உள்ளூர் செய்திகள்

நிலவுக்கும் நெருப்பென்று பேர்! (23)

முன்கதை சுருக்கம்: 'டாப்ஸ்லிப் கெஸ்ட் ஹவுசு'க்கு இக்பால், ஜோஸ் மற்றும் தருண் சென்ற நிலையில், அவர்களை எப்படி கண்டுபிடிக்க போறீங்க என, கமிஷ்னர் கேட்க, ஏ.சி.பி., செழியனுக்கு வியர்த்தது -இரவு மணி, 10:45.'டாப்ஸ்லிப் கெஸ்ட் ஹவுசின்' ஒட்டுமொத்தப் பரப்பும் இருட்டில் புதைந்து போயிருக்க, வீட்டின் உட்புறம் மட்டும் அரைகுறை வெளிச்சத்தோடு தெரிந்தது. மதுவின் தாலாட்டில் இருந்த இக்பால், ஜோஷ் மற்றும் தருண் ஆகிய மூவரும், 'டபிள்யூ டபிள்யூ' சேனலில், மூர்க்கமாய் ரத்தம் தெறிக்கத் தெறிக்க, இரண்டு பெண்கள் மோதும் மல்யுத்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தனர்.தருணிடம், ''இதுல எவ ஜெயிப்பான்னு நினைக்கிறே, ஆப்பிரிக்காகாரியா, இல்ல வெள்ளைக்காரியா?'' கேட்டான், ஜோஷ்.''என்னோட ஓட்டு, வெள்ளைக்காரிக்குத் தான். ஒரு சூறாவளி காத்து மாதிரி, அவ சுழன்று சுழன்று அடிக்கிறதைப் பார்த்தா, எனக்கே மூக்கிலும், வாயிலும் ரத்தம் வர்ற மாதிரியிருக்கு,'' என்ற தருண், தனக்கு அருகே சோபாவில் சாய்ந்து உட்கார்ந்திருந்த, இக்பாலின் தோளைத் தட்டி, ''நீ என்ன சொல்றே?'' என்றான்.இக்பால் பாதி செருகிய விழிகளோடு பதில் சொல்ல முயன்ற விநாடி, அவனுடைய மொபைல் போன், 'வைபரேஷனில்' ரீங்காரம் செய்தது. எரிச்சலோடு எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான்.போனின் மறு முனையில் அவனுடைய அப்பா தாஹிர் காத்திருக்க, பீறிட்ட கோபத்தை அடக்கியபடி, ''என்ன டாட்... அபுதாபியிலிருந்து இந்த நேரத்துக்கு போன்?'' என்றான்.''அபுதாபியில் இப்ப நேரம், 9:15. இந்தியாவில், 10:45. ஒன்றரை மணி நேரம் தானே வித்தியாசம். அதுவுமில்லாம, இந்த நேரத்துக்கு நீ துாங்கியிருக்க மாட்டேன்னு எனக்கு தெரியும். அதனால தான் போன் பண்ணினேன்.''''சரி, என்ன விஷயம் டாட்?''''டில்லியில் இருக்கிற, 'மென்டல் ஹெல்த் சைக்யாட்ரி டிபார்ட்மென்ட்'டைச் சேர்ந்த, டாக்டர் ப்ரவிண் குப்தாவுக்கு இன்னிக்குக் காலையில் போன் பண்ணி பேசினியா.''''... ... ...''''என்ன பேச்சையே காணோம்?''''சாரி டாட், மறந்துட்டேன்.''''என்னது மறந்துட்டியா, உனக்கு இருக்கிற மன ரீதியான பிரச்னை தீரணும்ன்னா, டாக்டர் ப்ரவிண் குப்தாவோட, 'டெலி ஹெல்த் ட்ரீட்மென்ட்' ரொம்பவும் முக்கியம்ன்னு சொன்னேனா இல்லையா?''''மறுபடியும் சாரி டாட்... எப்படியோ மறந்துட்டேன்.''''நாளைக்காவது போன் பண்ணி டாக்டர்கிட்ட பேசு.''''கண்டிப்பா பேசிடறேன்.''''என்ன பேச்சு குழறலாயிருக்கு. குடிச்சிருக்கியா?''''இல்ல டாட்.''''இதோ பார் இக்பால்... உனக்கு இருக்கிற பிரச்னைக்கு ஒரு துளி மது கூட ரத்தத்துல கலக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார்.''''நான் அதையெல்லாம், 'பாலோ' பண்ணிட்டிருக்கேன். இப்ப என் பேச்சு குழறலாயிருக்கிறதுக்கு காரணம், துாங்கறதுக்காக மாத்திரை போட்டிருக்கேன். அதுவும் டாக்டர் கொடுத்த மாத்திரை தான், டாட்.''''சரி, நாளைக்கு, நீ டாக்டருக்கு போன் பண்ணி பேசிட்டு, எனக்கு உடனடியாய் தகவல் கொடுக்கணும்.''''ஷ்யூர் டாட்.''''சரி, துாங்கு. குட்நைட்.''பதிலுக்கு, ''குட்நைட்!'' சொல்லி, போனை, 'ஸ்விட்ச் ஆப்' செய்து, ஜோஷையும், தருணையும் ஏறிட்டான், இக்பால்.''என்னோட அப்பாவுக்கு வேற வேலையே இல்லை. ஏதோ, 'டெலி ஹெல்த் ட்ரீட்மென்ட்'டாம். டில்லியில் இருக்கிற ஒரு டாக்டர்கிட்ட பேசச் சொல்றார். நாளைக்கு காலையில மறக்காம பேசிடணும். ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் ஞாபகப்படுத்துங்க.''தான் பேசிய பேச்சுக்கு, ஜோஷ், தருண் இருவரிடமிருந்தும் எந்தவிதமான பதில் வராமல் போகவே, அந்த அரையிருட்டில் கண்களைச் சுருக்கி, அவர்களின் முகங்களை உற்றுப் பார்த்தான். அந்த முகங்களில் பதட்டம் தெரிந்தது.''ரெண்டு பேருக்கும் என்னாச்சு?''''இ... இக்பால்,'' தருணின் குரலில், மைனஸ் டிகிரி குளிர் அடித்தது.''ஏன்டா உன்னோட குரல் இப்படி நடுங்குது?''''கொ... கொஞ்சம் திரும்பி மாடிப் படியைப் பாரு.''போதை நிரம்பிய விழிகளோடு திரும்பிப் பார்த்தான், இக்பால்.முதுகுத் தண்டுவடத்தில் நண்டு ஒன்று ஊர்வது போன்ற உணர்ச்சியில், உடம்பின் ஒட்டு மொத்த ரத்தமும் ஒரு விநாடி குளிர்ந்தது. அரையிருட்டான மாடிப் படிகளின் உச்சியில் இருந்து மெதுவாய் பூனை நடைபோட்டு இறங்கிக் கொண்டிருந்தாள், முகிலா.வடவள்ளி க்யூரியோ கார்டன் அவென்யூக்குள் நுழைந்த போலீஸ் ஜீப், கங்கா மெயின் ரோட்டின் மையத்தில் இருந்த அந்த வீட்டுக்கு முன், தன்னுடைய முகப்பு விளக்குகளை அணைத்துக் கொண்டபோது, இரவு, 10:55 மணி.செழியன் ஜீப்பிலிருந்து இறங்கியபடியே டிரைவரிடம், ''இந்த வீடு தானே?'' என்றார்.''ஆமா சார்... நம்பர், 99-ன்னு கொட்டை எழுத்துல தெரியுது,'' டிரைவர் சொல்லிக் கொண்டே காம்பவுன்ட் கேட்டை நெருங்கி, உட்புற சுவரில் இருந்த அழைப்பு மணியின் பொத்தானை அழுத்தினார்.பத்து விநாடி மவுனத்துக்குப் பிறகு அந்தச் சிறிய போர்டிகோவின் சுவரில் ஒட்டியிருந்த மினி டியூப்லைட் எரிய, பக்கவாட்டு ஜன்னலின் கதவு தயக்கமாய் திறந்தது. ஒரு பெண்ணின் முகம் எட்டிப் பார்த்து குரல் கொடுத்தது.''யாரு?''''இது தீப்தியோட வீடு தானே?'' கேட்டார், செழியன்.''ஆமா.''''அவங்களைப் பார்க்கணும்.''''நீங்க யாரு?''''போலீஸ்.''ஜன்னலில் தெரிந்த முகம் உடனே மறைந்து போக, அடுத்த சில விநாடிகளில் வீட்டின் பிரதான கதவு திறந்தது. கலவரம் படிந்த முகத்தோடு எட்டிப் பார்த்தாள், தீப்தி.''நான் தான் தீப்தி. என்ன விஷயம்?''''அயாம், அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆப் போலீஸ் செழியன். உங்ககிட்ட ஒரு விசாரணை பண்ண வேண்டியிருக்கு. உள்ளே போய் பேசலாமா?''வியர்த்துப் போன முகத்தோடு தலையசைத்தாள், தீப்தி.''வாங்க, சார்...''செழியன் உள்ளே நுழைந்தார். வரவேற்பறையிலிருந்த சோபாவைக் காட்டினாள், தீப்தி. வீட்டைச் சுற்றும் முற்றும் பார்த்தபடி உட்கார்ந்தார்.''வீட்ல உங்களைத் தவிர வேற யார் இருக்காங்க?''''நானும், என்னோட அம்மாவும் மட்டும் தான். அப்பா, பிசினஸ் விஷயமா நாக்பூர் போயிருக்கார்.''''கொஞ்ச நேரத்துக்கு முன் ஜன்னலைத் திறந்து பேசின, அந்தப் பொண்ணு யாரு?''''அந்தப் பொண்ணோட பேரு, டெய்சி; ஹோம் நர்ஸ். என் அம்மாவுக்கு உடம்பு ரீதியாய் பல பிரச்னைகள். அவங்களைப் பார்த்துக்கிறதுக்காக, டெய்சி இங்கே தங்கியிருக்கா. நீங்க என்கிட்ட ஏதோ விசாரணை செய்யணும்ன்னு சொன்னீங்களே... என்ன விஷயம் சார்?''''கொஞ்சம் தனியா பேசணும்.''''நோ பிராப்ளம்... உள்ளே இருக்கிற அறையில அம்மா துாங்கிட்டிருக்காங்க. அம்மாவுக்குப் பக்கத்துலதான் டெய்சி இருப்பா. நீங்க பேசலாம்,'' சொல்லியபடியே எதிரேயிருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள், தீப்தி.சில விநாடிகள் நிசப்தம் காத்துவிட்டு குரலைத் தாழ்த்தினார், செழியன்.''நாம இப்ப பேசப் போறது தருணைப் பத்தி.''தீப்தியின் முகம் திகைப்புக்குள் விழுந்தது.''தருணா?''''தருணே தான். அவரைத் தெரியாதுன்னு பொய் சொல்லிடாதீங்க. நீங்க ஒரு சின்ன பொய்யைச் சொன்னாலும் கூட, அது ஒரு பெரிய பிரச்னையாய் மாறக்கூடிய அபாயம் இருக்கு. நான் எல்லா விபரங்களையும் தெரிஞ்சுகிட்டுதான் உங்ககிட்டே வந்திருக்கேன்.''தீப்தியின் பின்னங்கழுத்தில் வியர்வை ஊறியது. ''என்னை எதுக்காக விசாரிக்கணும்?''''காரணம் இல்லாம, போலீஸ், யார் வீட்டு வாசற்படியும் ஏற மாட்டாங்க, மிஸ் தீப்தி. உங்களை விசாரணை பண்றதுக்கு முன், முக்கியமான ஒரு விஷயத்தை உங்ககிட்ட சொல்லப் போறேன். அதைக்கேட்டு நீங்க அதிர்ச்சியடையக் கூடாது.''தீப்தியின் முகம் கலவரக்கடலாக மாற, பேச்சைத் தொடர்ந்தார், செழியன்.''தருணோட பால்ய காலத்து நண்பன், புவனேஷை உங்களுக்குத் தெரியும்ன்னு நினைக்கிறேன்.''''தெரியும்.''''அந்த புவனேஷ், தான் கல்யாணம் பண்ணிக்க இருந்த முகிலா என்ற பெண், காணாம போன அதிர்ச்சியில், 'க்ரிடிகல் கேர் யூனிட்'டில் சிகிச்சையில் இருக்கிற விஷயமும் தெரியும்ன்னு நினைக்கிறேன்.''''தெரியும்.''''அந்த முகிலா காணாமல் போக, அவ ஒண்ணும் சின்னக் குழந்தை கிடையாது. அவள் கடத்தப்பட்டு இருக்கலாம்ன்னு, நான் சந்தேகப்படறேன். அந்தக் கடத்தலுக்கு பின்னால் தருணும், அவனோட நண்பர்கள் இக்பால், ஜோஷ் இருக்கலாம்ங்கிறதுக்கான ஒரு ஆதாரமும் கிடைச்சிருக்கு. அதை உறுதிப்படுத்திக்கத் தான் உங்ககிட்ட வந்தேன்.''''சார்... நீங்க பேசற ஒவ்வொரு வார்த்தையும், நெருப்புத்துண்டம் மாதிரி என்னோட காதுல விழுந்துட்டிருக்கு. இது, எனக்கு சம்பந்தமில்லாத விஷயம்.''''சம்பந்தம் இருக்கு. நீங்களும், தருணும் காதலர்கள் தானே?''''நேத்து வரைக்கும் தருணை நான் காதலிச்சிட்டிருந்தேன். ஆனா, இன்னியிலிருந்து அந்த எண்ணத்தை மாத்திக்கிட்டேன்.''''என்ன காரணம்?''''சாரி... நான் அந்த காரணத்தை சொல்ல விரும்பலை.''''நீங்க சொல்லாவிட்டாலும் எனக்குத் தெரியும். தருண், சைக்கோ பேர்வழி என்ற காரணம் தானே!''தீப்தியின் விழிகள், வியப்பில் உறைந்தன.''உங்களுக்கு எப்படி இந்த உண்மை தெரியும் சார்?''''குட்ஹோப் ஹாஸ்பிடலின் ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் யாதகிரி தான் சொன்னார்.''''டாக்டர் எப்படி இந்த விஷயத்துல சம்பந்தப்படறார்?''மென்மையாய் ஒரு புன்னகையை உதிர்ந்து, பேச ஆரம்பித்தார், செழியன்...''முகிலா கடத்தப்பட்டதன் பின்னணியில், தருண் இருக்கலாம் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டதுமே, 'குட்ஹோப் ஹாஸ்பிடலில்' புவனேஷுக்கு உதவியாய் இருந்த தருணின் நடவடிக்கைகள் எப்படியிருந்தது, அவர் யார் யாரையெல்லாம் சந்திச்சுப் பேசினார் என்ற விபரங்களைத் தெரிஞ்சுக்க முடிவு செய்தேன்.''ஹாஸ்பிடலில் பொருத்தப்பட்டிருந்த, சி.சி.டி.வி., கேமராக்களின் பதிவுகளை எடுத்து போட்டுப் பார்த்தோம். அதில், நீங்களும், தருணும் இரண்டு தடவை சந்திச்சுப் பேசியிருக்கீங்க. ஒரு தடவை, பார்மசிக்குப் பக்கத்துல; இரண்டாவது தடவை, ஆர்த்தோ வார்டுக்குப் பக்கத்துல. நான் சொல்றது சரியா, தீப்தி?''பிரமிப்பு அகலாத கண்களோடு செழியனைப் பார்த்து, 'ஆமாம்!' என்பது போல் தீப்தி தலையசைக்க, செழியன் பேச்சைத் தொடர்ந்தார்...''நீங்க, இரண்டாவது தடவை தருணைப் பார்த்துப் பேசிட்டு, ஆர்த்தோ வார்டில் இருந்த டாக்டர் யாதகிரியோட அறைக்குப் போனீங்க. ஒரு பத்து நிமிஷம் கழிச்சுத்தான் அறையிலிருந்து வெளியே வந்தீங்க. அந்த பதிவுகளை பார்த்த அந்த சில நிமிஷங்களிலேயே நான், டாக்டர் யாதகிரியை மொபைல் போன்ல தொடர்பு கொண்டேன். ''உங்களைப் பத்திச் சொல்லி விபரம் கேட்டேன். அவர் தான், உங்க பேரையும், அட்ரசையும் எனக்குக் கொடுத்து, தருண் ஒரு விபரீதமான நோயாளி என்ற விஷயத்தையும் சொன்னார். நான் உடனே புறப்பட்டு வந்து, உங்க முன்னாடி உட்கார்ந்துட்டிருக்கேன்.''தன் நெற்றியைப் பிடித்தபடி பெருமூச்சொன்றை வெளியேற்றி, செழியனை ஏறிட்டாள், தீப்தி.''இட்ஸ் ஓ.கே., நான் இப்போ என்ன பண்ணனும்ன்னு நீங்க நினைக்கிறீங்க சார்.''''உக்கடம், அன்பு நகர் வீட்ல, இந்த நிமிஷம் தருண், ஜோஷ், இக்பால் மூணு பேரும் அங்கே இல்லை. அவங்களைக் கண்டுபிடிக்க உங்க உதவி வேணும்.''''உதவின்னா, எப்படி சார்?''''தருணுக்கு, நீங்க போன் பண்ணிப் பேசணும். உங்க மூலமாய் தான், அவர் இருக்கிற இடத்தை எங்களால கண்டுபிடிக்க முடியும்.''— தொடரும்ராஜேஷ்குமார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !