மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு...
'மணமகள் தேவை' விளம்பரம் ஒன்றில், 'சிவப்பான, அழகான மணமகள் தேவை' என்ற வாசகத்தை கண்டேன். சிவப்பான பெண், எந்தளவிற்கு மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு உதவுவாள் என்பது, சிவப்பான பெண்ணை விரும்புபவருக்கே வெளிச்சம்!மேலும், 'அழகு' என்பது, அவரவர் பார்வையைப் பொறுத்தது. சினிமாவில் வரும் கதாநாயகியைப் போல இருப்பது தான் அழகு என்றால், அந்த அழகு நிரந்தரமானது அல்ல என்பது, இப்போது பொது நிகழ்ச்சி மற்றும் தொலைக்காட்சியில் தோன்றும், அந்தக்கால கனவுக் கன்னிகளாக விளங்கிய சினிமா கதாநாயகிகளை பார்த்தாலே புரிந்து விடும்.ஆக, சிவப்பும், அழகும், பார்வைக்கு வேண்டுமானால் ஈர்ப்பாக இருக்குமேயொழிய, இவற்றால், மணவாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது அபத்தம்!நல்ல குணமும், குடும்பப்பாங்கான, சுபாவமும் கொண்ட பெண்ணால் மட்டுமே, மகிழ்ச்சியான மண வாழ்க்கை அமையும் என்பதை, சிவப்பையும், அழகையும் விரும்புவோர் புரிந்து கொள்வது நல்லது! —
ரா.சாந்தகுமார், ஆவடி.தவறு செய்து விட்டேன்!
வீட்டில் எனக்கு
மணப்பெண் பார்த்தனர். கறுப்பு, குட்டை, நெட்டை, தலைமுடியே இல்லை, மூக்கு
கோணல், பல் எடுப்பு எனச் சொல்லி, பல பெண்களை தட்டிக் கழித்தேன். அதனால்,
எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. நான் வேலை செய்யும் அலுவலகத்தில், ஒரு
பெண் புதிதாக வேலைக்குச் சேர்ந்தாள். அவளைப் பார்த்ததும், எனக்கு
அதிர்ச்சி. காரணம், பெண் பார்க்கும் படலத்தின் போது, கறுப்பாகவும்,
குட்டையாகவும், குண்டாகவும் இருக்கிறாள் எனக் கூறி, நான் ஒதுக்கிய பெண்
அவள்.அலுவலகத்தில், எதிரெதிரே சந்திக்கும் சூழல் வந்தபோதெல்லாம்,
வியர்த்து, விறுவிறுத்து அவளைத் தவிர்த்தேன். முகத்தில் எந்தச் சலனமும்
காட்டாமல் நகர்வதை வழக்கமாகக் கொண்டாள் அவள்.சில மாதங்கள் ஓடின.அலுவலகத்தில்
வேலை செய்யும், திருமணமாகாத என் நண்பன், அந்தப் பெண்ணை காதலிப்பதாகக்
கூறினான். அவன் சொல்வது உண்மை தானா... நம்ப முடியவில்லை. அவனிடமே கேட்டு
விட்டேன்.'ஏண்டா... ஒனக்கு வேற பொண்ணே கிடைக்கலியா... இப்படி கறுப்பா,
குண்டா, குட்டையா...' என நான் சொல்லி முடிப்பதற்குள், அவன், 'போதும்
நிறுத்து... அவளோடு பேசி, பழகி இருக்கியா? அவள் வேலை செய்யும் பாங்கு
தெரியுமா உனக்கு? எதையும் சட்டென புரிந்து, எது செய்தால் நல்லது, எது
கெட்டது என எடுத்துச் சொல்வாள். அந்த அறிவுத் திறன் தான் அழகு; கலரு,
குட்டை, நெட்டைங்கறதெல்லாம், வெறும் ஹம்பக்கு!' என்றான்.மூன்று மாதங்களில், அவர்களுக்குத் திருமணம் நடக்க உள்ளது. மணப்பெண் பார்ப்போரே... நான் செய்த தவறை ஒரு போதும் செய்து விடாதீர்கள்!—
கே.முத்துகிருஷ்ணன், சென்னை.வயதானவர்களுக்கான நல்ல பொழுதுபோக்கு!
நான் பணிபுரியும் அலுவலகத்தின் வங்கி கணக்கு, ஒரு தேசிய வங்கியில் உள்ளது. அது, கிராமப்புற வங்கி என்பதால், அதிகமாக படிக்காத வாடிக்கையாளர்களும் வருவர். அதில் பலர், அவர்களுடைய பண பரிமாற்றங்களுக்கு, மற்றவர்களிடம் உதவி கேட்டே செய்வதால், அங்கு கூட்டம் அதிகமாகவே இருக்கும். இதனால், அவர்களின் வங்கி பரிமாற்றங்கள் முடிவடைய அதிக நேரமாகும். சில நாட்களுக்கு முன், வங்கிக்கு போனபோது, ஒரு பெரியவர், வாடிக்கையாளர் பகுதியில் உள்ள இருக்கையில் அமர்ந்து, அங்கு வரும் எழுத, படிக்க தெரியாத வாடிக்கையாளர்களுக்கு, வங்கி பரிமாற்றத்திற்கான விண்ணப்பங்களை எழுதிக் கொடுத்து கொண்டிருந்தார். இதனால், வாடிக்கையாளர்களின் வங்கி பணிகள், விரைவாக நடைபெற்றதை கண்டு ஆச்சரியமடைந்தேன்.அவரைப் பற்றி விசாரித்ததில், அவர் அருகே உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர் என்றும், வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல், இப்படி வந்து, பிறருக்கு உதவுவதாக கூறினார்.அலுவலகத்தில் பணிபுரிந்து, ஓய்வுபெற்ற பெரியவர்கள், வீட்டில் அமர்ந்து கொண்டு, பொழுதுபோகவில்லை என்று சொல்லிக்கொண்டிருப்பதற்கு பதில், அனைத்து மக்களும் வருகை தரும் அருகிலுள்ள தேசிய வங்கியில் அமர்ந்து, இதுபோல் சேவை செய்தால், பொழுதுபோக்கு மற்றும் மன நிம்மதி கிடைப்பதுடன், உடல்நலம் குறித்த கவலைகளும் மறந்து போகும்.முயற்சித்து பாருங்கள் பெரியவர்களே!—
கே.ஸ்ரீனிவாசன், மடத்துக்குளம்.மூட நம்பிக்கை என்ற வியாதி!
என் அலுவலக நண்பர் ஒருவர், எதற்கெடுத்தாலும், நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் பார்ப்பார். பல் துலக்க, புதிதாக பிரஷ் எடுப்பதிலிருந்து, அலுவலக வேலைகள் வரை, அவருடைய மூட நம்பிக்கைகள் பிரதிபலித்தன.ஒரு முறை அலுவலக பிரமோஷனுக்கான இன்டர்வியூ, எமகண்டத்தில் நடந்ததால், அதற்கு ஆஜராகாமல், உயர் பதவிக்கான வாய்ப்பை இழந்து, அடுத்த வாய்ப்புக்கு, அவர் நான்காண்டுகள் காத்திருக்க நேரிட்டது.சமீபத்தில் அவருடைய வீட்டுக்கு சென்றிருந்தேன். ஐ.டி., துறையில் பணிபுரியும் அவருடைய மகனை பற்றி பேச்சு எழுந்தது.அப்பாவை விட, மகன் மோசமாக இருக்கிறான். அலுவலகத்தில் பிராஜக்ட் டிஸ்கஷனுக்கு ராகு காலத்தில் போவதில்லை என்ற அசட்டுக் கொள்கையை வைத்திருக்கிறான். ராகு காலம், எமகண்டம் பார்த்து, அவனுடைய பல அலுவலக பணிகளை ஒத்திப் போடுகிறான். இதை அறிந்த அவனுடைய மேலதிகாரிகள், சமீபத்தில் அவனை அழைத்து, கண்டித்திருக்கின்றனர்.'அவனை வெளிநாட்டு பணிக்கு அனுப்ப தயங்குகின்றனர். ராகு காலம், எம கண்டம் போன்ற நேரங்களில், அவன் மொபைல் போனை ஆப் செய்து விடுவதால், நாங்களோ, அலுவலகத்தினரோ, அவனை அந்த சமயங்களில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இது எங்கே போய் முடியப் போகிறதோ?' என்று மகனை பற்றி நொந்து கொண்டார் தாயார்.மூட நம்பிக்கையில் மூழ்கிய மிகுந்த தந்தையின் அடிச்சுவடை பின்பற்றிய மகனுக்கு, அது ஒரு மனோவியாதியாக தொற்றிக் கொண்டதை நினைத்து, பரிதாபப்படுவதை தவிர, அந்த தாய்க்கு ஆறுதல் சொல்ல எனக்கு வேறொன்றும் தோன்றவில்லை.சில நம்பிக்கைகளை கண்மூடித்தனமாக பின்பற்றும் பெற்றோர், தங்கள் குழந்தைகளையும் அந்த வியாதி தொற்றிக் கொண்டு, அவர்களின் வாழ்க்கையை அழிக்கும் வாய்ப்பிருப்பதை நினைவில் கொண்டு செயல்படுவது நல்லது.—
எஸ்.ராமன், சென்னை.