அரிய சேமிப்பு!
சென்னை, அஸ்தினாபுரத்தை சேர்ந்த, கலியபெருமாள் வயது, 72; மின் வாரியத்தில், 31 ஆண்டுகள் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர். 1985 முதல் இன்று வரை, தினமலர் நாளிதழ் வாங்கி வருவதோடு, நாளிதழில் வரும் முக்கியமான பகுதிகளை சேர்த்து, பாதுகாத்து வருகிறார்.மேலும், வாரமலர், சிறுவர்மலர் மற்றும் ஆன்மிக மலர் புத்தகங்கள் எப்போது ஆரம்பிக்கப்பட்டேதோ, அன்றிலிருந்து, இன்றுவரை அப்புத்தங்கங்களை சேகரித்து வைத்துள்ளதுடன், தீபாவளி மலர் புத்தகங்களையும், பாதுகாத்து வருகிறார்.அத்துடன், வாரமலர் இதழில் முன்பு வெளியான, 'அறிவோம் ஆன்மிகம்' மற்றும் மருத்துவ கட்டுரை பகுதிகளை கத்தரித்து, சிறு சிறு புத்தகங்களாக தைத்து வைத்துள்ளார். மேலும், 'தெரிஞ்சுக்கோங்க' என்ற பகுதி உட்பட இதழில் வெளியாகும், திருவாசகம், திருவெம்பாவை, திருமந்திரம், பெரிய புராணம், திருபள்ளி எழுச்சி மற்றும் ஆன்மிக விளக்கங்கள் அனைத்தையும் வெட்டி, டைரியில் ஒட்டியுள்ளார். வாரமலர் இதழில் வெளியாகும் பொன்மொழிகளை, டைரியில் எழுதி வைத்துள்ளவர், தினமலர் நாளிதழில் வரும் முக்கிய நிகழ்வு சம்பந்தப்பட்ட வண்ணப் படங்களை, கத்தரித்து ஒட்டி, ஆல்பங்களாக தயாரித்து வைத்துள்ளார்.தற்போது வரும் பட்டம் இதழையும் சேர்த்து வருவதோடு, மற்றவர்களுக்கு, படிக்க, கொடுத்து வருகிறார்.மார்கழி மாதம் வெளியாகும் வண்ணக் கோலங்கள், சமையல் குறிப்புகளை தொகுத்து புத்தகமாக தயாரித்துள்ளார்.சேர்த்து வைத்திருக்கும் முக்கிய கட்டுரைகளையும், ஆன்மிக சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் அடுக்கி வைத்து, வீட்டிற்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இதையெல்லாம் காட்டி, படிக்க தூண்டுகிறார். 'என் ஆயுள் உள்ள வரை தினமலர் வாங்கி, சேர்த்து வைத்துக் கொண்டிருப்பேன்...' என்று கூறும் கலிய பெருமாள், இரண்டு மாதங்கள் கழித்து, பழைய பேப்பர் கடைக்கு பத்திரிகைகளை போடும் முன், இரண்டு, மூன்று முறை அலசி ஆராய்ந்து, எதையாவது சேகரிக்க விட்டு விட்டோமோ என்று பார்த்த பின் தான் போடுவதாக கூறுகிறார்.ஒருசமயம், லண்டனில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று, மூன்றரை ஆண்டுகள் தங்கியிருந்த போது, தினமலர் நாளிதழின் இணைப்பான வாரமலர், சிறுவர்மலர் மற்றும் ஆன்மிக மலர் புத்தகங்கள் தொடர்ச்சி விட்டு விடும் என்று கருதி, தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் நெருங்கிய நண்பரிடம், தினமலர் நாளிதழ் மட்டும் வாங்கி வைக்கும்படி கூறி, அதற்கான தொகையை கொடுத்து சென்றுள்ளார்; அதேபோல், அந்த நண்பரும், தவறாமல் புத்தகங்களை வாங்கி வைத்து, கொடுத்துள்ளார்.கே.தாட்சாயினி