மூதாதையர் வீட்டை, அருங்காட்சியகமாக்கிய பெண்!
மேற்கு அருணாச்சல பிரதேசத்தில் வசித்து வரும், 'மோன்பா' சமூகத்தைச் சேர்ந்தவர், லீகே சோமு என்ற, 24 வயது இளம்பெண்.வேளாண் பட்டதாரியான இவர், 200 ஆண்டுகள் பழமையான, தன் மூதாதையர் வீட்டை, அருங்காட்சியகமாக மாற்றி அசத்தியுள்ளார்.அந்த வீட்டிலுள்ள பழங்கால கலைப்பொருட்கள் மட்டுமின்றி, வெறும் மண்ணையும், கல்லையும் மட்டுமே வைத்து, பண்டைய மோன்பா தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட, அந்த வீடே, ஓர் அருங்காட்சியகமாக காட்சி தருகிறது.அந்த வீடு, மோன்பா சமூகத்தின் கட்டடக் கலை, வாழ்க்கை முறை மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும், பல நுாற்றாண்டுகளுக்கு முன், மோன்பா சமூக மக்கள் எப்படி வாழ்ந்தனர் என்பதற்கு சான்றாகவும் திகழ்கிறது.லீகே சோமுவின் பல மாத உழைப்புக்குப் பின், அந்த அருங்காட்சியகம், கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. அப்போது முதலே, சுற்றுலாப் பயணிகள் மற்றும் கலாசார ஆர்வலர்கள் பலரும், வருகை தரத் துவங்கிவிட்டனர்.கண்ணாடி தடுப்புக்கு பின் கலைப்பொருட்களை காண்பிக்கும், வழக்கமான அருங்காட்சியகமாக இல்லாமல், ஓர் உண்மையான மோன்பா வீட்டிற்குள் நுழையும் அனுபவத்தையும், அதன் வரலாற்றை நேரடியாக அறியும் வாய்ப்பையும், பார்வையாளர்களுக்கு வழங்குவது குறிப்பிடத்தக்கது.— ஜோல்னாபையன்