உள்ளூர் செய்திகள்

இடியாப்பக்காரர்!

'இடியாப்பம்... இடியாப்பம்...' என்ற கணீரென்ற குரல், துாரத்தில் எங்கோ ஒலித்தது. 'இந்தக் குரலை கேட்டு, எத்தனை மாதங்களாகி விட்டன...' என, நினைத்தான் சித்திரைச் செல்வன்.'இ...டி...யா...ப்...ப...ம்...' என்று ராகத்துடன் இழுத்து உச்சரிக்கும் அவரின் குரலிலேயே, வசீகரம் இருக்கும். 60 வயதிற்கு மேலிருக்கும் அவருக்கு நல்ல திடகாத்திரமான உடல்.அவர் விற்கும் இடியாப்பம், பூவைப் போன்று, மெல்லிய இலைகளாக, ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல், சுவையாக இருக்கும்; விலையும் மலிவு.அதனால், வேறு சிலர் இடியாப்பம் விற்க வந்தாலும், பெரும்பாலானோர் பெரியவரிடம் தான் வாங்குவர்.முதன் முதலில் அம்மாவுடன் இப்பகுதிக்கு குடிவந்த புதிதில், வீட்டு உணவுகளை தவிர்த்து, வேறெதையும் தொடுவதில்லை என்று சங்கல்பம் செய்திருந்தான், சித்திரைச் செல்வன். வெளி உணவுகளால் வயிற்றில் அல்சர் வந்து, அதனால் தான், தன் அம்மாவை சென்னைக்கு அழைத்து வந்திருந்தான்.அம்மாவிற்கு உடல் நலமில்லாது போன ஒருநாளில், வேறு வழி இல்லாமல், பெரியவரிடம் இடியாப்பம் வாங்கிச் சாப்பிட்டான்; அபாரமான சுவையுடன் இருந்தது; வயிற்றுக்கும் எந்த உபத்திரமும் செய்யவில்லை.அவன் அம்மாவுக்கும், பெரியவர் கொண்டு வரும் இடியாப்பங்கள் பிடித்துப் போக, சமைக்க அலுப்பாய் இருக்கிற நாட்களில் எல்லாம், இடியாப்பம் வாங்கினாள்.அடிக்கடி அவன் பெரியவரிடம் இடியாப்பம் வாங்க துவங்கியதால், இருவருக்குமிடையே நெருக்கம் துளிர் விட, இடியாப்பம் வாங்கும் போதெல்லாம் ஒன்றிரண்டு வார்த்தைகள் அவனுடன் பேசுவதை வழக்கமாக்கி கொண்டார்.ஒருமுறை, 'தம்பிக்கு சொந்த ஊரு விருதுநகர் பக்கத்திலயா...' என்று கேட்டார், பெரியவர்.'ஆமா... அதெப்படி அவ்வளவு சரியாக கண்டுபிடிச்சீங்க...' என்றான், ஆச்சரியத்துடன்!'நீங்க பேசுறதுல அப்படியே தெற்கத்தி வாடை வீசுதே...' என்றவர், 'எங்களுக்கும் பூர்வீகம் அந்தப் பக்கம் தான்; ராமநாதபுரம் மாவட்டத்துல இருக்கிற, ராஜசிங்க மங்களம் தான் சொந்த ஊரு...' என்றார்.ராமநாதபுரம் என்றதும், சித்திரைச் செல்வனுக்கு, சண்முகநாதனின் ஞாபகம் வந்தது. அருப்புக் கோட்டையில் விடுதியில் தங்கி, ஒன்பதாம் வகுப்பு படித்த போது, நண்பன் ஆனான், சண்முகநாதன்.ராமநாதபுரம் அருகில், அழகன் குளம் என்ற கிராமத்திலிருந்து வந்திருந்தான். பத்தாம் வகுப்பு படிக்கும்போது, ஒருமுறை, ஊரில் திருவிழா என்று சித்திரைச் செல்வனை, தன் கிராமத்திற்கு அழைத்துச் சென்றான், சண்முகநாதன்.அப்போதெல்லாம், விடுமுறை நாட்களில் விடுதி நண்பர்கள் தத்தம் ஊர்களுக்குப் போனபின், ஒருவருக்கு ஒருவர், கடிதம் எழுதி, நலம் விசாரித்து, பிரிவு துயரை ஆற்றி கொள்வர்.சண்முகநாதனுக்கு எழுதும் கடிதத்தில், பார்த்த சினிமா, பாதித்த சம்பவங்கள், உள்ளூரில் நடந்த நிகழ்வுகள் மற்றும் 'சைட்' அடித்த பெண்கள் என்று பக்கம் பக்கமாய் எழுதுவான், சித்திரைச் செல்வன். ஆனால், அதையெல்லாம் அவன் தன் குடும்பத்தினர் அனைவரிடம் கொடுத்து, படிக்கச் சொல்லி பந்தி வைத்திருப்பான் என்பதை சித்திரைச் செல்வன் அறிந்திருக்கவில்லை.அதனால், அவன் அழகன்குளத்திற்கு போகும் முன்னாலேயே, அவனுடைய கடிதங்களால் சண்முகநாதனின் குடும்பத்தினரால் அறியப்பட்டு இருந்தான்.சண்முகநாதன் குடும்பத்தினர் அனைவருமே மிகவும் அன்பாகவும், பிரியத்துடன் பழகினர். அதிலும், சண்முகநாதனின் அக்கா வசந்தி, அவனை, தன்னுடைய இன்னொரு தம்பியாகவே பாவித்தாள். அவனுக்கும் உடன் பிறந்த சகோதரிகள் இல்லை என்பதால், வசந்தியிடம் மிகவும் ஒட்டுதலாய் இருந்தான்.அவனைப் பார்த்ததும், வசந்தி, 'உன் ஆளு இப்ப எப்படிடா இருக்கா... அவகிட்ட உன் காதலை சொல்லிட்டியா, இல்லயா...' என்று கேலி செய்ததும், அவனுக்கு வெட்கமாக போய் விட்டது.அவள் தான், ஒருநாள், காலை உணவாக, ஆவியில் வேக வைத்த, வெள்ளை வெளேரென்று நூல் பின்னலாய் இருந்த உணவை, சுடச்சுட அவனுக்கு பரிமாறினாள். அதற்கு முன், அதுபோன்ற உணவை அவன் பார்த்தது கூட இல்லை.'இதென்னக்கா நூல் நூலா... இதை எப்படி சாப்பிடுறது...' என்றான் ஆச்சரியம் பொங்கும் குரலில்!'இடியாப்பம்டா... நீ சாப்பிட்டதே இல்லயா...' என்றாள்.அதுவரை, இடியாப்பம் என்ற பெயரை கூட அவன் கேட்டதில்லை. பண்டிகை நாட்களில் தான், அவன் வீட்டில் இட்லி, தோசையே செய்வர்.'இல்லக்கா... இன்னைக்கு தான் பாக்கிறேன்...' என்று சொல்லவும், சிறிது இடியாப்பத்தை பிய்த்து, அருகிலிருந்த சர்க்கரை கலந்த தேங்காய்ப்பாலில் புரட்டி, அவன் வாயில் பிரியமாய் திணித்தாள், வசந்தி.வழுக்கிக் கொண்டு வயிற்றுக்குள் போனது. அவன் சாப்பிட சாப்பிட, இடியாப்பங்களை போட்டு கொண்டே இருந்தாள், வசந்தி.பின், பிளஸ் 2 வகுப்பு துவங்கிய புதிதில், சண்முகநாதனின் அப்பா இறந்து விட்டதால், டி.சி., வாங்கி, ராமநாதபுரத்தில் உள்ள பள்ளியில் சேர்ந்து விட்டான், சண்முகநாதன்.சில மாதங்களாக இருவருக்குமிடையே தொடர்ந்த கடிதங்கள், பின், சிறிது சிறிதாய் குறைந்து, ஒரு கட்டத்தில், சுத்தமாய் நின்று விட்டது.'என்ன தம்பி... யோசனையில் ஆழ்ந்துட்டீங்க...' என்ற பெரியவரின் குரலில் நினைவுக்கு வந்து, 'ஒண்ணுமில்ல...' என்பது போல் தலையாட்டினான், சித்திரைச் செல்வன்.இடியாப்பக்காரரின் பூர்வீகம் பற்றி அம்மாவிடம் சொன்னான். அவள் சந்தோஷப்பட்டு, இடியாப்பம் வாங்கும் போதெல்லாம் அவருடன் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவதை வழக்கமாக்கி கொண்டாள்.இந்நிலையில், கம்பெனியில் ஏற்பட்ட சிறு பிரச்னையில், சித்திரைச் செல்வன் வேலையை விட, 'காத்த தவிர, இங்க எல்லாத்தையும் காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்குது... வருமானத்துக்கு வழி இல்லாம, இந்த பட்டணக்கரையில எப்படி காலந்தள்ளுறது... ஊருக்கு புறப்படு; வேற வேலை கிடைச்சதும் சென்னை வரலாம்...' என்றாள், அம்மா.'அது சரியா வராது...' என்று அவன் கூறியதும், தன் செலவுகளையாவது குறைத்துக் கொள்ளலாம் என்று, எவ்வளவு சொல்லியும் கேளாமல், கிராமத்திற்கு புறப்பட்டுச் சென்றாள், அம்மா.கையிலிருந்த சேமிப்பிலிருந்து சிறுகச் சிறுக செலவு செய்து, சாப்பிட்டும், சாப்பிடாமலும், அவன் தீவிரமாய் வேலை தேடிய நாட்களில், காலை உணவை பெரும்பாலும் தவிர்த்து விட்டதால், பெரியவரிடம் இடியாப்பம் வாங்குவதில், நீண்ட இடைவெளி விழுந்தது.ஒருநாள், வீட்டு காம்பவுன்ட் முன், 'இ...டி..யாப்...பம்...' என, பெரியவர், உரத்த குரலில் கூவ, மாடியிலிருந்தவாறே, 'வேணாம்...' என்று கையசைத்தான், சித்திரைச் செல்வன்.'தம்பி... உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்; இறங்கி வாங்க...' என்றார் கோபமாய்!அவன் கீழே இறங்கி வந்ததும், 'ஏன் தம்பி... வேலை இல்லன்னா இப்படியா கொல பட்டினியா கிடக்குறது...' என்று உரிமையாய் கடிந்து, ஒரு கவரில், இடியாப்பங்களை வைத்து, அவனிடம் நீட்டினார்.அவன் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல், வலுக்கட்டாயமாக கொடுத்துப் போனார். அன்று மட்டுமல்லாமல், அவனுக்கு வேலை கிடைக்கும் வரைக்கும், நாள் தவறாமல், இடியாப்பங்களை தந்து கொண்டிருந்தார்.அவனுக்கு வேலை கிடைத்து, சம்பளம் வாங்கியதும், அதுவரை சாப்பிட்டதற்கான பணத்தை கணக்கு பார்த்து தர முயன்ற போது, அதை வாங்க மறுத்து விட்டார்.பின், சித்திரைச் செல்வனுக்கு திருமணமாகி, அவர்கள் அந்த பகுதியிலேயே, கொஞ்சம் வசதியாய், வேறு வீடு மாறிய போதும், பெரியவரிடம் இடியாப்பம் வாங்குவது தொடர்ந்தபடி தான் இருந்தது.ஆரம்பத்தில், 'தெருவில் விற்பவர்களிடம் சுத்தமாக இருக்காது...' என்று, அவன் மனைவி இடியாப்பம் வாங்க மறுத்தாலும், பின்பு அவளாகவே, ஒருமுறை அவரிடம் இடியாப்பம் வாங்கி சாப்பிட்டு பார்த்தவள், பின், அடிக்கடி வாங்கத் துவஙகினாள்.ஒருமுறை, 'அப்படி நீங்க மட்டும் என்ன மந்திரம் போட்டு இடியாப்பம் செய்கிறீங்க தாத்தா... எங்க வீட்டில் செய்யிற இடியாப்பம், இத்தனை சுவையாக இருக்கிறதில்லயே...' என்று கேட்டாள், அவன் மனைவி.'அதொன்னும் பெரிய கம்ப சூத்திரமில்ல தாயி...' என்றவர், இடியாப்பம் செய்கிற முறையை, அதில் சேர்க்க வேண்டிய பொருட்களின் அளவுகளோடு பொறுமையாய் விளக்கினார்.மறுநாள் செய்து பார்த்து, 'அவ்வளவு ஒண்ணும் சரியா வரலையே தாத்தா...' என்றாள், சித்திரைச் செல்வனின் மனைவி.'எந்த ஒரு உணவுப் பொருளுக்கும், அத எப்படி செய்றதுன்னு வழிமுறை இருந்தாலும், அதச் செய்கிற கைப்பக்குவம்ன்னு ஒண்ணு இருக்குமில்ல... என் மருமகளோட கைப்பக்குவத்துல தான், இத்தனை ருசியா இருக்குதோ என்னவோ...' என்று பெருமையாக சொன்னார், பெரியவர்.அவரிடம் இடியாப்பம் வாங்கிச் சாப்பிடும் போதெல்லாம் சித்திரை செல்வனுக்கு, வசந்தி அக்காவின் ஞாபகம் வரும்.அன்று, சுயநிதி பொறியியல் கல்லுாரி ஒன்றில், அதன் கட்டுமான பிரிவின் தலைவர் பதவிக்கு, நேர்முகத் தேர்விற்கு சென்றிருந்தான்.நேர்முகத் தேர்வு முடிந்து, வீட்டிற்கு திரும்பும் போது, சைக்கிளில் சென்ற இடியாப்பக்காரரை பார்த்ததும், பைக்கை நிறுத்தினான்.