டுவிட்டரால் வந்த சோதனை!
மெலிசா பெச்மென் என்ற பெண், அமெரிக்காவில், மிகவும் பிரபலம். 'டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளாராக பணியாற்றுகிறார். இவருக்கு, மற்றொரு முகமும் உண்டு. மிருகங்களை வேட்டையாடுவதை, பொழுது போக்காக வைத்துள்ளார். சமீபத்தில், தென் ஆப்ரிக்கா சென்ற இவர், அங்கு, அடர்ந்த வனப் பகுதிக்குள், துப்பாக்கியுடன் களமிறங்கினார்.மெலிசாவின் கழுகு பார்வையில், அங்கு, சுற்றிக் கொண்டிருந்த, பெரிய சிங்கம் ஒன்று, சிக்கியது. அடுத்த நொடியே, தன் துப்பாக்கி குண்டுகளுக்கு, அந்த சிங்கத்தை இரையாக்கி விட்டார். அத்துடன், பேசாமல் இருந்திருந்தால், பிரச்னை வந்திருக்காது. இறந்து போன சிங்கத்தின் உடல் அருகே அமர்ந்து, துப்பாக்கியுடன் கம்பீரமாக போஸ் கொடுத்து, புகைப்படம் எடுத்துக் கொண்டார்.இந்த புகைப்படத்தை, சமூக வலைத்தளமான, 'டுவிட்டர்'ல், வெளியிட்டு, 'என்னுடைய வீரத்தை பார்த்தீர்களா' என, தன், புஜ பல பராக்கிரமத்தை, வெட்ட வெளிச்சமாக்கியிருந்தார். இத்துடன், இதுவரை, அவர், வேட்டையாடிய, பல மிருகங்களின் உடல்கள் அருகே அமர்ந்து, எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.இந்த விவகாரம், தென் ஆப்ரிக்காவில், தற்போது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இனிமேல், மெலிசாவை, தென் ஆப்ரிக்காவுக்குள், அனுமதிக்க கூடாது என்றும், அவர் மீது, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதனால், கலங்கி போயிருக்கிறார், மெலிசா. - ஜோல்னா பையன்.