நான் வந்த பாதை (13)
திரைப்பட நடிகர், மறைந்த, எஸ்.எஸ்.ராஜேந்திரன் எழுதிய சுய சரிதை!பிரமிளா என்ற பெண், சென்னையில் படித்துக் கொண்டிருந்தார். அவரது பாட்டி, என்னிடத்தில், 'இவளை எப்படியாவது சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும்...' என, அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார்.முதலாளி படத்தில், கதாநாயகியாக நடிப்பதற்கு பொருத்தமான தோற்றத்துடன் இருந்தார். பிரமிளாவை அழைத்து வந்து, சேலத்தில், 'மேக் - அப் டெஸ்ட்' செய்தோம். சரியாக இருந்தது. சொல்லிக் கொடுத்தபடி சிறப்பாக நடித்தார்.மற்ற நடிகர் - நடிகையரையும் பொருத்தமானவர்களையே தேர்ந்தெடுத்தோம். முதலாளி படம், மிகச்சிறப்பாக அமைந்தது.அக்காலத்தில், வடமாநிலத்தில், தேவிகா ராணி என்ற நடிகை பிரபலமாக இருந்தார். அவரது தோற்றம், பிரமிளா ஜாடை இருக்கும். அதை வைத்து, படத்தில், பிரமிளா பெயருக்கு பதிலாக, தேவிகா என்று பெயர் போடச் சொன்னேன்.படம் முடிந்து, சென்னையில் படத்தை போட்டுப் பார்க்கும்போது, என்னிடம், 'என் பெயரைக் காணோமே...' என்றார், பிரமிளா.'அதில், தேவிகா என்ற பெயர் வருகிறதல்லவா, அதுதான் நீ. இனிமேல் உன் பெயர் தேவிகா...' என்றேன்.முதலாளி படம், தீபாவளியன்று வெளி வந்தது. அப்போது, ஏராளமான பொருட்செலவில் தயாராகி வெளிவந்த படங்களை விட, மிக குறைந்த செலவில், குறுகிய காலத்தில் தயாரான, முதலாளி படம் முன்னணியில் நின்று, பெரும் வெற்றியை பெற்றது. அதில், 'ஏரிக்கரையின் மேலே, போறவளே பெண் மயிலே...' என்ற பாடலும், காட்சியும், ரசிகர்களின் மனதில் நிலைத்தன.இதையடுத்து, தி.மு.கழகப் பேச்சாளரும், நாடக - சினிமா எழுத்தாளருமான, ஏ.கே.வேலன், ஒரு கதையை என்னிடம் சொன்னார். அவரே இப்படத்தை இயக்கப் போவதாகவும், அதில் கதாநாயகனாக நான் நடிக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார். 'கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தீபாவளிக்கு தான், எனது முதலாளி படம் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த கதையும் வெற்றிப்படமாக நிச்சயம் அமைந்துவிடும். விரைவில் முடித்து, வரும், தை பொங்கலன்று வெளியிட்டு விடலாம்...' என்றேன்.உடனே அவர், படத்தின் பெயர், தை பிறந்தால் வழி பிறக்கும் என்றார்.பிரேம் நசிர், வி.கே.ராமசாமி, கே.ஏ.தங்கவேலு, ராஜசுலோசனா, எம்.என்.ராஜம் போன்ற பொருத்தமான நடிகர் - நடிகையரை தேர்ந்தெடுத்தோம். அதில், ஒரு ஜல்லி கட்டுத் திருவிழா.அக்காட்சியை எங்கள் ஊரான, சேடப்பட்டியிலேயே படமாக்க முடிவு செய்தோம். உண்மையிலேயே மாடு பிடிக்கும் ஜல்லி கட்டுத் திருவிழாவைப் போல, பெரிய அளவில் ஏற்பாடு செய்து விளம்பரப்படுத்தினோம். அப்பகுதியிலுள்ள அத்தனை ஜல்லிகட்டு மாடுகளுடன் மாபெரும் கூட்டத்தையும் கூட்டி விட்டோம். விழா துவங்கியது. அந்த ஜல்லிகட்டு விழாவில், ஒரு பெரும் பணக்காரனின் முரட்டுக் காளையை, நான் பிடித்து அடக்க வேண்டும். பிறகு, அதனால், எனக்கும், அவருக்கும் தகராறு ஏற்படுகிறது. அதுதான் கதை.