உள்ளூர் செய்திகள்

குடும்ப பாரம் தீர்க்கும் மாணவன்!

சமீபத்தில், என் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அத்தெருவில், காலை, 6:00 மணியளவில், பள்ளிச்சீருடை அணிந்த, 16 வயது சிறுவன் ஒருவன், சைக்கிளில், சத்தம் போட்டு, கீரைக்கட்டு விற்றுக் கொண்டிருந்தான். அவனிடம் பேச்சுக் கொடுத்த போது,'பத்தாம் வகுப்பில், 463 மதிப்பெண்கள் எடுத்தேன்; மேற்கொண்டு படிக்க வைக்க, எங்க வீட்ல வசதியில்ல. அதனால, ஏதாவது வேலை செய்தபடி படிக்க, கீரை வியாபாரம் சரியா இருக்கும்ன்னு தோணுச்சு. 'அதிகாலை, 5:00 மணிக்கு எழுந்து, மார்க்கெட்டுக்கு போய், கீரை கட்டுகளை வாங்கிட்டு வருவேன்; ஒரு கட்டுக்கு, ஒரு ரூபாய் முதல், இரண்டு ரூபாய் வரை லாபம் கிடைக்கும். பள்ளி செல்ல வேண்டியிருப்பதாலும், கீரைக்கு, நியாயமான விலை சொல்வதாலும், யாரும் என்னிடம் பேரம் பேசி, நேரத்தை வீணடிக்க மாட்டாங்க. எட்டு மணிக்குள், வியாபாரத்தை முடிச்சு, வீட்டுக்கு போய், சாப்பிட்டு, அப்படியே ஸ்கூலுக்கு போயிடுவேன்.'ஒருநாளைக்கு, 150 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். வீட்டு செலவுக்கு மாதந்தோறும், 1,500 ரூபாய் கொடுத்து, மீதி பணத்தை, என் வங்கி கணக்கில், சேமித்து வர்றேன். பிளஸ் 2 முடிச்ச பின், உள்ளூர் கல்லூரியில் சேர்ந்து, இந்த வியாபாரத்தை பார்த்தபடியே, பட்டப்படிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளேன்...' என்றான். அவனை பாராட்டி விட்டு வந்தேன்.—ந.சக்திவேல், ஸ்ரீவில்லிபுத்தூர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !