இது உங்கள் இடம்!
நல்லிணக்கம் காண்போம்!அண்மையில் ஒரு திருமணத்திற்காக, தஞ்சாவூர் சென்றிருந்தேன். திருமணம் அடுத்த நாள் என்பதால், அருகிலுள்ள, புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு சென்றிருந்தேன்.என்ன ஆச்சரியம்... பக்தர்கள் பலர் வழிபாடு செய்து கொண்டிருந்த இடத்தில், ஒரு இஸ்லாமிய சகோதரி விளக்கேற்றி, வழிபாடு செய்து கொண்டிருந்தார். வியப்பாக இருந்தாலும், அவரின் செயல், ஆனந்தத்தை அளித்தது. நன்மை அளிக்கும் என்றால், எந்த மதத்தின் வழிபாட்டு முறைகளையும் கடைப்பிடிக்கலாம். அன்புக்கும், அருளுக்கும் பேதமோ, வேலியோ இல்லை என்பதை, அவருடைய செயல் எடுத்துக் காட்டியது.அனைத்து மதத்தினரும் இணக்கமாகவும், அவரவர் பண்டிகைகளின் போது, வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வதும் இன்றும், கிராமங்களில் நிலவி வருவது கண்கூடு.ஆனால், சில சுயநலவாதிகள், தங்களுடைய லாபம் ஒன்றையே கருத்தில் கொண்டு, ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டும் விதத்தில், அறிக்கைகளையும், தகவல்களையும் அள்ளி வீசுகின்றனர். மேற்கண்ட நிகழ்ச்சி, இப்படிப்பட்டவர்களுக்கு, சாட்டையடியாக அமைந்தது. மத நல்லிணக்கம், இன்னும் வற்றி விடவில்லை என்பதையே, இது காட்டுகிறது.அனைத்து மதத்தவரும், வேற்றுமை மறந்து, 'அன்பின் வழியது உயிர்நிலை...' என்று, ஒன்றுபட்டு வாழ, இந்நிகழ்ச்சி வழிகோலும் என்பதில் ஐயமில்லை.— ஆர்.சந்திரன், மூவரசன்பேட்டை.மனம் இருந்தால் போதும்!சமீபத்தில், தையல் கடை வைத்திருக்கும் என் தோழியை காணச் சென்றிருந்தேன். அன்று விடுமுறை என்பதால், பிரீயாக இருப்பாள் என்று, அவள் வீட்டுக்குச் சென்றால், அவளோ, மிக பிசியாக தைத்துக் கொண்டு இருந்தாள்.சிறுவர், சிறுமியருக்கான அழகிய உடைகள் தயாராகிக் கொண்டு இருந்தது. 'இது என்ன... நான்கு, ஐந்து வயது பிள்ளைகளின் உடைகளாக இருக்கிறதே... யாருக்கு?' என்று கேட்ட போது, அவள் கொடுத்த விளக்கம் மனதை தொட்டது.'தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில், தைக்க வரும் துணிகளில், நிறைய பிட் துணி மீந்து விடும். அதை பத்திரமாக எடுத்து வைத்திருந்து, ஓய்வு கிடைக்கும் போது, அதில் சிறு உடைகளை தைத்து, ஏதேனும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொடுப்பேன். இதனால், வீணாக குப்பையில் போடுவது தவிர்க்கப்பட்டு, இல்லாதவர்களுக்கு, உபயோகமாக, ஆடை தைத்து கொடுத்த, ஆத்ம திருப்தி கிடைக்கிறது. அதோடு, எனக்கும், பல டிசைன்கள் பரிச்சயமாவதுடன், எந்த உடுப்பும், தைக்கக் கூடிய பயிற்சியும் கிடைக்கிறது. அது என் தொழில் திறமையை வளர்க்க உதவுகிறது. என் கணவர், பிள்ளைகளும், அவர்களால், முடிந்த உதவிகளை செய்வர்...' என்றாள்.பணம் தான் வேண்டும் என்றில்லை; மனம் இருந்தால் போதும். பிறருக்கு எப்படி வேண்டுமானாலும் உதவலாம் என்பதை, அன்று, எனக்கு அழகாகப் புரிய வைத்தாள் என் தோழி. இந்த அனுபவம், மற்றவர்களுக்கு ஒரு உந்துதலாக இருக்கும் என்று நம்புகிறேன்.— ஜே.ஜீனத், சென்னை.பெண் ஊழியரின் திருமணத்துக்கு செல்லும் ஆண்களே...என்னுடைய நண்பர், தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். அவரின் கீழ் வேலை பார்த்த பெண்ணுக்கு, பெங்களூருவில் திருமணம் நடந்தது. அதில் கலந்து கொள்ள, நண்பர் பெங்களூரு சென்றார். மாப்பிள்ளைக்கு சந்தேகம் ஏற்பட்டு, 'இவ்வளவு தூரம் வர்ற அளவுக்கு, உங்க இருவருக்கும் அப்படி என்ன உறவு...' என்பது போல் பேசியிருக்கிறார். அவன் குடும்பத்தார் மட்டுமல்ல, பெண்ணின் குடும்பத்தாரும், நண்பரின் வரவை விரும்பவில்லை.நண்பர் நொந்து போய், கொண்டு போன அன்பளிப்பை கூட, தர முடியாமல் திரும்பி விட்டார்.நண்பர் நல்லவர் தான்; நல்ல எண்ணத்துடன் தான் திருமணத்திற்கு சென்றார் என்றாலும், அவர் மட்டும், தனியாக சென்றதே, சந்தேகத்திற்கு வழி வகுத்திருக்கிறது. என்ன தான் அன்போடு பழகினாலும், சக பெண் ஊழியர் வீட்டு விசேஷங்களுக்கு செல்லும் போது, அலுவலக பணியாளர்களுடன், அதிலும், பெண் ஊழியர்களுடன் சேர்ந்து போவதே நல்லது. முடியாத பட்சத்தில், அலுவலகத்திலேயே அன்பளிப்பைக் கொடுத்து, ஆசிர்வதித்து விடலாம்.ஆண், பெண் நட்பை புரிந்து கொள்ளும் பெருந்தன்மை இல்லாத சந்தேகக் கண் கொண்ட மனிதர்களும் உள்ளனர் என்பதை, உணர்ந்து நடப்பது நல்லது தானே!இனி, சக பெண் ஊழியர்கள் வீட்டு விசேஷத்துக்கு செல்லும் முன், ஆண் ஊழியர்கள் சிந்தித்து, செயல்படுவது நல்லது.— எஸ்.சுசீந்திரன், செவ்வாப்பேட்டை.பேனா வைத்துள்ள பழக்கம்!வங்கி மற்றும் ரயில்வே முன்பதிவு போன்ற இடங்களுக்கு செல்லும் போது, இரவல் பேனா கேட்கும் இளைஞர்களை, பார்க்க முடிகிறது. ஓசி பேனா கேட்கும் இளைஞர்களில் பலர், பத்தாயிரம் ரூபாய் பெருமானமுள்ள, கிட்டதட்ட, மினி கம்ப்யூட்டர் போன்ற மொபைல் போன்களை தங்கள் கைகளில் வைத்திருக்கின்றனர். முக்கியமாக தேவைப்படும் பேனாவை, வைத்திருப்பதில்லை. இவ்வளவிற்கும், ஒரு ரூபாய் விலையிலிருந்து பேனாக்கள் கிடைக்கிறது. பேனா வைத்திருப்பதை, இளைஞர்கள் ஏன் கேவலமாக நினைக்கின்றனர் என்று புரியவில்லை!— ச.செய்யது ஷகில், மதுரை.பயனுள்ள அன்பளிப்பு!புது வீடு கட்டி, கிரஹப்பிரவேசம் வைத்து இருந்த, உறவினரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். நிகழ்ச்சிக்கு வந்த ஒருவர், கொய்யா, நெல்லி, தென்னை, உள்ளிட்ட, சில மரக்கன்றுகளுடன் வந்திருந்தார். 'என்னங்க இது?' என்று கேட்ட என்னிடம், 'வந்தோமா, தின்னோமா, மொய் எழுதினோமான்னு போனா, என்ன தம்பி புண்ணியம்... இப்படி, நாலு மரக்கன்றுகளை வாங்கிட்டு போய், புதுவீட்ல கொடுத்து நடச்சொன்னா, மரம் வளர வளர அவங்களுக்கும் பிரயோஜனப்படும். நம்ம பேரையும், அது, காலா காலத்துக்கும் சொல்லுமே... செய்றதை திருந்தச் செய்யலாம்ன்னு தான் இப்படி...' என்றார்.புது வீட்டுக்காரர் உட்பட இதைக் கேட்ட அனைவருமே, அவரை பாராட்டினர்.நாமும், இது போல் உருப்படியாய் அன்பளிப்பு தரலாமே!— ஆறுமுகம், வழுதூர்.