எங்கள் வீட்டிலேயே ஒரு முரட்டுக்காளை இருந்தது. பல ஜல்லிகட்டுகளில் கலந்து வென்ற காளை அது. அதனிடம் நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன். அந்தக் காளையை பின் தொடர்ந்து ஓடிப்போய் அடக்கினேன். அதுவும், என்னோடு இணைந்து நன்றாக நடித்தது. காட்சி அற்புதமாக அமைந்தது.படத்தில் இடம்பெற்ற, 'தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம். தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்... அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே... 'மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு கிளை பாரமா, கொடிக்குக் காய் பாரமா, பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா... ஆசையே அலை போலே, நாமெல்லாம் அதன் மேலே...' போன்ற பாடல்கள், மக்களைப் பாட வைத்தன. இன்றும் மனதில் நின்று நிலைக்கின்றன.தை பிறந்தால் வழி பிறக்கும் படம், தை பொங்கலன்று வெளியிடப்பட்டது. அப்போது வெளிவந்த படங்களில் பெரும் வெற்றிப் படமாக அது அமைந்தது.முதலாளி படத்தின் வெற்றியால், எம்.ஏ.வேணு முதலாளி ஆனது போல, தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில் கிடைத்த லாபத்தை வைத்து, சென்னை, கோடம்பாக்கத்தில், 6 ஏக்கருக்கு மேல் நிலம் வாங்கி, தன் தந்தை பெயரால், 'அருணாச்சலம் ஸ்டூடியோ' என்ற பெரிய படப்பிடிப்பு நிறுவனத்தை நிறுவினார், என் குடும்ப நண்பர், ஏ.கே.வேலன்.நடிகர் பி.எஸ்.வீரப்பா, 'பி.எஸ்.வி.பிக்சர்ஸ்' சார்பில் தயாரித்த படம், பிள்ளைக் கனியமுது. இப்படத்தில் மறக்க முடியாத ஒரு பயங்கர நிகழ்ச்சி. கதாநாயகியை துரத்திக் கொண்டு ஒரு சிறுத்தை வரும். அப்போது, நான் சென்று சிறுத்தையுடன் போராடி, அதைக் கொன்று அவளை காப்பாற்ற வேண்டும்.இதுபோன்ற மிருகங்களை சினிமாவுக்கு வாடகைக்கு கொடுப்பார், கோவிந்தராஜன். 'பாராமவுண்ட் ஸ்டூடியோ'வில், அதற்கான படப்பிடிப்பு நடக்க இருந்தது.'அண்ணே, இந்த சிறுத்தையை மலையிலிருந்து பிடித்து வந்து, ஒரு வாரம் தான் ஆகிறது. கால்களில் உள்ள விரல் நகங்களை எல்லாம் ஒட்ட அறுத்து விட்டேன். வாயையும் நன்றாக தைத்து விட்டேன்.'நீங்கள் தைரியமாக சண்டை போடலாம். ஆனால், சிறுத்தையின் பலவீனமே கழுத்துக்கு கீழ் உள்ள குரல்வளையில் தான் இருக்கிறது. அவசரத்துக்கு தங்கள் இரு கைகளாலும் அந்த குரல்வளையை பிடித்து நன்றாக அழுத்திக் கொண்டால், சிறுத்தை பலம் இழந்துவிடும்...' என்ற தந்திரத்தை, எனக்கு சொல்லிக் கொடுத்தார், கோவிந்தராஜன்.நானும், 'டூப்' அதாவது, எனக்காக வேறு ஆளை போடாமல், சிறுத்தையுடன் மோதுவது என்ற முடிவுக்கு வந்தேன். மூன்று கேமராக்கள் முன்னும், பின்னும், மேலேயிருந்தும் படமாக்க இருந்தன.சிறுத்தையும், நானும் மோதினோம். பிறகு என்ன நடந்தது...- தொடரும்.எஸ். எஸ். ராஜேந்திரன்