உள்ளூர் செய்திகள்

நான் வந்த பாதை! (23)

திரைப்பட நடிகர், மறைந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் எழுதிய சுய சரிதை!தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில், தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, என் முகத்தில், அக்னி திராவகத்தை ஊற்ற திட்டமிட்டு, 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தயாராக முன் வரிசையில் என் எதிரே அமர்ந்திருந்தார். அவருக்கு நிறைய சாராயத்தை வாங்கிக் கொடுத்து தயார்படுத்தி இருந்தனர், எதிர்க்கட்சியினர்.போதை அதிகமாகியதால், என் பேச்சு முடியும் சமயம், தள்ளாடி எழுந்து திராவகத்தை வீசி அடித்தார். நான் ஒதுங்கிக் கொண்டதால், என் அருகில் நின்றிருந்த நண்பரின் வேஷ்டியில் திராவகம் பட்டு தீப்பற்றியது. உடனே, ஆடையை அவிழ்த்து எறிந்து தப்பி விட்டார்.மக்கள் இதை கவனிக்கும் முன், நான் கீழே குதித்து, திராவகம் ஊற்றியவரை தாக்கினேன். காரில், தள்ளாடிய நபரை அமர வைத்து, தேனி தேர்தல் அலுவலகத்துக்கு அழைத்து சென்றேன்.ஐந்தாறு குடம் தண்ணீரை தலையில் ஊற்றி குளிப்பாட்டி, வேறு ஆடைகள் கொடுத்து அமர செய்தேன். போதை தெளிந்தவர், என்னைப் பார்த்து தேம்பி அழுதார்.'அந்த கூட்டத்துல என்னை நீங்க காட்டிக் கொடுத்திருந்தா, அங்கேயே என்னை சதை சதையா பிச்சு போட்டிருப்பாங்களே. ஏன்யா இந்த கொலைகாரனை காப்பாத்துனீங்க. உங்களை அழிக்க வந்த பாவியாச்சே நானு...' என, கதறி அழுதார்.மனந்திருந்திய அவரை தேற்றி, தேனி தேர்தல் அலுவலகத்திலேயே தங்கியிருந்து, தேர்தல் பணிகளில் ஈடுபட சொன்னேன்.கடந்த, 1962 சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில், 50 பேர் வெற்றி பெற்றோம். எனினும், காஞ்சிபுரம் தொகுதியில், அண்ணாதுரை வெற்றி பெறவில்லை என்ற செய்தி, மிகுந்த வேதனை அளித்தது. கலைத்துறையை சேர்ந்தோர், பட அதிபர்கள், இயக்குனர்கள், நடிகர் - நடிகையர் என, பலரும் வந்து, என்னை வாழ்த்திச் சென்றனர்.ஒரு விழாவே எடுத்து விட்டார், எம்.ஜி.ஆர்., குறிப்பாக, என் பால்ய நண்பர் சிவாஜி கணேசன், 'உலகிலேயே தேர்தலில் போட்டியிட்டு, சட்டசபை உறுப்பினரான முதல் நடிகர், என் நண்பர், எஸ்.எஸ்.ஆர்., தான்...' என, விழா மலர் ஒன்றில் எழுதியிருந்தார்.எவ்வளவோ இன்னல்கள், எதிர்ப்புகளுக்கு ஈடுகொடுத்து, என்னை சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுத்தனர், தேனி தொகுதி மக்கள். உடனடியாக, தேவரய்யாவை சந்திக்க சென்றேன்.மகிழ்ச்சியில் அவர், என் உடல் முழுவதையும் தொட்டுப் பார்த்து, 'நான் அனுப்பி வைத்தபடியே வந்து சேர்ந்திருக்கிறாய்...' என, பெருமகிழ்ச்சி அடைந்தார்.பிறகு, நான் நடித்து வெளிவந்த படங்களிலெல்லாம், லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நடிக்கும் என, விளம்பரப்படுத்தி வெளியிட்டனர்.சட்டசபைக்கு சில சமயம் பார்வையாளராக சென்றிருக்கிறேன். அப்போதே அவைத் தலைவர், அமைச்சர்கள் முதல் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்களும் ரசிப்புத் தன்மையோடு என்னை கவனிப்பர், பேசுவர்.