உள்ளூர் செய்திகள்

வாடகைதாரர்!

பழைய மாருதி காரை கடை வாசலில் நிறுத்தி இறங்கினார், ராகவன். அவரை பார்த்ததும் பக்கத்தில், டீக்கடை வைத்திருந்த ஏழுமலை, அவரிடம் வந்து கடை சாவியை வாங்கி, 'ஷட்டரை' திறந்து விட்டான்.''ரொம்ப நன்றிப்பா,'' 70 வயதான ராகவன் புன்னகைத்தார்.''எதுக்கு ஐயா நன்றி சொல்லிக்கிட்டு... இதெல்லாம் சாதாரண விஷயம். நீங்க தினமும் இந்த வார்த்தையைச் சொல்லத் தவறுவதே இல்லை.''''அப்படி இல்லப்பா... சின்ன உதவியா இருந்தாலும், நமக்காக மத்தவங்க செய்யும் போது, நன்றி சொல்றது தப்பில்லையே.''அது ஒரு ஸ்டேஷனரி கடை. உள்ளே நுழைந்து முன்புறம் இருந்த டேபிளைத் துடைத்து சாக்லெட் பாட்டிலை எடுத்து வைத்தார். அவர் வந்தது தெரிந்து, வழக்கமாக வரும் வேலையாள் கடையைச் சுத்தம் செய்துவிட்டுப் போக, அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தார்.''தாத்தா... ஒன் குயர் நோட்டு ஒண்ணு, பால்பாயின்ட் பேனா வேணும்,'' என்றான், 12 வயது சிறுவன்.சாக்லெட் பாட்டிலைத் திறந்து, முதலில் அவனுக்கு ஒரு சாக்லெட்டை கையில் கொடுத்தார். அவன் கேட்டதை எடுத்துத் தந்து, காசை வாங்கி கல்லாவில் போட்டார்.வீட்டின் காம்பவுண்ட் அருகே இரண்டு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒன்றில் ஏழுமலையும், இன்னொன்றில் ராகவனும் கடை வைத்திருந்தனர்.வீட்டு உரிமையாளன் சுதாகர், அரசு அலுவலர். அப்பாவின் சம்பாத்தியத்தில் கட்டப்பட்ட வீடு. அவர் காலத்திற்குப் பின், முன்புறம் இருக்கும் இடத்தில் இரண்டு கடைகள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தான்.தட்டில் இட்லிகளை வைத்து சாம்பார் ஊற்றி, சுதாகரிடம் கொடுத்தாள், ராணி.''சாப்பிடுங்க.''''நீ சாப்பிடலையா?''''நீங்க சாப்பிட்டு கிளம்புங்க. நான் அப்புறம் சாப்பிடறேன். நான் சொன்னது ஞாபகம் இருக்கா?'' என்றபடியே கணவனைப் பார்த்தாள்.''என்ன, அந்த ராகவன் ஐயாவை கடையை காலி பண்ணி தரச்சொல்லணும். அதானே... எப்படி ராணி, அஞ்சு வருஷமா இருக்காரு. பாவம் வயசானவரு. ஏதோ கொஞ்சம் சம்பாத்தியம் பார்க்கிறாரு. அவரால் எந்தத் தொந்தரவும் இல்லை.''ஒவ்வொரு மாதமும், 3ம் தேதியானால் கரெக்டா வாடகைப் பணத்தைக் கொடுக்கிறாரு. அவரைப் போயி காலி பண்ணுங்கன்னு எப்படி சொல்ல முடியும்?''''நல்லா இருக்கே நீங்க பேசறது... இந்த வயசான காலத்திலும், வெளிநாட்டில் இருந்து பிள்ளை வேலை பார்த்து பணம் அனுப்பினாலும், பணத்தாசை குறையாமல் கடை வச்சு நடத்தி, வருமானம் பார்த்துட்டு இருக்காரு... அவருக்குப் போய் பாவம் பார்க்கறீங்க...''