இது தான், கொரோனா கட்டிங்!
வல்லரசு நாடுகளையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கும், 'கொரோனா வைரசை' கண்ணுக்கு தெரியாத எதிரி என, உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஆனால், கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவிலோ, 'கொரோனா வைரசை' வைத்து, 'காமெடி' செய்து வருகின்றனர், மக்கள். கென்யாவின் கிபெரா என்ற பகுதியில் வசிப்பவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு, 'கொரோனா ஸ்டைலில்' முடி வெட்டி அழகு பார்க்கின்றனர்.பொதுவாக ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களின் முடி, சடை விழுந்து, சுருள் சுருளாக இருக்கும்; அதில் சில மாற்றங்களைச் செய்து, 'கொரோனா வைரஸ்' போன்று சிகை அலங்காரம் செய்துள்ளனர். 'கொரோனா ஸ்டைலில்' முடிவெட்டுவதற்கு, ஒரு நபருக்கு, 80 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 'ஊரடங்கால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது வருத்தம் அளித்தாலும், எங்கள் குழந்தைகளின் தலை அழகை பார்த்ததுமே, கவலை மறந்து விடுகிறோம்...' என்கின்றனர், கென்ய மக்கள்.— ஜோல்னா பையன்