இப்போது நானும் சட்டசபை உறுப்பினராகி, அவர்களுடன் அமர்ந்திருக்கிறேன். மகிழ்ச்சி இல்லாமல் இருக்குமா? நான் சட்டசபையில் கலந்துகொண்டு பேசிய சுவையான அனுபவங்களை பற்றி நிறைய எழுதலாம். சூடான விவாதங்களிலும், சுவையான செய்திகள் பற்றியும் நான் பேசியிருக்கிறேன். ஒரு சம்பவத்தை இங்கே குறிப்பிடுவது ரசனையாக இருக்கும் என கருதுகிறேன்...அப்போது, காங்கிரஸ் கட்சி சார்பில், ஈரோடு சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டவர், தட்சிணாமூர்த்தி கவுண்டர். என்னுடைய பெரிய ரசிகர். நான் சிறு வயதில், அரைக்கால் சட்டை போட்டு, டி.கே.எஸ்., நாடக குழுவில், ஈரோடு சென்ட்ரல் டாக்கீசில் நடித்துக் கொண்டிருந்த காலத்திலிருந்தே எனக்கு அறிமுகமானவர்.டி.கே.எஸ்., நாடக குழு உரிமையாளர்களுக்கு நண்பர். என் மீது நிறைய அன்பு கொண்டவர். அகன்ற நெற்றி நிறைய விபூதி பூசி, சந்தன பொட்டுக்கு மேல், செந்துார பொட்டுடன் காட்சி தருவார்.ஒருநாள், சட்டசபை நடந்து கொண்டிருந்தபோது, பேசுவதற்கு அனுமதி கேட்டேன். அவைத் தலைவர் அனுமதித்தார்.'அவைத் தலைவர் அவர்களே, இந்த மாமன்றத்தில், வக்கீல்கள், டாக்டர்கள், இதுபோன்று வேறு துறைகளில் பணியாற்றுகிறவர்களும் சட்டசபை உறுப்பினர்களாக இருந்துள்ளனர். அவர்களெல்லாம் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, உடனே சென்று, அவர்கள் பணியில் ஈடுபட முடியும்.'ஆனால், சினிமா துறையில் நடிகனாக பணியாற்றுகிற நான், இங்கிருந்து போய், உடனே என் பணியில் ஈடுபட முடியாது. ஸ்டூடியோவுக்கு சென்று, முகத்தில், 'மேக் - அப்' செய்து கொள்வதற்கே ஒரு மணி நேரத்துக்கு மேல் தேவைப்படும்.'ஆகவே, வீட்டிலேயே, 'மேக் - அப்' போட்டு, இங்கே வந்து விட்டால், சபை நடவடிக்கைகளில் கலந்துகொண்ட பின், நேராக படப்பிடிப்பில் போய் கலந்து கொள்ள முடியும். ஆக, எனக்கும், தயாரிப்பாளருக்கும் ஒரு மணி நேரம் மிச்சமாகிறது. எனவே, 'மேக் - அப்' உடன், சட்டசபை வந்து செல்வதற்கு தங்கள் அனுமதி வேண்டும்...' என கேட்டேன்.'மேக் - அப்புடன் சட்டசபைக்கு வருவதை அனுமதிக்க இயலாது...' என்றார், சபாநாயகர்.உடனே, 'அதோ பாருங்கள், ஈரோடு சட்டசபை உறுப்பினர் தட்சிணாமூர்த்தி கவுண்டரை... நெற்றியில் விபூதி பட்டை, சந்தன குங்குமப் பொட்டு. ஆக, பாதி முகம், 'மேக் - அப்' போட்டு தினமும் வருகிறார். நான் மீதி முகத்துக்கும் போட்டு வருகிறேன் என்கிறேன். இதை அனுமதிக்கக் கூடாதா...' என்றேன்.அனைத்துக் கட்சியினரும் உரக்க சிரித்தனர். தட்சிணாமூர்த்தி கவுண்டரும் ரசித்தவாறே, 'ஏன்யா, இன்னைக்கு உனக்கு நான் தான் கிடைத்தேனா...' என்றார்.இலங்கையில், எஸ்.எஸ்.ஆர்., நாடக மன்றத்தின் சார்பாக, நாடக நிகழ்ச்சிகள் நடத்தி, நிதி தர வேண்டும் என, என்னை அணுகிய, கலாசார குழுவினர்...- தொடரும்.- எஸ்.எஸ். ராஜேந்திரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !