இது உங்கள் இடம்!
பணம் இருக்கிறது என்பதற்காக...நான், மகளிர் மட்டும் ஏறும், மாநகர பஸ்சில் பயணித்துக் கொண்டிருந்தேன். ஒரு இளம்பெண் பயணச்சீட்டு வாங்க, ஐம்பது ரூபாய் தாளை நீட்டிய போது, அப்பணம் காற்றில் பறந்து, சாலையில் விழுந்து விட்டது.உடனே நடத்துனர், பஸ்சை நிறுத்தி, தானே இறங்கி போய், அந்த பணத்தை எடுத்து வந்தார். அவருக்கு அந்த இளம்பெண், நன்றி கூட சொல்லாமல், 'ஐம்பது ரூபாய் தானே, இதற்காக பஸ்சை நிறுத்தி, இறங்கி போய் எடுத்து வர வேண்டுமா?' என்று கேட்டதும், பஸ்சில் உள்ள அனைவரும் அதிர்ச்சியானோம்.இன்னொரு கல்லூரி மாணவியோ, காதில், 'ஹெட்போன்' மாட்டி, பாட்டுக் கேட்டபடியே பஸ்சில் ஏறினாள். நடத்துனர், 'அடுத்த நிறுத்தத்தில், 'செக்கிங்' இன்ஸ்பெக்டர் இருக்கார், சீக்கிரம் டிக்கெட் எடுங்க...' என்று, எல்லாரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த கல்லூரி மாணவி அருகில் வந்தவர், 'எங்கே போகணும், காசு எடுங்க...' என்று கேட்டதும், அப்பெண், 'ஏன் இப்படி அவசரப்படுத்துறீங்க... 'செக்கிங்' வந்தா, நான் தானே, அபராத பணம் கட்டப் போறேன், நீங்களா கட்டப் போகிறீங்க...' என்று, துடுக்காக கேட்டதும், நடத்துனர் தலையில் அடித்து கொண்டு, பேசாமல், தன் இருக்கையில் அமர்ந்து விட்டார்.பணம் இருக்கு என்பதாலும், பெற்றோர் சம்பாதித்து தருவதாலும், பணத்தின் அருமை தெரியாமல் இருக்கும் இவர்களைப் போன்ற இளைய தலைமுறையினர், என்று தான் பொறுப்புள்ள இந்திய குடிமக்களாக மாறப் போகின்றனரோ!— கீதா, சென்னை.நாமும் பின்பற்றலாமே...சமீபத்தில், நண்பரின் மகள், திருமண வரவேற்பு விழாவிற்கு சென்றிருந்தேன். மண்டபத்தின் உணவுக் கூடத்தின் நுழைவாயிலில், கூடத்தின் நான்கைந்து இடங்களில், அன்று விருந்து பரிமாறப் போகும், 'மெனு'வை எழுதி, தொங்க விட்டிருந்தனர். மேலும், இனிப்புப் பதார்த்தங்களை, வருபவர்கள் எடுத்து உண்ணும் வகையில், ஒரு டேபிளில் வைத்திருந்தனர். இது சற்றே வித்தியாசமாகத் தோன்ற, நண்பரிடம் விசாரித்தேன்.'மெனு தெரிஞ்சிட்டாங்கன்னா, அவர்களுக்குப் பிடித்தமானதை சாப்பிட வசதியாக இருக்கும். மேலும், இப்ப நிறைய பேருக்கு, சர்க்கரை வியாதி இருக்கு; பந்தியில் சுவீட் பரிமாறினால், நாலு பேர் முன், வேண்டாம்ன்னு சொல்ல கூச்சப்பட்டு, இலையில் போடச் சொல்லி, சாப்பிடாமல் வச்சிட்டு போயிடறாங்க. அதற்கு பதிலாக, சுவீட் ஐட்டங்களை தனியாக வைத்தால், விருப்பமானவர்கள் மட்டும் எடுத்துக்குவாங்க. வீணாவதும் குறையும்...' என்று, விளக்கமளித்தார் நண்பர்.அவர் கூறியது நல்ல யோசனையாகவே தெரிந்தது. இதை மற்றவர்களும் பின்பற்றலாமே!— கோ.சு.சுரேஷ், கோவை.லாபத்திற்காக பாவம் செய்யலாமா?என்னுடைய நண்பர் ஒருவருக்கு, வெளியூரில் இறால் பண்ணை ஒன்றில், நல்ல சம்பளத்தில் மேனேஜர் வேலை கிடைத்தது. வேலையில் சேர்ந்த மறுநாளே, வேலை வேண்டாமென்று வந்து விட்டார்.காரணம் என்ன என்று விசாரித்த போது, 'அங்கே வேலை செய்ய, என் மனசாட்சி இடம் கொடுக்கல...' என்றார். 'ஏன்... என்ன விஷயம்...' என்று கேட்டதற்கு, 'அந்த இறால் பண்ணையில, குறிப்பிட்ட சில இறால்களை மட்டும் பிடிச்சு, குண்டூசியால அவைகளின் கண்களைக் குத்தி குருடாக்கி, மீண்டும் தொட்டியில் விடுறாங்க. பதறிப் போய், 'என்ன செய்றீங்க'ன்னு அந்த தொழிலாளர்களிடம் கேட்டேன். 'இனப்பெருக்கத்திற்காக, பெண் இறால்களை, ஆண் இறால்கள் நெருங்கும் போது, அவைகள் விலகி விலகிச் செல்லும். இதனால், இனப்பெருக்கம் தாமதமாகும். இப்படி பெண் மீன்களோட கண்களை குருடாக்கிட்டா, ஆண் மீன்கள், அவைகளை எளிதில் அணுகி, நிறைய குஞ்சு பொறித்து, நல்ல லாபம் கிடைக்கும்ன்னு, முதலாளி இப்படி செய்யச் சொல்லியிருக்கிறார்...' என்றனர்.'இதைக் கேட்டதும் எனக்கு இதயமே நின்று போனது. இந்த கொடுமைய சகிக்க முடியாமத்தான் அந்த வேலையே வேண்டாம்ன்னு வந்துட்டேன்...' என்றார். இதைக் கேட்ட எனக்கே நான்கு நாட்களாக தூக்கம் வரவில்லை. எப்படித்தான் இக்காரியத்தை செய்ய அவர்களுக்கு மனம் வருகிறதோ!ஒரு உயிரை கொல்வதை விட, அதை துடிதுடிக்க துன்புறுத்துவது மிகக் கொடிய செயல். சம்பந்தப்பட்டவர்கள், இதை உணர்ந்தால் நல்லது.— பே.ராம், பாளையங்குடி.