இது உங்கள் இடம்!
எங்கும் நீக்கமறஒரு ஞாயிற்றுக்கிழமை... நான் குடும்பத்துடன் வண்டலூர் வன உயிர் காப்பகத்திற்கு சென்றேன். பள்ளி, கல்லூரி விடுமுறை என்பதாலும், ஞாயிறு விடுமுறை என்பதாலும், கூட்டம் அலைமோதியது. குழந்தைகளுடன் பெற்றோர், கூட்டம் கூட்டமாய் வந்து, விலங்குகளை பார்த்து ரசித்தனர்.ஜூவிற்கு புதிதாக வந்த வெள்ளை புலி, வெளிநாட்டு பறவைகள், யானைகள், குழந்தைகளை மட்டுமல்லாது, உடன் வந்திருந்த பெரியோர்களையும் வெகுவாக கவர்ந்தது. அதை விட, காதலர்கள் என்ற பெயரில், துப்பட்டா கூடாரம் அடித்து கூத்தடிக்கும் ஜோடிகள் கூட்டம், குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது எனலாம்.பொதுமக்கள் இளைப்பாறும் இடங்கள், நடந்து செல்லும் சாலை, மரத்தடி என, அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருந்தனர். அதுவும், பார்வையாளர்கள் கண்களை உறுத்தும் வகையில், இறுக்கி அணைத்தபடி அமர்ந்திருந்தனர். அவ்வப்போது கன்னத்தோடு கன்னம் உரசுவது, இடையில் சில்மிஷம் செய்வது என, பல்லாயிரக்கணக்கானோர் பார்க்கின்றனரே என்ற லஜ்ஜை இல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தனர்.அதிலும், நடந்து சென்ற ஒரு இளம்பெண்ணை, எங்கே விட்டால், அவள் விழுந்து விடுவாளோ என, (காலில் அடிபட்டிருப்பவரை தாங்கி பிடித்து நடத்தி செல்வது போல்) கை தாங்கலாக அழைத்து சென்றார் ஒரு காதலர். இவற்றை பார்த்த சிறுவர், சிறுமியர், 'டிவி' புண்ணியத்தில், ஓரளவு விஷயத்தை யூகித்தபடியால், 'களுக்' என தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.விலங்குகளை பார்த்து ரசிக்க, குழந்தைகளை, குறிப்பாக, டீன்-ஏஜ் இளம்பெண்களை அழைத்து வந்த என்னை போன்ற பெற்றோர் அனைவரும், காதலர்களின் சில்மிஷத்தால் அதிருப்தி அடைந்தோம். அனைவரும் பார்க்கும் வகையில், இவ்வளவு கீழ்த்தரமாக ஈடுபடும் இவர்களால், குழந்தைகளின் மனது பாதிக்காதா? சிந்தியுங்கள் காதலர்களே...— எஸ்.ரத்தின ஜோதி சரவணன், திருவள்ளூர்.நீங்களும் பின்பற்றலாமே!சமீபத்தில், எதேச்சையாக ஒரு நண்பரின் மொபைல் போனை வாங்கி. இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவரிடம் பேச வேண்டியதிருந்தது. அப்போது அந்த நண்பரின் பெயருடன் சேர்த்து அவருடைய ரத்தத்தின் வகையைக் குறிக்கும் விதத்தில், உதாரணமாக, வினோத் O+திஞு என்று பதிவு செய்து வைத்திருந்தார்.இது குறித்து அவரிடம் கேட்டபோது, பல்வேறு வசதிகளைப் பதிவு செய்யும் விதத்தில், தற்போது மொபைல் போன்கள் கிடைக்கின்றன. அதில், பெயர்களை நீளமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். இடமிருப்பதைப் பொறுத்து நண்பர்களின் பெயர். அவரது ரத்த வகையையும் பதிவு செய்து வைப்பதால், விபத்து உட்பட அவசர காலங்களில், யாருக்கேனும் ரத்தம் தேவைப்படும்போதோ அல்லது அவருக்கே கூட தேவைப்படும் போதும், உடனடியாக ரத்தம் கொடுக்க ஏற்பாடுகள் செய்ய முடிகிறது என்று தெரிவித்தார்.