உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம் - சகுந்தலா கோபிநாத்

அன்புள்ள அம்மாவுக்கு—நான் கவுரவமான குடும்பத்தை சேர்ந்தவள். காதலித்து திருமணம் செய்ததால், என் உறவினர்கள் யாரும் என்னோடு பேசுவதில்லை. எனக்கு, 10 வயதில் ஒரு பெண் இருக்கிறாள். நம்பி வந்தவரிடம், பல வகையில் கொடுமைகளை அனுபவித்தேன். அவர் ஒரு விபத்தில் இறந்து விட்டார். நானும், என் மகளும் தனியாக இருந்தபோது, தெரிந்த ஒரு குடும்பத்தினர் மூலமாக, வக்கீல் ஒருவர் அறிமுகமானார். அவருக்கு,  50 வயது இருக்கும். தாழ்த்தப்பட்ட குலத்தை சார்ந்தவர். அவர் மனைவி வங்கியில் வேலை பார்ப்பதாகவும், அவர்களுக்கு குழந்தை இல்லை என்றும் சொன்னார். அவர், என்னைப் பற்றிய முழு விவரமும் தெரிந்து கொண்டார். 'உனக்கு எந்த ஆதரவு மில்லையே... எனக்கும் குழந்தை இல்லை. என்னை ஏமாற்றி, ஒரு பிசாசை என் தலையில் கட்டி விட்டனர். திருமணமானதிலிருந்து நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீ என்னை திருமணம் செய்து கொள். இனிமேல் இவள் என் மகள். இவள் படிப்பு, திருமணம் எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன். நீ எதற்கும் கவலைப்படாதே. கடைசி வரை நான் உனக்கு ஆதரவாக இருப்பேன். என்னை நம்பு...' என, ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி, சத்தியம் செய்தார்.ஏற்கனவே ஒருவரிடம் நான் பட்ட துன்பங்களைச் சொல்லி, 'எனக்கு யாரும் வேண்டாம். எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள். சட்டப்படி நீங்கள் என்னை திருமணம் செய்ய முடியாதென, வக்கீலாகிய உங்களுக்கு தெரியாதா? எங்களை விட்டு, உங்கள் குடும்பத்தை கவனியுங்கள்...' எனச் சொல்லி, அவரிடமிருந்து விலக முயற்சித்தேன்.ஆனால், அவர் விடுவதாக இல்லை. தினமும் ஐந்து முறை போன் செய்து, தன் மனைவியை விட்டு பிரிந்து வருட கணக்காக தனிமையில் இருப்பதாகவும், உன் மீது உயிரையே வைத்திருக்கிறேன். நீ என்னை ஏற்றுக் கொள்ளாவிட்டால், உயிரை விட்டு விடுவேன். தன் மனைவியை விவாகரத்து செய்ய முயற்சித்து கொண்டிருப்பதாகவும், அவர் மாமியார்  வீட்டாரை பற்றியும், மனைவி செய்த கொடுமைகளையும் சொல்லி அழுது, என்னை ஏற்றுகொள் எனக் கெஞ்சி அழுதார். நானும், அவர் பேச்சை நம்பி பரிதாபமடைந்தேன். அதனால், இனிமேல் இவர்தான் நமக்கு என, அவர் விருப்பத்திற் கெல்லாம் கட்டுப்பட்டேன். தினமும், என் வீட்டுக்கு வந்து போவார். பிறகு வருவது குறைந்தது.  அதன்பின் சுத்தமாக வருவதேயில்லை.மாத கணக்கில் போன் செய்து, அழுது நொந்து போய், ஏமாற்றமும், வேதனை யும் தாங்க முடியாமல், தற்கொலை செய்ய துணிந்தேன். என் மகள் அழுவதை பார்த்து, மனதை மாற்றிக் கொண்டேன். அவரிடம் கேட்டால், 'ஏதேனும் ஹாஸ்டலில் உன் மகளை சேர்த்து விட்டு, நீ ஏதேனும் ஆசிரமத்தில் போய் சேர்ந்து விடு அல்லது வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்...' என்றார். இன்னும் மனதை புண்படுத்தும் வகையில் ஏதேதோ பேசினார்.வருட கணக்கில் வராமல் இருந்தவர், தற்போது சில மாதங்களாக அதே உருக்கம், கனிவு, பரிவு, பாசம், ஆசை என்று பேசிக்கொண்டு வர ஆரம்பித்திருக்கிறார். இன்னும் அந்த வேதனையிலிருந்து மீள முடியாமல் இருக்கிறேன். அவர் எங்களுக்கு எதுவும் செய்வதில்லை. ஆதரவாக பேசி, அவர் வெறியை மட்டும் தீர்த்துக் கொண்டார். 'இனிமேல் இங்கு வராதீர்கள்...' என எவ்வளவோ திட்டி, அழுது துரத்தினேன். ஆனால், அவர், 'அந்த  மனைவியோடு தான் இருக்கிறேன்; நிம்மதி இல்லாமல் இருக்கிறேன். நீ ஒருத்தி தான் எனக்கு ஆறுதல். நீயும் துரத்தினால், நான் எங்கு போவேன்?' என காலை பிடித்து அழுகிறார். எவ்வளவு திட்டினாலும் கோபப்பட மாட்டார்; சிரித்துக் கொண்டே இருப்பார். அவரிடமிருந்து விலகி, நாங்கள் நிம்மதியாக இருக்க ஒரு வழி சொல்லுங்கள். அவர் என்னை திருமணம் செய்வதாகச் சொல்லி ஏமாற்றுகிறார். அவரால் எந்த பிரயோஜனமும் இல்லை.தற்போது அவர் மனைவியோடு தான் இருக்கிறார். ஒரு அவசர, ஆபத்துக்கு கூட போன் செய்ய முடியாது. மனைவியுடன் இருக்கும் போது, போன் ஆப் செய்து தான் வைத்திருப்பார்.— இப்படிக்கு, உங்கள் அன்பு சகோதரி.அன்புள்ள  மகளுக்கு—உன் கடிதம் கிடைத்தது. கடிதத்தில் உன் வயதையோ, படிப்பையோ, பணியையோ நீ குறிப்பிடவில்லை. உனக்கு வயது 32, 35 இருக்கக்கூடும். நீ காதலித்து, திருமணம் செய்து கொண்ட ஆண், மோட்டார் தொடர்பான பணியில் இருந் திருப்பார். உனக்கு ஒரு பெண் குழந்தையைக் கொடுத்துவிட்டு, அவர் ஒரு விபத்தில் இறந்து போனார். ஆம் ஐ கரக்ட்?குடும்ப நண்பர் மூலம், 50 வயது வக்கீல் உனக்கு அறிமுகமாகியிருக்கிறார். பொண்டாட்டி ராட்சசி. அள்ளிக் கொஞ்சுவதற்கு பெண் குழந்தை இல்லை, எனக்கு பின் என் புகழை பரப்ப, ஒரு ஆண் வாரிசு இல்லை என்று தான், பெண்களை பிடிக்க, பெரும்பாலான ஆண்கள் தூண்டில் வார்த்தைகள் வீசுகின்றனர். நீதிமன்றத்தில், கட்சிக்காரருக்காக பயன்படுத்த வேண்டிய வார்த்தை ஜாலங்களை வைத்து, உன்னை மயக்கி விட்டார். காமம் இறைஞ்சும் பிச்சைக்காரனுக்கு, இரக்கப்பட்டு பிச்சை போட்டு விட்டாய். வந்தான் - உன்னிடம் இன்பம் துய்த்தான் - காணாமல் போனான். மீண்டும் இன்பம் துய்க்க வந்திருக்கிறான். இந்த சூழ்ச்சிகாரனிடமிருந்து முழுதாய் விடுபடு. இவர்கள் காம தகனத்துக்காக எதையும் செய்வர். உன் மகள், இன்னும் நான்கைந்து வருடங்களில் பெரிய மனுஷி ஆகி விடுவாள். இந்தக் கழுகின் கண்கள் அங்கும் பாயலாம் அல்லது வக்கீல் வந்து போவது, விடலைப்பெண் மனதில் நஞ்சை கலக்கக்கூடும். சற்றே துப்பறிந்து, வக்கீல் மனைவியின்  மொபைல், எண்ணை கைப்பற்றி, அவரிடம் பேசிப் பார். வக்கீல் மனைவி நல்லவராகவே இருப்பார். வக்கீலுக்கு மகனோ, மகளோ இருந்து, ஹாஸ்டலில் சேர்ந்து படித்துக் கொண்டிருப்பார். இப்படி, வெளியில் இரை தேடி அலையும் ஆண்களுக்கு, எய்ட்ஸ் போன்ற ஆட்கொல்லி நோய் இருக்க வாய்ப்புண்டு. தவிர, வக்கீல் உன்னை, தன் நண்பர்களுக்கு இரையாக்கி விடும் சந்தர்ப்பங்களும் ஏற்படும். அடுத்து நீ செய்ய வேண்டியது என்ன தெரியுமா குட்டிம்மா? கவனமாய் கேள் —அடுத்து, அந்த வக்கீல் எனும் திருட்டுப் பூனை வந்தால், ஈவு இரக்கம் காட்டாது, அடித்து விரட்டு. மீறி வந்தால், அவரது மனைவியிடமும், பார் கவுன்சிலிலும் புகார் செய்வேன் என மிரட்டு. மனைவி ராட்சசி என்பது உண்மை என்றால், அதையே காரணம் காட்டி விவாகரத்து பெற்று வா... அப்போது, திருமணம் செய்து கொள்ளலாம்... என, யோசனை கூறு.அவரது கிளையன்ட் நம்பர்களுக்கு, அவரது துர்நடத்தை பற்றி எம்.எம்.எஸ்.,கள் அனுப்பி, 'கச்சேரிக்கு போகாத வக்கீல் ஆக்கி விடுவேன்...' என போட்டு தாக்கு. உன் மீது வக்கீலுக்கு உண்மையான அன்பிருக்குமானால், அவரது அசையா சொத்துகளை, உன் மகள்  பெயருக்கு தானமாய் எழுதச் சொல். இத்தனையும் மீறி, வீட்டு கதவை தட்டினால், 'போலீசில் புகார் செய்வேன்...' எனக் கூறு. இந்த அடுக்கடுக்கான அதிர்ச்சி வைத்தியங்களில், பின்னங்கால் பிடறியில் இடற வக்கீல் ஓடி விடுவார். உன் மகளின் படிப்புக்கும், எதிர்கால வாழ்க்கைக்கும் தேவையான பொருளாதார பாதுகாப்பை செய்து முடித்துவிட்டு, நீ மறுமணம் செய்துகொள். அந்த மறுமணம், இருட்டில் பிடித்த அவசரக் கொழுக்கட்டையாக இருக்கக் கூடாது. மறுமணம் செய்து கொள்ளும் முன், மகளிடம் சம்மதம் பெறு. உன் காதல் திருமணத்தால், பெற்றோர், உற்றோரை பிரிந்து நிற்கிறாய். அவர்களிடம் சமாதானக் கொடிகாட்டி, பாவ மன்னிப்பு பெறு.அப்படி சமாதான மானால், உன் மகளை, உன் சகோதரிகள் தத்தெடுத்து, உன் மறுமணத்தை எளிதாக்கட்டும். உன் மறுமணம், உனக்கு சாந்தியையும், சமாதானத்தையும் தரட்டும். நம்பாதே, நம்பாதே பெண்ணினமே... பிற மகளிரிடம் கட்டின மனைவியை குறை கூறும் ஆண்களை நம்பாதே... நம்பாதே! திருமண பந்தம் மீறிய உறவுகள், உலகின் அனைத்து உயிர் கொல்லி நோய்களையும் விட, அபாய கரமா னவை! வெறுத்து ஒதுக்கு... ஒதுக்கு!— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !