி, இரண்டு டம்ளர்களில் எடுத்து வந்தாள். கூடையிலிருந்து ஒரு சின்ன முனகல். பாமாவின் மனதை என்னமோ செய்தது. டம்ளர்களை தத்தம் கைகளில் எடுத்து, சாரதாவும், சேகரும் அம்மாவையே கவனித்தனர். பாமாவும், அமைதியாக தன் காப்பியை பருகலானாள்.சேகர் தான் தொடங்கினான்.''அம்மா... உன்னோட மூணாவது குழந்தைக்கும் பசிக்கும். ஒண்ணும் தர மாட்டாயா?இன்னுமொரு டம்ளர் பாலை எடுத்து வந்து வைத்தாள்.''நீங்க ரெண்டு பேருமே கொடுங்க. அது கூடையிலேயே சிறுநீர் கழிச்சிடுச்சின்னு நெனைக்கறேன். வேற துணி எடுத்துக்கோ. பால் தந்தப்பறம் வாங்கின இடத்திலேயே குடுத்திட்டு வா,'' என்று கூறி, டிபன் செய்ய சமையல் அறைக்கு போனாள் பாமா.குட்டியை கையில் எடுத்து, சேகரும், சாரதாவும் திணறுவது தெரிந்தது.''வீட்ல பீடிங் பாட்டில் கிடையாது. சின்ன ஸ்பூன்ல குடுங்க அல்லது நல்ல துணியை பால்ல நனைச்சு அது வாயில பிழிங்க,'' என்றாள் பாமா.''ஒரு தடவை வந்து செய்து காட்டும்மா.''வேண்டா வெறுப்பாக, அவர்களை நெருங்கினாள் பாமா.''கூடையிலேயே வச்சு பால் தருவது கஷ்டம்; பாத்துக்கங்க,'' என்றாள்.மடியில் எடுத்தாள். ஸ்பூனினால் அதன் வாயில் பாலை புகட்டினாள். அது சப்புக்கொட்டியதை பார்க்க பாவமாயிருந்தது.''இந்தா சேகர்... நீயோ, சாரதாவோ மடியில் வைச்சிக்கிட்டு, கொஞ்சம் கொஞ்சமா குடுங்க,'' எழுந்திருக்க முயன்றாள் பாமா.''உங்கள மாதிரியெல்லாம் முடியாதம்மா... நாங்க குளிச்சிட்டு வர்றோம்.''சேகரும், சாரதாவும் பறந்தனர். பாமாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. குழந்தைகள் மீது ஆத்திரமாய் வந்தது.குட்டி அமைதியாய் தூக்கத்தை தொடர்ந்திருந்தது. அவளையறியாமல், பாமாவின் கரங்கள், அதன் முதுகை வருடிக் கொடுத்தன. அமுது தந்து முதுகு தடவிய தாயார், குழந்தை சேகரை வளர்த்த போது படிக்கும் திருப்புகழ் வரிகள் நினைவிற்கு வந்தது. இப்போது, பாமாவின் கை தாமாகவே தடவுவதை நிறுத்தியது. நாய்க்குட்டி மேல், அவள் பார்வை மேலும் படிந்தது. சாக்லேட் நிறம். கண்கள் திறந்திருந்த போது, கவனித்தாள். பசுமை நிறம். கழுத்துப் பட்டை பிங்க் நிறத்தில் இறங்கியிருந்தது. பாமா உயிரியல் ஆசிரியை. ஜெர்மனியில் அதை புஷியா காலர் என்று உயிரியல் விஞ்ஞானியின் பெயரை வைத்து குறிப்பிடுவர் என்பது தெரியும். இன்று என்னவோ, அதை ரசிக்கும் மனநிலையில் இல்லை. நன்றாக உறங்கிய அதை, மறுபடியும் கூடையில் வைத்தாள். பாமா பள்ளிக்கு கிளம்பும் போது, சேகர், சாரதாவும் குளித்து, தயாராகி இருந்தனர்.''உங்களுக்கு எல்லாம் எடுத்து வச்சிருக்கேன். சாப்பிடுங்க. அந்த நாய்க்குட்டிக்கு வயத்தில கொஞ்சம் பால் இறங்கியிருக்கு சேகர். அதுக்கு மறுபடியும் பசியெடுக்கிறதுக்கு முன்னாடி, வாங்கின இடத்தில கொடுத்திட்டு வந்திடு,'' குழந்தைகள் பதிலுக்கு காத்திராமல், குடையுடன் தெருவில் இறங்கினாள்.மதியம், பாமா திரும்பி வந்த போது, சேகர், சாரதா இருவரும், ஏதோ சீட்டு குலுக்கி போட்டு, சண்டை போட்டுக்கொண்டிருந்தனர்.''நீங்க என்ன... இன்னும் சின்னக் குழந்தைங்களா? சாரதாவுக்கு வேலை கிடைச்சு, கல்யாண வயசும் வந்தாச்சு. சேகர் இன்னும், ஒரு வருஷத்துல காலேஜ் போய் படிக்கணும். பொறுப்பு இல்லையா?''மறுபடியும், அவர்கள் முறைத்துக் கொள்வது தெரிந்தது. என்ன பிரச்னை என்று கேட்பது போல், அவர்கள் முகத்தையே பார்த்தாள். சாரதா தான் தயங்கிக் கொண்டே சொன்னாள்...''அம்மா. அந்த நாய்க்குட்டிக்கு என்ன பெயர் வைக்கலாம்ன்னுதாம்மா தகராறு. நான் ராக்கின்னு நெனைக்கிறேன். அவன், 'பிங்கி'ன்னு வைக்கணும்ன்னு சொல்றான்.''பகீரென்றது பாமாவிற்கு.''நீங்க அதை இன்னும் விட்டுட்டு வரலையா?'' சோபா மேல் வைக்கப்பட்டிருந்த கூடை, அப்போது தான் அவள் கண்களுக்கு தெரிந்தது.''அம்மா... அது இங்கேயே இருக்கட்டும்மா. ப்ளீஸ். எனக்கு வேலையில் சேர இன்னும் ஒரு மாசம் இருக்கு. நான் பார்த்துக்கறேன். அதுக்கப்பறம், சேகரோ அல்லது வேலைக்காரியோ கொஞ்சம் பார்த்துக்கலாம். வளர்ந்துரும்,'' என்று இறைஞ்சினாள் சாரதா.''நீங்க சாப்பிடுங்க,'' என்று சொல்லி, மூலையில் ஒதுங்கினாள். சேகரும், சாரதாவும் கூட வந்து அமர்ந்து கொண்டனர்.மூவரும் கொஞ்ச நேரம் பேசிக் கொள்ளவில்லை. பாமாவிற்கு மனசாகவில்லை.''வாங்க சாப்பிடலாம். வச்ச இட்லியும், அப்படியே இருக்கு. வெறும் கூல்டிரிங்ஸ் மட்டும் குடிச்சு, வயித்தை ரொப்பியிருக்கீங்க.''''நீங்களும் சாப்பிட வரணும்.''மவுனமாக உணவருந்தினர். ''நன்றிம்மா...'' தொடங்கினாள் சாரதா. சேகர் பார்த்துக் கொண்டிருந்தான். பாமா பதில் ஒன்றும் சொல்லவில்லை.''நான் சொன்ன பெயரையே வச்சுடலாம் சேகர்.''சாரதா மறுபடியும் தம்பியுடன் முரண்டு பிடிக்கத் தொடங்கினாள். கோபத்துடன் வாயைத் திறந்தான் சேகர்.''அதுக்கு சாக்லெட் கலர் உடம்பு. பசுமையான கண்கள். 'கிவி' அப்படீங்கற பெயர் தான் எடுபடும்.''பாமாவால் அமைதியாக இருக்க முடியவில்லை. சாரதாவும், சேகரும் முட்டிக் கொண்டிருந்தனர்.''அருமையான பெயர்ம்மா... உங்களுக்கு வேற, 'கிவி' பழம்னா புடிக்கும் இல்லையா?'' என்றனர்.''நல்ல பெயர் தான் செலக்ட் செய்துருக்கிங்க,'' என்றாள் பாமா.சேகரும், சாரதாவும் அம்மாவைக் கட்டிக் கொண்டனர்.அடுத்த இரண்டு வாரங்கள், சாரதா நிஜமாகவே கிவியைப் பார்த்துக் கொண்டாள். பெரும்பாலும் பாமாவிற்கு, கீழே தரையில் அமர்ந்து படிக்கும் வழக்கம். தத்தித்தத்தி, அது வந்து மடியில் தஞ்சம் புகும்போது, அவள் மனம் இன்னும் இளகியது.''உன்னோட உடம்பு உஷ்ணம், அதுக்கு வேண்டியிருக்கும்மா,'' என்றாள் சாரதா.'நீங்களும் சின்ன வயசில இப்படித்தான், என் புடவைத் தலைப்பை எடுத்து போர்த்திப்பீங்க...' என்று பாமாவுக்கு வாய் வரைக்கும் வந்தாலும், ஏனோ சொல்லவில்லை.சூப்பர் மார்க்கெட் போகும் போதெல்லாம் பெப்சி, கோக் என்று சாரதாவும், சேகரும் ஓடுவர். இப்போதெல்லாம் செல்லப் பிராணிகள் உணவுகள் குவிந்திருக்கும் பகுதிக்குத்தான் பாமாவையும், கையைப் பிடித்து அழைத்துச் சென்றனர்.சாரதா வேலைக்காக இடம் பெயர்ந்ததும் தான், பாமாவிற்கு வெறுப்போ, பயமோ ஏதோ சொல்ல முடியாத உணர்ச்சி அதிகரித்தது. கிவியைப் பிரிந்து போகிறோமே என்று தான் சாரதா அதிகம் வருத்தப்பட்டது போல பாமாவிற்கு தோன்றியது. பாமா பின் துள்ளி குதித்து கிவி வரும்போதுதான், அவளுக்கு மேலும் சங்கடமாயிற்று.ஒரு வருடத்தில் கிவியிடம் நல்ல வளர்ச்சி! சேகரும் வெளியூருக்கு இன்ஜினியரிங் படிக்கச் சென்று விட்டான். ஏதோ, சித்தியிடம் மூத்த மனைவியின் குழந்தை இருப்பது போல, கிவி, பாமாவையே பார்த்துக் கொண்டிருக்கும். வெறுமையில் குழந்தைகளையே நினைத்துக் கொண்டிருந்தபோது தான், சாரதாவிடமிருந்து போன். அடிக்கடி பேசுபவள்தான். அன்னிக்கு என்னவோ பெரிய மனுஷி போல் பேசினாள்.''அம்மா... கிவியோட காலம்பற வாக்கிங் போங்க! கொஞ்சம் புத்துணர்ச்சி கெடைச்ச மாதிரி இருக்கும். உங்களுக்கும் கொஞ்சம் உடம்பு ஆரோக்கியத்தைப் பாத்துக்கிற வயது வந்தாச்சு, பி.பி., செக் செய்துக்கணும். கிவிக்கு, கழுத்தில ஒரு சங்கிலி போட்டுடுங்க. அதுக்குரிய உணவு எல்லாம் எங்க கிடைக்கும்ன்னு உங்களுக்கு இப்ப தெரியும்,'' என்றாள் சாரதா.'இவள் என்ன எப்பப் பாத்தாலும், கிவியை பத்தியே பேசறா...' ரொம்ப நேரம் யோசித்துக் கொண்டிருந்தாள் பாமா.கொஞ்ச நேரத்தில் சேகரும், மொபைலில் அழைத்தான். விடுதி சாப்பாடு, படிப்பு, ராகிங் பற்றி ஒரு நிமிஷம்தான். மத்தபடி கிவியை பற்றித் தான் பேச ஆரம்பித்தான்.''நீங்க ரெண்டு பேருமே என்னை பத்தியே விசாரிக்கல. கிவியை பத்தித் தான் அதிகம் கேக்கறீங்க... என்ன ஆச்சு?''சேகர் குரல் கொஞ்சம் கீழே இறங்கியது; உணர்ச்சிவசப்படுவதும் புரிந்தது.''அம்மா... அப்பா போனப்பறம், சாரதாவும், நானும் ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்தப்ப, நீங்க ராத்திரி எப்படி பயப்படுவீங்கன்னு பார்த்திருக்கோம். எங்களுக்குத் தெரியக் கூடாதுன்னு மறைச்சிருந்திருக்கலாம். வீட்டுக் கதவோட நம்ம பெட் ரூம் கதவையும் தாழ்ப்பாள் போடுவீங்க... சாரதாவும் வெளிய போயாச்சு. எனக்கும் ஹாஸ்டல் வாசம் தான்னு தெரியும். <உங்களுக்குத் துணை வேண்டாமாம்மா? அதுக்குத்தான் இந்த மாதிரி ஏற்பாடு செய்தோம். அதுவுமில்லாம, நீங்க எப்பப்பாரு எங்களையே நெனைக்கலாம். வீட்டில கிவி மாதிரி, ஒரு செல்லப் பிராணி இருந்தா, உங்களோட வேலையத் தவிர, வேறு மாறுதலும் கிடைக்கும் இல்லையா? எங்க ரெண்டு பேருக்கும் உங்களப் பத்திய கவலை இருக்காதா, சொல்லுங்க.''கேட்கவே நெகிழ்ச்சியாக இருந்தது. உண்மைதான். முன்பெல்லாம் இருட்டினாலே பாமாவிற்கு ஒரு அச்சம் படரும். சாரதா பெரியவளானதும் பயம் அதிகரித்தது. இப்போது கிவி இருந்ததாலோ, என்னவோ தனியாக இருந்தாலும், மனக்கிலேசம் இல்லை. மனதில் பய உணர்ச்சியும் எழவில்லை.''எங்களோட தம்பி காதில் போனை வையுங்கம்மா.''சேகர் என்ன சொல்கிறான் என்று பாமாவிற்கு முதலில் புரியவில்லை. பின்னர் தான் சட்டென்று தெளிவானது.வாய்ப் பேச்சும், தொப்புள் கொடியும் மட்டும் தான் பாசப்பிணைப்புகளைத் தருமா என்ன?''வா... உன்னோட அண்ணா பேசறான் பாரு,'' கிவியைப் பக்கத்தில் அழைத்தாள். எஜமானியின் முதல் அன்பான அழைப்பைக் கேட்டு, மூச்சிரைக்க பாய்ந்து வந்து நின்றது கிவி. போனை, அதன் காதில் வைத்தாள்.கிவியின் செவிகள் விறைத்து நின்றன.***ஜி. குமார்