நாமதான் பாவம். கல்யாணம் ஆகி ஆறு வருஷமாச்சு. இன்னும் குழந்தை இல்லைன்னு, ஆஸ்பத்திரி செலவுன்னு பணத்தை தண்ணியா செலவு பண்றோம். வரவுக்கும் செலவுக்கும் சரியா இருக்கு.''ஒரு லட்சம், 'அட்வான்ஸ்'சும், 5,000 வாடகைன்னு அஞ்சு வருஷமா சவுகரியமாக இருக்காரு. இப்ப இந்த ஏரியாவில் கடை கிடைக்கிறதே கஷ்டம். என் தோழி, 'டைலரிங் ஷாப்' போட இந்தக் கடையை கேட்கிறா... 'அட்வான்ஸ்' மூணு லட்சம், வாடகை, 8,000 தரேன்னு சொல்றா... நமக்கு எது லாபமோ அதைத்தான் பார்க்கணும்.''மூச்சுவிடாமல் பேசும் மனைவியைப் பார்த்தான், சுதாகர்.''இவருக்கு, 70 வயசாச்சு. வீட்டில் சாப்பிட்டு, ஓய்வு எடுப்பதை விட்டுட்டு, பணத்தாசை பிடிச்சு இப்படி ஸ்டேஷனரி கடை வச்சுக்கிட்டு இருக்கார். சாக்லெட் கொடுத்து ஒரு கூட்டத்தைக் கூட்டி, எப்பப் பார்த்தாலும் வாசலில் சத்தமா இருக்கு,'' என, அலுத்துக் கொண்டாள், ராணி.''பணத்துக்காக பழகின மனுஷனை காலி பண்ண சொல்ல முடியுமா?''''இங்கே பாருங்க, உங்களுக்கு சங்கடமா இருந்தா சொல்லுங்க. நானே சொல்றேன்,'' என்றாள், சற்று கோபமாக.''சரி சரி, நானே அவர்கிட்டே பேசறேன்.''விஷயத்தை ராகவனிடம் சொல்ல, புருவத்தை உயர்த்தி அவனைப் பார்த்தார்.''என்னப்பா சொல்ற... கடையை காலி பண்ணி தரணுமா?'' அவர் குரல் நடுங்கி ஒலித்தது.''தப்பா எடுத்துக்காதீங்க ஐயா. ரொம்ப நெருங்கிய பழக்கம். அந்தக் காலத்தில் எங்களுக்கு எவ்வளவோ உதவிகள் செய்திருக்காங்க. நல்ல புழக்கமான இடம்ன்னு கேட்கிறாங்க... மறுக்க முடியலை. நீங்க வந்து அஞ்சு வருஷமாச்சு. காலி பண்ணித் தந்தா நல்லா இருக்கும்.''''நீ அவங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கே. உன் நிலைமை எனக்கு புரியுது. ஒரு மாசம், 'டயம்' கொடு. காலி பண்ணிடறேன்.''''தாராளமா எடுத்துக்குங்க ஐயா... இந்த வயசுக்கு மேல நீங்க உழைக்கணும்ன்னு அவசியமில்லை. பிள்ளை நல்லபடியாக பார்த்துக்கிறாரு. வயதான காலத்தில் ஓய்வெடுங்க.''பதில் சொல்லாமல் புன்னகையுடன் அவனைப் பார்த்தார்.அதற்குப் பிறகு, 10 நாட்கள் செல்ல, கடையில் எப்போதும் யோசனையுடன் உட்கார்ந்திருக்கும் ராகவனைப் பார்க்க சங்கடமாக இருந்தது.'பாவம் நல்ல மனுஷன், பணத்துக்காக பகைத்துக் கொள்கிற மாதிரி ஆகிவிட்டதே...' என வருத்தப்பட்டான், சுதாகர்.அன்று வாசலில், 'டாடா ஏஸ்' வாகனம் வந்து நிற்க, ஆட்கள் உதவியுடன் கடையில் இருந்த பொருட்களை ஏற்றினார். கடை காலியாக, 'ஷட்டரை' பூட்டி சாவியை வாங்கி, டிரைவரிடம் ஏதோ சொல்ல, வண்டி கிளம்பியது.சாவியுடன், 'கேட்'டைத் திறந்து உள்ளே வந்தார்.''வாங்க ஐயா, கடையை காலி பண்ணிட்டிங்க போலிருக்கு. ரொம்ப நன்றி. உங்க, 'அட்வான்ஸ்' பணத்தை, 10 நாளில் உங்க வங்கி கணக்கில் போட்டுடறேன்.''''அவசரமில்லை தம்பி, மெதுவா போடுங்க. பணத்தைத் தாண்டி நல்ல முறையில் அஞ்சு வருஷமாக பழகியிருக்கோம். பணம் இன்னைக்கு வரும், நாளைக்குப் போகும். நட்போடு நல்லமுறையில் நீயும், உன் மனைவியும் பழகினீங்க, ரொம்ப நன்றி. நான் கிளம்பறேன். இந்தாப்பா சாவி.'' உள்ளிருந்து ராணி வர, ''நல்லா இருக்கியாம்மா... அப்புறம் உன்கிட்ட ஒரு விஷயம், என் மனைவி சொல்லச் சொன்னா... குழந்தைக்காக நீங்க இரண்டு பேரும் சிகிச்சையில் இருப்பது தெரியும்மா. கவலைப்படாதீங்க, நிச்சயம் நல்லது நடக்கும்.''கடவுள் அருள் வேணும் இல்லையா... திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலுக்கு இரண்டு பேரும் ஒருநாள் போயிட்டு வாங்க. அடுத்த வருஷம் நல்ல செய்தி சொல்வீங்க,'' என்றார்.''தப்பா எடுத்துக்காதீங்க ஐயா. எங்களுக்கு உதவி செய்தவங்களுக்காக உங்களைக் காலி பண்ணும்படி ஆயிடுச்சி,'' உறுத்தலுடன் சொன்னாள், ராணி.''பரவாயில்லம்மா. நன்றிக்கடன் ரொம்பப் பெரிசு. இந்த முறையில் தீர்க்க முடிஞ்சுதேன்னு சந்தோஷப்படுங்க. நான் வரட்டுமா?''''ஐயா... கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க. பொருள் எல்லாம் வண்டியில் ஏத்தினீங்க. எல்லாம் எங்கே போகுது,'' என்றான், சுதாகர்.''அடுத்த ஏரியாவில் ஒரு கடை பார்த்துட்டேன்பா. சாமானெல்லாம் அங்கே தான் போகுது. 'அட்வான்ஸ்' வாடகை எல்லாம் இதேதான்...''நீங்க நினைக்கலாம். வயது: 70. பிள்ளைக்கு நல்ல சம்பாத்தியம். அப்புறம் எதுக்கு கடை வச்சு நடத்தணும்ன்னு... பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு நடத்தற கடை இல்லப்பா. என் மன திருப்தி, உடம்பு ஆரோக்கியம் மற்றும் என்னாலும் உழைக்க முடியும்ங்கிற நம்பிக்கைக்கு நடத்தப்படற கடை.''இந்த வயசிலும் என்னால உழைக்க முடியும். உடம்பை ஆரோக்கியமாக வச்சுக்க முடியும். கடைசி வரை என் காலில் நிற்க முடியுங்கிற சந்தோஷம் கிடைக்குதே... அதுக்கு நிகர் வேறு இல்லப்பா. இதைத்தான் என் வாழ்க்கையின் நிறைவாக நினைக்கிறேன்.''நீங்க சங்கடப்பட வேண்டாம். நல்ல இடம் கிடைச்சிருக்கு; ஒன்றும் பிரச்னையில்லை. என்ன கடை கொஞ்சம் உயரம், 10 படி ஏறணும். பரவாயில்லை, வயதான எனக்கு ஒரு உடற்பயிற்சின்னு நினைச்சுக்கிறேன்,'' கையெடுத்து கும்பிட்டு கிளம்பினார்.பணத்துக்கு ஆசைப்பட்டு ஒரு நல்ல மனிதனின் நட்பை இழந்த வருத்தத்தோடு, அவரைப் பார்த்தபடி இருவரும் நின்றனர்.பரிமளா ராஜேந்திரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !