உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

விழிப்புணர்வை ஏற்படுத்திய கண்ணீர் அஞ்சலி!திடீரென, உறவினர் ஒருவர் இறந்து விட்டதாக தகவல் வரவே, துக்கம் அனுசரிக்க, குடும்பத்துடன் புதுச்சேரி சென்றிருந்தோம். அப்போது, இறந்தவருக்காக, 'கண்ணீர் அஞ்சலி' போஸ்டரில், இருந்த வாசகம் வழக்கத்துக்கு மாறாக அச்சிடப்பட்டிருந்ததை பார்த்து, வியப்படைந்தேன். அதில், 'மொபைல் போனில்' பேசிக்கொண்டே கார் ஓட்டியதால் ஏற்பட்ட கவனக்குறைவால், காரும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், அண்ணன் இன்று மதியம், 2:00 மணி அளவில், அகால மரணமடைந்தார் என்பதையும், அண்ணாரின் இறுதி சடங்கு, நாளை, 10:00 மணி அளவில் நடக்கும் என்பதை, ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்...' என்று குறிப்பிட்டு, பிரிவால் வாடும் மனைவி, குழந்தைகளின் படமும் அதில் அச்சிடப்பட்டிருந்தது. மேலும், விபத்து நடக்கும் போது, எடுத்த படங்களும் கூடவே அச்சிடப்பபட்டிருந்தது. 'கண்ணீர் அஞ்சலி' போஸ்டரை, கண்டு கொள்ளாமல் செல்பவர்கள் கூட இந்த போஸ்டரை பார்த்ததும், கூட்டம் கூட்டமாக நின்று, பார்த்து, படித்து விட்டு சென்றனர். இது, பொதுமக்களுக்கும், துக்கம் அனுசரிக்க வந்தவர்களுக்கும், நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியது. உள்ளதை உள்ளவாறு எடுத்துரைத்தால், பொதுமக்களிடம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பது உண்மை.- உ.அரசு, புதுச்சேரி.தலைசுற்றல்!கடந்த, 25 ஆண்டுகளாக, அமெரிக்காவில் வாழ்க்கை நடத்தும் எனக்கு, அவ்வப்போது மனதிற்குள் ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டு, குழந்தைகளை இந்தியாவில் வளர்த்திருக்க வேண்டுமோ என தோன்றும். நான் விளையாடிய இடங்கள், கொண்டாடிய பண்டிகைகள் என, எதுவுமே என் மகன்கள் அனுபவிக்கவில்லையே என, என் மனம் ஏங்கியதுண்டு.சமீபத்தில், என் இரு மகன்களுடன் (19 மற்றும் 16வயது) சென்னை வந்தேன். என் முதல் மகன் உடைந்த தமிழ் பேசுவான். சென்னை வந்ததும், மற்றவர்வர்களுடன் பேசிப் பேசி, தமிழ் கற்றுக் கொள்வான் என, மகிழ்ந்தேன். விமானத்திலிருந்து இறங்கி, வெளியே வந்து, பத்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. என் மகன்கள் தமிழ் பேச தெரியாமல் விழிப்பதை பார்த்து, 'ஒண்ணும் கவலைப்படாதீங்க, நாங்கள் ஆங்கிலத்திலேயே பேசுவோம்...' என்று, என் குடும்பத்தை சேர்ந்த இளம் தலைமுறையினர் கூறியதைக் கேட்டதும், இருவர் முகமும் ஆயிரம் வாட்ஸ் பல்பு போல பிரகாசித்தது. நானோ தமிழில் பேசச் சொல்ல, 'சீ பாவம் குழந்தைகள்... அவர்களை கட்டாயப்படுத்தாதீங்க...' என்றனர். மொழி, என்னை ஏமாற்றியது.என் குழந்தைகள் இட்லி, தோசை, எல்லாம் விரும்பி சாப்பிடுவர். இந்தியா சென்றவுடன், வாரம் இரு முறை ஓட்டல் அழைத்து செல்வதாக கூறியிருந்தேன். ஆனால், இங்குள்ளவர்களோ, 'எப்போதும் இந்தியன் புட் தானா, பீட்சா, பாஸ்தா, பர்கர் சாப்பிடலாம்...' என்றதும், இவர்களது மகிழ்ச்சி இரட்டிப்பாகியது. ஆக, உணவு முறையும் மாறி வருவதை உணர்ந்தேன்.அமெரிக்காவில் குழந்தைகளை வளர்க்க பயப்படுவதற்கு முக்கிய காரணம் திருமணம். இந்தியா சென்று, அங்குள்ள பெண்களின் நடவடிக்கை, கலாசாரம் பார்த்து, எதிர்காலத்தில், என் பையன்கள் இந்திய பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பலாம் என்ற நப்பாசையும் இருந்தது.புடவை, தாவணி எல்லாம் எப்போதோ போய் விட்டதென்று தெரிந்தாலும், அரைகுறை டி-ஷர்ட், ஷார்ட்ஸ் அணிந்த பெண்களைப் பார்த்து, அதிருப்தி ஏற்பட்டது என்னமோ நிஜம். இதில், தப்பொன்றுமில்லை என்றாலும், நமக்கே உரிய பாரம்பரிய உடை மறைந்தது கண்டு, மனம் லேசாக வலித்தது.மேலும், 'பப்பு'களில் எல்லாரும் தண்ணியடிப்பதையும், டான்ஸ் ஆடுவதையும் பார்த்த என் மகன், 'அம்மா, இந்தியா ஒண்ணும், நீ சொன்னது போல் இல்லையே... யு.எஸ்., மாதிரி தான் இருக்கு. ஆனால் சுத்தம்தான் எங்குமே இல்லை...' என்றான்.நான் பிறந்து வளர்ந்த இந்தியா எங்கே போனது... நம் தமிழ் மொழி வளம் எங்கே, நம் உணவு, கலாசாரம் என்னவாயிற்று... இது எல்லாம் இல்லை என்ற பட்சத்தில், நான் குழந்தைகளை அமெரிக்காவில் வளர்ப்பதில், குற்ற உணர்வு வேண்டாமோ? தமிழகத்தில் பிறந்த நான், நம் ஊரின் வாசனையையும் விட முடியாமல், அதே சமயம், அமெரிக்க பழக்க வழக்கங்களுக்கும் ஒத்துப்போக முடியாமல் தவிக்கிறேன்.- ராஜி கோவிந்தராஜன், பிட்ஸ்பர்க்.நல்ல ஐடியா!சமீபத்தில், என் தோழியை, அஞ்சல் அலுவலகத்தில் சந்தித்தேன். அவளுக்கு, இரண்டு மாதத்துக்கு முன், நிச்சயதார்த்தம் நடந்தது. அவளின் வருங்கால கணவருடன் வந்திருந்தாள். கடந்த மாதமும், அவர்களை பேங்கில் பார்த்த ஞாபகம். கூட்டத்தில் பேச முடியவில்லை. 'என்னடி... உங்களை போல் திருமணம் நிச்சயித்த ஆட்கள், பீச், சினிமா என்று சுற்றும் போது, உங்களுக்கு மட்டும் பேங்க், போஸ்ட் ஆபீசில் என்ன வேலை?' என கேட்டேன்.அதற்கு அவள், 'எங்க கல்யாணத்துக்கு, இவருக்கு, ஒரு வாரம் தான் லீவ் கிடைச்சிருக்கு. நானும், சென்னைக்கு புதுசு. அதான், என் மாமியார், வீட்டுக்கு அருகில் உள்ள பேங்க், போஸ்ட் ஆபீஸ், பால் பூத், இ.பி., ஆபீஸ் என, எல்லாவற்றையும் பார்த்து வச்சுக்கன்னு சொன்னார். அதனால் தான் இவர் எல்லா இடத்தையும் சுற்றி காட்டுகிறார்...' என்றாள்.அதற்கு அவளது வருங்கால கணவர், 'ஆமாம் சிஸ்டர்... கல்யாணத்துக்கு பின், இவள் இடம் தெரியாமல், அவஸ்தை படக்கூடாது இல்லையா... அதான், இப்பவே சுற்றி காட்டுகிறேன்...' என்றார். நான், அவள் வருங்கால கணவரை பாராட்டினேன். இன்றைய இளைஞர்கள் நன்றாகவே யோசிக்கின்றனர்.- சுகாசினி கணேஷ், திருவள்ளூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !