கதைச்சொல்லி!
''நான் ஒருத்தருக்கு, இருபது ரூவா குடுத்ததா சொன்னேன்ல... அதவச்சு, ஒரு கதை எழுதியிருக்கேன்; வாசிக்கிறேன் கேக்குறியா...'' என்றேன் மனைவியிடம்!கண்களில் நீர் ததும்ப, வெங்காயம் வெட்டிக் கொண்டிருந்த அவள், ''இப்பவா... சரி வாசிங்க,'' என்றாள்.நான் எழுதிய கதையை படிக்க ஆரம்பித்தேன்...ரயில்வே கேட்டை தாண்டிய போது, யாரோ, என்னை சத்தமாக கூப்பிட, பைக்கின் வேகத்தை குறைத்து, ஓரங்கட்டி, திரும்பிப் பார்த்தேன்; நடுச்சாலை தடுப்புச் சுவரை தாண்டி, என்னை நோக்கி வந்தார், ஒருவர். பக்கத்தில் வந்ததும் தான், 'அட, நம்ம தண்டபாணியண்ணன்...' என, ஆச்சரியம் அடைந்தேன். திருப்பூரில் இருப்பதாக சொன்னார்கள்; ஊருக்கு வந்திருப்பார் போல... இந்த வேகாத வெயிலில், என்னை கண்டதும், 'வீட்டில் இறக்கி விட சொல்ல கூப்பிட்டிருப்பார் போலிருக்கு...' என நினைத்தேன்.அருகில் வந்தவர், 'அப்பா நல்லாயிருக்காரா... பசங்கல்லாம் நல்லாயிருக்காங்களா...' என்று விசாரித்தவரின் முகம், சுருக்கங்களையும், பரவலாக, வெண் தாடியையும் பெற்றிருந்தது.'ம்... நல்லாயிருக்காங்கண்ணே... நீங்க எப்படி இருக்கீங்க?' 'நல்லாயிருக்கேன்...' என்றவர், தன் உள்ளங்கையிலிருந்த சில்லரைகளை காட்டி, 'இருபது ரூபா குடுடா; ஆஸ்பத்திரிக்கு போகணும், பத்தல...' எனக் கேட்டார்.உடனே, பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொடுத்து, சிறிது நேரம் பேசி, கிளம்பினேன். மருத்துவமனை செல்வதற்காக தான், இருபது ரூபாய் கேட்டாரா என்பது, கேள்விக்குறி தான். இருந்தாலும், ஒருகாலத்தில், அவரிடமிருந்து, நான் பெற்ற உதவியை மறக்க முடியாது.அப்போது, நான், ஏழாம் வகுப்பு, முழுப் பரீட்சை முடிந்து, கோடை விடுமுறையில் ஊர் சுற்றிய நேரம்... 'லீவுல சும்மா ஊரச் சுத்துறதுக்கு, சைக்கிள் கடைக்கு போறியாடா...' என்ற அப்பா கேட்டதும், உற்சாகத்தில் தலையசைத்தேன்.தேனிக்கு போக வேண்டும் என்றாலோ, வேறு அவசர வேலைக்கோ, தண்டபாணி கடையில் தான், அப்பா சைக்கிள் எடுப்பது வழக்கம். அந்த சாக்கில், நானும் அவ்வப்போது அரை, முக்கால் சைக்கிள்களை எடுத்து, நண்பர்களோடு தெருக்களை வலம் வருவேன்.நேரம் முன், பின் ஆனாலும், கொடுப்பதை வாங்கிக் கொள்வார்; கறாராயிருக்க மாட்டார். அத்துடன், கவட்டை வில் செய்ய, ரப்பர் டியூப்களையும், டயர் வண்டி ஓட்டி விளையாடுவதற்கும், கார்த்திகை மாதங்களில் தீப்பந்தம் சுற்றுவதற்கும், பழுதான டயர்களையும், அப்பாவின் பெயரை சொல்லி, இலவசமாகவே வாங்கி வருவேன்.நான் சைக்கிள் கடைக்கு போறேன் என்றதும், மறுநாள், என்னை சைக்கிள் கடைக்கு அழைத்து சென்றார், அப்பா. 'பரீட்சை லீவு விட்டதுலயிருந்து ஊரச் சுத்திட்டு திரியுறான்; தேவைப்பட்டா கடைக்கு வச்சுக்குங்க... காசு, கீசு ஒண்ணும் வேணாம், பாத்துக்கங்க...' என்று கூறி, தண்டபாணி கடையில் விட்டுச் சென்றார், அப்பா.முதல் நாளே, என்னை கல்லாவில் அமர சொன்னார், அண்ணன். பின், வண்டி எடுப்பவர் பெயர், ஊர், செல்லும் நேரம், திரும்பி வரும் நேரம் மற்றும் அதற்கான பைசாக்களை வாங்கி, அதை, நோட்டில் எழுதுவது பற்றி சொல்லித் தந்தார். அத்துடன், வாடிக்கையாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.இதெல்லாம் எனக்கு புது அனுபவமாயிருந்தது. பழுது பார்க்க வரும் சைக்கிள்களை, அக்கு வேறு, ஆணி வேறாக பிரித்துப் போடுவதும், மண்ணெண்ணெயில் ஊறப் போட்டு, கழுவி துடைத்து, போனது, வந்ததுகளை வாங்கி வந்து, மீண்டும் சரி செய்து மாட்டுவதும், புதிய சீட் கவர், பார் கவர், மட்காடு, ரப்பரெல்லாம் போட்டு, புது மாப்பிள்ளையை போல, வண்டியை ஜோடிப்பதும் என, தண்டபாணியண்ணன் செய்யும் வேலையை பார்க்கும் போது, அவர், எனக்கு, ஒரு ஜி.டி.நாயுடுவாகவே தோன்றுவார்.உதிரி பாகங்கள் வினியோகிக்கிற கடை முதல், வாடிக்கையாளர்களின் வீடு மற்றும் தோட்டங்களுக்கு செல்லும் போது, என்னையும் துணைக்கு அழைத்துச் செல்வார். சில சமயம் என்னை தனியாகவும் அனுப்புவார்; மதிய சாப்பாட்டிற்கு, இரவு வீட்டிற்கு என, எங்கு போனாலும், எனக்கு இலவச சைக்கிள் தான்.கடையின் தோற்றம், பழைய டயர் குவியல், டப்பாக்களில் இருக்கும் பால்ரஸ், நட்டு மற்றும் ஸ்போக்கஸ் கம்பிகள், அவ்வப்போது வாடிக்கையாளர்களுடனான நட்பு, நாட்டு நடப்பு, அரட்டை, பொழுதுபோக்கு, டீ - வடை என, அந்நாட்கள் என்னை பெரிதும் கவர்ந்திருந்தன.இரவு கடையை மூடுவதற்கு முன், வெளியில் உள்ள சைக்கிள்களை தூசி தட்டி, துடைத்து, கடைக்குள் ஏற்றுவோம். போகும் போது வேண்டாம் என்று சொன்னாலும், வற்புறுத்தி, 'ஏலேய் புடிடா... காலம்பர வந்துருடா...' என்று கையில், ஒரு ரூபாய் நாணயத்தை, திணிப்பார்.அங்கிருந்த போது, அவரின், டி.வி.எஸ்.50யையும், ஓட்ட கற்றுக் கொண்டேன். இன்று என்ன தான் கவர்ச்சிகரமான, 'கியர்' பைக்குகளை ஓட்டினாலும், அந்த பழையதை மறக்க இயலாது.சில நேரங்களில், அவர் எங்காவது வெளியூர் செல்ல வேண்டியிருந்தால், கடையை என் பொறுப்பில் விட்டுச் செல்வார். அன்றைய வசூலை, கணக்கு கொடுக்கையில், 'மொத்தம் எவ்வளவு... அத மட்டும் சொல்லு...' என்று, என் மீதான அவரது நம்பிக்கையை வெளிப்படுத்துவார்.அவ்வப்போது வரும் அப்பாவிடம், என்னைப் பற்றிய நற்சான்றுகளை வழங்கி என்னிடம், 'டேய்... பள்ளிக்கூடம் போனாலும், லீவுல பொஸ்தகத்த தூக்கிட்டு, கடைக்கு வந்துரு...' என்பார்.விடுமுறை முடிந்து, எட்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்தேன்.காலை இடைவேளை முடிந்ததும், அடுத்து, அறிவியல் வகுப்பு. 'பிராக்டிகல் நோட்டு இல்லாதவர்கள், நாளை வகுப்பறைக்குள் இருக்க கூடாது...' என்று, முதல் நாளே எச்சரித்திருந்தார், வாத்தியார். மீறி இருந்தால், அவரின் பிரம்பு, பின்புறத்தை மேலும் பெரிதாக்கி விடும். அதனால், இடைவேளை, 'பெல்' அடித்ததும், வீட்டிற்கு ஓடி வந்து, சாணி தட்டிக் கொண்டிருந்த அம்மாவிடம், நோட்டு வாங்கித் தரும்படி கேட்டேன்.'ஒங்கப்பா ஓட்டுற கப்பலு, வேகமா கரைக்கி வந்து சேரட்டும்; காசு வாங்கி, நோட்டு வாங்கி தர்றேன்... போடா அங்கிட்டு... இருக்குற நோட்டுல இப்பதைக்கி எழுது; நாளப்பின்ன பாத்துக்கலாம்...' என்றாள்.அப்பாவிடம் ஓடிப் போய், 'எப்பேய்... சாரு அடிக்கிறாரு... நோட்டு வாங்கி குடுப்பா...' என்றதற்கு, 'யார்ரா உன் வாத்தியார்... ஆ... நம்ம நாராயணந்தான... ஏங்கிளாஸ்மேட்டோ அண்ணந்தான் அவன். பச்சப் புள்ளயப் போட்டு அடிக்கிறானா ராஸ்கல்... காசு இருந்தா, வாங்கி குடுக்க மாட்டாகளா... இவன கேட்டுத்தான, நோட்டு, புஸ்தகம், பேனா, பென்சிலு வாங்கிட்டு கெடக்கோம்... மை சன், அப்பா, உனக்கு அடுத்த வாரம் கண்டிப்பா வாங்கி தாரேம்பா... வேற என்னய்யா வேணும்...' என்றார், அரை போதையில்!அதற்குள் இடைவேளை நேரம் முடிந்து, வகுப்பிற்கு செல்லும் மணி அடித்தது. வகுப்பறைக்கு செல்ல, அச்சமாக இருந்தது. நானும், இன்னும் இரண்டு பேரும், பள்ளிக் கூட வாசலில் இருந்த பரமாயக்கா கடையிலேயே உட்கார்ந்து விட்டோம். இருந்த ஐம்பது காசுக்கு, மாங்காய் கீற்றையும், ஈச்சம்பழத்தையும் வாங்கி, சப்பியபடி இருந்தோம்.'யேய், ஹெச்.எம்.,டா...' எங்கிருந்தோ கேட்ட குரலில், தலை தெறிக்க, ஆளுக்கொரு திசையில் ஓடினோம். பிரதான சாலைக்கு ஓடி வந்த நான், வீட்டுக்கு செல்ல முடியாது என்பதால், அரசு பள்ளிச் சீருடையுடன், தண்டபாணியண்ணன் கடைக்கு நடந்தேன்.கடையில் தண்டபாணியண்ணன் இல்லை. ஏதோ பொருள் வாங்க தேனிக்கு சென்றிருப்பதாக கூறினர், அங்கிருந்தோர். அதனால், பூட்டிய கல்லா முன், சேரில் அமர்ந்தேன்.சிறிது நேரத்தில் கடைக்கு வந்த தண்டபாணியண்ணன், 'என்னடா இங்க உட்காந்திருக்கே... பள்ளிக் கூடம் போகலயா...' என்றார், ஆச்சரியத்துடன்!விபரத்தை கேட்டதும், கோபத்துடன், 'இதென்னடா பழக்கம்... ஸ்கூல கட்டடிக்கிறது... வீட்டுல ரெண்டு நாள் கழிச்சு வாங்கித் தர்றேன்னு சொல்றாங்க சார்'ன்னு வாத்தியார்கிட்ட சொல்ல வேண்டியது தானே... மீறி அடிச்சாருன்னா ரெண்டு அடிய வாங்கி, வகுப்புல இருந்து பாடத்த கவனிப்பியா... அத விட்டுட்டு, ஓடி வந்தா, எல்லாஞ் சரியாப் போயிருமா... 'அந்தக் காலத்துல, ஒழுங்கா படிக்காம, ஊரச் சுத்திட்டு திரிஞ்சேன். இப்ப பாரு... எங்கூடப் படிச்சவனெல்லாம், இன்னைக்கு டாக்டரு, இன்ஜினியருன்னு பெரிய ஆளா ஆகிட்டாங்க. படிப்புத்தான்டா முக்கியம்...' என்றவர், அப்போதும், நான் தயக்கத்துடன் நிற்பதைப் பார்த்து, 'எம்புட்டுடா அந்த நோட்டு... ஆறு ரூவாயா... இந்தாப் புடி... நேரா கடைக்கி போயி, நோட்ட வாங்கிட்டு, அப்படியே ஸ்கூலுக்கு போயிரணும், சரியா...' என, ஆறு ரூபாய் சில்லரையைக் கொடுத்தார்.அந்நிகழ்வு, என்னுள் பசு மரத்தாணியாய் பதிந்து போனது. ஆண்டுகள் உருண்டோட, எப்போதாவது, தண்டபாணியண்ணனை பார்ப்பேன். கால மாற்றம், அவர் கடையும் கரைந்து, குடும்பத்தோடு, திருப்பூருக்கு பஞ்சம் பிழைக்கப் போனதாகவும், பின், சம்பாத்தியத்தோடு நன்றாயிருப்பதாகவும் கேள்விப்பட்டேன்.இன்று, எனக்கும் திருமணமாகி, இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். அவரும், பேரன், பேத்திகள் எடுத்து, தோல் சுருங்கிப் போனார். சமீபநாட்களாக, ஊர்ப்பக்கம் திரிகிறார். மீண்டும், ஏதும் சிரமமா என தெரியவில்லை. என்றைக்குமில்லாமல் வழியில் பார்த்து, இருபது ரூபாய் கேட்கிறார்.காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிதுஎன, வள்ளுவர் சொன்னது போல, நெருக்கடியான நேரத்தில், அவர் எனக்கு செய்த உதவி சிறிதாயிருந்தாலும், அது, இந்த உலகத்தை விட பெரியது.இன்றைக்கு படித்து, பட்டம் பெற்று, வேலையில் இருக்கிறேனென்றால், அதில், துளியளவேனும் அவரின் பங்கும் உண்டு.வீணாக எவ்வளவோ செலவு செய்கிறோம்; இவரைப் போல உதவியவர்களுக்கு, இருபதென்ன, இரண்டாயிரம் கொடுத்தாலும், நன்றிக்கடன் தீராது என நினைத்தேன்.''அவ்வளவு தான்; கதை எப்படியிருக்கு...'' என்று கேட்ட போது, அடுப்பில் பொங்கிய குழம்பை கரண்டியால் கிளறியபடி, ''பரவாயில்ல... அழுத்தமா ஒண்ணும் இல்லாட்டியும், ஏதோ ஒரு செய்திய சொல்ல வர்றீங்க... டைப் செய்து அனுப்பிடுங்க,'' என்றாள்.சிறிது நேரத்தில், வேலைகளை எல்லாம் முடித்து, திருத்திய பேப்பர்களுடன், கல்லூரிக்கு தயாராகி வந்தவள், ''ப்ளீஸ்பா... இன்னைக்கு ஒருநாள் மட்டும் என்னய காலேஜ்ல இறக்கி விட்டுருங்க டைம் ஆகிடுச்சு...'' என்று கெஞ்சினாள்.பைக்கில், அவளை ஏற்றி, தெருமுனையை கடந்த போது, கதை எழுதக் காரணமாயிருந்த, சைக்கிள் கடைக்காரர் தண்டபாணி, எதிர்ப்பட்டார்.என் பைக்கை வழிமறித்து, ''கோவுச்சுக்காதடா... ஒரு அம்பது ரூவா இருந்தா குடு; ஊருக்கு போகணும்; பத்தல,'' அழுக்கு மேனியும், கலைந்த தலையுமாய் கையிலிருந்த ரூபாயைக் காட்டி கேட்டார்.ஒரு கணம் யோசித்து, ''சுத்தமா காசு இல்லண்ணே... நானே, பெட்ரோல் போடக் கூட காசு இல்லாம இருக்கேன்,'' என, பொய் சொல்லி, விருட்டென பைக்கை இயக்கினேன். பைக்கில் போகும் போது, ''ஒருமுறை, ரெண்டு முறையின்னா பரவாயில்ல; பாக்குறப்பயெல்லாம் காசு கேட்டா... மனுசனுக்கு, மரியாதைய காப்பாத்திக்க தெரியணும். இந்தாளுக்கு குடுக்கற காசுக்கு, பிள்ளைகளுக்கு ஏதாவது வாங்கிக் குடுக்கலாம். இப்ப இல்லன்னு சொல்லிட்டேன்ல... இனி, எப்பயுங் காசு கேக்க மாட்டான்,'' என்றேன். எந்தப் பதிலும் சொல்லாமல், கல்லூரி வாயிலில் இறங்கிய என் மனைவி, ''அந்த கதையை அனுப்ப வேணாங்க. நல்லாயில்ல; கிழிச்சுப் போட்டுருங்க,'' என்றாள்.''ஏன், நல்லா இருக்குன்னு காலையில தானே சொன்ன?''''அப்ப நல்லாத்தான் இருந்துச்சு; இப்ப நல்லா இல்ல...''''ஏன்?'' ''நாலு பேரு சொல்றது மாதிரி வாழணும்; அப்பிடி இல்லயா, எப்படி வாழ்றமோ அத மட்டும் எழுதணும். எழுதுறது ஒண்ணு, வாழ்றது ஒண்ணுன்னு இருக்கக் கூடாது. அந்த மாயப் பேரும், புகழும் வேஸ்ட்! பாவம் அவரு, நீங்க குடுப்பீங்கன்னு நம்பி உங்கள கேட்க வந்திருப்பாரு...'' என்றவள், ''ஓ.கே., டைம் ஆகுது... வரேன்,'' என்றவள், திரும்பிப் பார்க்காமல் கல்லூரிக்குள் சென்றாள்.திரும்பி வரும் போது, தேடிக் கொண்டிருந்தேன், தண்டபாணியை!மொசைக்குமார்