உள்ளூர் செய்திகள்

நான் வந்த பாதை! (2)

பட்டாசு வெடித்து மிரண்ட கழுதைக்கு சொந்தக்காரன் பெயர், கந்தன்.சிரமப்பட்டு, கழுதையைப் பிடித்து நிறுத்தி, நெருப்பை அணைத்தான். என்னை எரித்து விடுபவன் போல முறைத்தவன், கோபத்தை அடக்கியவாறு, கழுதையை இழுத்துக் கொண்டு போனான். நான் பெரிய வீட்டுப் பிள்ளை ஆயிற்றே.ஊருக்கு அருகில் எங்களுக்கு ஒரு தோட்டம் இருந்தது. அங்குள்ள கிணற்றில், பள்ளி மாணவர்களுடன் அவ்வப்போது குளிப்பது வழக்கம்.இது நடந்து சில நாட்களுக்கு பின், ஒருநாள், என்னோடு குளித்துக் கொண்டிருந்த பையன்கள் அனைவரும் போய் விட்டனர். நான் மட்டும் படிக்கட்டு ஓரத்தில் நின்று குளித்துக் கொண்டிருந்தேன். அப்போது, அங்கு வந்தான், கழுதைக்கு சொந்தகார கந்தன்.நான் தனியாக இருப்பதைப் பார்த்து, கிணற்றின் படிக்கட்டு வழியாக இறங்கி வந்தான். என்னை கிணற்றின் ஆழமான பகுதிக்கு இழுத்துச் சென்று, தலையை பிடித்து தண்ணீருக்குள் அழுத்தினான். நான் திணறி, மேலே வந்தேன். திரும்பத் திரும்ப என்னை தண்ணீருக்குள் அழுத்தவே முயன்றான், கந்தன். அச்சமயம், கிணற்றுக்கு மேலிருந்து ஒருவர், பீடி பற்ற வைத்தபடி, 'டேய் கந்தா, என்ன பண்றே... என் மருமகனுக்கு உடம்பெல்லாம் நல்லா தேய்த்து குளிப்பாட்டி விடுடா...' என்றார், அதட்டலான குரலில். அதை கேட்டு மிரண்டு, என்னை இழுத்து படிக்கட்டு வரை வந்தான், கந்தன்.வந்திருந்தவரோ, என் ஒன்று விட்ட மாமா, துரைச்சாமி தேவர். முரட்டுத்தனமானவர்; அடிபிடி சண்டையில் அடிக்கடி சிறை சென்று வந்தவர்.கிணற்றுக்குள் இருந்த கந்தன், கதறி அழுதான்.'சின்னையா, நீங்க தான் என் தெய்வம். இப்போ, என் உயிர் உங்க ஒரு வார்த்தையில தான் இருக்கு. நீங்க உண்மையை சொல்லிட்டா, உங்க மாமா என்னை எப்படியும் கொன்னு போடுவாரு. சாயங்காலத்துக்குள்ள எம் பிணத்தை பொதச்சிடுவாங்க.'என் பெண்டாட்டி, பிள்ளைகளெல்லாம் தெருவுக்கு வந்துடும். பிறகு, பிச்சையெடுத்து பிழைக்கிறதை தவிர, அவங்களுக்கு வேற வழி கிடையாது. ராஜய்யா, நீங்க தான் எங்களை காப்பாத்தணும்.'இனி, நீங்க தான் எங்க குல தெய்வம். எதையாவது சொல்லி, என்னை காப்பாற்றுங்கள்...' என, கால்களை பிடித்து விம்மி விம்மி அழுதான், கந்தன்.என்னால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை. என் கண்களும் கலங்கி விட்டன.மீண்டும் மாமாவின் முரட்டுக் குரல். 'என்னடா கந்தா, இன்னுமா குளிக்கறீங்க?'கந்தன் விடுகிற கண்ணீர், கிணற்று நீரை உப்பாக மாற்றிக் கொண்டிருந்தது. என் உள்ளம் இளகி, 'அது ஒண்ணுமில்ல மாமா, நான் தான் நீச்சல் பழகணும்ன்னு நீந்தி, நடுக் கிணத்துக்குள்ள போய் சிக்கிக்கிட்டேன். நல்லவேளையா, நம்ம கந்தன் தான் வந்து என்னை காப்பாத்தினான்...' என்றேன்.கொஞ்ச நேரத்துக்கு முன், என்னை கொலை செய்ய திட்டமிட்டு, பாதி உயிரை அழித்து விட்ட பாதகனுக்கு, உயிர் பிச்சை கொடுத்தேன்.நாங்கள் கிணற்றுக்கு மேலே வந்து சேர்ந்தோம்.'சரி சரி... கந்தா, என் மருமகனை அழைச்சுக்கிட்டு போய், பத்திரமா வீட்டில் விட்டுட்டு போ...' என, ஆணையிட்டார், மாமா.உயிர் தப்பிய உணர்வோடு, வரும் வழியெங்கும் அழுதபடியே, 'சின்னய்யா, ராஜய்யா, நீங்க தெய்வமய்யா... இந்த சின்ன வயசுலயே இவ்வளவு இரக்க குணம் இருக்கேய்யா. இந்த பாவியின் உயிரை காப்பாத்தியவரும் நீங்க தான் சாமி.'எங்க குடும்பத்துக்கே இனி சாமி, நீங்கதாய்யா. இனி, வாழ்க்கையில எந்த குறையும் உங்களுக்கு வராது. நீங்க பெரிய ஆளாகி, பல குடும்பங்களை காப்பாத்தப் போறீங்க. இனி, எமன் கூட உங்ககிட்ட வரமாட்டான்யா. நீண்ட ஆயுளோட இருப்பீங்க...' எனக் கூறி, எங்கள் இல்லம் வரை வந்து என்னை சேர்த்தான்.எங்கள் கிராமத்தில், 5ம் வகுப்பு வரை படித்து முடித்தேன். மேற்கொண்டு படிப்பதென்றால், வேறு நகர பள்ளியில் தான் சேர வேண்டும். என் வயது காரணமாக, அங்கேயும், அதே, 5ம் வகுப்பில் தான் சேர்த்துக் கொள்வர்.எங்கள் கிராமத்திலிருந்து, 16 கி.மீ.,க்குள் தான் இருந்தது, புளியம்பட்டி. அங்கு, 'புளிய மாநகர் பாய்ஸ் கம்பெனி' என்ற, நாடக குழு இயங்கி வந்தது. நாடக குழுவின் உரிமையாளர், சுப்பு ரெட்டியார், என் அப்பாவின் நெருங்கிய நண்பர். எங்கள் இல்லத்துக்கு வந்து, என்னைப் பார்த்து விசாரித்து, என் அப்பாவிடம் பேசினார்.'அய்யா... பையனை இன்னும் ஓராண்டு கழித்துதானே வேறு ஊரில் உள்ள உயர்நிலை பள்ளியில் சேர்க்கப் போகிறீர்கள்... பார்க்க அழகாக இருக்கிறான். அதுவரை, எங்கள் நாடக குழுவில் சேர்ந்து நடிக்கட்டுமே...' என்று சொல்லி, அப்பாவை சமாதானப்படுத்தி, என்னை அழைத்து போனார். அந்த காலத்திலேயே கிராமபோன் பெட்டி, எங்கள் இல்லத்தில் இருந்ததால், அதில் பாடல்களை கேட்டு கேட்டு, நானும் ஓரளவுக்கு பாடுவேன்.புளியம்பட்டியில், நடிகர்களோடு எனக்கும் நாடகப் பயிற்சி அளிக்கப்பட்டது. நாடக குழுவில் நாங்கள் அத்தனை பேரும் பையன்கள் தான். அதனால் தான், பாய்ஸ் கம்பெனி என்று பெயர் சூட்டப்பட்டது.எனக்கு சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றிய, 'வீர அபிமன்யு' நாடகத்தில், அபிமன்யு மற்றும் 'பவளக்கொடி' நாடகத்தில், அர்ஜுனன் வேடங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நானே பாடி நடிக்க வேண்டும். அக்காலத்தில் பெட்ரோமாக்ஸ் லைட்டுகளை வைத்து தான், நாடகங்களை நடத்துவது வழக்கம்விருதுநகர், பாலகிருஷ்ணா எலக்ட்ரிக் தியேட்டரில் முகாமிட்டு, நாடகங்களை நடத்தத் துவங்கியது, எங்கள் நாடக குழு. அக்காலத்தில் ஒரே நாடகம், வாரக் கணக்கில் நடைபெறும்.அச்சமயம், நாட்டில் நடைபெறும் ஸ்பெஷல் நாடகங்களில் நடிப்போருக்கும், இது மாதிரி நாடக கம்பெனிகளில் நடிப்பவர்களுக்கும், அவர்களாகவே பெயருக்கு முன்னால் ஒரு பட்டத்தை போட்டு விளம்பரப்படுத்துவர்.அது மாதிரி, நாடக ஆசிரியர் மயில் வாகனம் என்பவர், எனக்கும் அறிமுக வாசகங்கள் போட்டு விளம்பரப்படுத்தினார். அந்த அறிமுக வாசகங்கள் என்ன தெரியுமா... -தொடரும் பல சிறந்த கலைஞர்களை உருவாக்கிய நாடகக் குழு, மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி. நாடக காட்சிகளெல்லாம் வியக்கத்தக்க வகையில் தத்ரூபமாக இருக்கும். அங்கே நடித்து பயிற்சி பெற்றவர்கள் தான், கே.பி.கேசவன், காளி என்.ரத்தினம், பி.யு.சின்னப்பா மற்றும் எம்.ஜி.ஆர்., ஆகியோர்.- எஸ்.எஸ். ராஜேந்திரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !