சவுண்டு பார்(ட்)டி!
அதிகாலை, 5:00 மணி.வாளி நிறைய தண்ணீர், துடைப்பம், கோல மாவு சகிதமாக தன் குடிசையில் இருந்து வெளியே வந்தாள், சுகந்தி.துடைப்பத்தை கையில் எடுத்தவள், பக்கத்து வீட்டு முற்றம் பெருக்காமல், தண்ணீர் தெளித்து கோலமிடாமல் இருந்ததை கண்டாள். 'கிழவிக்கு என்னாச்சு... வழக்கமா, எனக்கு முன்ன எழுந்து, முற்றத்தை தெளித்து, குப்பைகளை எல்லாம் என் குடிசைக்கு முன் தள்ளி, எங்கிட்டே வாங்கி கட்டிக்கும். நேற்றும், இன்னைக்கும் குடிசையை விட்டு வெளியே தலை காட்டலையே!'ஒருவேளை, 'கொரோனா' வந்து செத்து கித்து போயிடுச்சா... என்ன இருந்தாலும் போய் பார்த்து முடிவு பண்ணிடலாம்...' என எண்ணியவளின் மனதுக்குள், கோமதி கிழவியைப் பற்றி ஒரு சிறு போராட்டமே நடக்க ஆரம்பித்தது.கோமதி கிழவியின் பூர்வீகம், பண்டாரப்பட்டி கிராமம். வயது: 65. இளம் வயதிலேயே கணவனை இழந்தவள். ஒரே மகள், குடும்பத்துடன் பட்டணத்தில் இருக்கிறாள். ஊரில் கோமதி கிழவியின் பட்டப் பெயரே, சண்டைக்கார கிழவி.கிராமத்தில் இருக்கும் குழந்தைகள் முதல் இளைஞர்கள், முதியவர்கள் வரை, அவளிடம் யாரும் பேச்சு கொடுப்பதுமில்லை; அவள் இருக்கும் திசையை எட்டிப் பார்ப்பதுமில்லை. வயதான தாயை பட்டணத்தில் தன்னுடனேயே இருக்கச் சொல்லி, பலமுறை மகள் அழைத்தும் செல்லவில்லை, கோமதி.ரேஷன் கடையில் கிடைக்கும் உணவுப் பொருட்கள், தன் தோட்டத்தில் கிடைக்கும் காய்கறி, பழங்களை வைத்து சாப்பிடுவாள். கடனுக்காக எவரிடமும் கையேந்தாத பிடிவாதக்காரி. அவளின் பலம் மட்டுமல்ல, ஆயுதமே கோபமும், கோபத்தில் வரும் வார்த்தைகளும் தான்.சுகந்திக்கு தாய் - தந்தை இல்லை. இவள் புகுந்தகமாக வந்த ஊர், பண்டாரப்பட்டி. இந்திய ராணுவத்தில் பணிபுரிகிறான், கணவன். குழந்தை இல்லாதவள். கோமதி கிழவிக்கு நிகரான வாயாடி; சரியான ராங்கிக்காரி. அதுமட்டுமல்ல, கோமதி கிழவியோடு மல்லுக்கட்ட சுகந்தி தான் சரியான ஆள் என்பர். அதிகாலையில் முற்றத்தை பெருக்கி, கோலமிடப் போகும் சமயம் துவங்கும் சண்டை, இரவு ஊர் அடங்கும் வரை தொடரும். ஆனாலும், இருவருக்குள்ளும் ஒரேயொரு ஆச்சரியமான மறைமுகமான ஒற்றுமை மட்டும் உண்டு. இருவரும் ஊர்காரர்கள் முன் சண்டை போட்டாலும், தனிப்பட்ட முறையில் ஒருவரையொருவர் விட்டுக் கொடுப்பதில்லை. கிழவியைப் பற்றியும், தன்னைப் பற்றியும் தன் எண்ண கேமராவை சுழல விட்டவள், சகஜ நிலைக்கு வந்தாள். பின், வர்றது வரட்டும் பார்த்துக்கலாம் என்ற அசட்டு துணிச்சலுடன் கிழவி வீட்டு கதவை தட்டினாள். ''கிழவி... கிழவி...'' உள்ளேயிருந்து எந்தவித பதிலும் இல்லை. கொஞ்சம் பதட்டமாகி, குடிசைக்கு வலதுபுறமிருந்த ஜன்னலில் எட்டிப் பார்த்தாள்.காய்ச்சலில் நடு நடுங்கி, பிதற்றியபடி படுக்கையில் இருந்தாள், கிழவி.வீட்டு கதவு முன் வந்தவள், தன் பலங்கொண்டு மரக்கதவை எட்டி உதைக்க, கதவு கீழே விழுந்தது. கோமதியின் அருகே சென்று பார்த்தாள். கண்கள் சொருகிய நிலையில், உடல் நடுக்கத்தில் துாக்கி வாரிப் போட்டது. கை வைத்து பார்த்தாள். உடல் கொதித்தது.''இந்த வயசுல, உனக்கு அப்படி என்ன வறட்டு கவுரவம்... 'உடம்பு சரியில்லை கொஞ்சம் உதவி செய்'ன்னு என்னை கூப்பிட வேண்டியதுதானே... நானென்ன செத்தா போயிட்டேன், குத்துக் கல்லாட்டம்தானே இருக்கேன்.''கோமதியால் பேச முடியலை. மாறாக, அவள் கண்களில் இருந்து கண்ணீரே பதிலாக வந்தது.''சரி சரி... அழாதே... என் ஆத்தாவா இருந்தா பார்த்துக்க மாட்டேனா... டாக்டர்கிட்டே போகலாமா?''''வேண்டாம். என்னை, 'கொரோனா' நோயாளி ஆக்கிடுவாங்க,'' என, சன்னமான குரலில் சொன்னாள்.''இந்த வயசிலேயும் உயிர் மேல கிழவிக்கு ஆசையைப் பாரு... சரி... சரி, எனக்கு தெரிஞ்ச கை வைத்தியம் செய்யறேன்,'' என்றபடியே அடுப்பில் தண்ணீரை சுட வைத்து, நெற்றியில் பத்து போட்டாள். --''எதாவது சாப்பிட்டியா?''''இல்லை.''உடனே சமையலறையிலிருந்து அரிசியை எடுத்து, கஞ்சி செய்து கொடுத்தாள்.கஞ்சியை குடித்ததும், சற்று தெம்பு வந்தவளாய் உணர்ந்தாள், கோமதி. ஆனாலும், உடலில் நடுக்கம் மட்டும் நிற்கவில்லை. ''கிழவி... உன் வீட்ல பிராந்தி இருக்கா?'' கோபமாகவும், ஆச்சர்யமாகவும் சுகந்தியை பார்த்தாள், கோமதி.''கோவிச்சுக்காதே கிழவி... 'உடம்பு குளிர்ச்சியாகி, உதறலெடுத்தால், பிராந்தியை உடம்பு பூராவும் நல்லா அழுத்தி தேய்ச்சு, கொஞ்சம் குடிச்சா போதும். உதறல் நின்னுடும்'ன்னு என் புருஷன் சொல்லியிருக்காரு,'' என்றாள்.முறைத்தாள்.''சும்மா முறைக்காதே. சரி, வீட்ல தலைவலி தைலம் ஏதாவது வெச்சிருக்கீயா,'' என்றாள்.டிரங்க் பெட்டியை காட்டினாள்.பெட்டியை திறந்து தைலத்தை எடுத்து, கோமதியின் நெற்றி, கழுத்து, கை, உள்ளங்கால் வரை சூடு பறக்க தேய்த்தாள்.''போதும்மா.''''சரி, நீ துாங்கு. என் வீட்டு வேலையெல்லாம் முடிச்சுட்டு வர்றேன். வேப்பிலை போட்டு ஆவி பிடிச்சுடலாம்.''நன்றியுணர்வுடன் தலையாட்டினாள், கோமதி.ஐந்தாவது நாள், அதிகாலை...''ஏய் கிழவி, உடம்பு குணமாயிடுச்சுங்கற திமிரா... மறுபடியும் உன் வீட்டு குப்பையெல்லாம் என் வீட்டு முற்றத்துக்கு தள்ள ஆரம்பிச்சுட்டே பார்த்தீயா?''''ஏய்... உன் வீட்டு குப்பையெல்லாம் என் வீட்டு முற்றத்துல கிடந்தா, பார்த்துட்டு சும்மா இருக்க சொல்றீயா... அதான் தள்ளி விட்டேன்.''''சுகந்தி வீட்டு குப்பையெல்லாம் என் வீட்டுக்கு ஏன் தள்ளி விடறேன்னு நீ காற்று கூட சண்டை போடு; வீணா எங்கிட்டே வராதே. அன்னைக்கு நான் மட்டும் -உன்னை காப்பாத்தலைன்னா, இந்நேரம் நீ மேல போய் சேர்ந்திருப்பே. அதை ஞாபகத்துல வெச்சுக்கோ,'' என்றாள்.''ஏய்... இது வைரம் பாஞ்ச கட்டைடி. நீ காப்பாத்தலைன்னாலும், என்னை நானே குணப்படுத்தி இருப்பேன்டி.''''கிழிச்சிருப்பே... நாலு நாளா, நீ வாயைப் பொளந்துட்டு கிடந்த லட்சணத்தைதான் நான் பார்த்தேனே.'' ''நானாடி உன்னை கூப்பிட்டு, உதவி கேட்டேன்... நீயாத்தானேடி என்னை தேடி வந்தே.''