ரிலாக்ஸ் கோவில்
பல்வேறு பிரச்னைகளால், மன அழுத்தம் ஏற்படுபவர்கள், தங்கள் மனக்கஷ்டத்தைக் கொட்ட, கேரளத்தில், சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவில் இருக்கிறது. இங்குள்ள கீழ்க்காவு அம்மன் சன்னிதியில் நடக்கும் குருதி பூஜையில் கலந்து கொண்டால், மனம் அமைதியாகும். இந்தக் கோவிலில் இருக்கும் பகவதி அம்மன், பூலோகத்தில் வாழ்ந்து மறைந்த ஒரு பெண். மலைவாசிகள் இனத்தை சேர்ந்த கண்ணப்பன் என்பவர், இப்பகுதியில் வசித்தார். அவரது மகள் பவளம்.தீவிர காளி பக்தரான கண்ணப்பன், எருமை மற்றும் கன்றுகளை திருடி வந்து, அம்பாளுக்கு பலியிடுவார். ஒரு சமயம், பசு கன்றை திருடி வந்தார். அதைப் பார்த்த பவளம், 'அப்பா, அழகான இதை நானே வளர்க்கிறேனே...' என்றாள்; கண்ணப்பனும், கொடுத்து விட்டார்.ஒருநாள், கன்றுக்கு புல் வெட்டச் சென்ற பவளம், இறந்து கிடந்தாள். மிகவும் வருத்தப்பட்டார், கண்ணப்பன். அவளது உடலை எரிக்க, காட்டுக்குள் சென்று விறகு வெட்டி திரும்பி வந்த போது, உடலைக் காணவில்லை.ஒருநாள் கனவில் தோன்றிய அவரது மகள், 'அப்பா, நான் தான் லட்சுமி. உங்கள் மகளாகப் பிறந்தேன். என் கணவர் திருமாலுடன் கல் வடிவில், என் உடல் கிடந்த இடத்தில் புதைந்து கிடக்கிறேன். நீங்கள் எருமைகளிடம் இருந்தும், பசுக்களிடமிருந்தும் அதன் கன்றுகளைப் பிரித்தீர்கள்; அது கொடிய பாவம்.'அந்தப் பாவத்தின் பலனை, என்னை இழந்ததன் மூலம் அனுபவிக்கிறீர்கள். கவலை வேண்டாம், கல் வடிவில் கிடக்கும் நான், விரைவில் வெளிப்படுவேன். பசு கன்று வளர்த்த தொழுவத்தில் வைத்து வழிபடுங்கள்...' என்றாள்.அதுபோல, அவ்வூரைச் சேர்ந்த ஒருவர், புல்லை அறுத்த போது, அரிவாள் ஒரு கல்லில் பட்டு ரத்தம் வழிந்தது. அவ்விடத்தை மக்கள் தோண்டிய போது, திருமாலும், லட்சுமியும் கல் வடிவில் இருந்தது தெரிந்தது.அந்தக் கல்லை தொழுவத்தில் வைத்து வணங்கினார், கண்ணப்பன். பிறகு கோவில் எழுந்தது. இதனால் தான் சோட்டாணிக்கரை கோவிலில், பக்தர்கள், 'அம்மே நாராயணா...' என, கோஷம் எழுப்புவர்.கோவில் அருகிலுள்ள கீழ்க்காவு அம்மன் சன்னிதியில், பகவதிக்கு தினமும் இரவு, 8:45 மணிக்கு குருதி பூஜை நடத்தப்படும். மஞ்சள், குங்குமம், சுண்ணாம்பு, பழம் கலந்த கரைசல், 3 முதல் 12 பாத்திரங்களில் அம்பாள் முன் வைக்கப்படும். இந்நீரை சுற்றிலும் தெளிப்பார், பூஜாரி. அப்போது, நம்மிடமுள்ள தீய சக்திகள் சிதறி ஓடும் என்பது நம்பிக்கை. இதுவே பிரசாதமாக வழங்கப்படும். நம் உடலில் தெளித்துக் கொள்ளலாம். இதை வாங்கி வந்து வீட்டின் நான்கு மூலைகளிலும் தெளித்தால், வீட்டிலுள்ள தீய சக்திகள் ஓடி விடும். இந்த பூஜையைக் காண்பவர்களுக்கு மனநிம்மதி ஏற்படும். மனநிலை பாதித்தவர்களையும் இங்கு அழைத்து வருவர். இங்கே அம்பாள், வலது கையை தன் பாதம் நோக்கி காட்டி, இடது கையால் ஆசி வழங்குவது விசேஷத்திலும் விசேஷம்.காலையில், வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி; மதியம், சிவப்பு ஆடையுடன் லட்சுமி; மாலையில், நீல ஆடையுடன் துர்க்கையாக அருள்பாலிப்பது மற்றொரு விசேஷம்.எர்ணாகுளத்தில் இருந்து, 15 கி.மீ., துாரத்தில் சோட்டாணிக்கரை உள்ளது. மனம், 'ரிலாக்ஸ்' ஆக இங்கே சென்று வாருங்கள்.- தி. செல்லப்பா