தற்போது பாட்டு உட்பட பொழுதுபோக்கு அம்சங்களை, தங்கள் மொபைல் போனில் பதிவு செய்து வைத்து, பொது இடத்தில் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மத்தியில், நண்பரின் செயல், எனக்கு மிகவும் நல்ல ஏற்பாடாகவே பட்டது. அதிலிருந்து நானும், என் நண்பர்களின் பெயருடன் ரத்த வகையினையும் சேர்த்து பதிவு செய்து வருகிறேன்.— ஏ.அக்பர், பொள்ளாச்சி.தேவையா, இந்த ஆடம்பரம்!நான் திருச்செந்தூரிலிருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணித்து கொண்டிருந்தேன். அதில், ஆறுமாத கைக்குழந்தையுடன், பெண் ஒருவர் பயணித்தார். குழந்தையின் கழுத்தில் தங்க செயின், கையில் தங்க வளையல் அணிவித்திருந்தார். தன்னுடன் வந்திருந்த உறவினரிடம், தன் தம்பி அணிவித்த வெள்ளி அரைஞான் கொடி குறித்து பெருமையாக பேசிக் கொண்டு வந்தார்.குழந்தை பெரியவனாகி, 60 வயதானாலும் போட்டுக் கொள்ளும்படியாக, அரைஞான் கொடி செய்து கொடுத்திருப்பதாக கூறிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில், குழந்தை வீரிட்டு அழத் தொடங்கியது. பசிக்காக அழுவதாக நினைத்து, குழந்தைக்கு பால் கொடுத்து பார்த்தார். அழுகை நின்றபாடில்லை. அரை மணி நேரத்திற்கும் மேலாக குழந்தை அழுதுகொண்டே இருந்தது. இதனால், பதறிய அந்த பெண், செய்வதறியாமல் விழித்துக் கொண்டிருந்தார்.அருகிலிருந்த பெரியவர் ஒருவர், குழந்தையின் உடைகளை கழற்றி பாருங்கள் என்றார். அதன் பின் தான் தெரிந்தது, குழந்தையின் இடுப்பில் கட்டப்பட்டிருந்த வெள்ளி அரை ஞான் கொடி, வயிற்றை இறுக்கியிருந்தது. அதை கழற்ற முயன்றனர், முடியவில்லை. மிக நீளமான வெள்ளி கொடியை, குழந்தையின் இடுப்பை சுற்றி, ஆறு சுற்றாக சுற்றி, நூல் வைத்து கட்டியிருந்தனர். அடுத்த ஸ்டேஷன் வரும் வரை காத்திருந்து, ஒரு வியாபாரியிடம் கத்தி வாங்கி, நூலை அறுத்து, கொடியை கழற்றினர்.உறவினர்கள், பெருமையாக நினைக்க வேண்டும் என்பதற்காக, இப்படி தேவையில்லாத அளவு ஆபரணங்களை குழந்தைக்கு அணிவிப்பது, ஆபத்தை விளைவிக்கும் அல்லவா? அதுமட்டுமின்றி, இதுபோன்ற ரயில் பயணங்களில், பெரியவர்களையே மயக்க பிஸ்கட் கொடுத்து, பணம் பொருட்களை களவாடிச் செல்லும் இக்காலத்தில், இத்தனை ஆபரணங்களை குழந்தைக்கு போட்டு, இரவில் பயணிக்கும் போது, அது அந்த குழந்தைக்கே ஆபத்தை விளைவிக்கலாம். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் என்ன செய்வது.சிந்தியுங்கள்... பெண்களே!— கோ.மீனலோசனி, திண்டுக்கல்.