இருவரது வாய்ச்சண்டையும் உச்சத்தை அடைந்த வேளையில், கோமதியின் வீட்டு வாசல் முன் ஒரு கார் வந்து நின்றது. இருவரும் சண்டையை நிறுத்தினர்.காரிலிருந்து கோமதியின் மகள் வள்ளியும், மாப்பிள்ளை, பேரன்களும் இறங்கினர். காரை விட்டு இறங்கியதுமே, தாயிடம் அழுகையுடன் ஓடி வந்த வள்ளி, ''அம்மா, உனக்கு இப்போ எப்படியிருக்கு?'' என்றாள்.''என் உடம்பு சரியில்லைன்னு எந்த சிறுக்கிடி சொன்னது?''''உனக்கு போன் பண்ணினப்ப, நீ எடுக்கலை; சுகந்தி தான் எடுத்தாள். அவதான் நீ படுத்த படுக்கையா இருக்கறதா, சொன்னாள். அதான் பயந்து போய் கிளம்பி வந்துட்டேன்மா.''''சின்ன காய்ச்சலுக்கு லேசா கண் அசந்ததை, இப்படித்தான் ஊர் பூரா, 'டமாரம்' போட்டு சொல்லுவீயா,'' என்றபடி மீண்டும் சுகந்தியிடம் சண்டைக்கு போனாள், கோமதி.''அய்யே... குடும்பத்தோட பெத்த புள்ளை வந்திருக்குன்னு சந்தோஷப்படுவீயா... நான் எங்கேயும் போகல; இங்கதான் இருப்பேன். நம்ம சண்டையை அப்புறமா வெச்சுக்கலாம், முதல்ல வந்தவங்களை போய் கவனி.''''என்ன திமிரா பேசறாள்ன்னு பாரு, வள்ளி.''''விடும்மா... வா உள்ளே போகலாம். உங்க சண்டையை அப்புறமா வெச்சுக்கங்க.''''அதுவும் சரிதான்,'' என்றபடியே, தன் பேரக் குழந்தைகளை கொஞ்ச ஆரம்பித்தாள்.வள்ளி வீட்டுக்கு புறப்படும் போது, ''சுகந்தி, நாங்க கிளம்பறோம். அம்மாவை பத்திரமா பார்த்துக்கோ. உன்னை நம்பிதான் விட்டுட்டு போறேன்,'' என்றாள்.''வள்ளி, உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா... வயசான காலத்துல, அம்மாவை கூட்டிட்டுப் போய் உன்னோட வெச்சுக்க வேண்டியதுதானே... கிழவியை இங்கே ஏன் தனியா விட்டுட்டு போறே?''''எவ்வளவோ வற்புறுத்தியும், எங்க கூட வரமாட்டேன்றாங்க, சுகந்தி.''''அது வேற ஒண்ணுமில்லை... உங்கூட வந்துட்டா, சண்டை போட ஆள் இருக்காதுல்ல, அதான் பயப்படுது. அது வாயும், கையும் சும்மா இருக்காதே.''''என் வாயைப் பார்த்தா சொல்றே... மகள் போனதும் உன் வாயை கிழிக்கறேன் பாரு,'' என்றாள், கோமதி. ''கொஞ்சம் பேசாம இரும்மா... சுகந்தி நல்ல பொண்ணு. அவளையாவது பகைச்சுக்காம இரு,'' என கூறி, தன் குடும்பத்தோடு கிளம்பினாள், வள்ளி.மகள் போன திசையை பார்த்து கண்கலங்கியபடி நின்றாள், கோமதி. ''ஏன் கிழவி... புள்ள மேல இவ்வளவு பாசத்தை வெச்சிருக்கீயே, வயசான காலத்துல அவ கூட போய், கடைசி காலத்தை கழிக்காமல், இங்கேயிருந்து ஏன் ஊர் மக்களோட உசிரை வாங்கிட்டு இருக்கே?'' கோமதியால் பேச முடியவில்லை.''இந்த கிராமத்துலேயும், உன் குடிசையிலேயும் என்ன புதையலைத்தான் வெச்சுருக்கீயோ... இப்படி கட்டி பாதுகாத்து அழுதிட்டிருக்கே. பெத்த புள்ளையை விடு; பேரப் பசங்க கூட இருந்து கடைசி காலத்தை கழிக்கணும்ன்னு கூட உனக்கு தோணலையே... சரியான கல்நெஞ்சுக்கார கிழவி நீ,'' கோபத்தில் திட்டினாள். ''என் மகள் கூடயிருக்க எனக்கும் ஆசைதான்ம்மா.''''பின்னே ஏன் போகலை கிழவி?''''உனக்காகத்தாம்மா...'' என்றதும் அதிர்ந்தாள்.''எ... என்னது எனக்காகவா, என்ன லுாசு மாதிரி உளர்றே?''''உண்மையைத்தாம்மா சொல்றேன். நீ இங்கே வந்ததுலேயிருந்து நாம மாமியார்- - மருமகளாட்டம் சண்டை போட்டுட்டுத்தான் இருக்கோம்.''உன் மேலேயும் எனக்கு பெருசா அக்கறை, பாசமில்லாமல் இருந்தாலும், உன் புருஷன் திவாகர் ராணுவத்துக்கு போகும்போது, 'எங்களுக்குன்னு துணை யாருமில்லைம்மா... உங்களை என் அம்மாவா நினைச்சு கேட்டுக்கறேன். என் மனைவியை நான் வந்து கூட அழைச்சுட்டு போகற வரை பத்திரமா பார்த்துக்கோங்க'ன்னு சொல்லி கேட்டுகிட்டான்.''உன்னை பார்த்துக்கறதா சொல்லி நானும் வாக்கு கொடுத்துட்டேன். பொம்பளை தனியா இருந்தா, அவளுடைய கற்புக்கும், நிம்மதியான வாழ்க்கைக்கும், உசிருக்கும், உத்திரவாதம் கிடையாதும்மா. பெண்கள் தனியா இருந்தாலே, சில ஆண்கள் மிருகமா மாறிடுவாங்கம்மா. அதற்கு பயந்துதான் வலுக்கட்டாயமா, கோபம்ங்கற ஆயுதத்தையே நான் துணைக்கு வெச்சிருக்கேன்.''உனக்கு பாதுகாப்பு கொடுக்கத்தான் நினைச்சேனே தவிர, ஒரு மகள் மாதிரி பழக நினைக்கணும்ன்னு எனக்கு தோணலை. இப்போ சொல்லு, உன் புருஷனுக்கு கொடுத்த வாக்கை மீறி நான் கிளம்பவா?''கண்கலங்கிய சுகந்தி, ''என்னை மன்னிச்சிடு கிழவி... உண்மை தெரியாமல், உன்னை தப்பா நினைச்சு திட்டிட்டேன்,'' என கட்டியணைத்து, அழுதாள்.''உன் புருஷன் எங்கிட்டே மகன் மாதிரின்னு சொன்னான்; அவன் மகன்னா, நீ எனக்கு மருமகள் மாதிரி, அவன் உன்னை கூட்டிட்டு போகற வரை உங்கூட சண்டை போட்டுட்டும், திட்டிட்டும்தான் இருப்பேன் புரியுதா?''''இனியும் நாம ஏன் பழைய மாதிரி சண்டை போடணும் கிழவி. அதான் நாம ராசியாயிட்டோமே?''''யார் கூடவாவது தினமும் சண்டை போடலைன்னா, எனக்கு பொழுதும் போகாது. நிம்மதியாகவும் இருக்காதுடி.''''உங்க சந்தோஷத்துக்காகவாவது இனி நானும் உங்க கூட சண்டை போடறேன் அத்தே.'' ''உன்னோடு மல்லுக்கட்ட நானும் ரெடி மருமகளே,'' என, கோமதியும் சிரித்தாள்.வெ. ராம்குமார் வயது: 45, பணி: மார்க்கெட்டிங் துறைபிறந்த ஊர்: துாத்துக்குடி. இதுவரை இவர் எழுதிய, 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 2,000 தமாசுகள், 1000 கவிதைகள், ஏராளமான கட்டுரைகளும், பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன.இதுதவிர, 'கல்லுாரி கனவுகள்' என்ற நாவலும், 'எழுத்தாள்பவர்கள் ஒரு பார்வை' என்ற தலைப்பில், 105 எழுத்தாளர்களைப் பற்றிய நுாலும் எழுதியுள்ளார்.'இச்சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசாவது பெறுவது லட்சியம். அது, நிறைவேறியதில் மகிழ்ச்சி...' என்று தெரிவிக்கிறார்.கதைக் கரு உருவான விதம்: கிராமங்களில் பொதுவாக, வயதான பெண்மணிகள், இளவட்ட பெண்களுடன் மல்லுக்கு நிற்பது கண்கூடு. சண்டை போட்டாலும், மறுகணம் இருவரும் ராசியாகி விடுவர். காரணம், அவர்களது வெள்ளந்தி மனமும், அன்பும் தான்.உறவுகளின் மேன்மையையும், அக்கம் பக்கத்தினர் நட்பு பாராட்ட வேண்டும் என்ற அடிப்படையில் உருவானதே இக்கதை.