அடியார் துயர் தீர்த்த ஆண்டவன்!
தடாங்கூர் எனும் ஊரில், வாழ்ந்து வந்தார், கிருஷ்ண பக்தரான ராமதாசர். இவர், தன் வீட்டில் நிறைய துளசி செடிகளை வளர்த்து வந்தார். தினமும், அவற்றை மாலையாக தொடுத்து, நெடுந்தொலைவில் உள்ள துவாரகைக்கு சென்று, கண்ணனுக்கு சமர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.ஐந்து ஆண்டு நடந்து வந்த அக்கைங்கர்யம், மூப்பின் காரணமாக நின்று போனது. பின், ஒருநாள், தட்டுத்தடுமாறி துவாரகை சென்ற ராமதாசர், மன வருத்தத்துடன், 'பரம்பொருளே... வயதாகிவிட்டதால், என்னால், உன் ஆலயம் வர இயலாததை பொறுத்தருள வேண்டும்...' என, வேண்டினார்.அவருக்கு தரிசனம் தந்த கண்ணன், 'ராமதாசரே... கவலையை விடு; இப்போது, இங்கு ஒரு தேர் தோன்றும்; அதில் என்னை வைத்து, உன் இல்லத்துக்கு எடுத்துச் செல்...' என்றார்.அவ்வாறே, கிருஷ்ண விக்கிரகத்தை தேரில் எடுத்துப் போய் விட்டார், ராமதாசர்.மறுநாள், கோவிலில், விக்கிரகத்தை காணாத அர்ச்சகர், 'எதற்கும் ராமதாசரிடம் கேட்கலாம்...' என, ராமதாசரை தேடி அவரது வீட்டிற்கு வந்தார். அவர் வருவதை அறிந்த ராமதாசர், விக்கிரகத்தை எடுத்து கிணற்றில் போட்டு விட்டார். ஒரு வழியாக தேடி, கிணற்றிலிருந்த கிருஷ்ண விக்கிரகத்தை எடுத்து, சென்று விட்டார், அர்ச்சகர்.இதனால், கண் கலங்கிய ராமதாசர், 'கண்ணா... உன் சொற்படி தானே உன்னை கொணர்ந்தேன்; இப்போது, என்னை விட்டு போய் விட்டாயே...' என்று புலம்பினார்.'ராமதாசா... கவலையை விடு; நான், எப்போதும் உன்னுடன் தான் இருப்பேன்; நீ அர்ச்சகரிடம் சென்று, என் எடைக்கு எடை, தங்கம் கொடுப்பதாக கூறி, என்னை பெற்றுக் கொள்...' என்றார். 'பகவானே... என்னிடம் ஏது அவ்வளவு பொன்...' என்றார், கலக்கத்துடன்!'உன் மனைவியின் மூக்கிலிருக்கும் மூக்குத்தியை ஈடாக வை...' என்று சொன்னார்.அதன்படியே, ராமதாசர், அர்ச்சகரிடம் சொல்ல, அவரோ, தாசரின் வறுமையறிந்து, 'பகவான் எடைக்கு எடை நீர் தங்கம் தரப்போகிறாயா... ' என்று பரிகாசம் செய்து,'சரி... உங்கள் விருப்பத்தை, ஏன் கெடுக்க வேண்டும்...' என, ஒப்புக்கொண்டார்.தகவலறிந்து, ஊரே கூடி விட்டது. பெரிய தராசில், ஒரு தட்டில் பெருமாள் விக்கிரகத்தை வைத்தார், அர்ச்சகர். மற்றொரு தட்டில், தன் மனைவியின் மூக்குத்தியை வைத்தார், ராமதாசர்.அனைவரும் அதிசயிக்கும் விதமாக, தராசு தட்டுகள் இரண்டும் சமமாக நின்றன. 'நாராயணா... நாராயணா...' எனும் பெருத்த ஓசைக்கிடையே, விக்கிரகத்தை எடுத்துக் கொண்டார் ராமதாசர்.அர்ச்சகரோ, 'பெருமாளின் சித்தம் இப்படியிருக்கும் போது, நாம் செய்வதற்கு என்ன இருக்கிறது...' என்று கூறி, ஊர் திரும்பி, வேறொரு விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தார்.அடியார் துயரப்பட, ஆண்டவன் பொறுக்க மாட்டார் என்பதை விளக்கும் வரலாறு இது!பி.என்.பரசுராமன்தெரிந்ததும் தெரியாததும்!சூரிய உதயத்திற்கு முன், எழுந்து குளிப்பதால், என்ன பலன்?சூரிய உதயத்திற்கு முன் எழுந்து, குளித்து, தெய்வ சிந்தனையில் எவன் ஈடுபடுகிறானோ அவனுக்கு, உடல் பலம், அழகு, நல்ல சரீரம், வாக்குப் பலிதம், நல்ல குணம், தர்ம சிந்தனை, கவுரவம், செல்வாக்கு, புகழ், தனம் மற்றும் வேலையாள் போன்றவை தேடி வரும்.