இது உங்கள் இடம்!
நிம்மதி எங்கே?சமீபத்தில், கோவிலுக்கு சென்றிருந்தேன். பிரபலமான கோவில் என்பதால், அன்று, மக்கள் கூட்டம் அலை மோதியது. அங்கே, அதிசயமாக, என் நண்பனைக் கண்டேன். அவன், அவனுடைய காதலியுடன் வந்திருந்தான். நான், அவனிடம், 'என்னடா சாமி தரிசனம் முடிஞ்சாச்சா...' எனக் கேட்க, பதிலுக்கு, 'தரிசனமா... சாமிய பாக்க யார் வந்தா... பத்து நாளா, இவள பாக்க முடியல. இன்னிக்குத்தான் பார்க்க முடிஞ்சது. பீச்சுக்கு போனா, போலீஸ் தொல்ல. அதுதான் இங்க வந்தோம். இங்க, யாரும் நம்மள கண்டுக்க மாட்டாங்க...' எனக் கூறி, காதலியுடன், தனியிடம் தேடி நகர்ந்தான்.அவன் சென்றதும், ஒருமுறை கோவிலைச் சுற்றி பார்த்தேன். மெரினா பீச்சைப் போல, ஆங்காங்கே காதல் ஜோடிகள். இவர்கள், கடவுளைத் தரிசிக்க வராமல், கோவிலை, காதலர்கள் சந்திக்கும் இடமாக பயன்படுத்துவது, வருத்தமளித்தது. இன்றைய வாழ்க்கை சூழலில், மனதில் அமைதி இழந்து, நிம்மதியைத் தேடி வரும், ஒரே இடம் கோவில். அங்கேயும் இப்படியென்றால், நிம்மதியை தேடி எங்கே தான் போவது?— தி.சந்திரசேகர், அம்பத்தூர்.என்ன கொடுமை இது?பிரபலமான, 'டிவி'யில், மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும், ஒரு தொடரை, ஒரு வாரமாக, ஏதேச்சையாக பார்க்க நேர்ந்தது. அதில், சிறுவயதிலேயே கணவனை இழந்து, ஒரு குழந்தையோடு உள்ள, தன் மருமகளுக்கு, மறுமணம் செய்து வைக்க துடிக்கிறார் மாமியார். அவரது எண்ணம், பாராட்டப்பட வேண்டியதுதான். அதற்காக, அவர் எடுக்கும் முயற்சிதான், மிக கொடுமையாக இருந்தது.அந்த மாமியார், வெளியூரில் உள்ள, தன் நெருங்கிய தோழியின் மகனை, தன் வீட்டிற்கு வரவழைத்து, தன் மருமகளுடன் பழக விட்டு, அவளை மயக்கி, திருமணம் செய்து வைக்க திட்டம் போடுகிறார். அதன்படி அந்த ஆணும், அந்த வீட்டிலேயே தங்கி, மருமகளோடு தினமும் பேசி, பழகுகிறார். இவர்களை, தனிமையில் சந்திக்க வைக்கவும் ஏற்பாடு செய்கிறார் மாமியார்.அறிமுகமே இல்லாத, இன்னொரு வீட்டு ஆணை, தன் வீட்டில் தங்க வைத்து, தன் மருமகளுடன் பேசி, மயக்கி, திருமணத்திற்கு சம்மதம் வாங்க வேண்டும் என்ற திட்டம், கேவலமாக இல்லையா? நம் பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தும், இம்மாதிரி காட்சிகள் அவசியமா? திருமணம் செய்து வைக்க, எத்தனையோ நல்ல வழிகள் இருக்க, இப்படி ஒரு கேவலமான முயற்சி செய்துதான், திருமணம் செய்து வைக்க வேண்டுமா? நிகழ்ச்சி தயாரிப்பவர்கள் இது குறித்து, யோசிப்பரா?— வே.விநாயக மூர்த்தி, வெட்டுவான்கேணி.சிறு தானியங்களை மதிப்போம்!திண்டுக்கல் நகரில் உள்ள, ஒரு பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோருக்குச் சென்றிருந்தேன்.'சிறு தானியங்கள்' என்ற தலைப்பில் கம்பு, திணை, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற தானியங்களையும், அவற்றில் அடங்கியுள்ள சத்துக்கள் குறித்தும், இந்த வகை உணவை எடுத்துக் கொள்வதால், நமக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி தெளிவாக பட்டியலிட்டு ஒட்டியிருந்தனர்.பலரும், அதை ஆர்வமுடன் படித்தனர். இந்த வகை தானியங்களில், என்னென்ன பதார்த்தங்கள் செய்யலாம் என்பதையும் விளக்கியிருந்தனர். அரிசி மற்றும் கோதுமையை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். இந்த சிறு தானிய உணவின் பயன் குறித்து, இன்று, கிராமம், நகரப் பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை.மிகக் குறைந்த அளவு வாங்கி, வாரம் இரு முறை, இந்த சிறுதானியங்களை, நம் உணவில் சேர்த்துக் கொள்வதுடன், பிள்ளைகளுக்கும் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும். உணவு பாக்கெட், டின்கள், டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் துரித வகை உணவு வகைகளை தவிர்த்து, ஆரோக்கியத்தை தரும் சிறுதானிய உணவு முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்!- எஸ்.ராமு,செம்பட்டி.