உள்ளூர் செய்திகள்

மூன்றாம் பார்வை!

அரங்கத்தில் கூடியிருந்த கூட்டத்தை பார்த்து, அசந்து போனான், குரு. வந்திருந்தோர் கைகளை பிடித்துக் குலுக்கியதில், விரல்களில் படிந்த ஈரத்தை, அவர்களறியாது கவிழ்த்து உலர்த்தினான்.'உன் கரங்கள் பெற்றுக் கொள்ள வேண்டியதை, நான் பற்றியுள்ளேன்; எங்கே போனாய் சீக்கிரம் வா...' மனதிற்குள் கூவி அழைத்தான்; மூலை முடுக்கெல்லாம் அவன் கண்கள் தேடியது. ஆனால், அவனைக் காணோம்.'மூன்றாம் பார்வை.... தலைப்பை பாத்தியா அட்டகாசமாக இல்ல...''இங்க பாரேன்... கமுக்கமா தலகாணி சைசில் புத்தகம் எழுதிட்டு, யாருக்கோ பாராட்டு விழா நடக்கிற மாதிரி, முகத்த வச்சுட்டு இருக்கிறத...' என்றனர், அவனது நண்பர்கள்.''படிச்சு முடிச்சதும், ஒவ்வொருத்தன் மாதிரி அமெரிக்கா, ஆஸ்திரேலியான்னு போகாம, மேலே, பி.ஹெச்.டி., படிக்கப் போறேன்னு ஒத்தக் கால்ல நின்னான். சரி, எழவு பி.எச்.டி.,யாவது நல்ல சப்ஜெக்டா... மொழி ஆராய்ச்சின்னான்.''ரெண்டு பொண்ணுங்களுக்கு அப்புறம் தவங்கிடந்து பெத்த பிள்ளை... சின்ன வயசுலேயே ஆத்தா போய் சேர்ந்துட்டாளேன்னு ரொம்ப செல்லம் கொடுத்துட்டோமோன்னு கவலை அரிச்சு பிடுங்கிச்சு. இப்ப தான் புரியுது, நாம தரையை பாத்து நின்னப்ப, இவன் தண்ணியில குதிச்சுட்டான்னு! எப்படியோ நல்லா வரணும் அவ்வளவுதான்,'' கூட்டத்திற்கு வந்தவர்களிடம் வலியச் சென்று மகனை பற்றி பெருமையடித்தார், குருவின் தந்தை சிவஞானம்.விழா துவங்கியது...மேடையில் நடுநாயகமாய் அமர்ந்திருந்தான் குரு. தாங்கள் பார்த்து வளர்ந்த பையன் என்றாலும், அன்று தான் அவனை புதிதாய் பார்ப்பது போல், ஊர்மக்களின் கண்களில் பிரகாசம்!சிறப்பு விருந்தினராய் வந்திருந்த, மூத்த இயக்குனர் ஒருவர், ''நாலு புறமும், விதவிதமாய் சிதறும் உங்க ஊர் மத்தாப்பு மாதிரி, வித்தியாசமான கோணத்தில் தன் கருத்துகளை பதிவு செய்து, தன் முதல் முயற்சியிலேயே, எழுத்துலகை திரும்பி பார்க்க வெச்சுட்டாரு, இந்த குட்டி எழுத்தாளர்.''மனுஷன் பொத்தி பொத்தி ரகசியமா வெச்சிருக்கறானே மனசு... அதன் அழகை, ஆழத்தை, புட்டுப்புட்டு வைக்குது இந்த கதை. ஒரு மனுஷன் எவ்வளவு தான், வக்கிரமா, குப்பை மேடா, தன் மனசை வெச்சிருந்தாலும், வாழ்நாளில் ஒரு நொடியாவது, தன்னோட இயல்பு நிலையான அன்பையும், அறனையும் உணரும் தருணம், கட்டாயம் வரும்ன்னு இந்தக் கதையில சொல்லியிருக்காரு. படிச்சவுடனேயே படமா எடுக்க, முடிவு செஞ்சுட்டேன்,''என்றார்.கூட்டம், 'ஹோ'வென கூச்சலிட்டு குதூகலித்தது. கனத்த கரகோஷத்துடன் எழுந்த குரு, தலைக்கு மேல், கரம் உயர்த்தி வணங்கியவன், பின், கைகளால் முகத்தை மூடி அழுதான். அவனால் பேச முடியவில்லை. ஆனந்தத்தின் உச்சம் என நினைத்து, அவனைத் தவிர, மற்றவர்கள் பேசி, விழாவை முடித்தனர்.காரில் ஏறி வீட்டிற்கு புறப்படுகையில், ''வேலு... பிச்சை வீட்டுக்கு போ,'' என்றான் அமைதியாய்!''பூட்டியிருக்கும்யா...''''இப்ப திறந்திருக்கலாம்... நீ போ...'' என்றதும், ஊர்க்கோடியை நோக்கி விரைந்தது, கார். கருப்பண்ண சாமி கோவில் தாண்டி, ஹைவேயில் செடி, கொடிகளுக்கிடையே தனியாக இருந்த அந்த சிறிய குடிசை வீட்டைப் பார்த்து, ''இதெல்லாம் ஒரு வீடு... இதுக்கு ஒரு பூட்டு... சித்தம் போக்கு, சிவம் போக்குன்னா அது இவன் தான் சார்... இவனையெல்லாம், நம்ம ஐயாவா இருக்கண்டு, உக்கார வெச்சு சோறு...'' என்று முடிக்கும் முன், ''வேலு...'' என்று இரைந்தான் குரு.''சாரி சார்...''''நீ வீட்டுக்குப் போ... நான் போன் செய்த பின் வா...'' என்று கூறி, அவனை அனுப்பி விட்டான். பிச்சையைப் பற்றி பேசியதற்கு தண்டனை என நினைத்து, அவன் திரும்பிச் சென்றான்.குடிசையின் முன் நின்று, 'பிச்சை... நீ சொன்னதெல்லாம் செஞ்சேன்; ஆனா, நான் அத்தனை சொல்லியும் நீ வரலையில்ல... 'உன்னை மேடையில் எனக்கு அருகில் அமர்த்தி, 'மூன்றாம் பார்வை' கதையை, ஊருக்கு சொல்ல நினைத்திருந்தேன். அத்தனையும் போட்டு உடைச்சிட்டயே...' என்றவன் ஓங்கி கதவை உதைந்தான். திறந்து கொண்டது, கதவு.துடைத்தது போன்று இருந்தது, வீடு; அங்கொன்றும், இங்கொன்றுமாய் கிடந்த சாமான்களும் இல்லை; கலவரமானான், குரு.கோபம் இருந்த இடத்தை, கவலை ஆட்கொண்டது.'பிச்சை... எங்கே போனாய்... நீயாய் சென்றாயா இல்லை போக வைத்து விட்டனரா... கண்டிப்பாக உன்னால், இந்த மண்ணை பிரிய முடியாது...' என்று, தனக்குள் சொல்லியவன், பிச்சை வழக்கமாய் சுற்றும் இடுகாட்டை நோக்கி, வேகமாக சென்றான்.அங்கு தான் மணிக்கணக்கில் தன் அம்மாவின் சமாதி அருகே அமர்ந்திருப்பான், பிச்சை.அந்த கருங்கல் மேடை, அவனின்றி வெறுமையாய் காட்சியளித்தது.நினைவு தெரிந்த நாளாய், வீட்டிலோ, பட்டாசு தொழிற்சாலையிலோ, கடையிலோ ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டிருந்தாலும், சில மாதங்களாகத்தான் குருவின் கவனத்தை ஈர்த்திருந்தான் பிச்சை.கறுத்த நிறம், மெலிந்த சரீரம், பரந்த தலை, பைத்தியம் போல் வெறித்த பார்வை, தனக்கு தானே, சதா முணுமுணுக்கும் உதடுகளுமாய், ஒரு இடத்தில் நிற்காது, அங்குமிங்கும் அலைந்து கொண்டிருப்பான். ஆனாலும், அவன் வேலையில் நிலைத்திருந்தான் என்றால், அதற்கு காரணம் அவனது உழைப்பும், இடியே விழுந்தாலும், மாறாத நேர்மையும் தான்!'