வீடு பக்கத்தில் தான் இருக்கிறது என்று சொல்லி, அவனை வற்புறுத்தி அழைத்துச் சென்றார், பெரியவர். வரிசையாய் இருந்த குடிசை வீடுகளில் ஒன்றில் நுழைந்தார். அங்கு, வசந்தி அக்காவைப் பார்த்ததும், திகைத்து போனான், சித்திரைச் செல்வன்.அவனை பார்த்ததில், மிகவும் சந்தோஷமானாள், வசந்தி.துரும்பாய் இளைத்து, கறுத்து போயிருந்த வசந்தியைப் பார்த்ததும், 'எப்படி இருந்த அக்கா இப்படி போயிட்டாளே...' என நினைத்து, அழுகை பொங்க, 'என்னக்கா... இப்படி உடைஞ்சு போயிட்டே...' என்று ஆற்றாமையில் விசனப்பட்டான். 'எனக்கென்னடா சந்தோஷமாகத் தான் இருக்கேன்...' என்று முகம் மலர்ந்து சொன்னாள், வசந்தி.அதன்பின், வசந்தி, பெரியவரின் மருமகள் என்பதையும், அவளின் புருஷன், 2002ல் ஏற்பட்ட சுனாமியில் இறந்த விஷயத்தையும் அறிந்து ரொம்பவும் துக்கப்பட்டு போனான்.சண்முகநாதனை பற்றி விசாரித்த போது, 'அவனுக்கென்ன... படிச்சான், வேலைக்கு போனான்; எவளையோ கல்யாணம் செய்து, புள்ளை குட்டிகளோடு சந்தோஷமா இருக்கான்; ஆனா, எங்க இருக்கான்னு தான் தெரியல...' என்றாள் விட்டேத்தியாய்!'ஏன்க்கா... இப்படி எந்த ஒட்டுதலும் இல்லாம சொல்ற...' என அவன் கேட்க, பெரியவர் தான், 'சண்முகநாதன் நல்லா வசதியா வாழுது; ஆனா, வசந்தி, என் பையனை கல்யாணம் செய்துகிட்டதுல அவங்க யாருக்கும் இஷ்டம் இல்ல. அதான், வசந்திய வெறுத்து ஒதுக்கிட்டாங்க.'என் பையன் இறந்ததும் நான் கூட சொன்னேன்... 'உங்க குடும்பத்தோட போய் இருந்துக்கம்மா'ன்னு! வசந்தி தான், 'நானும் போயிட்டா, வயசான காலத்துல உங்கள யாரு பாத்துப்பாங்க'ன்னு பிடிவாதமா என் கூடவே இருந்து கஷ்டப்படுது...' என்று கூறி, கண் கலங்கினார்.வசந்திக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் இருந்தான்; பிறவியிலேயே பேசும் திறன் அற்றவன்.விடைபெறும் போது, 'அடிக்கடி வந்து போய்க்கிட்டு இருடா....' என்றாள் வசந்தி. ஆனால், அதன்பின், ஒவ்வொரு நாளும், வசந்தியை பார்க்க போக வேண்டும்; வீட்டிற்கு ஒருமுறையேனும் அழைத்து வந்து உபசரிக்க வேண்டுமென்று நினைப்பான்; ஆனால், வேலை பளுவில், அது இழுத்துக் கொண்டே போனது.பெரியவரும் இடியாப்பம் விற்க வரவில்லை. ஒருவேளை, அவருக்கு உடல் நலமில்லையோ என நினைத்து, ஒருநாள் அவரை பார்த்து விட்டு வர வேண்டுமென்று நினைத்துக் கொள்வான். அதுவும் முடியாமல், பல மாதங்கள் கடந்து விட்டன.இன்று, அவரின் குரலைக் கேட்டதும், வேலைக்கு கிளம்பும் அவசரத்திலும், வாசலுக்கு விரைந்தான், சித்திரைச் செல்வன்.ஆனால், சைக்கிளில் வந்தது, வசந்தியின் மகன். பெரியவரின் பதிவு செய்த குரல், ஸ்பீக்கரில் ஒலித்தபடி இருந்தது.அவனை நிறுத்தி விசாரித்த போது, சென்னையில், டிசம்பர் மாதம் பெய்த பெருமழையில், அவர்கள் வீடு வெள்ளத்தில் அடித்து சென்றதும், அதில், பெரியவர் இறந்து போனதையும் அவன் சைகையில் விளக்கினான். இதை கேட்டதும் நெஞ்சம் கலங்கி, கண்ணீர் மல்க சிலையாக நின்றான், சித்திரைச் செல்வன்.சில்வியாமேரி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !