இது உங்கள் இடம்!
வகுப்பறையில் கேமரா இருப்பது நல்லது!கடந்த வாரம், எங்கள் கல்லூரியில், வகுப்பு நடக்கும் போது, திடீரென்று, கல்லூரி முதல்வர் உட்பட, சில பேராசிரியர்கள் எங்கள் வகுப்பறைக்குள் நுழைந்தனர்.அங்கு, கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்த மாணவனை அழைத்து சென்றனர். மறுநாள் முதல், அந்த மாணவன், கல்லூரிக்கு வரவில்லை. அவனை கல்லூரியிலிருந்து நீக்கி விட்டனர். என்னவென்று விசாரித்தபோது, அதற்கான காரணம் பற்றி சக மாணவர்கள் கூறினர்.வகுப்பு நடக்கும் போது, ஆசிரியருக்கு தெரியா வண்ணம், முன்னே அமர்ந்திருக்கும் மாணவிகளை, தன், மொபைல் போனில் தவறான கோணத்தில், 'வீடியோ' எடுத்திருக்கிறான். அவன் மொபைல் போன் உபயோகிப்பதை, வகுப்பறை கேமரா வாயிலாக பார்த்த கல்லூரி முதல்வர், இத்தகைய, அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.மேலும், அவனது மொபைல் போனிலிருந்த படங்களையெல்லாம் அழித்துவிட்டு, மறுநாள், அவனது பெற்றோரை வரவழைத்து, டி.சி., கொடுத்து, வீட்டிற்கே அனுப்பி விட்டார். பல கல்லூரிகளில் மொபைல் போன் உபயோகிப்பது தடை செய்யப்பட்டிருந்தாலும், சிலர் இப்படி திருட்டுத்தனமாக உபயோகித்து மாட்டிக் கொள்கிறன்றனர்.மாணவ, மாணவியரே... வகுப்பறை கேமரா, நம்மை தீவிரமாக கண்காணிக்கிறது என, வெறுப்புக்குள்ளாகாதீர். வகுப்பறை கேமரா இருப்பது நன்மைக்கே!— ரா.வினோத் குமார். கழனிவாசல்.எங்கே போகிறது மாணவர் சமுதாயம்!அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆசிரியராக பணியாற்றுகிறார் என் நண்பர். இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான அவரை, கடந்த வாரம், விழா ஒன்றில் சந்தித்த போது, மனம் நொந்து, சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அது: ஒழுக்கத்துடன் கூடிய கல்வியையும், கட்டுப்பாட்டையும், மாணவர்களிடம் கண்டிப்பான முறையில், கொண்டு சேர்க்க, நான் முற்படும் போது, அதில், சில மாணவர்கள், எனக்கு எதிராகத் திரும்பி விடுகின்றனர். என்னையும், என்னுடன் பணிபுரியும் திருமணம் ஆன சக பெண் ஆசிரியை ஒருவரையும் இணைத்து, பள்ளி சுவர்களில் எழுதி வைத்து விடுவதுடன், ஜாதி ரீதியாக ஒருங்கிணைந்து கொண்டு, மிரட்டும் தொனியில் நடந்து கொள்கின்றனர்.இதனால், என் மனம் வெறுப்படைந்தது; கற்பித்தலில் ஆர்வம் குறைகிறது. அதுமட்டும் இன்றி, விடுமுறை முடிந்து, பள்ளியை திறந்தால், முதலில் காலி மதுபாட்டில்களை தான் பொறுக்க வேண்டியுள்ளது.பள்ளிகள் மீதான, சமூகத்தின் அக்கறை குறைந்து விட்டது. மாணவர்களை கட்டுக்குள் வைக்க முடியவில்லை. விதிகள், சட்டங்கள் மாணவ, மாணவியருக்கு சாதகமாக இருக்கிறது, என்று, வேதனையுடன் குறிப்பிட்டார். கல்வியில் சாதிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை; ஒழுக்கம், பிறருக்கு மரியாதை கொடுப்பதில், மாணவ சமுதாயம் அக்கறை காட்டும் நாள் வருமா?— எஸ்.ராமு, திண்டுக்கல்.நண்பரின் நல்ல யோசனை!என் நண்பர் புறநகர் பகுதியில் புது வீடு கட்டியிருந்தார். சமீபத்தில், அவரை காணச் சென்றேன். அக்கம் பக்கத்தில் வீடுகள் அதிகமில்லாத பகுதி அது. 'தனியான இடத்தில் எப்படி இருக்காரோ...' என்று, நினைத்தபடி சென்று கொண்டிருந்தேன். அச்சமயம், கையில், சில தபால்களை வைத்து கட்டி, எதிரில் வந்து கொண்டிருந்தார் நண்பர். அனைத்து தபால்களிலும், புத்தக பதிப்பகங்களின் முகவரிகளாக இருந்தன. காரணம் கேட்ட போது, நண்பர், 'இது மாதிரி புத்தக பதிப்பகங்களுக்கு விலைப்பட்டியல் அனுப்புங்கன்னு கடிதம் எழுதினால், அவங்க, இலவசமா அனுப்புவாங்க. இங்க, நாங்க குடி இருக்கறோம்கிறது இது மூலம் தபால்காரருக்கும் தெரிய வரும். அதே சமயம், தபால்காரரோ, கூரியர் கம்பெனி பையன்களோ அடிக்கடி இங்கு வந்து போக இருந்தால், ஆள் நடமாட்டம் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தும். இது திருடர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும். அதே சமயம், நமக்கும் புத்தகங்களைப் பற்றிய ஒரு விவரமும் கிடைக்கும்...' என்றார்.நண்பரின் யோசனையை மெச்சிவிட்டு வந்தேன்.— சசிபிரபு, சென்னை.