பிச்சை... என்ன பெயர் இது... பரதேசி, பக்கிரி மாதிரி...' நீண்ட விடுமுறையில் வந்திருந்த போது, விளையாட்டாய் ஆரம்பித்த உரையாடல், விலை மதிக்க முடியாத, ஒரு நண்பனை சம்பாதித்து தந்தது.'எனக்கு முன்னால, ஐந்து பிள்ளைங்க பிறந்து, உடனே இறந்தும் போச்சாம். அதனால, நானாவது நிலைக்கணுமேன்னு, எங்க அம்மா, மடிப்பிச்சை எடுத்து, மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து, பிச்சைன்னு பேரு வெச்சாங்க... நான் பிழைச்சுட்டேன்; ஆனா, எங்க ஆத்தா செத்துருச்சு...''அப்புறம், என் ஏழு வயசுக்குள்ளே, அப்பன், பாட்டன், அம்மாச்சி, அப்பத்தா, ஆடு, மாடு, கோழி, வீடு எல்லாம் போயிருச்சு. உறவெல்லாம் ஒதுங்கிட்டாங்க. காரணம், நான் எமனாம்... ஏன் குரு, நான் துஷ்டியா...' என, குரலில், எந்த உணர்ச்சியுமின்றி கேட்டவன், 'இதெல்லாம் பெரிசில்ல குரு... உங்கப்பா, என்னை பாளையங்கோட்டையில புதுசா ஆரம்பிக்கப் போற பட்டாசுக் கடைய பாத்துக்கப் போங்கறாரு; அதத்தான் என்னால தாங்க முடியல...' மேல் துண்டால், கண்களில் துளிர்த்த நீரை துடைத்துக் கொண்டான், பிச்சை.'ஏன்... அங்க போனா என்னா... இங்க, தெரிஞ்சவன், தெரியாதவன்னு ஒரு பய உன்னை மதிக்கிறதில்ல. துக்கிரின்னு பேரு வேற... நீ ஏன் அங்க போய் சந்தோஷமா வாழக் கூடாது...'உடனே ரோஷத்துடன், 'நான் இங்க சந்தோஷமா இல்லன்னு யார் சொன்னது... இது என் ஊரு; எங்க அம்மாவுல இருந்து என் ஜாதி, சனம் அத்தனையும் வாழ்ந்த, வாழ்ற ஊர். பட்டாசு தொழிற்சாலையில இருக்கிற காகிதம், கடைசியில கரியாகிப் போகுது. அதே காகிதம், இங்க புஸ்தகமா கருக்கழியாம உக்காந்திருக்குது. எது சரி, எது தப்புன்னு உன்னால சொல்ல முடியுமா... அது மாதிரி தான், அவங்க அவங்க நெனப்பு, பேச்சு, அவங்கவங்களுக்கு சரி. அதனால, அவங்கள குற்றம் சொல்லாத... நான் இருந்தாலும், இறந்தாலும் சிவகாசி தான் எனக்கு எல்லாமே...' என்றான்.அந்த நிமிடம் குருவிற்கு அவன் பெரிய ஞானி போல் தெரிந்தான்.ஒதுக்கப்பட்ட போதும், அதற்காக கவலைப்படாமல், ஊர், உறவுகள் மீது அவன் காட்டிய அபிமானம், வியப்பாய் இருந்தது.மறுநாள், புத்தகங்களை துறை வாரியாக பிரித்து, குரு, கணக்கெடுத்துக் கொண்டிருக்க, புத்தகங்களை அடுக்குவதில் அவனுக்கு உதவியாக இருந்த பிச்சை, 'குரு...' என்று ஆசையாய் கூப்பிட்டான்.'என்ன?''இதுவரை நீ எத்தனை புத்தகம் எழுதியிருக்க...''நானா...' என்று சிரித்தவன், 'படிக்கவே ஒரு ஆயுசு போதாது; இதுல எங்க எழுதுறது...' என்றான், குரு.'உங்க அப்பா, இவ்வளவு பெரிய புத்தகக் கடை வெச்சுருக்காரு; இதுல, ஒரு அலமாரியிலயாவது உன்னோட புத்தகங்கள் இருக்க வேணாமா...' என்றான்.'பிச்சை... நீ நினைக்கிற மாதிரி, நான் மேதாவி இல்ல; எதை எழுதச் சொல்ற...''நம்ம ஊரைப் பத்தி, நம்ம ஜனங்களைப் பத்தி எழுது!''ம்... எக்குத்தப்பா எதையாவது எழுதிட்டா, உன்னையும், என்னையும், கொளுத்திடுவாங்க...''கொளுத்தட்டும்... நீ அழிஞ்சாலும், நீ எழுதினது, காலத்துக்கும் உன் பேரைச் சொல்லும்லே...' என்றான், ஆவேசமாய்!அவன் குரலில் தெறித்த உஷ்ணத்தில், உறைந்து போனான் குரு.'குரலை உசத்தினதும் பயந்துட்டியா... இப்படித் தான் நம்ம ஜனங்களும் பயந்தாளிங்க, ஆனா, நல்ல மனசுக்காரங்க. அவனவன் கவலையில இறுகினாப்ல இருக்கானுங்க. சும்மா கரிசனமா ஒரு பார்வை, ஒரு வார்த்தை போதும்; பொசுக்குன்னு இளகிருவாங்க. இதுதான் நம்ம ஜனம்; இதத்தான் எழுதச் சொல்லுதேன். எழுத மாட்டியா...' ஏக்கத்துடன் அவன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான்.நிமிர்ந்து உட்கார்ந்தான் குரு.'பிச்சை... என்னென்னவோ பேசற... நீ இப்படி எல்லாம் பேசுவேன்னு என்னால நம்ப முடியல. சொல்லு வேறென்ன எழுதணும்...''இங்க, முதலாளிக்கு, தொழிலாளிய தெரியல; தொழிலாளிக்கு, முதலாளியை புரியல. ரெண்டு பக்க நியாயத்தையும் எழுதணும். முதலாளி படற பாட்டையும், தொழிலாளி நொந்து சாகிறதையும் எழுது. வேலைக்குப் போற பச்சைப்புள்ளை தலைவிதியையும், படிக்கிறதுக்கு கொடுத்து வெச்ச பிள்ளைகள பத்தியும் எழுது...' மேலே பேசமுடியாது விம்மினான்.'பிச்சை...''நான் படிக்கல; என் பேரைக் கூட எழுத தெரியாது. அதனால, எல்லாரும் எப்பாடு பட்டாச்சும் படிக்கணும்; இதைக் கட்டாயம் எழுது...' என்றான் கண்கள் கலங்க!'படிக்கலங்கிறதுக்காக ஏன் இத்தனை வருத்தப்படுறே... அழுறதை நிறுத்து; இன்னைக்கே கூட நீ படிக்கலாம்; நான் சொல்லித் தர்றேன். படிச்சவன் கூட இவ்வளவு அழகா, ஆழமா யோசிக்க மாட்டான்; நீ யோசிக்கற. உன் பேச்சைக் கேட்டு நான் மலைச்சுக் கிடக்கேன். இத்தனை நாளா, நான் என்னத்தை படிச்சுக் கிழிச்சேன்னு தெரியாம முழிக்கறேன். உன்னை நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு... பெரிய அறிஞன் மாதிரி பேசற... என்னென்ன சொல்லுணுமோ சொல்லு, அத்தனையையும் எழுதறேன்...' வாக்குக் கொடுத்தான் குரு.விபரம் தெரிந்த வயதிலிருந்து, நெஞ்சோடு நெஞ்சாய், நெருஞ்சியாய் வலித்ததும், நெக்குருகி நெகிழ்ந்ததையும் பாரபட்சமின்றி கொட்டத் துவங்கினான் பிச்சை. தெருவோரமிருந்து, ஊர்க்கோடி வரை தான் பார்த்து அறிந்த விஷயங்களை ஒன்று விடாது சொல்ல, மொழி பெயர்த்தான் குரு.அத்தனை விஷயங்களிலும், ஒரு முரண்பாடு வெளிப்பொருளாக இருந்தாலும், ஒரு சமன்பாடு, உட்பொருளாகி, இடைவெளிகளை சரி செய்வது கண்டு பிரமித்தான்.பிச்சையின் முரண் இலக்கணம், அரணாக, அணியாக, தானாகவும், பிச்சையாகவும் மாறி மாறி, கருவை உள்வாங்கி, ஒவ்வொரு கருத்தையும், அவன் விரும்பியபடி, காட்சிப்படுத்தினான்; அவைகள், கதைகளாக உருவெடுத்தன. அடி அடியாய் முன்னேறி, அரங்கேற்ற வாயில் வரை கூட்டி வந்த பிச்சையின் கதைக்களத்தை, கதை மாந்தரை சில்லாகித்து தீரவில்லை குருவுக்கு!'பிச்சை... உனக்கு மறுக்கப்பட்ட, அன்புப் பத்திரத்தை, அனைவர் கையிலும் கொடுத்து விட்ட பிச்சாடனன் நீ...' எழுத எழுத குருவுக்கு, ஒரு கை போதவில்லை. 'பிச்சை... நீ எமன் இல்லை; பரமன். என்னைப் படைத்த பிரம்மன்...' வாழ்த்திக் கொண்டே எழுதினான்.குருவின் தந்தைக்கு, மகன் இரவு பகலாய் எழுதுவதும், படிப்பதும் பிடித்திருந்தது. ஆனால், பிச்சையுடனான திடீர் நெருக்கம் பிடிக்கவில்லை. ஆயினும், அதை வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஏனெனில், பிச்சை அவரது தொழிலின் இன்றியமையாத மூலதனம்; அவனது சினேகம் மட்டும், சகிக்க முடியாத அவமானம். அதற்காகவே, அவனை பாளையங்கோட்டைக்கு அனுப்ப அவசரப்பட்டார். பக்கத்துக்கொரு கிளையும், அத்தியாயத்திற்கொரு விதையுமாய் செழித்த அவனது விருட்சம், 'மூன்றாம் பார்வை' எனும் நெடிதுயர்ந்து புது வாசத்துடன் கனிந்து நின்றதும், அப்பாவிடம் சொன்னான்...'அப்பா... நான் ஒரு புத்தகம் எழுதியிருக்கேன்; அதை வெளியிடணும் சென்னைக்கு போறேன்...'உடனே, ஒப்புதல் அளித்து விட்டார். அவரது ஆதரவு புத்தகத்திற்கு இல்லை; பிச்சையைப் பிரிவதற்கு என்பது நன்கு தெரிந்தும், கருமமே கண்ணாக, சென்னை விரைந்தான்.புலனுக்குப் புலப்படாத நேர்கோட்டில், சொல்லி வைத்தாற் போல் எல்லாம் கச்சிதமாய் நகர்ந்தது. இலக்கிய உலகின் தலைப்புச் செய்தியானதுடன், திரை உலகின், புது கதாசிரியனாகி, சிவகாசியின் பெருமை ஆனான் குரு.அத்தனையும் பிச்சை உய்த்துரைத்த லட்சிய சரிதங்களுக்கு கிடைத்த அங்கீகாரம். பிச்சையை மனதில் வைத்து ஏற்பாடு செய்த விழா, திட்டமிட்டபடி நடைபெறாதது, அவன் எழுப்ப நினைத்த தார்மிகக் கோட்டையின் மீது விழுந்த முதல் அடியாக நினைத்தான்.சென்னையிலிருந்து வந்ததும் பிச்சையிடம் ஓடி, 'பிச்சை... நாளை உனக்கான விழா... கண்டிப்பாக வந்துரு; உன்னோட அனுபவத்தையெல்லாம் புஸ்தகமா பாக்கணும்ன்னு ஆசைப்பட்ட... அதேபோல, எழுதப் படிக்க தெரியாதவனும் தெரிஞ்சுக்கிறாப்பல சினிமாவா வரப் போகுது...' அவன் கைகளை, தன் நெஞ்சில் வைத்து, அளவிலா ஆனந்தத்தில் சொன்னதை நினைத்து பார்த்தான்.'உலகுக்கு சொல்லக் காத்திருந்தது போல், பிச்சையிடமும் உரிய நேரம் வரை, வாய் மூடி இருந்திருக்க வேண்டுமோ...'உடலும், உள்ளமும் நொந்து, நடைப்பிணமாய் நடுநிசியில் வீடு திரும்பினான், குரு. அப்பா விழித்துக் கொண்டிருந்தார். ஏதோ கேட்க தவித்து, ''சாப்பிட்டாயா...'' என்றார்.''ம்...'' மேலே பேச விரும்பாது, தலை குனிந்தபடி நகர்ந்தான்.''நிறைய பேர், உன்னை தேடிட்டு வந்தாங்க; எப்படியோ சமாளிச்சு அனுப்பிச்சிட்டேன்,'' என்றார். அவன் காதில் வாங்காமல் நகரவே, ''நில்லுப்பா, ஒரு நிமிஷம்...''என்றார்.அவன் நின்றதும், ''கவலைப்படாத... பிச்சை வந்துருவான்...'' என்றார் கலங்கிய கண்களுடன்!தன் தந்தையை ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்தான்.''நேத்து வரைக்கும், பிச்சையை உன் கூட சேர விடாம பிரிக்க நெனச்சது நெசம் தான்; ஆனா, இன்னைக்கு, அவன் இல்லாம, மூளியாக் கிடக்கற வீட்டை, கடையை, அவனுக்காக, தவியா தவிக்கிற உன்னைப் பாக்கறச்ச, காசு, பணம் பெரிசில்ல, மனுஷங்க தான் முக்கியம்ன்னு புரிஞ்சிருச்சு. நாம, அவனை தேடிக்கிட்டுப் போனா, என்னவோ ஏதோன்னு கலவரப்பட்டு, இன்னும் தூரமா போயிருவான். காத்திருப்போம்; அவனே வந்துருவான். நம்மளை விட்டு, இந்த ஊரை விட்டு, அவன் எங்கும் போக மாட்டான். எனக்கு நம்பிக்கையிருக்கு,'' என்றார், சிவஞானம்.அவர்கள் காத்திருந்தனர்... நாள் கணக்கில், மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் ஏனோ பிச்சை வரவேயில்லை.ஆனால், 'சிவஞானம் அன்ட் சன்சின்' பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு, பிச்சையின் பெயரில், நூலகங்களும், ஆரம்பப் பள்ளிகளும், முதியோர் கல்விக் கூடங்களும், ஆண்டிற்கு ஒன்றாக, வருகை புரிவது மட்டும் நிற்கவேயில்லை!ஆர்.சந்திராபடிப்பு: எம்.ஏ., வரலாறு; இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கடந்த, 10 ஆண்டுகளாக, சிறுகதை, கவிதை, கட்டுரைகள் எழுதி வருகிறார். இவர் எழுதிய பல சிறுகதைகள் மற்றும் நாடகங்கள் மதுரை வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. தன் படைப்புகளுக்காக, ஏராள மான பரிசுகளை பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !