உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

பணி ஓய்வுக்கு பின்...சமீபத்தில் என் சித்தப்பா வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவர் பணி ஓய்வு பெற்று ஆறு மாதம் ஆகியிருந்தது. நான் சென்ற நேரத்தில், சித்தப்பாவும், சித்தியும் கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்தனர். பக்கத்தில் செஸ், பல்லாங்குழி, தாயக்கட்டை காய்கள் போன்ற விளையாட்டுப் பொருட்கள் இருந்தன. சித்திக்கு கேரம் போர்டெல்லாம் ஆடத் தெரியாதே என, நான் வியந்தேன். அப்போது, சித்தப்பா சொன்னார்:நான் ஓய்வு பெறுவதற்கு முன், அனைத்து விளையாட்டுகளிலும் கலந்து கொள்வேன். ஓய்வு பெற்ற பின், இதற்கெல்லாம் சரியான துணை கிடைக்கவில்லை. எங்கேயோ சென்று துணை தேடுவதை விட, கூடவே இருக்கும் மனைவியைத் தயார் செய்யலாம் என்று தோன்றியது. எங்கள் பிள்ளைகள் வெளியூரில் இருப்பதால், அவளுக்கும் பொழுது போக்கு தேவை. இரண்டு மாதங்களில், அவளுக்குத் தெரிந்ததை நானும், எனக்குத் தெரிந்த விளையாட்டுகளை அவளும் கற்றுக் கொண்டோம்.இப்போது, காலையில் இருவரும் நடை பயிற்சி செல்கிறோம். மதிய உணவுக்குப் பின், கேரம், செஸ், பல்லாங்குழி போன்ற விளையாட்டுக்களை விளையாடுகிறோம். இதனால், மதியம் தூங்கும் பழக்கம் வரவில்லை. இரவில், சீக்கிரம் தூங்கிவிட முடிகிறது. மாலையில் மீண்டும் நடை பயிற்சி சென்று, முன்னிரவில் இருவரும் சேர்ந்து கதைப் புத்தகம் படிக்கிறோம். @பரக் குழந்தைகளுடன் ஈ மெயில், சாட் செய்யவும் அவளைப் பழக்கியுள்ளேன். இப்படி தினமும் செய்வதால், தொலைக்காட்சியில் வரும் அழுமூஞ்சி ப்ளஸ் கிரிமினல்களை வளர்க்கும் சீரியல் எதையும் நாங்கள் பார்ப்பதில்லை. உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக உள்ளது, என்றார்.பணி ஓய்வு பெற்ற பின், வாழ்க்கையில் வெறுப்பு, சலிப்பு, போர் அடிக்கிறது, கணவன், மனைவி சண்டை என்று கூறிப் புலம்பாமல், இவரைப் போல் புதிய கோணத்தில் வாழ்க்கையைத் திட்டமிடலாமே!— கலா ஜெயக்குமார், சென்னை.வரன் தேடப் போகிறீர்களா?நண்பர், அவர் பெண்ணிற்கு வரன் பார்த்துக் கொண்டிருந்தார். விளம்பரத்தைப் பார்த்து, தன்னுடைய குடும்ப விபரம் மற்றும் ஜாதகத்தை அனுப்பி வைத்தார். பையனின் வீட்டார், பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால், நண்பரோ புகைப்படத்தை அனுப்ப மறுத்தார்.புகைப்படத்தை அனுப்பி வைப்பதில் என்ன தவறு உள்ளது என்று கேட்டேன். அப்போது நண்பர், பையனின் வீட்டார், பெண்ணின் ஜாதகம் வந்ததும் பொருத்தம் பார்ப்பது இல்லை. படம் கேட்கின்றனர். படம் அனுப்பி வைத்ததும் ஜாதகம் பொருத்தம் இல்லை என்று சிலர் கூறி விடுகின்றனர்; புகைப்படத்தையும் திருப்பி அனுப்புவது இல்லை. அதனால் தான் முதலில் ஜாதகம் பார்க்கட்டும் பொருத்தம் இருந்தால், பிறகு படம் அனுப்பி வைக்கலாம் என்றிருக்கிறேன்.இப்படி சொன்னதும் அவர்கள் கோபப்பட்டு ஜாதகம் பொருத்தம் இல்லை என்று உடனடியாக கூறி விடுகின்றனர்.இதற்கு காரணம், பையனை பெற்றவர்களுக்கு, பெண் நன்கு படித்திருக்க வேண்டும், நல்ல வேலையில் இருக்க வேண்டும், மிகவும் அழகாக இருக்க வேண்டும்... அவ்வளவுதான். ஜாதகப் பொருத்தம் என்பதெல்லாம், இரண்டாம் பட்சம்தான் என்றார்.எனவே, நண்பர்களே... பெண்ணின் புகைப்படம் அனுப்புவதற்கு முன் யோசித்து செயல்பட வேண்டும். விஷயம் விபரீதமானபின், அழுது பயனில்லை.— எஸ்.கிருஷ்ணன், சென்னை.சபை நாகரிகம் அறியாதவர்!ஒரு காலத்தில், செல்வ செழிப்போடு இருந்து, தற்போது தொழில் நஷ்டத்தால், ஏழ்மை நிலையை அடைந்த, உறவினர் ஒருவருடைய வீட்டிற்கு சமீபத்தில் சென்றிருந்தேன். உறவினர், அவருடைய மனைவி இருவரிடமும் குடும்ப விஷயங்களை பேசிக் கொண்டி ருந்த போது, பணக்காரர் போல் தோற்றமுடைய ஒருவர் வீட்டிற்குள் நுழைந்தார். உறவினரின் மனைவி குடிநீர், தேநீர் இரண்டையும் கொடுத்து உபசரித்தும் கூட, அதை வாங்கி பருக மறுத்த அந்த பணக்காரர், தன் மகனுக்கு திருமணம் நடக்க இருப்பதாக கூறி, அழைப்பிதழை நீட்டினார்.கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து பெற்றுக் கொண்டதும், அந்த நபர் அவர்களிடம், 'உங்க பொண்ணு கல்யாணத்துக்கு, 500 ரூபாய் மொய் வெச்சிருக்கேன். உங்க பையன் கல்யாணத்துக்கு, 1000 ரூபாய் மொய் வெச்சிருக்கேன். மறந்துடாம வந்துடுங்க...' என்று, இங்கிதமே தெரியாமல் பேசிவிட்டு நடையை கட்டினார்.கணவன் - மனைவி, இருவரும் அவமானம் அடைந்தது அவர்கள் முகத்தில், அப்பட்டமாக தெரிந்தது. கூனிக் குறுகியபடி என்னை பார்த்தனர். மூன்றாம் மனிதராகிய நான், இருப்பதைப்பற்றி கூட கவலைப்பாடமல், அநாகரிகமாக பேசிய, அம்மனிதரை என்னவென்று சொல்வது!— வே.செந்தில்குமார், கொங்கணாபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !