உள்ளூர் செய்திகள்

சிலுக்கு ஸ்மிதா! (10)

மலையாளம், தமிழ், கன்னடம், ஹிந்தி படங்களுக்கு பிறகு தான், தெலுங்கு படங்களில் நடிக்க, சிலுக்குக்கு வாய்ப்பு கிடைத்தது. அலைகள் ஓய்வதில்லை தெலுங்கு பதிப்பான, சீதா கோக சிலுகா படத்திலும், அண்ணி வேடத்தில் நடித்து, நல்ல வரவேற்பை பெற்றார்.தமிழை விட தெலுங்கில், கூடுதல் கவர்ச்சியுடன் நடித்தார். இதனால் தான் கடைசி வரை, சிலுக்குக்கு, தெலுங்கில் வரவேற்பு குறையவே இல்லை.அன்றைய தெலுங்கு பட முன்னணி கதாநாயகர்கள், தாசரி நாராயண ராவ் போன்ற பிரபல இயக்குனர்கள் என, அனைவர் படங்களிலும் நடித்தார். தமிழை விட, தெலுங்கில் ஒரு கதாநாயகியாக ஆந்திர மக்கள் தன்னை ஏற்றுக் கொண்டனர் என்றே நம்பினார்.தெலுங்கில், என்.டி.ராமாராவுக்கு இணையான புகழில் வாழ்ந்தவர், ஜோதிலட்சுமி. தனக்கு முன் புகழ் பெற்றிருந்த எந்த கவர்ச்சி நடிகையையும் பின்பற்றாமல் நடித்ததால், தெலுங்கிலும், ஜோதிலட்சுமியை காட்டிலும் வரவேற்பு இருந்தது, சிலுக்குக்கு. அவரது தாய்மொழியாக இருந்ததால், கூடுதல் கவனம் செலுத்த முடிந்தது.என்.டி.ராமாராவ், ஆந்திர முதல்வராக ஆவதற்கு முன், வெளி வந்த படம், நா தேசம். அதில், கவர்ச்சி நடனம் ஆடினார். குறுகிய காலத்தில், சினிமாவில், சிலுக்கு போல் வெற்றிகரமாக பணம் சம்பாதித்தவர்கள் மிக சொற்பம். நான், நீ என்று போட்டி போட்டு, தென் மாநில பட முதலாளிகள் சிலுக்கை நடிக்க வைத்திருக்கின்றனர்.கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து விட்ட போதிலும், தம்மால், சினிமாவில் சாவித்திரி போல் பேர் வாங்க முடியவில்லையே என்கிற ஆதங்கம் அதிகமாகவே இருந்தது, சிலுக்குக்கு.'மற்ற கதாநாயகியரை விட, நான் எந்த விதத்தில் குறைந்து போனேன்... மக்கள் விரும்பா விட்டால், எனக்கு இந்த பேரும், புகழும் கிடைத்து இருக்குமா...' என்றெல்லாம் வெளிப்படையாகவே புலம்ப ஆரம்பித்தார்.இந்நிலையில் தான், ஒரு தவறான முடிவுக்கு வந்தார்.'எனக்கு மிகப்பெரிய மார்க்கெட் இருக்கிறது. இனி, நம்மை வைத்து மற்ற தயாரிப்பாளர்கள் சம்பாதித்தது போதும்; நம் செல்வாக்கை, நாமே காசு பண்ணலாம்...' என்று, சொந்த படம் தயாரிக்க முடிவெடுத்தார்.கன் பைட் காஞ்சனா மற்றும் ரிவால்வர் ரீட்டா மாதிரியான, 'லேடி ஜேம்ஸ் பாண்டு'களாக, விஜயலலிதா, ஜோதிலட்சுமி போன்றவர்களின் நடிப்பை ரசிப்பர், ஆந்திர மக்கள்.லேடி ஜேம்ஸ்பாண்டு என்ற படத்தில், 'ஆக் ஷன்' நாயகியாக நடித்துள்ளார், சிலுக்கு. புன்னமி ராத்திரி என்ற தெலுங்கு படத்திலும், அவர் தான் கதாநாயகி. இப்படி, 'ஆக் ஷன்' நாயகியாக நடிப்பதற்காக, மோட்டார் பைக், குதிரையேற்றம் போன்றவற்றை கற்றுக்கொண்டார். சுப்புராஜ் என்ற தயாரிப்பாளர் தயாரித்த இந்த படங்கள், வசூலை வாரித் தந்தன.ஆந்திர மக்களின், ஆபத்பாந்தவியாக நடித்து, ஏகப்பட்ட, 'ஹிட்'களை கொடுத்தார், விஜயசாந்தி. அவரை தேடி போகிறவர்கள், தன்னை கதாநாயகியாக தேடி வர மாட்டார்கள் என்று புரிந்தது, சிலுக்குக்கு. தானே தயாரிப்பாளரானார்; வீர விகாரம் என்ற பெயரில், ஒரு படத்தை, தெலுங்கிலும், மலையாளத்திலும் ஒரே நேரத்தில் தயாரித்தார்.படம் வாங்க வந்த விநியோகஸ்தர்களிடம், தானே லாபம் சம்பாதிக்கும் பேராசையில், சொந்த வெளியீடு என்று கூறி அனுப்பி விட்டார். வீர விகாரம் படம், படு தோல்வி அடைந்தது.சிலுக்கு படம் எடுத்த கதையெல்லாம், தமிழ் சினிமா உலகில் பெரிதாக அலசப்படவே இல்லை. தமிழில், அவர் கதையே முடிந்து விட்டிருந்தது. மும்பையிலிருந்து இறக்குமதியான கதாநாயகியர், கவர்ச்சி களத்தில் குதித்தனர். இதனால், 'கவர்ச்சி ஆட்ட நடிகையர்' என்ற இனமே தேவையின்றி போனது.அப்போது, தமிழகம், குஷ்புவுக்கு மாறியிருந்தது.தொலைத்த இடத்தில் தானே தேட வேண்டும். தெலுங்கில், பிரேமன்ச்சி ச்சூடு என்று, இன்னொரு படம் தயாரித்து, நடித்தார், சிலுக்கு. பல போராட்டங்களுக்கு பின் வெளிவந்து, படுதோல்வி அடைந்தது.அப்படியும், சிலுக்கின் ஆசை அடங்கவில்லை. மலையாளத்தில், பெண் சிங்கம் என்றொரு படம் தயாரித்தார். படம் வெளியானதாகவே தெரியவில்லை. தெருவிற்கே வந்து விட்டார், சிலுக்கு. சினிமா தொழில், வெளியே பார்க்க தான் வெளிச்சம் காட்டும். உள்ளே போய் விட்டால் புதை குழி தான் என்பதை, சிலுக்கு புரிந்துகொள்ள, சொந்த பட அனுபவங்கள் உதவின, உணர்த்தின. வெளியே தலை காட்டவே முடியவில்லை.திரும்பிய பக்கமெல்லாம் கடன்காரர்கள் தொல்லை. விரும்பி பார்த்த பைனான்சியர்கள் எல்லாம் திரும்பி பாராமல் சென்றனர். அப்போதும், எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்று நினைக்கவே இல்லை.இதயம் மட்டும் தான், துாள் துாளாக நொறுங்கி போனது. கால்கள் மிச்சம் இருக்கின்றன என, அறிவு சொல்லிற்று. வெளிநாடுகளில், கலை நிகழ்ச்சிகளில் ஆடினார். 14 மாதங்களுக்கு மேல் அஞ்ஞான வாசம்.சித்ராலயா கோபு துவங்கி, ஆர்.பார்த்திபன், வசந்த் என்று பலரிடம், உதவி இயக்குனராக வளர்ந்தவர், ராஜ்கபூர். 'சிவாஜி புரொடக் ஷன்ஸ்' அவரை இயக்குனராக்கியது. பிரபு, கனகா நடித்த, தாலாட்டு கேட்குதம்மா படத்தில் நடிக்க, சிலுக்கை தேடி வந்தார்.'அம்மா... ஒரு நல்ல வேஷம், டாக்டர் வேஷம், நீங்க நடிச்சா தான் சரியா வரும். படம் நிக்கும்...' என்றார், ராஜ்கபூர்.தமிழில், கேரக்டர் மட்டுமே செய்ய முடிவெடுத்து, கவர்ச்சி நடனத்தை அறவே நிறுத்தியிருந்த நேரம் அது. மனைவி வந்த நேரம் படத்தில், காமெடியனுக்கு ஜோடியாக நடிக்க, பணம் அதிகமாக தருவதாக சொல்லி, கே.ஆர்.கங்காதரனே, சிலுக்கிடம் பேசினார். முடியவே முடியாது என்று மறுத்தார், சிலுக்கு. 'கவர்ச்சி நடனம் வேண்டாம். கதையோடு சேர்ந்த நல்ல கேரக்டர்கள் தான் வேண்டும்...' என்று பிடிவாதம் பிடித்தார். — தொடரும்.பா. தீனதயாளன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !