மரகத தீவில் ஆறு நாட்கள்! (4)
சிகிரியா என்ற இடத்தில், 500 மீட்டர் உயரமுள்ள மலை மீது அமைந்துள்ள அரண்மனையும், அதை எளிதில், எதிரிகள் அணுகாத விதத்தில் செய்யப்பட்டிருந்த அகழி, குறுகிய வழிகள் போன்ற அமைப்புகளும், அந்நாட்டு மன்னர்களின் புத்திசாலித்தனத்தை விளக்குவதாக உள்ளது. செங்குத்து மலை மீது, எளிதில் ஏற முடியாத இடத்தில், பெரிய அரண்மனையை அமைத்து, நாட்டை நிர்வாகம் செய்து வந்துள்ள மன்னர்களின் பெருமையை, சிகிரியா பாறைகளும், வனங்களும் இன்னமும் சொல்லிக் கொண்டுள்ளன.சிங்களர்களிடம் கேட்டால், 'சிகிரியா மலை, சிங்கள மன்னர் அமைத்தது...' என்கின்றனர். தமிழர்களோ, 'அது, தமிழ் மன்னர் கட்டியது; வரலாற்றை திரித்து கூறி, சிங்களர்கள் பெருமை தேடிக் கொள்கின்றனர்...' என்கின்றனர். எனினும், அதிகாரப்பூர்வமாக, சிகிரியா மலை, சிங்கள மன்னர் கட்டியது தான்!புத்த மத துறவிகள், அங்குள்ள குகைகளில் தவம் செய்துள்ளனர். அவர்களே, சிக்கலான வழித்தடம் அமைத்து, எதிரிகள், அரண்மனையை அணுகாத வகையில், அற்புதமாக வடிவமைத்தனர் எனவும் சொல்கின்றனர்.சிங்கம் படுத்திருப்பது போன்ற வடிவில் உள்ள, அந்த மலையின் அடிவாரத்திலிருந்து, சிறிய படிகள் வழியாக மேலேறி செல்ல வேண்டும். செல்ல செல்ல, செங்குத்தான படிகள் வருகின்றன. நல்ல உடல் நலம் உள்ளவர்களால் தான், அந்த மலையில், சிறிய படிகளில் ஏற முடியும்.கை பிடித்து ஏற, ஆங்காங்கே பிடிமானம் இருந்தாலும், உயரம் செல்ல செல்ல பயமாகத்தான் இருந்தது. சிங்கத்தின் கால்கள் போன்ற, வெட்ட வெளி பகுதியில், சிறிது நேரம் ஓய்வெடுக்க வசதி உள்ளது. அதன் மேல், செங்குத்தாக, இரண்டு வளைவுகளுடன், 400 - 500 இரும்பு படிக்கட்டுகளில் ஏறிச் செல்லும் போது, நான்கு புறமும் அடர்ந்த காடும், ஆளைத்தள்ளும் விதத்தில் வீசும் காற்றும், அச்சத்தை ஏற்படுத்துகின்றன.மேலேறி சென்றால், அந்த கால மன்னர் அரண்மனையின் அடித்தள அமைப்பை பார்க்க முடிகிறது. எனினும், சுற்றுலா பயணியருக்கு ஏதேனும் ஆபத்து என்றால், அந்த உயரத்திலிருந்து எப்படி காப்பாற்றுவர் என, எண்ணும் போது, பயம் எழுகிறது.திரிகோணமலை... தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும், கிழக்கு மாகாண பகுதி. தமிழகத்தின் சிறிய நகரம் போல காட்சியளிக்கும் இது, இயற்கையான துறைமுகம். மூன்று புறமும் கடலால் சூழப்பட்ட சிறிய நிலப்பரப்பில், டச்சுக்காரர்களின் கோட்டை உள்ளது. அதன் வழியே சென்றால், பிரசித்தி பெற்ற, கோனேஸ்வரம் சிவன் கோவில் உள்ளது.தரை மட்டத்திலிருந்து, 100 மீ., உயர, பிரமாண்ட பாறையில், பல ஆயிரம் ஆண்டு பழமையான இந்த கோவிலை, டச்சு நாட்டினர் தகர்த்துள்ளனர். அதன் பின், இப்பகுதி தமிழ் மக்கள், அரும்பாடு பட்டு புனரமைத்து, அழகுற பராமரித்து வருகின்றனர். முகப்பில், பெரிய சிவன் சிலை உள்ளது. கோவில் அமைந்துள்ள பாறையிலிருந்து கீழே பார்த்தால், கடலில் செல்லும் படகு, சிறிய தீப்பெட்டி போல காட்சியளிக்கிறது. ராவணன் வணங்கிய பெருமைக்குரியது இந்த கோவில் என, புராண கதைகள் கூறுகின்றன.இரு தனித்தனி பாறைகளை இணைத்து, கோவிலுக்கு செல்லும் பாதை உள்ளது. ராவணன், தன் பலத்தை காட்ட, வாளால் பாறையை வெட்டியதில், பாறை இரு துண்டுகளாக ஆனதாக கூறுகின்றனர். அதன் பின் தான், 'ஓ... இது ராவணன் பூமியல்லவா...' என்ற நினைவு வந்தது.உள்நாட்டு போரால், சொல்லொண்ணா துயரத்தை சந்தித்த இந்த நகரில், இலங்கை கடற்படை தளம் உள்ளது; பாதுகாப்பு கெடுபிடி அதிகம். நகரில் உள்ள பத்ரகாளி அம்மன் மற்றும் விநாயகர் கோவில்கள், அருமையாக பராமரிக்கப்படுகின்றன. கோவிலின் முக்கிய நிர்வாகிகள், சென்னை, தி.நகரில் வசிக்கின்றனராம்!பத்ரகாளி அம்மன் கோவிலின் மேல் விதானத்தில், தொங்கியபடி உள்ள சிமென்ட் சிலைகள், கோவில் முழுக்க, பல நிறங்களில் ஜொலிக்கின்றன.அங்குள்ள ஓட்டல்களில், அருமையான முறை பின்பற்றப்படுகிறது. உணவு பரிமாறும் ஓட்டல் ஊழியர்களே, எச்சில் தட்டை எடுத்தால் நன்றாக இருக்காது என்பதால், அங்கு, உணவு மேஜைக்கு கீழே, பிளாஸ்டிக் கூடையை வைத்துள்ளனர். சாப்பிட்டு முடித்ததும், சாப்பிட்டவரே தட்டு அல்லது சாப்பிட வழங்கப்படும் தட்டுடன் கூடிய பிளாஸ்டிக் ஷீட்டை அதில் போட வேண்டும்.அது போல, ஓட்டலில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீசில், 'வாடிக்கையாளர் விரும்பும் எண்ணிக்கையில் உணவு பண்டங்கள் பரிமாறப்படும்' என, எழுதி இருந்தது. அது குறித்து, ஓட்டல் மேலாளர், ரவியிடம் கேட்ட போது, 'இந்திய நகரங்களில், சில ஓட்டல்களில், குறைந்தபட்சம், நான்கு இட்லி வாங்க வேண்டும்; இரண்டு பூரி; மூன்று சப்பாத்தி என்று கூறுவது போன்ற கட்டுப்பாடு இங்கு கிடையாது. ஒரு இட்லி கேட்டாலும் கொடுப்போம் என்பதற்காக, இந்த அறிவிப்பு...' என்றார்.இட்லி, தோசை, இடியாப்பம், புட்டு, புரோட்டா, சப்பாத்தி, பொங்கல் போன்றவை, டிபன் வகைகளாக விற்கப்படுகின்றன. அவற்றுக்கு தொட்டுக்கொள்ள, தேங்காய் சொதி, சட்னி, சாம்பார் வழங்கப்படுகிறது.திரிகோணமலையில் பார்க்கும் இடமெல்லாம், தமிழ் தான்.அங்குள்ள தமிழ் இளைஞர்களிடம் பேசிய போது, விடுதலை போரில் ஈடுபட்டு, திருந்தியவர்களுக்கு, அரசு அறிவித்த உதவிகள் இன்னமும் பலருக்கு சென்றடையவில்லை என்பதை அறிய முடிந்தது.அது போல, இப்போதைய தமிழ் தலைவர்கள், சிறுபான்மை தமிழர்களுக்கும், பெரும்பான்மை சிங்களர்களுக்கும் ஒற்றுமை ஏற்படுத்தும் எந்த முயற்சியையும் ஏற்படுத்தாமல், பிரிவினையை துாண்டும் விதத்தில் பேசியும், செயல்பட்டும் வருவதை அறிய முடிந்தது.வெள்ளையர்கள் பின்பற்றிய பிரித்தாளும் சூழ்ச்சியை, தமிழ் தலைவர்கள் சிலர், அரசியல் காரணங்களுக்காக, இப்போதும் பின்பற்றி வருகின்றனர் என்பதை அறிந்த போது, மனம் வேதனை அடைந்தது. தமிழகத்திலும் அது தானே, இப்போது பிரச்னை.மேலும், உள்நாட்டு போரின் போதும், போருக்கு பிறகும், நார்வே, ஸ்வீடன், பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர், இலங்கை தமிழர்கள். இவர்கள், சமூக வலை தளங்கள் மூலம், இலங்கையில் இருக்கும் தமிழர்களைத் துண்டிவிடுகின்றனராம்.சாதாரண பிரச்னையை கூட, சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து, தமிழர்களை கொந்தளிப்பாகவே வைத்திருக்கின்றனராம். இதனால், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அவ்வப்போது பாதிப்பு ஏற்படுகிறது என்றும், இங்குள்ள தமிழர்கள் வேதனைபடுகின்றனர்.- முற்றும்ஏ.மீனாட்சிசுந்தரம்